“எனக்காக எதைத் தாங்குனிங்க உதய்? உங்க வீட்டுக்காகத் தாங்குனிங்க? அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நானா உங்களை சாகடிக்கிறேன். இல்லை, நீங்க எல்லாரும் சேர்ந்து தான் என்னை சாகடிக்கிறிங்க? உங்களை சாகடிக்கிறவளோட ஒன்னும் நீங்க இருக்க வேண்டாம். நான் போறேன். உங்களுக்கு எப்பவும் உங்க குடும்பம் தான் முக்கியம். என்னைப் பத்தியெல்லாம் கவலையே இல்லை உங்களுக்கு.
உங்கம்மாவுக்கு நூறு பவுன் பைத்தியம். அதுக்கு நான் தான் இடைஞ்சலா இருக்கேன். என்னை விட்ருங்க. நீங்க அந்த பொண்ணையே கட்டிக்கிட்டு” என்று அவள் பேசி முடித்திருக்கவில்லை, அவன் அறைந்த அறையில் டிவி இருந்த டேபிளில் மோதி கீழே விழுந்திருந்தாள் நதி.
“என்னடி பிரச்சனை உனக்கு? நான் தான் சொல்றேன்ல, கொஞ்சம் பிரச்சனை பொறுமையா இருடின்னு. வாய்க்கு வந்ததை பேசிட்டு இருக்க. இந்தம்மா புத்தி தான் தெரியும்ல. இன்னொரு தடவை வேற பொண்ணைக் கட்டிக்கன்னு உன் வாய்ல இருந்து வந்ததது, கொன்னுடுவேன்டி உன்னை” என்று ஆங்காரமாய் கத்தியவன், அவளை அறைந்த கையை சுவற்றில் ஓங்கி அடித்துக் கொண்டே இருந்தான்.
“குமரா” என்று கோதாவரி தடுக்கப் போக,
“மரியாதையா போய்டுங்க. அம்மான்னு பார்க்க மாட்டேன். உங்களை மாதிரி ஒரு பிறவியை என் வாழ்க்கையில பார்த்தது இல்லை. என்னை மிருகமா மாத்திடாதிங்க” என்றவன் திரும்பி நதியைப் பார்க்க, அவளோ அதே இடத்தில் அசையாமல் கிடந்தாள்.
“நதி, நதிம்மா என்னைப் பாருடி” என்றவனுக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது.
‘என்ன உதய் உங்க கை இவ்வளவு ஹார்டா இருக்கு?உங்களுக்கு என்னைக்காவது கோபம் வந்தாக் கூட என்னை அடிச்சுடாதிங்க உதய். அப்பறம் கொலைக் கேசுல உள்ள போய்டுவிங்க. நீங்க அவ்வளவு ஸ்ட்ராங்’ என்று அவள் என்றோ ஒரு நாள் சொன்னது அவனின் நினைவிற்கு வந்து போக, அவனின் இதயமே நின்று துடித்தது.
அவளின் கன்னங்களைத் தட்டியவன், அவள் கண் விழிக்கவில்லை என்றதும் பயந்துவிட்டான்.
“குமரா, பின்னாடி எல்லாம் ரத்தம்” என்று கோதாவரி சொல்லவும் தான் கவனித்தான்.
“அய்யோ” என்று அவர் பதறிக் கொண்டு வர,
“அவளைத் தொடாத? அவளுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு, உன்னையும் அழிச்சுட்டு என்னையும் அழிச்சுக்குவேன்” என்றவன் அவளைத் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினான்.
அவளை ஹாஸ்பிட்டல் கொண்டு சேர்க்கும் வரை அவன் உயிர் அவளிடத்தில் இல்லை.
“நதி சாரிடி..பிளீஸ் நதி கண்ணைத் திறடி” என்று மந்திரம் போல் ஜெபித்துக் கொண்டே தான் சென்றான் செல்லும் வழியெல்லாம். விஷயம் கேள்விப் பட்டு தீபாவும் பின்னாடியே வந்திருந்தாள்.
அவன் அடித்ததில் ஒரு பக்கக் கன்னமே வீங்கியிருந்தது அவளுக்கு.
உடையில் படிந்திருந்த ரத்தம் அப்போது தான் அவள் நிலையைச் சொல்ல, முற்றிலும் உடைந்துவிட்டான் குமரன்.
“அய்யோ நதி? என்ன பண்ணி வச்சிருக்கேன் நான்?” என்று தன்னையே கன்னம் கன்னமாக அறைந்து கொண்டான்.
“டேய் குமரா? நதி எங்கடா? என்னடா பிரச்சனை?” என்று தீபா பதறிக் கொண்டு வர,
“அக்கா, அவ கண்ணைத் திறக்கவே இல்லைக்கா, ட்ரஸ் எல்லாம் ரத்தம், என் குழந்தையை நானே அழிச்சுட்டேன். நான் ஒரு கொலைகாரன்” என்று அவன் தன் போக்கில் பேச,
“என்னடா பண்ண?” என்றாள் மீண்டும். அவன் கண்ணீருடன் அனைத்தையும் சொல்ல, அவனை ஓங்கி அறைந்திருந்தாள் தீபா.
“என்னடா பண்ணி வச்சிருக்க? ஏற்கனவே வீக்கா இருந்தவளை அடிச்சிருக்க? கை நீட்டுறது என்ன புதுப்பழக்கம்? கோபத்தை குறைன்னா கேட்குறியா? இப்போ பாரு?” என்ற தீபாவும் கலங்கித் தான் போனாள். தீபா வரும் போதே, நதியின் வீட்டினருக்கு தகவல் சொல்லியிருக்க, வரதனும், சாரதாவும் வந்து சேர்ந்தனர்.
“நதிக்கு என்னாச்சு தம்பி?” என்ற சாரதாவை அவனால் நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை.
“அவங்களுக்கு மயக்கம் தெளிஞ்சுடுச்சு, ஆனா சாரி அவங்களுக்கு அபார்ஷன் ஆகிடுச்சு. ” என்று டாக்டர் வெளியே வந்து சொல்ல, உள்ளே நதியின் கதறல் வெளியே இருந்த அனைவருக்கும் கேட்டது. குமரன் அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டான்.
“குமரா” என்று தீபா அவனைப் பார்த்து கண் கலங்க,
“நானே குழந்தையை கொன்னுட்டேன் க்கா..! என் குழந்தையை நானே கொன்னுட்டேன் க்கா !” என்று வெறி பிடித்தவன் போல் கத்தினான் குமரன்.
“எதும்மா தீபா சின்னப் பிரச்சனை, அபார்ஷன் ஆகுற அளவுக்கு வந்திருக்கு. இது உங்களுக்கு சின்ன பிரச்சனையா?” என்றார் கோபமாய்.
“தப்புப் பண்ணிட்டேன் நான், பொண்ணை அருமை பெருமையா வளர்த்து, இப்படி உங்க குடும்பத்துல குடுத்து அவ வாழ்க்கையை கெடுத்துட்டேன் நான். அன்னைக்கு என் முன்னாடியே என் பொண்ணை உங்கம்மா அந்த பேச்சு பேசினாங்க. அப்போ யாரும் இல்லாதப்போ இன்னும் என்னென்ன பேசியிருப்பாங்க? நாங்க தான் அன்னைக்கே பொண்ணை ஒரு வாரம் வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்னு சொன்னோம், கேட்டிங்களா? இப்ப பாருங்க என்ன பண்ணி வச்சிருக்கிங்கன்னு? ஊசி போடக் கூட பயப்படுற பொண்ணு, இப்படி அபார்ஷன் எல்லாம்” என்றவருக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வராமல் கண்ணீர் தான் வந்தது.
கண்களைத் துடைத்துக் கொண்ட குமரன் வேகமாய் நதியைப் பார்க்க உள்ளே செல்ல, ஏற்கனவே கதறிக் கொண்டிருந்தவள், அவனைப் பார்க்கவும் அதிகமாய் கதறத் தொடங்கினாள்.
“நதி” என்றவள் அவள் கையைப் பிடிக்கப் போக,
“என்னைத் தொடாத, போ இங்க இருந்து, போடா இங்க இருந்து. நீ ஒரு கொலைகாரன். என் குழந்தையை கொன்னுட்ட. நீதான் கொன்ன” என்று கத்தியவள்,
“நான் தான் வா போகலாம்னு கூப்பிட்டேனே? அப்பவே வந்திருக்கலாம்ல. என் குழந்தையும் இருந்திருக்கும்ல” என்று அவனைப் பார்த்து கேட்டவள், தேம்பித் தேம்பி அழ,
“நதிம்மா” என்றவன் அவளை நெருங்க,
“பக்கத்துல வராத. மீறி வந்த என்னை நானே ஏதாவது பண்ணிப்பேன். போ, போடா இங்க இருந்து. போய் உன்னோட குடும்பத்தைப் பாரு. தேடினாலும் கிடைக்காது இப்படி ஒரு குடும்பம். அப்படியே அவங்க காலடியிலேயே கிட. உனக்கெல்லாம் எதுக்குடா கல்யாணம்? உனக்கெல்லாம் எதுக்குடா பொண்டாட்டி. உனக்கெல்லாம் எதுக்குடா பிள்ளை. அதான் என் பிள்ளை இல்லாமையே போய்டுச்சு” என்று அவள் துடிக்க,
“இந்த நேரத்துல இப்படி அழக் கூடாது நதி” என்ற சாரதா அவளை அணைத்துக் கொண்டார்.
“ம்மா! என்னை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போய்டுங்கம்மா. நான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன். எனக்கு இவன் வேணாம். என் பிள்ளையைக் கொன்னவன் எனக்கு வேணாம். அந்த பொம்பளை முகத்தைப் பார்க்கக் கூட எனக்கு பிடிக்கலைம்மா” என்று அவள் மீண்டும் கதற,
“அவருக்கு உங்க குடும்பமே இருக்கு அண்ணி. எனக்குத் தான் இப்போ யாருமில்லை. என் குழந்தையும் இல்லை” என்றவளை உணர்வற்று பார்த்திருந்தான் குமரன்.
மகளின் வீங்கியிருந்த கன்னத்தைப் பார்த்த வரதன்,
“நீங்க இப்படி பண்ணுவிங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை. இப்படி அடிச்சிருக்கிங்க? என் பொண்ணை நானே ஒரு நாளும் அடிச்சதில்லை. இதுக்குத்தான் உங்களுக்கு கட்டிக் குடுத்தோமா? நல்லா வச்சுப்பிங்கன்னு நம்பித் தான குடுத்தேன். இப்படி கொண்டு வந்து நிறுத்திட்டிங்களே” என்றார் வரதன்.
“அது என்னோட குழந்தையும் தான். உன்னை மாதிரி எனக்கும் அதே அளவு கஷ்ட்டம் இருக்கு” என்றான் அவளைப் பார்த்து உணர்வற்று.
“இங்க இருந்து போகவா? இல்லை ஒரேடியா போகவா?” என்றான் உணர்வற்று.
“நான் தான் உங்க வீட்டைப் பிடிச்ச கிரகம் ஆச்சே. விட்டது கிரகம்னு இங்கயே தலைமுழுகிட்டு கிளம்புங்க. என்னைத் தேடி வராதிங்க. அதையும் மீறி வந்தா, நான் உயிரோட இருக்குறது அன்னைக்குத் தான் கடைசியா இருக்கும்” என்றாள் எங்கோ வெறித்துக் கொண்டு.
“நதி” என்று அவளின் கையைப் பிடிக்க,”தீச்சுட்டார் போல்” கையை விளக்கிக் கொண்டாள் நதி. அவளின் செய்கையில் அதே இடத்தில் செத்துவிட்டான் குமரன்.
“நீ கோபத்துல பேசுற நதி” என்றான்.
“இது கோபமில்லை, வெறுப்பு. இது என்னைக்கும் மாறாது. இப்பவும் சொல்றேன், அந்த நூறு பவுன் பொண்ணையே கட்டி வைக்க சொல்லி கல்யாணம் பண்ணிக்கோங்க. என்னைத் தேடி வராதிங்க. நான் நிம்மதியா இருக்கணும்னு நினைச்சா இதை பண்ணுங்க” என்றவள் அவனைப் பார்க்கவே இல்லை.
“என்ன நதி? வாழ்க்கை உங்களுக்கு விளையாட்டா போயிடுச்சா?” என்றாள் தீபா.
“உங்க அம்மா புத்தி தெரிஞ்சிருந்தா கண்டிப்பா இந்த கல்யாணத்தையே நான் பண்ணியிருக்க மாட்டேன். என்னை பேச வைக்காதிங்க” என்றவள் தீபாவிடமும் முகம் கொடுத்து பேசவில்லை.
“அப்பா இவங்களை கிளம்ப சொல்லுங்க. இல்லைன்னா நாம கிளம்பலாம்” என்றவள் எழுந்து கொள்ள முயற்சிக்க,
அவளைத் தடுத்தவன்,”ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம். நானே போய்டுறேன். என்னோட தொந்தரவு இனி எந்த வகையிலும் உனக்கு இருக்காது நதி” என்று இயந்திரம் போல் சொன்னவன், சாரதாவிடம் திரும்பி,
“பார்த்துக்கோங்க!!” என்றபடி வெளியேறிவிட்டான்.
“அப்படியெல்லாம் எழுந்திருக்க கூடாதும்மா! இன்னும் உங்களுக்கு ஸ்கேன் பார்க்கணும், உங்க ப்ளீடிங் லெவல் பார்த்துட்டு, டி அன்ட் சி பண்ணனும்” என்று அந்த நர்ஸ் சொல்ல, நதியின் முகம் வெளிறியது.
“டி அன்ட் சி எதுக்கு சிஸ்டர்?” என்றாள்.
“கர்ப்பப்பை கிளீன் பண்றது நார்மல் தான் இந்த் ட்ரீட்மென்ட்ல. உங்களுக்கு தானா அபார்ஷன் ஆகியிருக்கறாதால அதுவா வெளியேறுதான்னு பார்த்துட்டு தான் டி &சி பண்ணுவாங்க” என்றார் அந்த நர்ஸ்.