சங்கரனைப் பார்க்க, சொந்தத்தில் இருந்து ஒரு பெண் வந்திருக்க, அவருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் கோதாவரி.
“அப்பறம் கோதாவரி,என்ன சொல்றா உன் சின்ன மருமக?” என்று எதார்த்தமாய் ஆரம்பிக்க, அங்கே ஆரம்பித்தது வினை.
கோதாவரி காட்டாற்று வெள்ளமாய் அவளைப் புகார் வாசித்துக் கொண்டிருக்க, அதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த நதிக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை எல்லாம் பறந்திருந்தது.
“பார்த்து பேசுங்க அத்தை. எல்லா நேரமும் நான் பொறுமையா இருக்க மாட்டேன்” என்றாள் பொறுமையாக.
சங்கரன் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருக்க, உடம்புக்கு முடியாதவருக்கு இவர்களின் பேச்சு தொந்தரவாய் இருக்குமென்று அந்த அறையின் கதவை நன்றாக சாற்றி விட்டாள் நதி.
இப்போதெல்லாம் அவளுக்கு வாந்தி வருவதைப் போல் இருக்கும், ஆனால் வராது. எதற்கெடுத்தாலும் சோர்வு. எதற்கெடுத்தாலும் கோபம் டென்ஷன். தன்னை நினைத்து அவளுக்கே கவலையாய் இருந்தது.
குமரனுக்கு முன்னாடி ஒரு பொண்ணு பார்த்தோமே, அந்த பொண்ணை அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல பார்த்தேன். மரியாதை தெரிஞ்ச பொண்ணு. தானா வந்து சாரி கேட்டு பேசிட்டு போச்சு என்று கோதாவரி அந்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்ட நதி பல்லைக் கடித்துக் கொண்டாள்.
‘உங்க பையனை படிப்பு கம்மின்னு,பெரிய வேலையில இல்லைன்னு சொல்லி ஒருத்தி வேண்டாம்னு சொல்லியிருக்கா. அந்த பொண்ணு உங்களுக்கு மரியாதை தெரிஞ்ச பொண்ணா’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் தலையில் அடித்துக் கொண்டாள்.
அதுவரை நன்றாகத் தான் சென்றது.
“என்ன சொல்லி என்ன பண்ண? அந்த பொண்ணு சரின்னு சொல்லியிருக்கலாம். நல்ல வசதியான குடும்பம் வேற. குமரன் இன்னைக்கு எங்கையோ போயிருப்பான்” என்று கோதாவரி சொல்ல,
“உங்களுக்கு கொஞ்சம் கூட இப்படி பேச நாக்கு கூசவே இல்லையா? உங்க பையனுக்கு கல்யாணம் முடிஞ்சு பொண்டாட்டின்னு நான் ஒருத்தி இந்த வீட்ல இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தையும் வரப் போகுது. இப்போ உட்கார்ந்து இப்படி பேசிட்டு இருக்கீங்க? அதுவும் மூணாவது மனுஷங்க கிட்ட” என்றாள் வெடுக்கென்று.
“யாரைப் பார்த்து மூணாவது மனுஷின்னு சொன்ன. இவ என் அத்தை மக. அதை ஞாபகத்துல வச்சுகிட்டு பேசு” என்றார் கோதாவரி.
“நீங்களும் சில விஷயங்களை ஞாபகத்துல வச்சுகிட்டு பேசுறது உங்களுக்கும் நல்லது” என்றாள்.
“என்ன நதி வாய் நீளுது?” என்றாள்.
“நீங்க எப்படி பேசுறிங்ளோ அப்படித்தான் என் வாயும் பதில் குடுக்கும்” என்றாள்.
அவளை முறைத்த கோதாவரி,
“அதொண்ணுமில்லை, இவளுக்கு அவ நினைச்சதை நடத்திக்க முடியலையேன்னு பொறாமை. என் மகனைக் கூப்பிட்டு தனிக் குடித்தனம் போகணும்னு பார்த்தா. அது நடக்கலை. இப்போ குமரன் அவங்கப்பாவுக்கு நல்லா செலவு பண்ணி பெரிய தனியார் ஆஸ்பத்திரியில வச்சு வைத்தியம் பார்த்தான். அதையும் பொறுத்துக்க முடியலை. அந்த வயித்தெரிச்சல்ல பேசுறா” என்று அந்த பெண்ணிடம் பேச, நதிக்கு அழுகையே வந்துவிட்டது.
‘எப்படியெல்லாம் அபாண்டமா பேசுறாங்க? நான் என்னைக்கு அப்படியெல்லாம் நினைச்சேன்” என்றவளுக்கு கண்ணீர் வெளியே வர,
“விடு கோதாவரி, பிள்ளைத்தாச்சி பொண்ணு, இந்த நேரத்துல அழுகக் கூடாது. என்னதான் உனக்கு கோபமா இருந்தாலும், இந்த நேரத்துல இப்படியெல்லாம் பேசி வைக்காத கோதாவரி” என்று அந்த பெண்மணி அவருக்கு புத்தி சொல்ல,
“அட நீ வேற, இவ என்னைக்கு இந்த வீட்ல காலடி எடுத்து வச்சாளோ அன்னைக்கு பிடிச்சது கிரகம். யார் வீட்டைப் பிடிச்ச கிரகமோ இந்த மூணு மாசமா என் வீட்டைப் பிடிச்சு ஆட்டுது. ஆத்தாளோட இப்போ புள்ளையும் சேர்ந்திடுச்சு. மாசமா இருக்கான்னு தெரிஞ்சு ஒரு வாரம் கூட ஆகலை, என் புருஷனை சாகக் குடுக்கத் தெரிஞ்சேன். இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகுதோ இந்த வீட்ல” என்று அவர் நீட்டி முழக்க,
“வாயை மூடுங்க, இதுக்கு மேல ஏதாவது பேசுனிங்க, மரியாதை கெட்டுரும். இன்னும் பூமிக்கே வராத ஒரு பச்சை மண்ணை இப்படி பேச உங்களுக்கு நாக்கு கூசலை. நீங்க எப்படி மூணு பிள்ளையை பெத்து வளர்த்திங்க?” என்றவளுக்கு அழுகையும் ஆற்றாமையும் சேர்ந்து கொள்ள, அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டாள்.
“நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்” என்று கோதாவரி ஆரம்பிக்க, வந்தவரோ, இதற்குமேல் இருந்தால் கோதாவரி தன்னை வைத்தே இன்னமும் பேசுவார் என்று அறிந்து கிளம்பிவிட்டார்.
“என்னையும் என் பிள்ளையையும் பேசின இந்த வீட்ல இனி ஒரு நிமிஷம் கூட நான் இருக்க மாட்டேன். அவர் வரட்டும். இதுக்கு இன்னக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகனும்” என்றவளுக்கு அழுகை மட்டும் அடங்கவேயில்லை.
அங்கு குமரனுக்கோ அதற்கு மேல் பிரச்சனை. விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஸ்டேஷனில் வைத்து இறந்திருக்க, பெரும் பிரச்சனையே உருவாகியிருந்தது.
“சார் நான் அப்போ ஸ்டேஷன்லையே இல்லை. ரவுண்ட்ஸ் போயிருந்தேன். இன்ஸ்பெக்டர் தான் இருந்தார்” என்று உயர் அதிகாரியிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டான்.
“இன்னைக்கு ஆன் டியூட்டில இருந்த எல்லாரும் தான் பொறுப்பு” என்று அவர் பேச்சை முடித்திருக்க,
“அது நமக்குத் தெரியும் சார். வெளிய இருக்க பப்ளிக் எப்படி நம்புவாங்க. இதை வச்சு ஒரு பெரிய பிரச்சனையையே கூட்டுவாங்க. போதைல இருக்க அக்யூஸ்ட்டை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வரக் கூடாதுன்னு தெரியாதா சார்?” என்றவனுக்கு ஏகத்துக்கும் எரிச்சல்.
“குமரன் நிஜமாவே அவன் நெஞ்சப் பிடிச்சுகிட்டு கீழ விழுந்தான், அப்படியே இறந்துட்டான். புட்டேஜ் இருக்கு. இதையே நினைச்சு பீல் பண்ணாதிங்க” என்றார் அவர்.
“எப்படி சார் பீல் பண்ணாம இருக்க முடியும்? எனக்கு இது ப்ரோமோஷன் பீரியட் சார். எப்படியும் சஸ்பென்ஷன் குடுப்பாங்க. பார்த்துட்டே இருங்க” என்றவனுக்கு ஆத்திரமும், இயலாமையும் சேர்ந்து கொண்டது. இது ஒன்றும் சினிமா இல்லையே, ஹீரோ போல் உயர் அதிகாரிகளை எதிர்த்துப் பேசுவதற்கு.
அதற்குள் விஷயம் மீடியாவிற்கு தெரிய வர, விஷயம் காட்டுத் தீயாய் பரவியிருந்தது.
“என்னய்யா பண்ணி வச்சிருக்கிங்க? போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வர்ற வரைக்கும் ஒன்னும் பேச முடியாதுய்யா” என்ற எஸ்பி, அனைவரையும் சஸ்பென்ட் செய்திருந்தார்.
“சார் நான் ஸ்டேஷன்லையே இல்ல சார்” என்றான் குமரன்.
“தெரியும் குமரன். நீங்க நாளைக்கு எஸ்பி ஆபீஸ் வந்திடுங்க,பார்த்துக்கலாம்” என்று டிஎஸ்பி சொல்ல சரியென்றவன், மன உளைச்சலுடன் தான் வீடு வந்திருந்தான். பணப் பிரச்சனையோடு, இப்போது வேலை பிரச்சனையும் சேர்ந்து கொள்ள, உள்ளுக்குள் தளர்ந்து போனான் குமரன்.
வீட்டிற்குள் வரும் போதே, அங்கிருந்த அமைதி அவனுக்கு எதையோ உணர்த்தியது.
வந்தவன் ஆயாசமாய் சேரில் சாய்ந்து அமர, அவன் வந்திருக்கும் நிலை தெரியாமல் ஆரம்பித்தார் கோதாவரி.
“இங்க பார் குமரா உன் பொண்டாட்டிகிட்ட சொல்லி அவளைக் கொஞ்சம் அடக்கி வை. வாய் வர வர ரொம்ப நீளுது” என்றார். கண்களை மூடியிருந்தவன் திறக்கவேயில்லை.
நதியோ அழுதபடியே வெளியே வந்தவள்,
“நான் ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க மாட்டேன் உதய். வாங்க இப்பவே கிளம்பலாம்” என்றாள்.
“நதி ஸ்டேஷன்ல கொஞ்சம் பிரச்சனைமா. நீ உள்ள போ. எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என்றான் கண்களைத் திறவாமல்.
“எப்பப் பாரு பேசிக்கலாம் தானா உதய்? இன்னும் என்ன இருக்கு பேச? இனி எதையும் கேட்க எனக்கு தெம்பில்லை. இப்போ நீங்க வரீங்களா இல்லையா?” என்றாள் கண்களைத் துடைத்தபடி.
“இவ திட்டம் போட்டு காய் நகர்த்துறா குமரா. அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம இருக்குற நேரத்துல தனியா போகலாம்னு கூப்பிடுறா? எல்லாம் நீ குடுக்குற இடம்” என்று கோதாவரி ஆரம்பிக்க,
“கொஞ்சம் வாயை மூடுறிங்களா?” என்று அவரிடம் ஒரே கத்து கத்தியவன், நதியிடம் திரும்பினான். அப்போது தான் அவள் முகம் அழுது வீங்கியிருப்பதை கவனித்தான்.
“நதி பிளீஸ்.. நான் சொல்ற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரேன். இப்போ நேரம் சுத்தமா சரியில்லை” என்றான்.
“இவ என்னைக்கு இந்த வீட்டுக்கு வந்தாளோ அன்னைக்கு இருந்தே நேரம் சரியில்லை குமரா” என்று கோதாவரி பேசி முடிக்கும் முன் கையை ஓங்கி இருந்தான் குமரன்.
“பெத்த அம்மாவா போயிட்டிங்க. அம்மாவை அடிச்ச பாவத்தையும் சேர்த்து என்னை சுமக்க வச்சிடாதிங்க” என்றவன்,
“நதி உள்ள போ” என்றான்.
“மாட்டேன்..! எனக்கு இப்பவே தெரிஞ்சாகனும். உங்களுக்கு நான் வேணுமா? இல்லை இவங்க வேணுமா? என்னால ஒரு நிமிஷம் கூட இந்த வீட்ல இருக்க முடியாது” என்றாள் தீர்மானமாய்.
“ஏன்டி மனுஷனைப் போட்டு சாகடிக்கிறிங்க? நானும் மனுஷன் தான? எத்தனையைத் தான் தாங்குறது?சொல்ற எதையாவது கேட்குறியா?” என்று கத்தியிருந்தான்.