விஷயத்தை கேள்விப்பட்ட, வீட்டில் இருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி. நதியின் வீட்டில் வரதனோ குழந்தையாகவே மாறி விட்டார்.

“நமக்கு பேத்தியோ, பேரனோ வரப் போறாங்க சாரதா” என்று சொல்லி சொல்லி மாய்ந்தார். அவர்களைப் பொறுத்தவரை நதியின் குழந்தை தானே அவர்கள் வீட்டின் மூத்த பேரக் குழந்தை. அந்த மகிழ்ச்சி தான்.

உடனே கிளம்பி வந்து மகளைப் பார்த்துவிட்டு தான் சென்றனர் வரதனும், சாரதாவும். கோதாவரி பேசியதை எல்லாம் அவர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை.

தீபாவும் வந்து பார்த்துவிட்டு செல்ல, அவளை அறைக்குள் இழுத்துச் சென்று கதவை அடைத்திருந்தான் குமரன்.

“ஏங்க? இப்ப எதுக்கு இவ்வளவு வேகமா கதவை அடைக்கிறிங்க? அத்தை மாமா என்ன நினைக்க மாட்டாங்க” என்றாள் சங்கட்டத்துடன்.

“பின்ன என்னடி? இன்னும் எவ்வளவு நேரம் பேசிட்டே இருப்ப? அதான் அக்கா கிளம்பிட்டாள்ல. உள்ள வர வேண்டியது தான. நான் வேற டியூட்டிக்கு கிளம்பனும்” என்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான். இருந்த சந்தோஷத்திற்கு அவளுக்கும் அவனின் அருகாமையும் அணைப்பும் தேவைப்பட்டது.

“நீங்க அப்பா ஆகப் போறீங்க உதய். நான் அம்மா ஆகப் போறேன். கேட்கும் போதே நல்லா இருக்குல்ல” என்றாள் அவன் முகம் பார்த்து.

“எஸ், நமக்குன்னு ஒரு குழந்தை, நம்ம குழந்தை” என்றவன் அவள் முகம்  முழுவதும் முத்தமிட்டு கொண்டாட, அவனின் மகிழ்ச்சியிலும் அன்பிலும் உருகிப் போய் நின்றிருந்தாள் நதி.

அடுத்து வந்த நாட்கள் குமரன் அவளைக் கையில் வைத்துத் தாங்கினான். நதியும் ஒரு வாரம் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்திருக்க, ப்ரமொஷனையும், ட்ரான்ஸ்பரையும் மறந்து போனாள். பிரமோஷன் இல்லையென்றாலும் பரவாயில்லை, இங்கேயே இருந்துவிடலாம் என்ற எண்ணம் தான் அவளுக்கு. இப்போது குழந்தை விஷயமும் சேர்ந்து கொள்ள, முடிவே செய்துவிட்டாள்.

“குழந்தை பிறக்குற வரைக்கும் வேலைக்கெல்லாம் போக வேண்டாம்” என்று கோதாவரி சொல்ல,

“அப்படியெல்லாம் வேலையை விட முடியாது. எமர்ஜென்சின்னா லீவ் போட்டுக்கலாம்” என்று மறுத்துவிட்டாள் நதி. அந்த வேலை எவ்வளவு முக்கியம் என்று அவளுக்குத் தானே தெரியும்.

குமரன் தனியாய் வீடு பார்ப்பது தெரிந்ததும் ஆடித் தீர்த்துவிட்டார் கோதாவரி.

“நாங்க ஏதாவது ஒரு அநாதை ஆசிரமத்துல போய் தங்கிக்கிறோம். யாருக்கும் எந்த கஷ்ட்டமும் இருக்காது” என்று நாடகத்தை ஆரம்பிக்க, குமரனுக்கோ தலையை பிய்த்துக் கொள்ளும் நிலைமை. அவனைப் பார்த்து நதிக்குத் தான் பாவமாய் இருந்தது.

அவனுக்கும் ப்ரமோஷன் பீரியட் அருகில் வர, விடுமுறை கூட எடுக்க முடியாத சூழல். அப்படி எடுத்தால் ப்ரமோஷன் தள்ளிப் போகும் என்பதால், அவளுடன் இருக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு டியூட்டிக்கு சென்று வந்து கொண்டிருந்தான்.

அன்று டியூட்டி முடித்து வீட்டிற்கு வந்தவன்,

“நாளைக்கு ஹாஸ்பிட்டல் செக் அப் போகணும் நதி. ஸ்கேன் பண்ணனும்னு சொல்லியிருக்காங்க. நீ கிளம்பி ரெடியா இரு. நான் ஸ்டேஷன் போயிட்டு பத்துமணி போல வந்திடுறேன்” என்றான் சாப்பிட்டுக் கொண்டே.

“சரிங்க உதய்” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, “குமரா” என்ற கோதாவரியின் சத்தத்தில் வேகமாய் எழுந்து சென்றான் குமரன். அங்கே சங்கரன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்திருந்தார்.

“அப்பா என்னப்பா ஆச்சு?” என்றவன் நொடியும் தாமதிக்கவில்லை. அண்ணனுக்கு அழைப்பு எடுக்க, அவனும் உடனே வந்திருந்தான். அடுத்த நிமிடம் அவரை அனைவரும் சேர்ந்து ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றிருந்தனர்.

“இந்த நேரத்துல நீ அலைய வேண்டாம் நதி. வீட்ல இரு. சாப்பிட்டு டேப்லட் போட்டுக்கோ. நான் ஹாஸ்பிட்டல் போயிட்டு கால் பண்றேன்” என்று அந்த அவசரத்திலும் அவளிடம் சொல்லிக் கொண்டு சென்றான்.

நதிக்குத்தான் என்னமோ ஏதோ என்று நெஞ்சிற்குள் பிசைந்து கொண்டே இருந்தது. பாதி சாப்பாட்டில் எழுந்து சென்றிருந்தான். அனைத்தையும் எடுத்து வைத்தவளுக்கு ஏனோ சாப்பிடத் தோன்றவில்லை.

அவர்கள் சென்று இரண்டு மணி நேரமாகியும் எந்த அழைப்பும் வராமல் இருக்க, தானே அவனுக்கு அழைப்பெடுத்தாள் நதி.

“நதி” என்றவனின் குரல் உடைந்து போயிருந்தது.

“மாமாக்கு என்னாச்சு உதய்? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்றாள் பதட்டத்துடன்.

“ஹார்ட் அட்டாக் நதி. உடனே ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்றாங்க. அட்மிஷன் போட்டாச்சு” என்றான் குமரன்.

“கவலைப் படாதிங்க உதய், மாமாக்கு ஒன்னும் ஆகாது” என்றாள்.

“ஒன்னும் ஆகக் கூடாது நதி. நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” என்றவனின் குரலில் மருந்துக்கும் உயிர்ப்பில்லை.

சங்கரன் ஹாஸ்பிட்டல் வாசம் சென்று  ஒரு வாரம் ஆகியிருந்தது. குமரன் வீட்டிற்கும், ஹாஸ்பிட்டலுக்கும் ஷ்டேஷனிற்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருந்தான்.

செலவு ஏழு லட்சத்தை முழுமையாய் முழுங்கியிருந்தது. செலவைக் கேட்ட கல்யாணுக்கு கண்ணாமுழி பிதுங்கியது.

“கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்லையே வச்சுப் பார்த்திருக்கலாம் குமரா” என்றான் கல்யாண்.

“அன்னைக்கு அவசரத்துக்கு இங்க தானண்ணா அட்மிட் பண்ணோம். சீக்கிரமா ட்ரீட்மென்ட் எடுக்கப் போய் தான் அப்பாவை காப்பாத்த முடிஞ்சது” என்றான் குமரனும் பொறுமையாக.

“என்கிட்டே இப்போதைக்கு பணம் எதுவும் இல்லை குமரா” என்ற கல்யாணைப் பார்த்து விரக்தி சிரிப்பு சிரித்துக் கொண்டான்.

“நிஜமாடா! நான் சுயநலமா யோசிப்பேன் தான்,இல்லைன்னு சொல்லலை. ஆனா, நிஜமாவே இப்போ கையில பணம் இல்லை குமரா. பிள்ளைங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டிட்டேன்டா” என்றான்.

கல்யாணைப் பற்றி குமரனுக்கு நன்றாகவே தெரியும். அவன் ஒரு கஞ்சன் தான். ஆனால் அவன் வருமானமும் அந்த அளவிற்கு தான் இருந்தது. பெரிதாக கெட்ட பழக்கங்கள் கிடையாது. முப்பதாயிரத்திற்குள் குடும்பத்தை நடத்த வேண்டிய கஷ்ட்டம் அவனுக்கு. ஏதோ குமரனின் புண்ணியத்தில் செலவழிக்காமல் மிச்சம் சொச்சம் சேர்த்து வைத்த கையிருப்பு பணத்தை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

“நான் பார்த்துக்கிறேன் விடுண்ணா. டிப்பார்ட்மென்ட்ல ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கு. ஆனா எந்த அளவுக்கு கவர் ஆகும்னு தெரியலை. பார்த்துக்கலாம் விடு” என்று அவன் சொல்லவும் தான் கல்யாணுக்கு மூச்சே வெளி வந்தது.

அன்று தீபாவுடன் சேர்ந்து சங்கரனைப் பார்க்க நதியும் வந்திருந்தாள். அவரைப் பார்த்துவிட்டு அங்கே கோதாவரியுடன் சேர்ந்து அமர்ந்திருக்க, அப்போது அங்கே வந்தாள் ஒரு பெண்.

“ஹாய் எப்படி இருக்கீங்க?” என்றாள் தீபாவைப் பார்த்து.

“உங்களை யார்ன்னு தெரியலையே?” என்றாள் தீபா வேண்டுமென்றே.

“என்னங்க? அதுக்குள்ள மறந்துட்டிங்களா? நீங்க குமரனோட அக்கா தானே?” என்றாள் அவள்.

“ஆமா” என்ற தீபா யோசிப்பவளைப் போல் நடித்தாள்.

“எப்படிம்மா இருக்க? உன்னை எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு” என்றார் கோதாவரி.

“நல்லா இருக்கேன் ஆன்ட்டி. சாரி ஆன்ட்டி, என்ன இருந்தாலும் நான் அப்படி பண்ணியிருக்கக் கூடாது. உங்களைப் பார்த்தா சாரி கேட்கனும்னு நினைச்சுட்டே இருந்தேன். நீங்க எங்க இங்க?” என்றாள்.

“குமரனோட அப்பாவுக்கு ஆப்ரேஷன் பண்ணியிருக்குமா. அதான் இருக்கோம்” என்றார்.

“ஹோ, அங்கிளை கேட்டேன்னு சொல்லுங்க ஆன்ட்டி, நான் வரேன்” என்றபடி கிளம்பிவிட்டாள்.

“யார் அண்ணி இது?” என்றாள் நதி.

“அது உனக்கு முன்ன குமரனுக்கு பார்த்த பொண்ணு நதி. முதல்ல சரின்னு சொல்லுச்சு. குமரனும் சரின்னு தான் சொன்னான். எல்லாம் பேசி முடிக்கப் போற நேரம் இந்த பொண்ணு மாட்டேன்னு சொல்லிடுச்சு. நான் எம்பிஏ படிச்சிருக்கேன். எனக்கு இன்னும் படிச்ச பெரிய வேலை பார்க்குற பையன் தான் வேணும்னு சொல்லிடுச்சு” என்றாள் தீபா.

“ஹோ” என்றவள் மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டாள்.

“ஆமா நீ செக்அப் போனியா இல்லையா?” என்றாள் தீபா.

“மாமா டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த உடனே போறேன் அண்ணி. அவருக்கும் நேரமில்லை. அவரும் என்ன தான் பண்ணுவார், ஒரே அலைச்சல்” என்றாள் நதி.

“அவன் அவனோட அப்பாவுக்காகத் தான அலையறான். அதுல உனக்கு வருத்தம் போலயே?” என்றார் கோதாவரி.

“நான் சாதரணமா தான் சொன்னேன் அத்தை” என்றவள் மேற்கொண்டு பேசவில்லை. பேசினால் அவர் எப்படி வாயாடுவார் என்று தான் அவளுக்குத் தெரியுமே.

ஒரு வழியாக ஹாஸ்பிட்டல் வாசம் முடித்து, சங்கரனை வீட்டுக்கும் அழைத்து வந்துவிட்டனர். நதியின் பெற்றோரும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.

“நாங்க வேணும்னா நதியை ஒரு வாரம் அங்க அழைச்சுட்டு போகட்டுமா தம்பி?” என்று வரதன் கேட்க,

“நான் பார்த்துக்கிறேன் மாமா. அப்பா கொஞ்சம் நல்லா ஆன உடனே நானே அழைச்சுட்டு வரேன்” என்றிருந்தான்.

“அம்மாவும் பிள்ளையும் என்ன பண்றிங்க?” என்றபடி உள்ளே நுழைந்தவனைக் கண்டு முறைத்தாள்.

“அம்மா கோபமா இருக்காளா அப்பா மேல” என்றவன் வயிற்றில் முத்தமிட,

“எங்க ஞாபகம் எல்லாம் உங்களுக்கு இருக்கா?” என்றவளுக்கு கண்கள் கலங்கியது. அவன் நிலை தெரிந்தாலும், ஏனோ அவனின் அருகாமைக்கு ஏங்கிய மனம் அப்படியெல்லாம் பேச வைத்தது.

“எப்பவும் சொல்றது தான், மறந்தாத்தானடி நினைக்கிறதுக்கு” என்றவன் அவளை வயிற்றோடு அணைத்துக் கொள்ள,

“இந்த டயலாக் எல்லாம் எங்ககிட்ட வேண்டாம். அய்யா என்ன சொன்னிங்க? முப்பது வருஷத்துல நான் கையை பிடிச்ச முதல் பொண்ணு நீதான்டி எப்படியெல்லாம் டயலாக் அடிச்சிங்க. சாருக்கு பார்த்த பொண்ணை நேத்து ஹாஸ்பிட்டல்ல பார்த்தோம். சாருக்கும் அந்த பொண்ணை பிடிச்சிருந்ததாமே?” என்று அவள் கிண்டலுடன் பேசிக் கொண்டிருக்க, சட்டென்று அவளை விட்டு விலகியிருந்தான் குமரன்.

ஏதோ ஜாலியாய் நினைத்து பேசிக் கொண்டிருந்தவளுக்கு, அவனின் விலகல் முதலில் விளங்கவில்லை. அவனின் முகம் பார்த்த பிறகு தான் புரிந்தது.

“என்னாச்சு உதய்?” என்றாள்.

“இப்பவும் சொல்றேன், நான் முதன் முதல்ல கையைப் பிடிச்ச பொண்ணு நீதான் நதி. அந்த பொண்ணை வீட்ல பார்த்து தான் பேசுனாங்க. நானும் சரின்னு சொன்னேன். இன்பேக்ட் நான் அந்த பொண்ணை நேர்ல கூட பார்க்க போகலை. அப்பறம் அந்த பொண்ணே மாட்டேன்னு சொல்லிடுச்சு, அதுவும் படிப்பையும் வேலையையும் காரணம் காட்டி” என்றான் இறுகிய குரலில்.

“உதய் நான் சும்மா கிண்டலுக்கு பேசிட்டு இருந்தேன்” என்றாள் நதி.

“கிண்டலுக்கா இருந்தாலும், ட்ரஸ்ட் ரொம்ப முக்கியம் நதி” என்றவன் மேற்கொண்டு அவளிடம் எதுவும் பேசவில்லை.

“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோபப்படுறார்?” என்றவளுக்கு ஆயாசமாய் வந்தது.

இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அவளுக்கு விடுமுறை இருந்தது. அவள் எடுத்திருந்த விடுமுறையும் முடிவுக்கு வந்திருந்தது. அன்று ஸ்டேஷன் சென்றவனை அழைத்திருந்தாள் நதி.

“சொல்லு நதி”

“ஹாஸ்பிட்டல் போகணும் உதய். இன்னைக்கு வர்றீங்களா? இன்னும் டூ டேஸ் தான் எனக்கு லீவ் இருக்கு” என்றாள்.

“இன்னைக்கா?” என்று நெற்றியைத் தேய்த்தவன்,

“நான் வர நைட் ஆகிடும் நதி. நாளைக்கு கண்டிப்பா போகலாம். இல்லைன்னா அக்காவை கூட்டிட்டு போயிட்டு வரியா?” என்றான் தயக்கமாய்.

“இல்லை வேண்டாம், நாம நாளைக்கே போகலாம். பத்து நாளா ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் அலைய நேரம் இருந்த உங்களுக்கு, என்கூட செக்கப் வரத்தான் நேரம் இருக்காது” என்றவள் பட்டென்று போனை வைத்திருந்தாள்.

அவனோ அங்கே தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டான். ஆயாசமாய் வந்தது அவனுக்கு. நன்றாய் தூங்கியே பத்து நாட்களுக்கு மேல் ஆகியிருந்தது. ஏற்கனவே இடத்திற்கு அட்வான்ஸ் கொடுத்தது, கல்யாண செலவு, இப்போது ஹாஸ்பிட்டல் செலவு என்று அவன் சேமிப்பு முழுவதும் கரைந்திருந்தது. அன்று முழுவதும் அவன் அதே சிந்தனையில் உழன்று கொண்டிருக்க,  அங்கே நதியின் பாடு தான் திண்டாட்டமாய் இருந்தது.