வாசல் 11:

“என்னாச்சு குமரா? வந்ததுல இருந்து அமைதியா இருக்க? என்ன பிரச்சனை?” என்றாள் தீபா.

“நான் தனியா போய்டலாம்னு இருக்கேன் க்கா” என்றான் எடுத்த எடுப்பில்.

“என்னாச்சு குமரா? வீட்ல எதுவும் பிரச்சனையா?” என்றாள் தீபா.

“நம்ம வீட்ல பிரச்சனை இல்லைன்னா தான் ஆச்சர்யம். அம்மாவோட நடவடிக்கை வரவர சரியில்லை. நானும் எப்பவும் ஒரே மாதிரி இருக்குறது இல்லை. ஸ்டேஷன்லையே ஆயிரத்தெட்டு பிரச்சனை. அந்த டென்ஷனை வீட்லயும் காட்டிடுறேன். தனியா போய்ட்டா மனக்கசப்பாவது குறையும்னு நினைக்கிறேன்” என்றான் நிதானத்துடன்.

“நானும் அப்பாவும் முதல்ல இருந்து அதைத் தான குமரா சொல்றோம். இப்ப தான் சரியான முடிவு எடுத்திருக்க” என்றாள் தீபா.

“இருந்தாலும் மனசுக்கு கொஞ்சம் கஷ்ட்டமா இருக்குக்கா. அண்ணனும் அவங்களை கூட வச்சு பார்த்துக்க முடியாதுன்னு சொல்லிட்டான். நானும் தனியா விட்டுட்டு போயிட்டா, அது நல்லா இருக்காதேன்னு தான் இவ்வளவு நாள் யோசனையா இருந்தது. இப்போ எனக்கும் வேற வழி தெரியலைக்கா” என்றான்.

“கொஞ்ச நாளைக்கு தனியா இருந்தாத்தான் பிள்ளைங்களோட அருமை என்னன்னு தெரியும். கொஞ்சமாவது விலகி இருந்தாத்தான் பாசம்னா என்னன்னு புரியும். அவங்களுக்கு அவங்க என்ன பண்ணாலும், நீ பொறுத்து போய்டுவன்னு ரொம்ப நம்பிக்கை. ஆனா, நதி ஏன்டா பொறுத்துப் போகணும்? சீக்கிரம் ஒரு நல்ல வீட்டைப் பாரு” என்றாள் தீபா.

“உனக்கு ஏதும் வருத்தம் இல்லையேக்கா” என்றான் குமரன்.

“நான் எதுக்கு வருத்தப்பட போறேன். இனியாவது உன் வாழ்க்கையை நீ வாழப் பாரு குமரா” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே, கல்யாணும், கண்ணனும் ஒன்றாய் வந்தனர்.

“என்னடா குமரா தீபா வீட்ல இருக்க?” என்றான் கல்யாண்.

“ஏன்? அக்கா வீட்டுக்கு வரக் கூடாதாண்ணா?” என்றான் குமரன்.

“நான் எப்போடா அப்படி சொன்னேன்” என்ற கல்யாண்,

“ஆமா, வீட்ல என்ன பிரச்சனை? அம்மா அங்க வந்து ஒரே பஞ்சாயத்து. இந்த நதி பொண்ணாவது கொஞ்சம் பொறுமையா போகலாம்ல” என்றான் கல்யாண்.

“நீ வேணும்னா அவங்களை உன் கூட கூட்டிட்டு போய் வச்சுக்கண்ணா. ராணி பொறுமையா பார்த்துக்குவா” என்றாள் தீபா கடுப்புடன்.

“அவளுக்கு அவ்வளவு விபரம் பத்தாது தீபா. நானே அவளை வச்சு படாத பாடு படுறேன். இதுல அம்மாவையும் வச்சு என்னால முடியாது. ஆனா, நதி படிச்ச பொண்ணு. பக்குவமா நடந்துக்கிற பொண்ணு. அதெல்லாம் சமாளிச்சுடும்” என்றான்.

“தனக்கு வந்தா தான் தெரியும் தலைவலியும், வயித்து வலியும். குமரன் தனியா வீடு பார்க்க போறான். அம்மா அப்பா செலவுக்கு நீங்க ரெண்டு பேரும் மாசம் இவ்வளவுன்னு  பணம் குடுத்துடுங்க. அவங்க அந்த வீட்லயே இருக்கட்டும்” என்றாள் தீபா.

“அப்படி அவங்களை தனியா விட்டா நம்ம சொந்த பந்தம் நம்மளை என்ன பேச மாட்டாங்க. அம்மா அப்பாவை பார்க்காம அநாதையா விட்டிருக்கோம்னு பேச மாட்டாங்க? கொஞ்ச நாள் அர்ஜஸ்ட் பண்ணிக்க குமரா. எனக்கு இன்கிரிமென்ட் வந்த உடனே அவங்களை என்னோட கூப்பிட்டுக்கிறேன்” என்றான் கல்யாண்.

வெறுத்துப் போனது குமரனுக்கு. “பார்க்கலாம்ண்ணா” என்றவன்,”வரேன்க்கா” என்றபடி கிளம்பிவிட்டான்.

அன்று அலுவலகம் முடிந்து வீடு வரும் போதே களைப்பாய் இருந்தது நதிக்கு. லேசாய் தலையை சுற்றிக் கொண்டு வர, உடல் களைப்பு என்று எண்ணிவிட்டாள். அவள் வரும் போதே வீட்டில் தான் இருந்தான் குமரன்.

களைப்புடன் வந்தவளைக் கண்ட சங்கரன்,”ரொம்ப களைப்பா தெரியறம்மா? உடம்புக்கு எதுவும் முடியலையாம்மா நதி” என்றார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. கொஞ்சம் அசதியா இருக்கு, அவ்வளவு தான். பிரஷ் ஆகிட்டு வந்து உங்களுக்கு காபி போட்டு தர்றேன் மாமா” என்றாள்.

“ஒன்னும் அவசரம் இல்லைம்மா. உனக்கு முடியலைன்னா நீ ரெஸ்ட் எடும்மா. இன்னைக்கு கோதாவரியே சமைக்கட்டும்” என்றார்.

“என்னால முடியாது” என்றார் கோதாவரி பட்டென்று.

“ஏன், காலையில மதியம் செய்ய முடிஞ்சது. இப்போ முடியாதா?” என்றார் சங்கரன்.

“அதான் ரெண்டு நேரம் சமைச்சேன்ல. இப்போ இவளை சமைக்க சொல்லுங்க” என்றவர் டிவி பார்ப்பதில் தான் குறியாய் இருந்தார்.

“நானே செஞ்சுக்கிறேன் மாமா” என்றவள் உள்ளே செல்ல, அங்கே ஓய்ந்து போன முகத்துடன் படுத்திருந்தான் உதய்.

“என்னாச்சு? இந்த நேரத்துல வீட்ல இருக்கார்?” என்று எண்ணியவள் எதுவும் பேசாமல் பிரஷப் ஆகிக் கொண்டு வர, அவன் அப்போதும் அப்படியே இருக்க, மனசு கேட்காமல் காய்ச்சல் எதுவும் அடிக்கிறதா என்று தொட்டுப் பார்த்தாள்.

“உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லை” என்றான்.

“இந்த நேரத்துல வீட்ல இருக்க மாட்டிங்களே” என்றாள் தயங்கியபடி.

“நைட் டியூட்டி போகணும்” என்றான்.

“நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்று திரும்பியவள் தடுமாறி விழப் போக,

“நதி” என்று ஓரெட்டில் எழுந்து பிடித்திருந்தான் குமரன்.

“என்னாச்சு? சாப்பிட்டியா இல்லையா?” என்றான் கோபமாய்.

“சாப்பிட்டேன்ங்க. என்னன்னு தெரியலை ரெண்டு நாளா இப்படித்தான் இருக்கு” என்றாள்.

“ரெண்டு நாளா இப்படி இருன்னு சொல்ற? அப்பறம் ஏன்டி என்கிட்டே சொல்லலை?” என்று கடிந்து கொண்டவனுக்கு அவள் மேல் இருந்த கோபமெல்லாம் பின்னால் சென்றிருந்தது.

“கிளம்பு ஹாஸ்பிட்டல் போகலாம்” என்றான்.

ஹாஸ்பிட்டல் என்றதும் அரண்டவள்,”அதெல்லாம் வேண்டாம் உதய்” என்றாள் வேகமாய்.

“நான் உன்னைக் கிளம்புன்னு சொன்னேன் நதி” என்று அவன் பல்லைக் கடிக்க, அதற்குமேல் மறுத்தால் அதற்கும் கோபப்படுவான் என்று எண்ணியவள், அவனுடன் கிளம்பினாள்.

“அப்பா நதிக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிட்டல் வரைக்கும் போயிட்டு வரோம்” என்றவன் வண்டியை கிளப்ப,

“பைக்ல உட்கார்ந்துடுவியா நதி. இல்லைன்னா கார் எடுக்கட்டுமா?” என்றான்.

“ட்ராபிக்கா இருக்கும். பைக்லயே போகலாம்” என்றவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் சென்றான் குமரன்.

மருத்துவமனை சென்றவனுக்கு கிடைத்ததென்னவோ மகிழ்ச்சியான விஷயம் தான்.

“வாழ்த்துக்கள் குமரன். உங்க வொயிப் கன்சீவா இருக்காங்க” என்ற வார்த்தைகளில் மீண்டும் பிறந்தான் குமரன்.

“நிஜமாவா டாக்டர்” என்று திரும்பத் திரும்ப அவன் கேட்டுக் கொண்டே இருக்க, அவனின் எக்சைட்மென்ட் அவருக்கும் புரிந்தது.

நதியோ மகிழ்ச்சியின் பிடியில் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் அமர்ந்திருந்தாள். குழந்தை என்ற விஷயத்தைப் பற்றி இதுவரை அவர்கள் பேசிக் கொண்டது கூட கிடையாது. அதற்காக வேண்டாம் என்று தள்ளிப் போடவும் இல்லை. தனக்குள் ஒரு உயிர் என்பதே அவளுக்கு உயிர் தொட்ட உணர்வைக் கொடுத்தது.

“இப்போ கொஞ்சம் விட்டமின் டேப்லட்ஸ் எழுதித் தரேன். அதை விடாம எடுத்துக்கோங்க. ஒரு இன்ஜெக்ஷன் போடணும். ஒன் வீக் கழிச்சு ஒரு ஸ்கேன் பார்த்துடலாம்” என்றார் மருத்துவர்.

“ஓகே டாக்டர்” என்றவள்,

“ஊசி மட்டும் வேண்டாம் டாக்டர்” என்றாள் பாவமாய். அவள் சொன்ன தொணியில் அவனுக்கு சிரிப்பு வந்திருந்தது.

“இன்ஜெக்ஷன் வேண்டாமா? இனி ரெகுலரா மன்திலி செக்கப் வரும் போதெல்லாம் போட்டுத்தான் ஆகணும். இதுக்கே பயந்தா எப்படி குழந்தை பெத்துக்குவிங்க மிஸ்சஸ் குமரன்?” என்றார் மருத்துவர் சிரிப்புடன்.

“அதெல்லாம் பெத்துக்குவேன் டாக்டர்” என்றவள், அந்த ஊசியை போட்டு முடிக்கும் முன் அவரை படாத பாடு படுத்தி விட்டாள்.

அனைத்தையும் முடித்து வெளியே வந்தவர்களுக்கு  முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அப்போதைய மனக்கசப்பை குழந்தை விஷயம் மட்டுப்படுத்தியிருந்தது.

“தேங்க்ஸ்டி” என்றவன் ஹாஸ்பிட்டல் என்றும் பாராமல் அணைத்துக் கொண்டான்.

“நமக்கும் பாப்பா வரப் போகுது உதய். என்னால இதை நம்பவே முடியலை” என்றாள் சந்தோஷத்துடன்.

“எப்பவுமே நம்ம உழைப்புக்கான பலன் கண்டிப்பா கிடைச்சே தீரும்” என்று நமட்டு சிரிப்பு சிரித்தவனை முறைக்க முயன்று தோற்றாள் நதி.