அவன் முகத்தில் தெரிந்த கோபத்தில் சட்டென்று வாயை மூடிக் கொண்டாள் தீராநதி. கோதாவரிக்கு பதில் சொல்கிறேன் என்று அவள் பேசியிருக்க, அது குமரனின் மனதில் அப்படியே பதிந்து விட்டது.
மகனின் முகத்தில் தெரிந்த கோபத்தில் கோதாவரியும் வாயை மூடிக் கொண்டார்.
திருமணம் முடிந்த இந்த மூன்று மாதங்களில் அவனின் கோபத்தை இதுவரை கண்டதில்லை நதி. எவ்வளவு கோபம் என்றாலும் அவள் முன் காட்டிக் கொள்ள மாட்டான்.
ஆனால் இன்று அவன் முகத்தில் தெரிந்த கோபத்தில் நதிக்கு வாயெல்லாம் உலர்ந்து போனது. அவள் ஏதோ அவனிடம் சொல்ல வர, அவள் முகத்தைக் கூட பார்க்காமல் அறைக்குள் சென்றவன் ஓங்கி சாற்றியதில் கதவே உடைந்திருந்தது.
முதல் முறையாக அவனின் புறக்கணிப்பில் விக்கித்து நின்றாள் நதி. அவளுக்கும் இப்போதெல்லாம் காரணமே இல்லாமல் கோபமும் எரிச்சலும் வந்து கொண்டிருந்தது. அப்படி இருந்தவளுக்கு கோதாவரி காரணத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க, முழு கோபத்தையும் காட்டிவிட்டாள்.
ஏற்கனவே ஸ்டேஷனில் அன்று டிஎஸ்பியிடம் திட்டு வாங்கியிருந்தான் குமரன்.
‘ஒரு சாதாரண எஸ்ஐ உனக்கு இவ்வளவு திமிர் ஆகாது’ என்ற டிஎஸ்பியின் வார்த்தைகள் காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க, அதைத் தாங்க முடியாமல் வீடு வந்தவனுக்கு, நதியின் ‘உங்க பையன் ஒரு சாதாரண எஸ்ஐ’ என்ற வார்த்தைகளும் சேர்ந்து கொள்ள, மனம் மேலும் இறுகிப் போனது.
நதி தயங்கித் தயங்கி அறைக்குள் வந்து பார்க்கும் போது யூனிபார்ம் சட்டையை மற்றும் கழற்றியிருந்தவன், பேண்ட் மற்றும் பனியனுடன், கைகளைக் கொண்டு கண்களை மறைத்தபடி படுத்திருந்தான்.
மெல்ல அவனருகில் சென்றவன், அவனின் கைகளைத் தொட, சட்டென்று அவள் கையைத் தட்டி விட்டிருந்தான் குமரன்.
“உதய், நான் என்ன சொல்ல வர்றேன்னா?” என்று அவள் தயங்க,
“ஒன்னும் சொல்ல வேண்டாம். கொஞ்ச நேரம் என்னை தனியா இருக்க விட்டா போதும்” என்றான் பட்டென்று.
யாரோ ஒருவரிடத்தில் பேசுவதைப் போல் அவன் பேசுவதைக் கண்ட நதிக்கு கண்கள் சட்டென்று கலங்கி விட்டிருந்தது.
“உதய், நான் வேணும்னு அப்படி பேசலை” என்றாள் மீண்டும்.
“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியுமா புரியாதா? ஏன் எல்லாரும் என்னைப் போட்டு பாடா படுத்துறிங்க?” என்றவன் எழுந்து டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூம் நோக்கி செல்ல, அவனையே விக்கித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை திரும்பிப் பார்த்தவன்,
“நீ எப்படி எதையும் ஒளிச்சு மறைச்சு என்னை மேரேஜ் பண்ணலையா, அதே மாதிரி தான் நானும். சாதாரண எஸ்ஐ ன்னு தெரிஞ்சு தான மேரேஜ் பண்ண? நான் பிஸ்னஸ் மேக்னட் இல்லைன்னு தெரிஞ்சு தான மேரேஜ் பண்ண?” என்றான் விரக்தியான குரலில்.
அவன் குரலில் என்ன இருந்தது? என்ன உணர்வு இருந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு வெறுப்பு இருந்ததைப் போல் அவள் உணர்ந்தாள்.
“நான் அந்த அர்த்ததுல பேசலை உதய். அத்தை என்ன பேசினாங்கன்னா?” என்று அவள் ஆரம்பிக்க,
“அவங்க என்னமும் பேசிட்டு போகட்டும்.அதுக்கு நீயும் பதிலுக்கு பதில் என்ன வேணும்னாலும் பேசிட்டு போ. நான் அதைக் கேட்கலை. உங்க பேச்சுல நானும், என் வேலையும் ஏன் வந்தோம்?”என்றவன்,
“ஈசியா சொல்ற? என்னை டைவேர்ஸ் பண்ணிட்டு இன்னொருத்தியை கல்யாணம் பண்ணி வைங்க உங்க பையனுக்குன்னு?” என்று நிறுத்தியவன்,
“மனசுல இருக்குறது தான நதி வார்த்தையா வரும். நான் இதை உன்கிட்ட சுத்தமா எதிர்பார்க்கலை. இப்பவும் சொல்றேன், நான் ஒரு சாதாரண எஸ்ஐ தான். இந்த சாதாரணமானவனைப் பிடிக்காம சகிச்சுகிட்டு வாழணும்னு எந்த அவசியமும் இல்லை” என்றவன் சட்டென்று பாத்ரூமிற்குள் நுழைந்து கொள்ள, அதுவரை வெளியே வரவா வேண்டாமா என்று அனுமதி கேட்டுக் கொண்டிருந்த கண்ணீர் பொலபொலவென்று வெளியே வந்திருந்தது.
குளித்து விட்டு வெளியே வந்தவன், அதே இடத்தில் நின்று அழுது கொண்டிருந்த நதியைப் பார்த்தும் பார்க்காததும் போல் வெளியே சென்று விட்டான். அவனுடைய அந்த விலகல் அவளை மேலும் பாதிக்க, அழுது கொண்டே படுத்துவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவன், அவள் அப்போதும் தேம்பிக் கொண்டே இருப்பதைக் கண்டு,
“வந்து சாப்பிடு” என்றான்.
“எனக்கு வேண்டாம், பசியில்லை” என்றவள் அதற்கு மேல் பேசவில்லை. அவனும் சாப்பிடாமல் வந்து படுத்துவிட்டான். அவர்களுக்குள் வந்த முதல் சண்டையே பெரிய இடைவெளியை இருவருக்கும் இடையில் ஏற்படுத்தியிருந்தது.
இதுவரை அவனை அப்படி பேசியது தப்பு என்று எண்ணி அழுதவள், அவன் கோபத்தை எண்ணி அழுதவள்,”என்ன நடந்தது?” என்று கேட்காமல் அவன் கோபப்படுகிறான்? என்று கோபத்தை முழுவதும் அவன் மீது திருப்பியிருந்தாள்.
ஆக, இருவரும் இரவு சாப்பிடவுமில்லை. பேசிக் கொள்ளவுமில்லை. ஏற்கனவே அன்று டியூட்டி என்று அலைந்ததில் அவன் மதியமும் சாப்பிட்டிருக்கவில்லை. இரவும் பட்டினி.
அருகருகே படுத்திருந்தாலும் மறந்தும் அவள் அவன் புறம் திரும்பவில்லை. அழுது தேம்பியவள் ஒரு கட்டத்தில் அப்படியே உறங்கிப் போனாள்.
காலையில் எழுந்தவள், அவனிடம் பேசவும் இல்லை. அவனும் அவளிடம் பேச முற்படவில்லை. வீட்டிலும் அவள் எந்த வேலையும் செய்யவில்லை. எழுந்து கிளம்பியவள், அலுவலகம் சென்று விட்டாள்.
அப்போது தான் வீட்டின் நிலையை சங்கரன் கவனித்தார். நதியின் அப்பா வந்துவிட்டு சென்ற பிறகு அவர் வெளியே சென்று விட்டதால், நடந்த சண்டை அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
டியூட்டி கிளம்பி வெளியே வந்தவன் நதியைக் காணாமல் கிட்சனில் சென்று பார்க்க, அங்கும் அவள் இல்லை. யோசனையுடன் வந்தவனைப் பிடித்துக் கொண்டார் கோதாவரி.
“நேத்து நீயே பார்த்த தான குமரா? அவ என்ன பேச்சு பேசினான்னு? இப்பவும் காலையில எந்திருச்சு ஒரு வேலையும் செய்யலை. சமைக்கலை, ஒரு காபி கூட போடலை. ஜம்பமா கிளம்பி போய்ட்டா” என்றார் கோதாவரி.
ஏற்கனவே முதல் நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்த பசியும், இப்போது நதி கிளம்பிப் போனதும் அவன் கோபத்தை இன்னமும் அதிகப்படுத்தியிருக்க, கையில் கிடைத்த டிவி ரிமோட்டை எடுத்து எறிந்ததில் அது சுக்கு நூறாய் உடைந்திருந்தது.
“நீங்க எதுவும் பேசாம அவ அப்படி பேசிருக்க மாட்டா. அப்படி பேசக் கூடிய ஆளும் அவ இல்லை. எனக்கு உங்களைப் பத்தியும் தெரியும், அவளைப் பத்தியும் தெரியும். இது தான் சாக்குன்னு ரெண்டு பேருக்குள்ள கலகத்தை மூட்டி விட பார்த்திங்க, நான் மனுஷனா இருக்க மாட்டேன்” என்று கத்தியவன், புல்லைட்டை உதைத்த உதையில் அதற்கு வாயிருந்தால் கூட அழுதிருக்கும்.
அவன் கோபம் அவன் சென்ற வேகத்தில் தெரிய, அதைப் பார்த்த சங்கரனுக்கு மனதிற்குள் பெரும் கவலை வந்து ஒட்டிக் கொண்டது.
“நான் போனப் பிறகும் அந்த பொண்ணோட சண்டை போட்டியாடி? நீயெல்லாம் மனுஷ ஜென்மமாடி? இதனால நம்ம பையன் நிம்மதியும் போகும்னு உன் மரமண்டைக்கு புரியுதா இல்லை, புரியாத மாதிரி நடிக்கிறியா?” என்றவருக்கு படபடவென்று வர, அப்படியே அமர்ந்துவிட்டார்.
அலுவலகத்தில் எதையோ வெறித்தபடி பார்த்திருந்தவளை யோசனையுடன் பார்த்தாள் பிரியா.
“என்னாச்சு நதி?” என்று அவள் கேட்டது தான் மாயம், அழுது கொட்டித் தீர்த்துவிட்டாள் நதி.
“நதி காம் டவுன். இப்ப எதுக்கு சின்னப் பிள்ளை மாதிரி அழற. ஆபீஸ்ல எல்லாம் ஒரு மாதிரி பார்க்குறாங்க. கண்ட்ரோல் யுவர் செல்ப்” என்றாள் பிரியா.
“அந்தம்மா அப்படித்தான் பேசும்னு உனக்கு ஏற்கனவே தெரியும் தான நதி. நீயாவது பதிலுக்கு பதில் பேசாம இருந்திருக்கலாம்ல” என்றாள்.
“என்னைப் பேசினா நான் பொருத்துக்குவேன் பிரியா. ஆனா, என் அப்பாவை ஏன் அப்படி பேசணும்? அதான் நானும் பேசிட்டேன்” என்றாள்.
“அண்ணாவுக்கு நடந்தது முழுசா தெரியாது. உங்க சண்டையில நீயும் அவரை இழுத்துப் பேசியிருக்கக் கூடாது தானே நதி. பொதுவா ஆம்பிள்ளைங்களுக்கு “நீ ஆம்பிள்ளையா?” அப்படின்னு கேட்டாலும் கோபம் வரும். அவங்க வேலையை குறைச்சலா பேசுனாலும் கோபம் வரும். குமரன் அண்ணா ஏற்கனவே கொஞ்சம் கோபக்காரர் தான். அதான் சட்டுன்னு கோபப்பட்டிருப்பார்” என்றாள் பிரியா.
“நான் வேணும்னு பேசலை பிரியா. அவங்களுக்கு பதில் சொல்றதா நினைச்சு பேசிட்டேன்.ஆனா நான் என்ன நடந்ததுன்னு சொல்லப் போனப்ப கூட அவர் காது குடுத்து கேட்கலை பிரியா” என்றாள் கோபத்துடன்.
“எனக்கென்னமோ, நீ டைவர்ஸ் அது இதுன்னு பேசுனதுல தான் அண்ணா ரொம்ப கோபப்பட்டிருக்கணும். அப்படித்தான் தோணுது” என்றாள் பிரியா.
“அப்படித்தானே அவனும் சொன்னான்” என்று நினைத்த நதிக்கு, கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டது. அப்போது அவளுக்கு ஜிஎம்மிடம் இருந்து அழைப்பு வர, வேகமாய் எழுந்து சென்றாள். சென்றவள் அடுத்த பத்து நிமிடங்களில் யோசனையுடன் வர,
“தேங்க்ஸ் பிரியா..! ஆனா, போக முடியுமான்னு தெரியலை” என்றாள்.
“ஏன் அப்படி சொல்ற? இது எவ்ளோ பெரிய வாய்ப்பு. உனக்கு கோச்சிங் கிளாஸ் போறதுக்கும் அங்க பெரிய இன்ஸ்ட்டியூடுட் எல்லாம் இருக்கு” என்றாள்.
“அது எப்படி பிரியா? அவர் இங்க, நான் அங்கன்னு இருந்தா நல்லாவா இருக்கும்? பார்ப்போம் என்ன பண்றதுன்னு?” என்றாள். ஏற்கனவே பசியில் இருந்தவளுக்கு இப்போது இந்த யோசனையும் சேர்ந்து கொள்ள, பசியுடன் சேர்த்து தலைவலியும் வந்திருந்தது.
“பிரியா மேடம் உங்களைப் பார்க்க குமரன்னு ஒருத்தர் வந்திருக்கார்” என்று ரிஷப்ஷனில் இருந்து அழைப்பு வர,
“குமரன் அண்ணா எதுக்கு என்னைப் பார்க்க வரணும்?” என்று யோசித்தபடி நதியை பார்க்க, அவளோ “எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்பதைப் போல் இருந்தாள். ஆனால் மனதிற்குள் மறுகிக் கொண்டிருந்தாள்.
“நதி எனக்குத் தெரிஞ்ச ஒரே குமரன் உன் ஹஸ்பண்ட் தான்டி. அண்ணா எதுக்கு என்னைத் தேடி வரணும்?” என்றாள் புரியாமல்.
“என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும். போய் அந்த நொண்ணனையே கேளு” என்று அவள் கீபோர்டை தட்டியத் தட்டில் அது கையேடு வந்துவிடும் அளவிற்கு தெரித்தது.
பிரியா யோசனையுடன் செல்ல, அவள் பின்னால் எழுந்து செல்ல துடித்த கால்களை கஷ்ட்டப்பட்டு அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள் நதி.
“எவ்வளவு கோபம் இருந்தாலும், நீ சாப்பிடலைன்னு தெரிஞ்ச உடனே சாப்பாட்டை வாங்கிட்டு அதையும் நேர்ல வந்து கொடுத்துட்டு போறார். நிஜமாவே அண்ணா கிரேட் தான்டி. வாவ், அதுவும் பிரியாணி வேற” என்ற பிரியாவை முறைத்தாள் நதி.
“வேற எதுக்கு குறையைக் கண்ட?” என்ற பிரியாவிற்கு கோபம் வந்தது.
“நீ என்னடி ஒரு பிரியாணியைப் பார்த்த உடனே அவருக்கு சப்போர்ட் பண்ற?” என்றாள் கோபமாய்.
“இங்க பாரு நதி, நான் அண்ணாக்கு சப்போர்ட் பண்ணலை. ஆனா எவ்வளவு கோபமும், வருத்தமும் இருந்தாலும் நீ சாப்பிடலைன்னு தெரிஞ்சு, அவ்வளவு வேலையிலும் வந்துட்டு போறார் தான? ஆனா, அவர் சாப்பிட்டாரான்னு நீ யோசிச்சியா?” என்றாள் பிரியா.
அப்போது தான் அந்த விஷயமே அவளுக்கு உரைத்தது. முதல் நாள் மாலை பேசும் போது கூட, மதியம் சாப்பிடவில்லை என்று கூறியிருந்தான் அவளிடம்.
‘அப்போ அவர் நைட்டும் சாப்பிடலை. நானும் கோபத்துல காலையில எதுவும் செய்யாம வந்துட்டேன். சாப்பிட்டாரா இல்லையா?’ என்றவளுக்கு அவளின் கோபம் பின்னால் சென்று இப்போது இந்த கவலை முன்னால் வந்து நின்றது.
வெகுநேரம் தனக்குத் தானே தயங்கிக் கொண்டிருந்தவள், வேறு வழியின்றி அவனுக்கு அழைத்திருந்தாள். அழைப்பு முடியப் போகும் தருவாயில் தான் எடுத்திருந்தான்.
போனை காதில் வைத்தவன் எதுவும் பேசாமல் இருக்க, இவளும் எதுவும் பேசவில்லை.
“பேச ஒன்னுமில்லைன்னா எதுக்கு போன் பண்ற?” என்றவன் கடுப்புடன் அழைப்பை நிறுத்த போக,
“சா..நீங்க சாப்பிட்டிங்களா?” என்றாள் தயங்கியபடி.
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட? கேட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என்று போனை வைக்கப் போனவன்,
அவனின் பாரா முகத்தை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆபீஸ் என்றும் பாராமல் ஒரு பாடு அழுது தீர்த்தாள்.
அவளுடைய ப்ரமோஷன், ட்ரான்ஸ்பர் என்று எதுவும் அவள் கருத்தில் இல்லை.
“நதி கண்ட்ரோல் யுவர் செல்ப். ரெண்டு பேருக்கும் ஒருத்தர் மேல ஒருத்தர் இவ்வளவு அன்பும் இருக்கு. அதே சமயம் அதே அளவுக்கு பிடிவாதமும் இருக்கு. யாராவது ஒருத்தர் இறங்கிப் போறதில் தப்பில்லை நதி” என்றாள் பிரியா.