அதன் பிறகு வந்த நாட்கள் , வேகமாய் சென்று முடிந்திருந்தது. கோதாவரி எப்போதும் போல் குத்தல் பேச்சுக்களைத் தொடர, நதியும் வழக்கம் போல் குமரனின் முகம் பார்த்து அனைத்தையும் கடக்கப் பழகியிருந்தாள்.
ஆனால் சில நாட்களாக அவளுக்கு அலுவலகத்திலும் வேலையில் புதிது புதிதாக பிரச்சனை ஆரம்பிக்க, அதை சரி செய்துவிட்டு ஆயிரத்தெட்டு டென்ஷனுடன் வீட்டுக்கு வருபவளுக்கு, அவரின் பேச்சுக்களை எப்போதும் போல் கடந்து செல்ல முடியவில்லை. சில சமயங்களில் நன்றாக பேசியும் விடுவாள்.
அதுவே அவள் மீதான வன்மத்தை கோதாவரிக்கு வளர்த்துக் கொண்டே இருந்தது.
தனக்கு திருமண வாழ்க்கையில் கிடைக்காத அனைத்தும் தன் மருமகளுக்கு கிடைப்பதைப் போன்ற எண்ணம் அவருக்குள் வேரூன்றி வளர்ந்திருந்தது.
“வரவர நீ சீரியல் வில்லி மாதிரி ஆகிட்டு வர்றம்மா. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன்” என்று தீபா சத்தம் போட,
“நீயென்ன? எப்பவும் அவளுக்கு சப்போர்ட் பண்ணியே பேசிட்டு இருக்க தீபா. நான் உனக்கு அம்மாடி” என்று எறிந்து விழுந்தார்.
“அதனால தான் பொறுமையா எடுத்து சொல்றேன். என் மாமியார் ஏதாவது சொன்னா என்னா பேச்சு பேசுறிங்க? ஆனா நீங்க மட்டும் உங்க மருமககிட்ட அப்படி பேசலாமா?” என்றாள் தீபா.
“நீயும் அவளும் ஒண்ணா?” என்றார்.
“கண்டிப்பா நானும் அவளும் ஒன்னு கிடையாது. நான் இன்னொரு வீட்டுக்கு வாழப் போயிட்டேன். நல்லதோ கெட்டதோ அவ தான் உங்களை கடைசி வரைக்கும் பார்த்துக்க போறா. அப்படி பார்த்தா மகளை விட மருமகள் தான் உங்களுக்கு உசத்தியா இருக்கணும். நான் எப்பவும் இங்க வந்துட்டு போற விருந்தாளி மட்டும் தான்” என்று பேசிய மகளைக் கண்டு சங்கரனுக்கு பெருமை. கோதாவரிக்கு கடுப்பு.
“உன் தம்பியை மயக்குன மாதிரி உன்னையும் நல்லா மயக்கி வச்சிருக்கா அவ. எனக்கெதிரா உன்னையவே தூண்டி விடுறாளா அவ. இருக்கட்டும் வச்சுக்கிறேன்” என்றவரின் கோபம் ஒரு கட்டத்தில் பொறாமையாகவும் மாறி விட்டிருந்தது.
“நான் என்ன குழந்தையா அவ என்னைத் தூண்டி விடுறதுக்கு? உன் புத்தி ஏன் தான் இப்படி போகுதோ?” என்று தலையில் அடித்துக் கொண்ட தீபா மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. அப்படி பேசினால் அந்த கோபத்தையும் நதி மீது தான் காட்டுவார் கோதாவரி என்று அவளுக்குத் தெரியும்.
அன்று அலுவலகம் முடிந்து வரும் போதே தந்தையுடன் தான் வீட்டிற்கு வந்தாள் நதி.
“அடடே வாங்க சம்பந்தி” என்று சங்கரன் வரவேற்க,
“வாங்க” என்றார் கோதாவரி.
“நதி வேலை பார்க்குற ஆபீஸ் பக்கத்துல ஒரு வேலையா வந்திருந்தேன் சம்பந்தி. அதான் நதியையும் பார்த்துட்டு, அப்படியே வீட்ல விட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்றார் வரதன்.
“அதெப்படி சரியா ஒன்னாம் தேதி தான் மக வேலை செய்யுற ஆபீஸ் பக்கம் உங்களுக்கு வேலை இருக்குமா?” என்றார் கோதாவரி குத்தலாய்.
“என்ன சொல்றிங்க? புரியலை?” என்றார் வரதன்.
“மக சம்பளம் வாங்குற அன்னைக்கு சரியா வந்திருக்கிங்களே, அதான் கேட்டேன்” என்றார்.
அவரின் பேச்சில் வரதனின் முகம் விழுந்துவிட, கோபம் வந்தாலும் மகள் வாழ்க்கையை முன்னிறுத்தி எதையும் பேசவில்லை அவர்.
“அப்போ நான் கிளம்புறேன்மா நதி” என்றவர் உடனே கிளம்பிவிட்டார்.
“வந்த உடனே கிளம்புறிங்களே? குமரன் இப்போ வந்துடுவான். அவ எப்பவும் அப்படித்தான் சம்பந்தி. அவ பேச்சை எல்லாம் பெருசா எடுத்துக்காதிங்க” என்றார் சங்கரன்.
“பொன்னைக் குடுத்தவங்க வேற எதுவும் பேச முடியாது இல்லைங்களா?” என்றவர் சென்று விட்டார்.
“இப்ப உனக்கு சந்தோஷமா? வீட்டுக்கு வந்த மனுஷனுக்கு குடிக்க தண்ணி கூட குடுக்கலை. அசிங்கப்படுத்தி அனுப்புற மாதிரி அனுப்பிட்ட. இந்த ஆட்டமெல்லாம் நல்லதுக்கு இல்லை சொல்லிட்டேன்” என்றவர் வெளியே சென்று விட்டார்.
தன் அப்பா அப்படி தலை குனிந்து சென்றதை நதியால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. அவளது அமைதியும் பொறுமையும் கரை கடந்திருந்தது.
“எதுக்காக என் அப்பாவை அப்படி பேசுனிங்க அத்தை? என்னோட சம்பளத்தை வாங்கித்தான் அவங்களுக்கு சாப்பிடனும்னு இல்லை. எங்கப்பாவுக்கு பென்ஷன் வருது. அவரும் வேலைக்கு போறார்” என்றாள் பொறுமையாக.
“நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன். என்னைக்காவது உன் சம்பளத்தை எங்ககிட்ட குடுத்திருக்கியா? நீ என்ன வாங்குற? எவ்வளவு வாங்குறன்னு கூட தெரியாது. அப்போ அதெல்லாம் எங்க போகுது. உன் அப்பன் வீட்டுக்குத் தான போகுது. போதாத குறைக்கு என் பையனை மாதிரி ஒரு இளிச்சவாய மருமகன் உங்களுக்கு தேடினாலும் கிடைச்சிருக்க மாட்டான்” என்றார் கோதாவரி.
“வார்த்தையை பார்த்து பேசுங்க? எல்லாரும் உங்களை மாதிரியே இருக்க மாட்டாங்க” என்றாள் பட்டென்று.
“என்ன எங்களை மாதிரி இருக்க மாட்டாங்க? இப்ப எதுக்கு நீ அந்த வார்த்தையை சொன்ன? எனக்கு பதில் தெரிஞ்சாகனும்?” என்றார் கோபமாய்.
“ஏன் உங்களுக்குத் தெரியாது? என்னோட உழைப்பை எங்க வீட்ல யாரும் உறிஞ்சு வாழலை. நீங்க தான் உங்க பையனோட உழைப்பை உறிஞ்சு வாழறிங்க” என்றாள் பட்டென்று.
“என்னடி வாய் நீளுது? என் பையன் காசுல அப்படித்தான் வாழுவேன். அதை கேட்க நீ யாருடி?” என்றார் கோதாவரி.
“இந்த வாடி போடின்னு பேசுற வேலையெல்லாம் வேண்டாம். உங்க பையன் காசுல நீங்க சாப்பிடும் போது, என் காசுல என் அப்பா அம்மா சாப்பிட்டா என்ன தப்பு? இதுவரைக்கும் என் சம்பளத்தை என் வீட்டுக்கு குடுக்கனும்னு எனக்குத் தோணினது இல்லை. எங்க வீட்ல அதை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. ஆனா, உங்க பையன் அவர் கடமையை செய்யும் போது ஒரு மகளா நானும் ஏன் என் கடமையை செய்யக் கூடாதுன்னு இப்போ தோணுது” என்றாள் நிமிர்வாய்.
எப்போதும் அமைதியாய் சென்று விடுபவள், இன்று வார்த்தைக்கு வார்த்தை வாயாடவும், கோதாவரிக்கு வேப்பில்லை அடித்ததைப் போல் இருந்தது. ஆடித் தீர்த்துவிட்டார்.
“தோணும்டி தோணும்? இருபத்தி அஞ்சு பவுனோட உன்னை என் பையன் தலையில கட்டி வச்சுட்டு உங்கப்பன் நிம்மதியா இருக்கான். இப்படி ஒரு வாயாடியை கட்டிட்டு வந்து நாங்க தான் சீப்படுறோம்” என்று நீட்டி முழக்க,
“எங்கப்பாவை மரியாதை இல்லாம பேசுற வேலையெல்லாம் வச்சுக்காதிங்க. பதிலுக்கு நானும் மரியாதை இல்லாம பேசுவேன்” என்று அவள் கையை நீட்டி எச்சரிக்க,
“என் பையனுக்கு நூறு பவுன் போட்டுக் கூட பொண்ணுக் குடுக்க ரெடியா இருந்தாங்க. ஆனா என்னமோ சீமையில இல்லாதவ மாதிரி உன்னைக் கட்டிட்டு வந்துட்டு, இப்போ நீ கை நீட்டி பேசுறதையும் கேட்குற மாதிரி இருக்கு” என்று ஒப்பாரியை ஆரம்பித்தார் கோதாவரி.
அவ்வளவு தான் நதிக்கு பொறுமை சுத்தமாய் அவளை விட்டு போயிருந்தது.
“சும்மா என்ன எப்பப் பார்த்தாலும் அதையே சொல்லிட்டு இருக்கீங்க? உங்க பையனுக்கு நூறு பவுன் போட்டு பொண்ணுக் குடுக்கத்தான் தயாரா இருந்தாங்கல்ல. அந்த பொண்ணையே கட்டியிருக்க வேண்டியது தானே? நான் என்ன உங்க பையனை லவ் பண்ணி இழுத்துட்டு ஓடிப் போயா கல்யாணம் பண்ணேன். நீங்க தானே வீடு தேடி பொண்ணுக் கேட்டு வந்திங்க? இல்ல நாங்க இல்லாததை இருக்குன்னு சொல்லி ஒளிச்சு மறைச்சு கல்யாணம் பண்ணோமா?
நான் என்னமோ கல்யாணமே கூடி வராம முதிர் கன்னியா வீட்ல இருந்த மாதிரியும், நீங்க என்னவோ பாவப்பட்டு எனக்கு வாழ்க்கை குடுத்த மாதிரியும் பேசிட்டு இருக்கீங்க? அப்படியே நூறு பவுன் போட்டுக் குடுக்குறதுக்கு உங்க குடும்பமும் ஒன்னும் கோடீஸ்வர குடும்பம் இல்லை. உங்க பையனும் பிஸ்னஸ் மேக்னட் இல்லை. அவரும் ஒரு சாதாரண எஸ்ஐ தான்.
இன்னும் நூறு பவுன் பொண்ணு தான் வேணும்னா, என்னை டைவர்ஸ் பண்ணிட்டு, அந்த நூறு பவுன் பொண்ணையே அவருக்குக் கட்டி வைங்க” என்று கோபத்தில் அவள் கத்தி முடித்திருக்க, வீட்டு வாசலில் கண்களில் கனல் தெறிக்க நின்றிருந்தான் குமரன்.