அத்தியாயம் 03

“பாப்ப் ரே பாப்ப்… எவ்ளோ பெரிய வீடு, இல்லையில்ல அரண்மனை!”

இரயில் நிலையத்திலிருந்து தங்களை சுமந்து வந்திருந்த மகேந்த்ரா எக்ஸ்யூவி யில் இருந்தபடியே, தன் முன்னால் பிரம்மாண்டமாக விரிந்திருந்த அஸ்வினியின் வீட்டைப் பார்த்து ஆர்ப்பரித்தாள் ஷக்தி.

ஆச்சர்யத்தில் விரிந்த ஷக்தியின் கெண்டை விழிகளின் ஆழத்தில் தடுக்கி விழுந்த விஸ்வா, ட்ரைவர் சீட்டிலிருந்து இறங்கியபடியே, தன்னருகே உட்கார்ந்து ஷக்தியை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்த தன் சித்தப்பா மகன் பாஸ்கரிடம்,

“பராக்கு பாக்குறதை விட்டுட்டு, வண்டியை ஷெட்ல பார்க் பண்ணிட்டு வா பாஸ்கர்” என்று சொல்லிவிட்டு, தடதடவென்று படிகளில் ஏறி வீட்டுக்குள் நுழைந்து கொண்டான்.

இரயில் நிலையத்திலிருந்து இவர்களை வீட்டுக்கு அழைத்து வர, பாஸ்கர் தான் காரோடு வந்திருந்தான். இருபத்தி எட்டு வயது விஸ்வஜித்தை விட, இரண்டு வயது சிறியவன் பாஸ்கர்.

ஸ்டேஷனிலிருந்து கிளம்பும் போது விஸ்வா ட்ரைவர் சீட்டில் உட்கார்ந்துவிட, மதுரை ஜங்ஷனுக்கும், இவர்கள் வீடு இருக்கும் மந்தாரம்புதூருக்கும் இடைப்பட்ட பதினேழு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க எடுத்துக் கொண்ட நேரத்தில், ஷக்தியிடம் ஒரு நட்பு பாலத்தை உருவாக்கியிருந்தான் பாஸ்கர்.

விஸ்வஜித் இறங்கி சென்றுவிடவும், காரிலிருந்து இறங்கிய பாஸ்கர், ஷக்தி இருந்த பக்கம் கார் கதவை திறந்துவிட்டு, “வெல்கம் டூ அவர் ஹோம்” என்று முகமன் கூறினான்.

“இது ஹோம் இல்ல, பேலஸ் ப்ரோ.” தன் பிரம்மிப்பு மாறாமல் திருத்தினாள் ஷக்தி.

“ஒஹ்… ஹோ… நான் உனக்கு ப்ரோவா?” முகம் சுளித்து, வார்த்தைகளை பாஸ்கர் இழுத்த அழகில் வாய்விட்டு சிரித்த ஷக்தி,

“அப்போ பாஸ் ன்னு கூப்பிடவா பாஸ்?” சற்றுமுன் உருவாகியிருந்த நட்பு தந்த தைரியத்தில் கேட்டாள்.

“நீ ப்ரோன்னு கூப்பிடுறதுக்கு பதில், பாஸ் ன்னு கூப்பிடுறது எவ்வளோ பெட்டர் ம்மா.” கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விடுவது போல பாஸ்கர் ஆக்ஷன் செய்ய, கிளுக்கிச் சிரித்தாள் ஊர்மிளா. உடனே அவள் பக்கம் ஆர்வமாக பார்வையை வீசினான் பாஸ்கர்.

 “அடேய் அண்ணா… உன் தங்கையோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே உன்னோட தங்கை மாதிரி ங்குறதை ஞாபகம் வச்சிக்கோ” என்றாள் அஸ்வினி சிரித்தபடி.

“அடப்போம்மா… நீ வேற, சும்மா அதையே காதுக்குள்ள நொய்நொய்ன்னு சொல்லிகிட்டு.” அலுத்துக் கொண்ட பாஸ்கரை, மிரட்சியாய் பார்த்தாள் ஊர்மிளா.

வரும்போது ட்ரெயினில் நடந்திருந்த நிகழ்வு ஞாபகம் வந்து ஊர்மிளாவை மிரட்டியது. அதை புரிந்து கொண்ட அஸ்வினி, “நீ அப்பிடி பயந்து பாக்குற அளவுக்கெல்லாம் அவன் வொர்த் கிடையாது ஊர்மி” என்று கிண்டலாகச் சொல்ல,

“பங்கம்… பங்கம்… மரண பங்கம்” என்று விளையாட்டாக சிரித்த பாஸ்கர், வீட்டுக்குள்ளிருந்து வந்த வேலையாளிடம், பெண்களின் பயணப்பைகளை எடுத்து செல்ல பணித்துவிட்டு, வண்டியோடு நகர்ந்துவிட்டான்.

இத்தனை நாட்களும் புகைப்படங்கள், சினிமா, யூ ட்யூப் பகிர்வுகள் மூலம் ரசித்திருந்த, தன் கனவு இல்லத்தை நேரில் கண்டுவிட்ட சந்தோஷத்தில் ஷக்தி மிதந்து கொண்டிருக்க, சரியாக அவளின் கைபேசி அவளை அழைத்தது.

வேறு யார்? கலைவாணி தான்.

கைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தவள், “மம்மி ஜி, எவ்வ்ளோ… பெரிய வீடு தெரியுமா மம்மிஜி? நம்ம வீடெல்லாம் இது பக்கத்துல வரமுடியாது! ம்ம்… இப்போ தான் வந்து நிக்குறோம். அப்புறமா பேசுறேன், பை…” என்று அழைப்பைத் துண்டித்தவள், அஸ்வினியைப் பார்த்து,

“இப்படி ஒரு வீட்டுல இருந்துட்டுதான் இவ்ளோ அமைதியா இருக்குறியா நீ? நான் மட்டும் இதே போல ஒரு வீட்டுல இருந்திருந்தேன்னா, தினம் பத்து செல்ஃபி எடுத்து, வாட்ஸ்அப்லயும், ஃபேஸ்புக்லயும் விதவிதமா ஸ்டேட்டஸ் வைச்சிருப்பேன் தெரியுமா!” என்று விழிகளை அழகாக விரித்தாள்.

“பத்து தடவை தானா? உங்கிட்ட நான் ரொம்ப எதிர்பார்த்தேனே ப்ரியா…” கண்களைச் சுருக்கி சிரித்த அஸ்வினி,

 “எல்லாரும் காத்திருப்பாங்க, வாங்க, வீட்டுக்குள்ள போகலாம்” என்றாள்.

தெருவிலிருந்து சற்றே உயரமாக இருந்த அந்த வீட்டின் படிகளில் கால் வைக்கும்போது ஷக்தியின் மனநிலை, ஏதோ கோவில் படிகளில் கால் வைத்தது போலவே இருந்தது.

வீட்டின் நுழைவுவாசலின் இருபுறமும், விசாலமான திண்ணைகள் கம்பீரமான மரத்தூண்களுடன் காணப்பட்டது.

அதற்கடுத்தாற்போல், நுட்பமான மர வேலைப்பாடுகளோடு அமைந்திருந்த முன்வாசல் கதவையும், நிலையையும் கண்ட ஷக்தியின் கால்கள் அங்கேயே தங்கிவிட்டன.

 “இதெல்லாம் இங்கேயேத் தான் இருக்கும், நாம பிறகு பாத்துக்கலாம், இப்போ உள்ள வா” என்று அந்த பிரம்மாண்டமான மெயின் ஹாலுக்குள் ஷக்தியை இழுத்துச் சென்றாள் அஸ்வினி.

ஹாலுக்குள் நுழைந்த ஷக்தி ஒருவித பிரமிப்போடு அதன் பிரம்மாண்டத்தை உள்வாங்க முயல, “இது தான் எங்க ஐயாவும், அப்பத்தாவும்” என்று அறிமுகப்படலத்தை தொடங்கியிருந்தாள் அஸ்வினி.

அவளின் குரலில், தரையில் கால்பாவாது பறந்து கொண்டிருந்த மனநிலையில் இருந்த ஷக்தி, மெதுவாக தரையிறங்கி தன் முன்னே பார்த்தாள்.

  திவான்கட்டில் அமைப்பில் தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் போல வீற்றிருந்தார்கள், அந்த வீட்டின் மூத்த தம்பதியரான மகாலிங்கம் ஐயாவும், கல்யாணி அம்மாவும்.

நெற்றி நிறைய திருநீறு துலங்க, ஒருவித தேஜஸோடு மகாலிங்கம் ஐயா அமர்ந்திருந்தாரென்றால், முகத்தில் மங்களம் மிளிர, சுங்கிடிபட்டு கட்டி, கண்களில் தீட்சண்யத்தோடு அமர்ந்திருந்தார் கல்யாணி அம்மா.

அவர்கள் இருவரையும் காணவும், மற்றவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிய ஷக்தி, அவர்களின் பாதம் பணிந்து கண்களில் ஒற்றி, அப்படியே அந்த கைகளை தலையில் தடவிக் கொண்டாள்.

 ஷக்தியின் இந்த செயலில், அந்த பெரியவர்கள் கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனார்கள், இயல்பாக அவர்களுடைய கைகள் ஆசீர்வாதமாக பெண்ணவளின் தலையை தடவிவிட்டது.

இப்படி ஒரு நிகழ்வை எதிர்பாராத ஹாலில் நின்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், ஒரு சுவாரஸ்யத்தோடு ஷக்தியை பார்த்தார்கள்.

 மகாலிங்கம் ஐயாவோ மடிப்பு கலையாத தன் வெள்ளைநிற சட்டை பாக்கட்டிலிருந்து இரண்டு ஐந்நூறு ரூபாய் தாள்களை எடுத்து, “வாங்கிக்கோம்மா” என்றபடி ஷக்தியை நோக்கி நீட்டினார்.

“ஐயையோ… பணமெல்லாம் வேண்டாம் க்ரேன்ப்பா.” பதறியபடி ஷக்தி லேசாக பின்னோக்கி நகர்ந்தாள்.

“அதெல்லாம் கால்ல விழுந்த பிள்ளையை வெறுங்கையா விடக்கூடாது. வாங்கிக்க தாயி” என்றபடியே, ஊஞ்சலில் இருந்து இறங்கி, ஷக்தியின் கையைப் பற்றி கணவனிடம் இருந்து பணத்தை வாங்கவைத்த கல்யாணி அம்மா,

“ம்ஹூம்‌… நம்ம பிள்ளைங்களும் தான் வெளியூர் போய்ட்டு வருதுங்க, என்னைக்காவது இப்படி கால்ல விழுந்து கும்பிட்டிருக்காங்களா மீனாட்சி?” அங்கே நின்ற, தன் மூத்த மருமகளான அஸ்வினியின் அம்மாவைப் பார்த்து கேட்டார்.

‘ஆஹா… பார்ட்டி ஹைஸ்பீடு தான். வந்ததுமே பெரிசுங்களை மடக்கி கைக்குள்ள போட்டதும் இல்லாம, ஆயிரம் ரூபா கல்லா வேற கட்டிட்டாளே!’

மனதுக்குள் ஷக்தியைக் கிண்டலடித்துக் கொண்டு அங்கே நின்று கொண்டிருந்த விஸ்வஜித், “ஏன் அப்பத்தா? நாங்க ஒருநாளும் உங்க கால்ல விழுந்ததே இல்லையா?” என்று குறைபட்டு கொண்டான்.

“அதானே, என்னைக்காவது எங்க கண்ணுல, இப்படி புது நோட்டை காமிச்சிருக்கீங்களான்னு சேர்த்து கேளு விஸ்வா” என்றபடியே வந்து சேர்ந்து கொண்டான் பாஸ்கர்.

ஷக்தியின் செயலில், தானும் அதேபோல செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்று குழப்பத்தில் நின்று கொண்டிருந்த ஊர்மிளா,

 “எதைச் செய்யுறதா இருந்தாலும், சொல்லிட்டு செய்யமாட்டாளா இந்த பக்கி” என்று அஸ்வினியிடம் முணுமுணுத்தாள்.

“ஹேய்… இது மும்பை வாலாக்களோட பழக்கம் டி. அதனால அவளுக்கு அது இயல்பா வருது, செய்யுறா. விடுவியா…” என்ற அஸ்வினி,

“இது எங்க அம்மா மீனாட்சி, அப்பா சதாசிவம்” என்று அங்கு நின்ற தன் பெற்றோரை தோழிக்களுக்கு பொதுவாக அறிமுகம் செய்து வைத்தாள்.

அதேபோல அங்கிருந்த இன்னொரு தம்பதியரை, “சித்தப்பா பசுபதி என்றும், சித்தி சுலக்ஷனா” என்றும் அறிமுகம் செய்து வைத்தவள், தன் தோழிகளையும் வீட்டினருக்கு முறையாக அறிமுகம் செய்து வைத்தாள்.

ஆம், மகாலிங்கம் ஐயாவிற்கு இரண்டு ஆண், ஒரு பெண் என்று மூன்று பிள்ளைகள்.

 இரண்டு ஆண் மக்களும் இராம லட்சுமணராக, ஒற்றுமையாக இதே வீட்டில் பெரியவர்களுடன் ஒன்றாகத் தான் வசித்து வருகிறார்கள்.

பெண் துர்காவை, இங்கேயே இரண்டு தெரு தள்ளி கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அவரும் எல்லா வளங்களோடும் சந்தோஷமாகவே இருக்கிறார்.

அஸ்வினி, விஸ்வஜித்தின் அப்பா, சதாசிவம் தான் மகாலிங்கம், கல்யாணி தம்பதியரின் மூத்த மகன்.

 தந்தை பெரிய அளவில் நடத்தி வந்த கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில், மற்றும் மோட்டார் உதிரிப்பாகம் உற்பத்தி செய்யும் தொழிலில் ஆர்வமில்லாமல், சதாசிவம் இராணுவத்தில் சேர்ந்து கொள்வதாகச் சொல்ல, எந்த மனச்சுணக்கமும் இன்றி மகிழ்வோடே அனுப்பி வைத்திருந்தார் மகாலிங்கம் ஐயா.

இப்போது ஆறு வருடங்களுக்கு முன், இராணுவத்தில் தன் சர்வீஸை நிறைவு செய்திருந்த சதாசிவம், ஊருக்கு வந்து தந்தையோடு இணைந்து, அவர்களின் தொழிலில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.

இளைய மகனான பசுபதி, சிவில் இன்ஜினியரிங் முடித்து, தனியாகவே நகரில் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

தகப்பனைப் போலவே சிவில் இஞ்சினியரிங் முடித்திருக்கும் பாஸ்கரனும், சமீபகாலமாக தந்தையோடு இணைந்து கொள்ள, அடுத்த கட்டத்திற்கு வெற்றிகரமாக நகர்ந்திருக்கிறது அவர்களது தொழில்.

பசுபதி, சுலக்ஷனா தம்பதியருக்கு, யாழினி என்ற பள்ளி இறுதியாண்டு படிக்கும் மகளும் உண்டு.

“அக்கா… எல்லாரையும் உன் ஃப்ரெண்ட்ஸ் க்கு இன்ட்ரடியூஸ் பண்ணிட்டு, என்னை மட்டும் மறந்துட்ட பாத்தியா?” என்றபடியே முன்னால் வந்த யாழினி, “ஹாய்… நான் யாழி” என்று தன்னை அறிமுகம் செய்ய தொடங்கினாள்.

“நீ யாழினி, அஸ்வியோட ஸ்வீட் சிஸ்டர்” என்று அவளை முடிக்க விடாமல் தோழிகள் இருவரும் சேர்ந்தாற் போல் சொல்ல, அங்கே கலகலவென்று சிரிப்பு சத்தம் எழுந்தது.

“பிள்ளைகளை மேல அஸ்வினி ரூமுக்கு அனுப்பிட்டு, அவங்களுக்கு காப்பியும் பலகாரமும் குடுத்தனுப்பு மீனாட்சி, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் அவங்க” என்றார் கல்யாணி அம்மா.

“ஐயையோ… ரெஸ்ட் எடுக்கவா இங்க வந்தோம்? எனக்கு இதெல்லாம் இப்பவே பாக்கணும் பாட்டி ம்மா.”

விழிவிரித்து கெஞ்சலாக ஷக்தி கேட்ட அழகில் பாட்டியும், அவரின் மூத்த பேரனுமே மயங்கிப் போனார்கள்.

பேரன் ஒரு மார்க்கமாக ஷக்தியை பார்த்துவிட்டு, அவசர அவசரமாக இடத்தை காலி செய்ய, பாட்டி சிரித்தபடியே, “பாருங்க… நல்லா, ஆரஅமர பாருங்க…” என்று அனுமதி கொடுத்தபடி, தன் கணவரோடு நகர்ந்தார்.

அவ்வளவு தான்… அந்த பிரம்மாண்டமான ஹாலின் ஒவ்வொரு தூணையும், சுவரையும் கைகளால் தடவி, தொட்டுப்பார்த்து, அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தாள் ஷக்தி.

அதிலும், வீட்டின் நிலைகளிலும் கதவுகளிலும் கைகளாலேயே செதுக்கியிருந்த சிற்பங்களைக் கண்டு பிரமித்து போனாள்.

கிட்டத்தட்ட நூறு வருடங்களைத் தொட்டும், கொஞ்சம் கூட பளபளப்பு மங்காத கறுப்புநிற கிரானைட் தூண்களை கட்டிக்கொண்டு, தன் கன்னங்களை அதில் இழைத்தாள்.

அங்கிருந்த முகம் பார்க்கும் ஆளுயரக் கண்ணாடிகளைப் பார்த்து, “இதெல்லாம் பெல்ஜியம் மிரர் தானே?” என்று உடன் நடந்து கொண்டிருந்த அஸ்வினியிடம் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டவள்,

இரண்டு அடி கனமுள்ள வீட்டுச் சுவர்களை தொட்டுப் பார்த்து, “முட்டையோட ஷெல், வெள்ளைக்கரு, கடுக்காய், கருப்பட்டி, சுண்ணாம்பு, எல்லாம் சரியான விகிதத்துல கலந்து, அரைச்சு பூசுனதுனால தான் இந்த சுவர் எல்லாம் இவ்வளவு பளபளப்பா இருக்குதாம்” என்று வீட்டுக்காரிக்கே பாடமெடுக்க ஆரம்பிக்க, தன்னை மறந்து சிரிக்க ஆரம்பித்தாள் அஸ்வினி.

மொத்தத்தில், அந்த ஹால் முழுவதும் பர்மா தேக்காலும், கிரானைட் கற்களாலும் கலைநயத்தோடு இழைக்கப்பட்டிருக்க, எதை பார்க்க, எதை விடுக்க, என்று தெரியாமல் திகைத்து போனாள் ஷக்தி.

அவள் மனநிலை புரிந்ததோ என்னவோ, காஃபியை கொண்டு வந்து தந்த அஸ்வினியின் அம்மா, “ஒன்னும் அவசரமில்லை ம்மா, நிதானமாவே எல்லாத்தையும் பாத்துக்கலாம், இப்போ உக்காந்து காஃபியை குடி” என்றார்.

சுவரோரம் போடப்பட்டிருந்த அந்த காலத்து பழமையான நீண்ட மரபெஞ்சில் உட்கார்ந்தாள் ஷக்தி. அவளுக்கு முன்பாகவே யாழினியும், ஊர்மிளாவும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்

  முதல் பார்வையிலேயே ஷக்தியை ஏனோ மீனாட்சிக்கு பிடித்து விட, அவளருகே உட்கார்ந்து ஆர்வமாக பேச முயன்றார்.

அந்நேரம் பார்த்து அவர் கணவர், “மீனா, இங்க கொஞ்சம் வந்துட்டு போயேன்” என்று அழைக்க, “இதோ…இப்ப வந்துடுறேன் ம்மா” என்று ஷக்தியிடம் சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

தன் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தி, வேறு உடையில் வந்த விஸ்வஜித், “இன்னும் இங்க தான் நீங்க இருக்கீங்களா?’ என்னும் விதமாக அவர்களைப் பார்த்தபடியே வெளியே சென்றான்.

“ஏய்…, நம்ம கூட வந்த மனுஷன் ஃப்ரெஷ் ஆகி வெளியவே கிளம்பி போயாச்சு. நாம இன்னும் இதே இடத்தில்தான் மங்குணி மாதிரி நின்னுட்டு இருக்கிறோம். வாங்கடி, நாமளும் போய் கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகிட்டு வரலாம்.”

 ஊர்மிளா கடுப்பாக சொல்ல, வேறுவழியில்லாமல் ஹாலுக்கு அடுத்தாற் போல இருந்த கட்டுக்கு, அஸ்வினியோடு நகர்ந்தாள் ஷக்தி.

அங்கேயும், காணுமிடமெல்லாம் கிரானைட், மற்றும் மரத்தூண்களாக இருந்தது. கூரையின் மேற்பரப்பும் ஹாலைப் போலவே, வேலைப்பாடு மிகுந்த தேக்கு மரங்கள்களால் வேயப்பட்டிருந்தது.

“இந்த உட் எல்லாம் கூட இன்டர்லாக் மெத்தட் மூலம் தான் ஜாயின் பண்ணிருப்பாங்க இல்ல அஸ்வி” என்று கேட்டாள் ஷக்தி.

“ம்ம்… ஆமாம் ப்பா, எல்லாமே ஒன்னுக்கு மேல ஒன்னா வச்சி அடுக்கியிருப்பாங்க. அதோட வெயிட்ல தான் பேலன்ஸ் பண்ணி நிக்குமேயொழிய, ஆணி, ஸ்க்ரூ, போல்ட் இப்படி எதையுமே யூஸ் பண்ணி இணைச்சிருக்க மாட்டாங்க” என்றாள் அஸ்வினி.

“ஹ்ம்ம்… ரியலி கிரேட்ல” என்ற ஷக்தி, மறுபடியும் அந்த மரங்களைத் தடவி பார்க்க ஆரம்பிக்க,

 “வருஷம் முழுசும் இங்க இருந்தாக்கூட உனக்கு அலுக்காது போலயே ஷக்தி” என்று அலுத்துக் கொண்டாள் ஊர்மிளா.

“என் காலம் முழுக்க, இங்க இருந்தாலும் எனக்கு அலுக்காது ஊர்மி.” சட்டென்று பதில் வந்தது ஷக்தியிடமிருந்து.

“அப்போ பேசாம அஸ்வி அண்ணனை நீ கல்யாணம் பண்ணிக்கோ, காலம் முழுக்க, இங்கயே இருந்துக்கலாம்” என்றாள் ஊர்மிளா.

“ஐயோடா… அது எப்படி முடியும்? நான் தான் பாஸை, ப்ரோன்னு கூப்பிட்டுட்டேனே?” என்றாள் ஷக்தி.

“அவர் மட்டும் தான் அஸ்விக்கு அண்ணனா, என்ன?” கண்களைச் சிமிட்டியபடி ஊர்மிளா கேட்டவிதத்தில், அவள் யாரைச் சொல்கிறாள் என்பது தெளிவாக ஷக்திக்கு புரிய, “அம்மாடியோவ்… ஏன்டி உனக்கு எம்மேல இந்த கொலவெறி?” என்றாள் அதிர்ந்து போனவளாக.

 ஷக்தியின் பாவனையில், அவள் தோழியர் இருவரும் கொல்லென்று சிரித்தார்கள். அந்நேரம் வெளியே இருந்து இவர்களை கடந்து வீட்டினுள் சென்ற விஸ்வா, இவர்களேயே கூர்ந்து பார்த்துக் கொண்டு சென்றான்.

 பதறிப்போன பெண்கள் மூவரும், அவன் காதில் தாங்கள் பேசியது எதுவும் விழுந்திருக்குமோ, என்று சிறிது அச்சத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆனால், பதிலுக்கு விஸ்வாவிடமிருந்து எந்த எதிர்வினையும் வராததால் ஆசுவாசமாக, அங்கே மாட்டியிருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டே நடந்த ஷக்தி, ஓரிடத்தில் நின்று, அருகருகே இருந்த இரண்டு ஃபோட்டோக்களை அஸ்வினியிடம் சுட்டிக்காட்டி,

“இந்த இரண்டு ஃபோட்டோஸ்லயும் இருக்குற மேல்ஃபிகர் ஒரே ஆள் தானே?” என்று சந்தேகமாக கேட்டாள்.

“ஆமா… அது எங்க மாமா, அம்மாவோட அண்ணா” என்றாள் அஸ்வினி தெளிவாக.

“ஓ… அப்போ அவங்க பக்கத்துல நிக்குற லேடீஸ்?” சந்தேகத்தோடு ஷக்தி இழுத்தாள்.

“அது ரெண்டு பேருமே எங்க மாமி தான். லெப்ட் சைட் ஃபோட்டோவுல இருக்கிற மாமி, இறந்துட்டாங்க. அதுக்கப்புறம், மாமா இரண்டாவதா இந்த மாமியை கல்யாணம் பண்ணிகிட்டாங்க” என்று அடுத்த ஃபோட்டோவை சுட்டிக் காட்டிய அஸ்வினி, “அதெல்லாம் பெரிய கதை. பிறகு உங்களுக்கு சொல்லுறேன்” என்றும் சொன்னாள்.

“ஹ்ம்ம்… பொண்டாட்டி செத்தா, புருஷன் புதுமாப்பிள்ளைன்னு எங்க பாட்டி ஒரு ப்ராவெர்ப் சொல்லுவாங்க. அது சரிதான்னு இந்த ஆளு ப்ரூஃப் பண்ணிட்டாரு. ச்ச்சீ… இவங்கெல்லாம் என்ன மனுஷங்க?”

 வெறுப்போடு, அலுத்துக்கொண்ட ஷக்தியின் குரல், அங்கே சென்று கொண்டிருந்த விஸ்வஜித்தின் நடைக்கு தடைசொல்ல, விருட்டென்று ஷக்தியின் பக்கத்தில் வந்து முறைத்துக் கொண்டு நின்றவன்,

“எங்க மாமாவை இதுக்கு முன்னாடி என்னைக்காவது நீ நேர்ல பாத்துருக்கியா? அவர் எப்படிபட்ட மனுஷன்னாவது தெரியுமா உனக்கு?” ஆழ்ந்த குரலில் நேரடியாக ஷக்தியிடம் கேள்விகளைக் கேட்க, திருதிருவென்று முழித்தாள்.

“யாருன்னே தெரியாத மனுஷனப் பத்தி தேவையில்லாமல் பேசக்கூடாதுங்குற, பேசிக் கர்ட்டசி கூட தெரியாத உனக்கு, எம்மாமனை பற்றி பேச அருகதையே கிடையாது.” காட்டமாகச் சொல்லியவன்,

“என்னதான் ஃப்ரெண்டா இருந்தாலும், நம்மவீட்டு மனுஷங்களை தப்பா பேசவிட்டு வேடிக்கை பாக்குற பழக்கத்தை, இதோடு விட்டுடு அஸ்வி” என்று தங்கையைப் பார்த்து அதட்டலாகச் சொல்ல, வாடிப்போனது அஸ்வினியின் முகம்.

இதற்கு முன்பாக பெண்கள், தன்னைப் பற்றி பேசி சிரித்ததும் விஸ்வாவிற்கு கேட்கத்தான் செய்திருந்தது. ஆனால், அவன் மனதுமே லேசாக அதை ரசிக்க, உள்ளுக்குள் சிரித்தவாறே கடந்துவிட்டவனுக்கு, தன் தாய்மாமனைப் பற்றிய வார்த்தைகளை கேட்டுவிட்டு அப்படியே செல்ல மனமில்லை. அதனாலேயே இவ்வளவு கோபமும்.

“இப்படி கண்மூடித்தனமா சப்போர்ட் பண்ணுறவங்க இருந்தா, பொண்டாட்டி செத்ததும், இது தான் சாக்குன்னு உடனே அடுத்த கல்யாணம் பண்ணுறவங்க, ஒன்னு இல்ல ஒன்பது கல்யாணம் வேணும்னாலும் பண்ணுவாங்க.” அடங்க மறுத்து ஷக்தி வார்த்தைகளை விட்டாள்.

“அந்த ஒன்பது கல்யாணமும், பொண்டாட்டி உயிரோடு இல்லாதபட்சத்தில செய்தா தப்பே இல்ல.” வீம்புக்கு சொன்னான் விஸ்வா.

விஸ்வஜித்தின் வார்த்தைகளில் அதிர்ந்து போன ஷக்தி, “அதானே… இரண்டு வைஃப்ஸ் கூடவும் ஒரு மனுஷன் இருக்கிற ஃபோட்டோவை, பக்கத்துல பக்கத்துல வச்சி இரசிக்கிற நீங்க, இப்படி பேசலைன்னா தான் வியப்பு” என்றாள் நக்கலாக.

“இரண்டு போட்டோவும் பக்கத்து பக்கத்துல இருக்குறது தான் உன் பிரச்சினைன்னா, என்னோட இரண்டு மாமியும், மாமா கூட ஒரே ஃபோட்டோல இருக்குற மாதிரி, நாளைக்கே இந்த இடத்துல புதுசா ஒரு ஃபோட்டோ மாட்டிடுறேன்.” கிண்டலாகச் சொன்னான் விஸ்வா.

“உங்க வீடு, உங்க மாமா, நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க, எனக்கென்ன வந்தது?” அசட்டையாக முகம் சுழித்து பதில் சொல்லிய ஷக்தி, அங்கிருந்து மெதுவாக நகர்ந்தாள்.

“ம்ம்… இப்படி நினைச்சுட்டு, முதல்லயே பேசாம கம்முன்னு இருந்திருக்கலாம்ல.” லேசான நக்கல் சிரிப்போடு அவனும் அங்கிருந்து நகர, அந்த ஃபோட்டோவில் இருந்த மனிதரை ஏனோ முற்றுமாக பிடிக்காமல் போனது ஷக்திக்கு.

இவ்வளவு நேரமும் இருந்த இதம் தொலைந்து போனவளாக, அஸ்வினியைப் பார்த்தாள் ஷக்தி. அவளோ, “ஏன்னு தெரியலை? அண்ணா இன்னைக்கு ரொம்ப கோபப்படுறான், எனக்காக, அவன் பேசுனதையெல்லாம் மனசுல வச்சுக்காத ஷக்தி, ப்ளீஸ்…” என்று கெஞ்சியவள்,

“வாங்க, நாம என்னோட ரூமுக்கு போகலாம்” என்று கைப்பிடியாக ஷக்தியை அழைத்துச் செல்ல, “அந்த ஃபோட்டோல இருக்குற லேடி, கொஞ்சம் உன்னைப் போலவே இருக்கிற மாதிரி எனக்கு தோணுது டி” என்று ஷக்தியின் காதுகளில் கிசுகிசுத்தாள் ஊர்மிளா.

“எந்த ஃபோட்டோல இருக்குறவங்க?”

“அதுதான்… அஸ்வியோட ஃபர்ட்ஸ் மாமி.”

ஊர்மிளாவின் வார்த்தைகளில், ஷக்தி அந்த புகைப்படத்தைத் திரும்பி பார்த்தாள். ஏனோ, புகைப்படத்திலிருந்த அந்த பெண் தன்னைப் பார்த்து சிரிப்பது போலவே இருந்தது ஷக்திக்கு.