“எல்லாம் மாமாவோட குழந்தைகள் காப்பகத்தில உள்ள பிள்ளைங்க தான் ஷக்தி” என்றான் மெல்லிய குரலில் விஸ்வா.
சௌந்தரின் குழந்தைகள் காப்பகம் செயல்படத் தொடங்கிவிட்டது என்று ஷக்திக்கு தெரியும். ஆனால் இத்தனை பிள்ளைகள் இருப்பது அவளுக்கு தெரியாது.
எனவே, “ஓ…” என்று புருவத்தை உயர்த்தியவள், குழந்தைகளை உற்று நோக்கினாள். ஒரு குழந்தையின் நடை, உடை, பாவனையிலும் தாய், தகப்பன் இல்லாத பிள்ளைகள் அவர்கள் என்ற சாயலைக்கூட அவளால் காணமுடியவில்லை.
ஒரு மெச்சுதலான பார்வையை சௌந்தருக்கு பரிசளித்தவள், சிறுவர்களோடு உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த தன் குழந்தைகளை பார்வையிட, இருவர் உடைகளும் புதிது என பார்த்ததுமே கண்டுகொண்டாள். அப்படியே பார்வையை சஞ்சீவ் பக்கம் திருப்ப அவனது உடையும் புதிதே.
பிள்ளைகளின் அழுகையில் அவர்களுக்கான உடையை ஷக்தி கொடுத்துவிட மறந்திருக்க, சௌந்தர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டார்.
ஆம்… தன் மகளுக்கு செய்யத் தவறியதை எல்லாம் அவளது பிள்ளைகளுக்கு செய்து பார்க்கும் ஆவல் நிரம்பவே சௌந்தரிடம் இருந்தது. அதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும் ஷக்தி, அளவுக்கு மீறிப்போனால் மறுப்பதும் உண்டு.
சௌந்தருக்கும் மகளின் நிலைபாடு புரிந்துவிடவே, அவள் மறுக்கும் அளவுக்கு இப்போது இவரும் செல்வதில்லை.
சிறார்களோடு விளையாடிக் கொண்டிருந்த ஷக்தியின் பெண்ணரசி தாயைக் காணவும் ஓடிவந்து அவளை கட்டிக்கொண்டு, “அவங்க கூட விளையாடுறது ரொம்ப ஜாலியா இருக்குது ம்மா” என்று தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டவள்,
மகள் சொல்லிய தகவல் இன்னமுமே ஷக்தியை ஆச்சர்யத்தில் தள்ளியது. ஆனால் இதுமட்டும் உனக்கு ஆச்சர்யம் இல்லை என்பது போல, அவள் பக்கத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் அவளைப் பார்த்து, “ஹைய்… ஷக்தி அக்கா வந்தாச்சு” என்று உற்சாகமாக கத்தினார்கள்.
‘தன்னை எப்படி இவர்களுக்கு தெரியும்?’ என்ற கேள்வியோடு திரும்பவும் விஸ்வாவை ஷக்தி பார்க்க, கணவனின் கண்கள் ஒருபக்கச் சுவரைச் சுட்டிக்காட்டியது.
அங்கே… கணவன் குழந்தைகளோடு இருந்த ஷக்தியின் புகைப்படம் பெரிய அளவில் லேமினேஷன் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தது.
சிறுவனின் உற்சாகக் குரலில் ஏனைய சிறார்களும் ஷக்தியை சூழ்ந்து கொண்டு, “ஷக்தி அக்கா…” என்று கட்டிக் கொண்டார்கள். ஒட்டுமொத்த அவர்களின் அன்பில் தடுமாறிப் போன ஷக்தி, நின்றிருந்த இடத்திலேயே கால் மடக்கி அமர்ந்தவாறே, “ம்ம்… உங்க ஷக்தி அக்கா தான் டா நான்” என்று முணுமுணுத்தாள்.
அத்தனை குழந்தைகளுக்கும் பெற்றவர்கள் இல்லை என்ற நிலை அவளை தடுமாறச் செய்திருந்தது. ‘தாய், தகப்பன் இருவரில் ஒருவர் கூடவா இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டார்கள்? அப்படி ஒருவேளை இருந்திருந்தால் எப்படி தங்கள் குழந்தைகளை இப்படி கைவிட்டுவிட அவர்களுக்கு மனது வருகிறது?’ யோசிக்கும் போதே மனம் வலித்தது ஷக்திக்கு.
“அக்கா… நீங்க படிச்சு பெரிய வேலைக்கு போறீங்களாமே! உங்களை மாதிரியே நானும் படிச்சு வேலைக்கு போகணும்னு அம்மா சொல்லியிருக்காங்க.”
ஷக்தியின் மடியில் சாவகாசமாக கைகளை ஊன்றியபடி, மழலைக்குரலில் கதைபேசியது ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்குழந்தை.
“ம்ம்… கண்டிப்பா இந்த அக்காவை விட பெரிய வேலைக்கே நீ போகலாம் கண்ணம்மா.” தன்னை மனதார அவர்களுக்கு அக்காவாக ஒப்புக்கொடுத்து, சின்னவளின் கன்னத்தை தட்டி பதில் சொன்னாள் ஷக்தி.
சிறியவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு ஷக்தியோடு பேச, அனைவருக்கும் ஈடுகொடுத்து உற்சாகமாகவே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் ஷக்தி.
தன்னை விட்டுவிட்டு மற்றவர்களிடம் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் தாயைப் பார்த்து, அவள் மகனுக்கு தான் பொறுக்க முடியவில்லை.
தாயின் கழுத்தை கட்டிபிடித்து தொங்கிக்கொண்டு, இவள் எனக்கு மட்டுமே ஒட்டுமொத்த சொந்தம் என்று தன் உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருந்தான் வினோதன்.
குழந்தைகளின் உலகமும், அவர்களின் எண்ணங்களும் எப்போதுமே தனித்துவமானது தானே.
அந்த பெரிய ஹாலில் பந்திப்பாய் விரித்து முதலில் சிறியவர்களுக்கு உணவு கொடுத்து, பிறகு பெரியவர்களும் உண்டு முடித்தார்கள்.
அத்தனை பேருக்கும் பம்பரமாக சுழன்று கௌரி பரிமாறினார். அதிலும் சொந்த குழந்தைகள் வேறு, வளர்ப்பு குழந்தைகள் வேறு என்ற பாகுபாடில்லாமல், எல்லா குழந்தைகளையும் ஒரே மாதிரியாக கவனித்துக் கொண்டது, ஷக்தியின் மனதில் அவர் மீதான மரியாதையைக் கூட்டியது.
அனைவரும் சாப்பிட்ட பிறகும் கௌரி உண்ணாமல் வேறேதேதோ வேலைகளை பார்த்துக் கொண்டு அலைய, “முதல்ல நீங்க உக்கார்ந்து சாப்பிடுங்க, நான் பரிமாறுறேன்” என்று அவரை கைபிடித்து ஷக்தி உக்கார வைத்தாள்.
ஷக்தியை மீறும் எண்ணம் தான் அவருக்கு வருமா என்ன? அவள் பரிமாற, மகிழ்வோடே உண்டு முடித்தார் கௌரி.
சாப்பிட்டு முடித்தவுடன் அந்த பெரிய ஹாலை நன்றாக மாப் போட்டு சுத்தப்படுத்தியிருக்கவே, ஆங்காங்கே வட்டமேஜை மாநாடு போட்டு பேசத் தொடங்கினார்கள் எல்லோரும்.
பேச்சு எங்கெங்கோ சென்று, கடைசியில் சௌந்தரின் சேவையில் வந்து நிற்க, எல்லாருமே அவரை பாராட்டினார்கள்.
“உண்மையிலேயே யாரோட பாராட்டுக்காகவும் நான் இதைச் செய்யலை. எங்களுக்கு ஆத்ம திருப்தியை இந்த பிள்ளைங்க தர்றாங்க, அதனால செய்யுறேன்” என்றார் சௌந்தர்.
“அப்படியே ஆதரவு இல்லாத லேடீஸ்ஸுக்கும் கொஞ்சம் ஹேண்ட்வொர்க் சொல்லிக் குடுக்குற மாதிரி ஏதாவது செய்தா நல்லாயிருக்கும்ல விஸ்வா.” சௌந்தரை சேவையின் அடுத்த படியில் ஏறச்சொல்லி கணவனிடம் சொல்வது போல ஷக்தி சொன்னாள்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டுதானே. பேசிக் கொண்டிருந்தவர்கள் அந்த பெரிய ஹாலில் அங்கங்கே அப்படியே சாய்ந்து மதிய உறக்கத்துக்கு தயாராக, சௌந்தரும் சாய்ந்தார். அவர்மீது தேன்சிட்டுக்களாக, அவரின் பேரக்குழந்தைகள் உட்பட அத்தனை குழந்தைகளும் சாய்ந்து கொண்டன.
“கதை சொல்லுங்க அப்பா…”
சலுகையாக சொன்ன குழந்தைகளின் வார்த்தைகளும், மகாபாரதத்திலுள்ள குட்டி குட்டி கிளைக் கதைகளை சௌந்தர் சொன்ன பாங்குமே, இது எப்போதும் நடக்கும் நிகழ்வுதான் என்று அவர்களையே அவதானித்துக் கொண்டிருந்த ஷக்திக்கு புரிந்தது.
‘தான் தொலைத்த பிள்ளைப் பாசத்தை, தொலைத்த இடத்தில் தேடிப் பார்த்து, அது கிடைக்கவில்லை என்றானதும், கிடைக்குமிடத்திலிருந்து சௌந்தர் எடுத்துக் கொள்கிறார்’ என்று தெள்ளத்தெளிவாக விளங்கியது ஷக்திக்கு.
புரிந்த விஷயம் அவளுக்கு நிம்மதியைக் கொடுக்க கண்மூடி அமைதியாக தூங்க ஆரம்பித்தாள் ஷக்தி.
ஷக்தி கண்விழிக்கும் போது அனைவரும் நித்திரையின் பிடியில் தான் இருந்தார்கள்.
அதுவும் சௌந்தரின் மேல் தொற்றிக்கொண்டு தூங்கிய குழந்தைகள் எல்லாம், நீலவானில் ஆங்காங்கே சிதறி கிடக்கும் வெண்பஞ்சு மேகங்களைப் போல, ஹாலில் ஆங்காங்கே உருண்டு கிடந்ததைப் பார்க்கும் போது சிரிப்பு வந்தது ஷக்திக்கு.
அவளது மகளும் கூட அப்படிதான் உருண்டிருந்தாள். ஆனால் மகனோ சௌந்தரின் கழுத்தை கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான்.
தூங்கிக் கொண்டிருந்த யாரையும் எழுப்ப மனமின்றி மெதுவாக வீட்டைவிட்டு வெளியே வந்தாள் ஷக்தி. மழை வருவதுபோல வானம் கறுத்துக் கிடந்தது.
அந்த பெரிய காம்பவுண்டுக்குள், வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மற்றொரு வீடு போன்ற கட்டிடத்தின் முகப்பில் ‘செண்பகம் குழந்தைகள் காப்பகம்’ என்ற பெயர் மின்னியது.
‘செண்பகம்’ அந்த பெயரைக் காணவும், அன்று புகைப்படத்தில் கண்ட முகம் ஞாபகத்திற்கு வந்தது. தலையை உலுக்கி எழுந்த சிந்தனைகளை அடக்கியவாறே அந்த கட்டிடத்தை நோக்கி மெதுவாக நடைபோட்டவளை, ”வாங்க ஷக்தி மா” என்ற குரல் கட்டடத்திற்குள் இருந்து வரவேற்றது.
சற்றுமுன் வீட்டில் கௌரிக்கு உதவி செய்து கொண்டிருந்த பெண் தான், அங்கு அவளை வரவேற்றது.
“நீங்க?” யாரென்று தெரியாமல் ஷக்தி தடுமாற, “நான் குழந்தைகளை பாத்துக்குற ஹெல்ப்பர் மா. எங்கூட இன்னும் ரெண்டு பேர் உண்டு. அவங்க தீபாவளிக்காக ஊருக்கு போயிருக்காங்க.” சொல்லியவர் கைபிடித்து ஷக்தியை உள்ளே அழைத்து சென்றார்.
பெரிய ஹாலோடு, வீடு போன்ற அமைப்பில் தான் இருந்தது அந்த கட்டிடம். சுத்தமாக பராமரிக்கப்பட்ட அறையில் தனித்தனி கட்டில்கள் கிடந்தன.
“இங்க எல்லா வசதி இருந்தாலும், பிள்ளைங்க பாதிநாள் அந்த வீட்டுல ஐயா, அம்மா கூடத்தான் இருப்பாங்க.”
ஷக்தி கேளாமலேயே தகவல் சொன்ன அந்த பெண்மணியின் முகத்தில் ஏகத்திற்கும் பெருமை வழிந்தது.
எல்லாவற்றையும் பார்க்கும் போது சௌந்தர் என்னும் மனிதரை, பாசத்தின் மறுவுருவாக, நேர்மையின் திருவுருவாகத்தான் ஷக்திக்கு எண்ணத் தோன்றியது.
ஆனால், முன்ஜென்மம் போன்ற அவரின் வாழ்க்கையில் திருத்தப்பட முடியாத பிழையாய் தானிருக்க, கண்ணாடியில் விழுந்த விரிசலாகவே இருவரின் உறவும் ஷக்திக்கு தெரிந்தது.
அந்த வீட்டை விட்டு வெளியே வந்த ஷக்தியின் கண்களில், அங்கிருந்து சிலஅடி தூரங்களில் மரத்துக்கு கீழ் ஒருதொட்டில் தெரியவும், உடம்பில் பரபரப்பு தொற்றிக் கொள்ள, கிட்டத்தட்ட அதை நோக்கி ஓடினாள்.
“இதுல தான் பேபீஸை போட்டுட்டு, இந்த மணியை அடிச்சிட்டு போவாங்க. இப்படி கிடைச்சவங்க தான் இங்க இருக்கிற குழந்தைகள் எல்லாரும்.”
மறுபடியும் அந்த பெண்ணே தகவல் சொல்ல, யார் மீது கோபம் என்று சொல்ல முடியாமல், அத்தனை பேர் மீதும் ஆத்திரம் வந்தது ஷக்திக்கு.
“நீங்க போங்க, நான் கொஞ்சநேரம் இங்க இருந்துட்டு வரேன்.”
ஷக்தியின் வார்த்தைகளில் அவர் அங்கிருந்து நகர, நெஞ்சத்தில் பாறாங்கல்லை தூக்கி வைத்தது போல ஒரு உணர்வு ஷக்தியிடம்.
எத்தனை நேரம் அங்கேயிருந்தாளென்று தெரியாது. “மழை பெய்யுறது கூட தெரியாம, அப்படி என்ன டா யோசனை செய்துட்டு இருக்கிற?”
மழைக்கும் தனக்குமிடையை குடை விரித்து, அதற்கு தடை சொல்லியபடி வந்து நின்ற கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டவள், “ஏதோ ஞாபகத்துல உக்காந்துட்டேன், ஒன்னுமில்ல விஸ்வா” என்றாள். அதை நம்பாவிட்டாலும், எதுவும் பேசாது மனைவியை வீட்டினுள் அழைத்துச் சென்றான் விஸ்வா.
ஏனோ, இங்கு வந்தபிறகு உண்டான இதம் ஷக்திக்கு தொலைந்து போயிருந்தது. எப்போது இங்கிருந்து செல்லலாம் என்று தவிக்க ஆரம்பித்தாள். மழையோ விடுவேனா பாரென்று வேகமெடுத்து அவளை சோதித்தது.
இரவு நேரத்தில் அடைமழையில் பயணம் செய்வது பாதுகாப்பு இல்லை என்பதால், அன்றிரவு அங்கே தங்கிக்கொள்ள அனைவரும் முடிவெடுத்தார்கள். வேறுவழியில்லாமல் ஷக்தியும் சம்மதித்தாள்.
கணவன், குழந்தைகளோடு ஒரு அறையில் தங்கி கொண்ட ஷக்தி, குழந்தைகள் தூங்கிய பின்னரும் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்தாள்.
அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்த விஸ்வா, உச்சிமுத்தம் ஒன்றை வைத்து, “தூங்கலையா ஷக்தி?” என்றான் மென்மையாக.
“புது இடம் ல்ல… அதான் தூக்கம் வரல விஸ்வா…”
ஷக்தி சொல்லி முடிப்பதற்கு முன், அவளைத் தன் மார்பிற்கு இடம் மாற்றியிருந்த விஸ்வா, இறுக்கி அணைத்து அவள் கன்னத்தில் இதழ் பதித்தபடியே, “இது பழகின இடம் தானே, இப்போ தூங்கு” என்றான்.
“ஹைய்யோ… என் அறிவுக் கொழுந்தே!” கணவனின் கன்னம் கிள்ளி ஷக்தி கிண்டலடித்தாலும், அவன் மார்பின் கதகதப்பில் மனது அமைதியாக, மெல்லமெல்ல தூக்கத்தின் பிடியில் சிக்கிக் கொண்டாள்.
அதிகாலை வேளையில் தூக்கத்தில் எங்கோ மணியடிப்பது போல சத்தம் கேட்டது. விலுக்கென்று முழித்துக் கொண்ட ஷக்திக்கு, அந்த தொட்டிலும், மணியும் ஞாபகத்துக்கு வந்தது. அடித்து பிடித்துக் கொண்டு எழும்பி ஓடினாள்.
தானிருப்பது, பழக்கமில்லாத வீடு என்ற எண்ணமில்லாமல் கதவைத் திறந்துகொண்டு ஓடினாள்.
“ஷக்தி… எங்க போற? நில்லு…” என்று சொல்லிக்கொண்டே, அவள் பின்னோடு விஸ்வாவும் ஓடினான்.
வெளியே, மழை ஒருவழியாக ஓய்ந்திருந்தது.
அந்த தொட்டிலுக்கு பக்கத்தில் வந்திருந்த ஷக்திக்கு, அங்கு கண்ட காட்சியில், இதயம் துடித்து வெளியே வந்துவிடும் போல இருந்தது. பதட்டத்தில் அருகில் நின்றிருந்த கணவனின் மார்போடு ஒன்றினாள்.
ஆமாம்… தொட்டில் உள்ளே, தான் அனாதையாக்கப்பட்டது தெரியாமல் கையையும் காலையும் உதைத்து சிரித்தபடி, பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்து.
பாய்ந்து அதை தன் கைகளில் அள்ளிக்கொண்ட ஷக்தி, “இப்படி மனசாட்சியே இல்லாம, தேவையில்லாத பொருளைப் போல இந்த பச்சபிள்ளையைப் போட்டுட்டு போக எப்படி மனசு வருது இவங்களுக்கு?” மணிச்சத்தம் கேட்டு அங்கு வந்திருந்த சௌந்தரிடம் இரைந்தாள்.
“அவங்களுக்கு என்ன சூழ்நிலையோ, தெரியலையேம்மா?” ஏதோ அந்த கேள்வி தனக்கானது போலத் தோன்றவே, அமைதியாக பதில் சொன்னார் சௌந்தர்.
பின்னர் சற்றுநேரம் கையிலிருந்த குழந்தையையே உற்று நோக்கியவள், “உன்னை வேண்டாம்னு சொன்னவங்க, உனக்கும் வேண்டாம் டா செல்லம். உனக்கு இந்த வீடு நிறைய அண்ணா, அக்காஸ் இருக்காங்க. சொந்தக்காரங்க இருக்காங்க, நான் இருக்கேன், இதோ உன் மாமா இருக்காங்க” என்று, தன்னை நெருங்கி ஆதரவாக நின்றிருந்த கணவனைச் சுட்டிக்காட்டியவள்,
“எல்லாத்துக்கும் மேல உன் சௌந்தர் அப்பா, கௌரி அம்மா இருக்காங்க. அவங்க உன்னை நல்லா பாத்துப்பாங்க. நீ கவலைப்படாம வளந்து பெரிய ஆளாகலாம்.”
கையிலிருந்த குழந்தையிடம் பேசியபடியே, கணவனின் கையணைப்பில் வீட்டை நோக்கி சென்றாள் ஷக்தி.
ஷக்தியின் வாயிலிருந்து இன்று வந்த ‘உன் சௌந்தர் அப்பா’ என்ற வார்த்தை, ‘நம் சௌந்தர் அப்பா’ என்று மாறும் பொன்நாளும் விரைவில் வரும் என்ற நம்பிக்கையோடு, போகும் மகளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் சௌந்தர்.