அந்த அதிகாலை நேரத்தில் மதுரையை நோக்கி சாலையில் வழுக்கிக்கொண்டு பறந்த காரின் ட்ரைவர் சீட்டில் அமர்ந்திருந்தான் சஞ்சீவ்.
கடந்திருந்த ஐந்து வருடங்கள், அவனை முழு இளைஞனாக்கி, கம்பீரமான தோற்றத்தைக் கொடுத்திருந்தது.
சென்னையில் பிரபலமான அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மருத்துவம் பயிலும் அந்த இளம் மருத்துவ மாணவனின் முகத்தில், அந்த படிப்பிற்கே உண்டான பொலிவு இருக்க, கட்டிளங்காளையாக பார்ப்பவரை கவரும் வண்ணம் இருந்தான் சஞ்சீவ்.
“சஞ்சீவ்… இனி நீ ரெஸ்ட் எடுத்துக்கோ டா. நான் கொஞ்சநேரம் ட்ரைவ் பண்ணுறேன்” காரில் அவனருகில் உட்கார்ந்திருந்த விஸ்வா சொன்னான்.
“கார்லதான் மதுரைக்கு போகப் போறோம்னு ஷக்தி சொன்னதுமே, நான் ஒரு தூக்கம் தூங்கி எழும்பிட்டேன். அதனால பிரச்சினை ஒண்ணும் இல்லை மாமா” என்றான் சஞ்சீவ்.
“அப்போ, ஏதாவது டீக்கடை பக்கத்துல நிறுத்து, சூடா ஒரு டீ குடிச்சுட்டு போலாம்” என்றான் விஸ்வா.
“எதே… உங்களுக்குன்னு ஸ்பெஷலா நான் டீ போட்டு ஃப்ளாஸ்க்ல வச்சிருந்தா, நீங்க டீக்கடையில டீ குடிக்கப் போறீங்களா?”
ஐந்துவயது மகள் வினு ப்ரியாவோடு பின்சீட்டில் உட்கார்ந்து தூங்கிக்கொண்டு வந்த ஷக்தி சட்டென்று மாமன், மச்சான் இருவரின் பேச்சில் தலையிட்டாள்.
“தூங்கிட்டு இருக்கிற உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு நினைச்சு தான் அப்படி சொன்னேன் ம்மா” என்றான் விஸ்வா.
“அப்போ என்னை விட்டுட்டு நீங்க ரெண்டுபேர் மட்டும் டீ குடிக்கலாம்னு ப்ளான் போட்டீங்களா?” எப்போதும் போல கண்களை உருட்டிபடி ஷக்தி கேட்டாள்.
“என்ன ஷக்தி நீ? மாமா இப்படி பேசினா அப்படிங்குற, அப்படி பேசினா இப்பிடிங்குற” அலுத்துக் கொண்ட சஞ்சீவ், “இப்போ என்ன? நீ கொண்டு வந்த டீயை குடிக்கணுமா? குடு குடிச்சிடலாம்” என்றபடியே அருகில் வந்த டோல்கேட் பக்கத்தில் வண்டியை ஒதுக்கி நிறுத்தினான்.
“பாத்தியா டா மச்சான் உன் அக்கா பண்ணுற அராஜகத்தை? இதை கேக்குறதுக்கு உன்னை விட்டா எனக்கு ஆளே கிடையாது. நல்லா கேளுடா…”
வழியாத கண்ணீரை துடைத்துக்கொண்டே தன் மடியில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று வயது மகன் வினோதனை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு காரிலிருந்து இறங்கினான் விஸ்வா.
ஆமாம்… ஷக்தி, விஸ்வா தம்பதியினர் தற்போது ஆண் ஒன்று, பெண் ஒன்று, என்று இரண்டு குழந்தைகளின் பெற்றோர்.
“யாரு? நான் அராஜகம் பண்ணுறனா? காட்டுக்குள்ள போய் உக்கார்ந்துகிட்டு, இதோ வந்துடுறேன் மா… இதோ வந்துடுறேன் ம்மா ன்னு சொல்லிச் சொல்லி, தீபாவளிக்கு முந்தின நாள் வந்து நின்னு, நட்டநடு ராத்திரி எங்களை எல்லாம் காருக்குள்ள அள்ளிப்போட்டுட்டு ஊருக்கு கூட்டிட்டு போறீங்களே… இது உங்களுக்கு அராஜகமாக தெரியலையா?” தீபாவளி பட்டாசாய் படபடவென்று பொரிந்தாள் ஷக்தி.
இத்தனை காலங்களில், விஸ்வாவின் ஆர்வமும் இடைவிடாத முயற்சியும், வைல்ட்லைஃப் போட்டோ கிராஃபியில், அவனுக்கென்று ஒரு இடத்தையும், புகழையும் பெற்றுத் தந்திருக்கிறது.
ஷக்தி இப்போது பெங்களூருவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
அந்த காலத்திலேயே, பெண்பிள்ளைகள் படித்து வேலைக்கு போகவேண்டும் என்ற எண்ணம் கொண்ட பஞ்சவர்ணம், பேத்திக்கு உதவியாக அவளுடன் வந்து இருப்பதால், குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய பயமில்லாமல் ஷக்தியால் வேலைக்கு சென்றுவர முடிகிறது.
அதே பஞ்சவர்ணத்தின் துணை தான், மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு வைல்ட் லைஃப் ஃபோட்டோ கிராஃபியில் விஸ்வாவை தைரியமாக இறங்கவும் வைத்தது.
வேர்கள் எப்போதுமே விழுதுகளை தாங்கிப் பிடிக்கும் சக்தி கொண்டவை என்பதை இந்த வயதிலும் நிரூபித்து கொண்டிருக்கிறார் பஞ்சவர்ணம்.
இம்முறை ஃபோட்டோ ஷுட்டுக்காக காட்டுக்குள் சென்ற விஸ்வா, திட்டமிட்டிருந்த நாட்களை விட வீடு திரும்ப தாமதமாகிவிட்டது. தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு செல்ல ஆர்வமாக இருந்த குடும்பத்தாரிடம், “நீங்க சென்னைக்கு போங்க. நான் நேரா அங்கவந்து உங்ககூட ஜாயின் பண்ணிக்குறேன்” என்று அனுப்பி வைத்தவன், வந்ததோ பண்டிகைக்கு முந்தைய தினம். அதுவும் சாயங்காலவேளை.
வந்தவுடன் நல்லபிள்ளையாக அன்னைக்கு ஃபோன் செய்து தீபாவளி வாழ்த்து சொல்ல, அவரோ, “ஒரு நல்லநாள் பொழுதுக்கு, பொண்டாட்டி பிள்ளைங்களோட பெத்தவங்களை பாக்க போகணும்னு எண்ணம் இருக்கா உனக்கு?” என்று கேள்வியால் அவனைப் பிலுபிலுவென்று பிடித்து கொண்டார்.
அவரின் கோபமும் நியாயமானதாக இருக்க, இதோ நள்ளிரவில் மனைவி மக்களோடும், அவன் மச்சானோடும் மதுரைக்கு புறப்பட்டு விட்டான் விஸ்வா.
தன்னிடமிருந்த மகளை தம்பியின் கைகளில் ஒப்படைத்த ஷக்தி, ஒரு ஃப்ளாஸ்க்கிஸ் வைத்திருந்த பாலில் போர்ன்விட்டா கலக்கி பிள்ளைகளை குடிக்க வைத்த பிறகு, இன்னொரு ஃப்ளாஸ்கிலிருந்த டீயை கணவனுக்கும் தம்பிக்கும் கொடுத்து தானும் குடித்து கொண்டாள்.
இப்போது பிள்ளைகளின் தூக்கம் நன்றாக கலைந்திருக்க, மாமனிடம் தான் இருப்பேன் என்று மல்லுகட்ட ஆரம்பித்தாள் வினு ப்ரியா. அக்காவிற்கு போட்டியாக தம்பியும் மாமனின் மடிக்கு போட்டி போட்டான்.
சிரித்த சஞ்சீவ், “இனி நீங்களே ஓட்டுங்க மாமா” என்றவன் ஷக்தியிடம், “நீ மாமா பக்கத்துல உக்காந்துக்கோ ஷக்தி. நான் என் பட்டூஸோடு பின்னாடி உக்காந்துக்கறேன்” என்றபடியே தன் மருமக்களோடு பின் சீட்டில் அமர்ந்து கொண்டான். மறுபடியும் கார் தன் இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தது.
சரியாக எட்டு மணிக்கு, தங்கள் வீட்டுக்கு முன் விஸ்வா காரை நிறுத்தினான். இவர்களை எதிர்பார்த்து காத்திருந்த அத்தனை பேரும் வாசலுக்கு ஓடிவந்தனர்.
இவர்கள் வருகிறார்கள் என்ற தகவல் தெரிந்ததும், முதல் ஆளாக வந்து காத்திருக்க ஆரம்பித்து விட்ட சௌந்தரும் அவர்களோடு நின்றிருந்தார்.
“வாங்க… வாங்க… இப்பவாவது வரணும்னு தோணிச்சே… நல்லாயிருக்கியா?” என்று கலவையான குரலில் வரவேற்பு குரல்கள் கேட்க, அத்தனைக்கும் பதில் சொல்லி, நிமிர்ந்து பார்த்த ஷக்தியின் கண்களில், “தாத்தா…” என்றழைத்தபடி ஓடிச்சென்று அங்கு நின்றிருந்த சௌந்தரைக் கட்டிக்கொண்ட வினு விழுந்தாள்.
எப்போதும் அக்காவோடு எல்லா விஷயத்திலும் போட்டிபோடும் வினோதனும், “தாத்தூ…” என்று தன் மழலைக் குரலில் அழைத்தபடியே சௌந்தரின் கால்களை கட்டிக் கொண்டான். தன் இரண்டு சொர்க்கத்தையும் கையில் ஒருசேர அள்ளி முத்தமழையில் குளிப்பாட்டினார் சௌந்தர்.
அன்று பிறந்த குழந்தையிடம் ‘தாத்தா’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர், அதன் பிறகு எந்த தயக்கமும் இன்றி, ஷக்தி இருக்குமிடத்திற்கு வந்து குழந்தையை அவ்வப்போது பார்த்து செல்வதை ஒரு வழக்கமாக்கி கொண்டார்.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே. சௌந்தரின் மெய்யன்பில் பேத்தி மட்டுமல்லாது பேரனுமே அவரிடம் சரணாகதியடைய, அவர்களின் பேரன்பில் திளைத்து தன் பிறவிப்பயனைப் அடைந்தார் சௌந்தர்.
கூடுதலாக, மகளுமே தன் குழந்தைகள் அவரிடம் பழகுவதற்கு எந்த தடாவும் போடாமல் அமைதி காத்ததோடு, பெரிய அளவில் முகத்திருப்பல் ஏதுமின்றி பழகியது, பசித்து கிடந்தவனுக்கு பால்சோறு கிடைத்தது போலாக, இறக்கை இல்லாமலேயே வானத்தில் பறந்தார் மனிதர்.
தாயைப்போலவே வினுவுக்கும், அந்த பெரிய வீட்டின் மீது ஆர்வம் அதிகம். எனவே தாத்தாவுக்கு முத்தத்தை பதிலாக தந்தவள், அவரிடமிருந்து இறங்கி வேகவேகமாக வீட்டினுள் ஓடினாள். வினோதனும் குடுகுடுவென்று அக்காவின் பின்னே ஓடினான்.
குழந்தைகள் தன்னை விட்டு நகர்ந்த பின்பு தான் மற்றவர்கள் மீது பார்வை பதிந்தது சௌந்தருக்கு.
மகளிடமும், மருமகனிடமும் எப்போதும் போல குசலம் விசாரித்தவர், சஞ்சீவை மார்போடு அணைத்துக் கொண்டார்.
‘சௌந்தர் அப்பா’ என்று அழைத்திருந்தாலும், முதன் முதலில் அவரை ‘அப்பா’ என்று அழைத்தவனில்லையா அவன். அதனால் அவனிடம் பாசம் அதிகம் அவருக்கு.
அவனுக்கும் அவரிடம் நல்ல ஒட்டுதல் உண்டு. அதுவும் மருத்துவம் படிக்க ஆரம்பித்ததிலிருந்து, அடிக்கடி அவரின் உடல்நிலையை விசாரித்து ஃபோன் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறான்.
சிறுவர்களைத் தொடர்ந்து அனைவரும் வீட்டுக்குள் வந்தார்கள். ஹாலில் கிடந்த திவான் ஊஞ்சலில் ஏறி அமர்ந்திருந்தாள் வினுப்ரியா. வினோதனோ ஏறமுடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவுகிறேன் பேர்வழியென்று ஊஞ்சலில் உக்கார்ந்தபடியே தம்பியை தூக்கிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள் வினுப்ரியா.
அதைக் காணவும் அனைவரும் பதைபதைத்து போனார்கள். அங்கிருந்த அத்தனை பேரையும் முந்திக்கொண்டு, “பாப்பு… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… தாத்தா வந்துடுறேன்.”
குரல் கொடுத்தபடியே குழந்தைகளை நோக்கி ஓடிய சௌந்தர், பேரனை தூக்கி ஊஞ்சலில் வைத்து விட்டு பாதுகாப்பாக கூடவே அமர்ந்து ஊஞ்சலை மெதுவாக ஆட்டத் தொடங்கினார். மற்றவர்கள் நிம்மதி பெருமூச்சோடு அமர்ந்தார்கள்.
அஸ்வினி, பாஸ்கர், விஸ்வா என்று அந்த குடும்பத்தின் வாரிசுகள் தங்கள் வாழ்க்கைத் துணையோடும், குழந்தைகளோடும் ஒன்று சேர்ந்ததால், அங்கே குதூகலத்திற்கு பஞ்சமில்லாமல் போனது.
“தாத்தா மொதல்ல போவனாம், என் கன்னுக்குட்டிங்க, பின்னாடியே அப்பா அம்மா கூட வருவாங்களாம்…” சௌந்தர் நயமாக பிள்ளைகளிடம் சொல்ல, “இல்ல… இப்ப நான் உங்க கூடவே வருவேன் தாத்தா…”
சௌந்தர் மீது சாய்ந்து கொண்டு பிடிவாதமாக வினுப்ரியா சொல்ல, தாத்தாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அக்கா சொன்ன வார்த்தையையே திருப்பி படித்தான் வினோதன்.
எந்நாளுமில்லாத திருநாளாக பிள்ளைகள் சௌந்தரோடு செல்ல அடம்பிடிக்க, “தாத்தா போகட்டும் பாப்பு, நாம குளிச்சு நியூ ட்ரஸ் போட்டுட்டு அப்புறமா போலாம்.”
ஷக்தி சமாதானப்படுத்தியும் சமாதானமடையாமல் உதடு பிதுக்கி இருவரும் ஓங்கி அழ ஆரம்பித்தார்கள். தன்னை பிரிய மறுத்து, கூடவே வருவேனென்று அடம்பிடிக்கும் பேரக்குழந்தைகளைப் பார்த்து அத்தனை பெருமையாக இருந்தது சௌந்தருக்கு.
ஆனாலும், பிள்ளைகள் அழுவது பொறுக்காமல் அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். சொன்னதையே திருப்பி திருப்பிச் சொல்லியது கிளிப்பிள்ளைகள்.
“ஷக்தி விடு… போகட்டுமே.” இருவரும் அழுவது பொறுக்காமல் சஞ்சீவ் சொல்ல,
“எப்பிடி டா? வினு வேணும்னா நான் இல்லாமல் இருந்துடுவா. ஆனா, இந்த பொடியன் அங்க போய் சேருறதுக்கு முன்னாடியே என்னைத் தேடுவானே” என்றாள் ஷக்தி.
“அவ்வளவு தானே உன் பிரச்சினை. நான் அவங்க கூட போறேன்” என்ற சஞ்சீவ், “வாங்க சௌந்தர் ப்பா போலாம்” என்று வினோதனை தூக்கிக் கொண்டான். வினுப்ரியாவை கைகளில் தூக்கிக் கொண்ட சௌந்தருக்கு, ஏதோ உலகையே வென்றுவிட்ட உவப்பில் மனம் பொங்கிக் கிடந்தது.
அது அப்பட்டமாக அவர் முகத்தில் தெரிய, “போய்ட்டு வரோம் ம்மா. நீங்களும் சீக்கிரம் வந்துடுங்க.” ஷக்தியிடம் சொல்லியவாரே அவர் நகர்ந்தார். “ம்மா… பை… ப்பா பை…” என்று சந்தோஷமாக அவரோடு கிளம்பினார்கள் ஷக்தியின் புத்திர செல்வங்கள்.
‘அப்பா’ என்ற அழைப்பு தான் ஷக்தியிடமிருந்து இன்னமும் வரவில்லை, தாத்தா என்றாவதாவது அவள் பிள்ளைகள் அவரை அழைக்கிறார்களே’ என்று சௌந்தருக்காக, மற்றவர்கள் மனதார மகிழ்ந்து போனார்கள்.
ஒரு பன்னிரண்டு மணிக்கு போல திருமங்கலத்தில் இருக்கும் சௌந்தரின் வீட்டுக்கு காரில் வந்து இறங்கினார்கள் எல்லோரும்.
எத்தனையோ முறை, சௌந்தர் அழைத்தும், அதோ, இதோ என்று அங்கே வருவதை தள்ளிப்போட்ட ஷக்தி, முதன்முறையாக சௌந்தரின் வீட்டுக்கு வருகை தந்திருக்கிறாள்.
மகளின் வருகையில் சௌந்தர் உணர்ச்சிவசப்பட்டு போனார். ஆனால் ஷக்திக்கு அப்படி ஏதும் இல்லை.
அந்த வீட்டோடு தொடர்பு எதுவும் அவள் வாழ்க்கையில் இல்லாது போகவே, அவளுக்கு எந்தவிதமான சிலிர்ப்பும் இல்லை. பதிலாக ஒரு ஒட்டாத தன்மையும், ஒரு அவஸ்தையான உணர்வுமே வந்தது அவளுக்கு.
ஆனால் அந்த வீட்டினுளிருந்து வந்த ஆரவாரமான சிறார்களின் குரல் அவளை ஆவலாக உள்ளே இழுத்தது.
ஒரு ஆர்வத்தோடு உள்ளே நுழைந்த ஷக்தி, தன் பிள்ளைகளின் வயதில் சின்னதும் பெரியதுமாக ஒரு பத்துக்கு குறையாத பிள்ளைகள் அங்கு விளையாடிக் கொண்டிருப்பதைக் காணவும், கேள்வியாக கணவனை நோக்கினாள்.