குடும்ப வக்கீல் வந்திருக்க காரணம் தெரியாமல் குழம்பிப் போயிருந்தனர் சேதுராமனும் புவியரசும்.
“இப்ப எதுக்குக்கா வக்கீல் வந்திருக்காரு? உங்களுக்கு எதுவும் தெரியுமா?” என்று தாமரையின் காதைக் கடித்தார் வசந்தி.
“எனக்கும் எதுவும் தெரியாது வசந்தி” என்றார் தாமரை.
“உங்களுக்கு என்னைக்கு எது தான் தெரிஞ்சிருக்கு? எல்லாம் நம்ம மாமியார்கார அம்மா தான் வர சொல்லியிருப்பாங்க” என்றார் வசந்தி. விஷயம் என்னவென்று தெரியாவிட்டால் அவருக்குத் தலையே வெடித்துவிடும் போல் இருந்தது.
“நாளனன்னைக்கு கல்யாணத்தை வச்சுகிட்டு இன்னைக்கு வக்கீலை வரச் சொல்லியிருக்கிங்க? அப்படி என்ன அவசரம் அத்தை?” என்றார் சந்தான லட்சுமியிடம்.
“கொஞ்சம் பொறு வசந்தி. உங்க அக்கா குடும்பமும் வந்துடட்டும்” என்று அவர் சொல்ல, வசந்திக்கு ஒன்றும் புரியவில்லை. அதே நேரத்தில் தயாளன் குடும்பமும் அங்கே வர,
“என்ன நம்ம நாத்தனார் குடும்பம் மொத்தமும் இங்க ஆஜராகுது? எதுவோ சரியில்லையே?” என்ற எண்ணிய வசந்தி புவியரசுவை முறைக்க, அவரோ மனைவியைப் பாவமாய் பார்த்து வைத்தார்.
வசந்தியின் அக்காவும் அவரின் கணவரும் வந்து விட, அனைவரையும் ஒரு முறை பார்த்த லட்சுமி,
“நான் கார்த்திக்கு கொஞ்ச சொத்துக்களை எழுதி வைக்கலாம்னு இருக்கேன். எப்படியும் அகல்யாவுக்கு செய்ய வேண்டியது நம்ம கடமை. அதை இப்போ கார்த்திக்கு செய்யலாம்னு இருக்கேன்” என்றார் மகன்களிடம்.
“எதுக்கு அத்தை இதெல்லாம்? என் பசங்களுக்கு என்கிட்ட இருக்குறதே போதும்” என்றார் தயாளன்.
“அப்படி இல்லை தயாளா. என்னைக்கா இருந்தாலும் என் பேரன்களுக்கு சேர வேண்டிய சொத்து தான? அதை இப்பவே கொடுத்துட்டா நாளைக்கு யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது பாரு” என்றார் லட்சுமி.
“உங்க பேரன்களுக்கு நீங்க செய்றிங்க? இதுல நாங்க சொல்ல என்ன இருக்கு?” என்றார் பரமேஸ்வரி.
“அதைத்தான் இப்போ சொல்ல வந்தேன். கார்த்திக்கு சேர வேண்டிய சொத்தை இவங்க பொண்ணு பேர்ல எழுதிக் கேக்குறாங்க. நாளைக்கு இவங்க பொண்ணுக்கு ஒரு பிடிமானம் வேணும்னு நினைக்கிறாங்க. கார்த்தி பேர்ல இருந்தா என்ன? அவனைக் கட்டிக்க போற பொண்ணு பேர்ல இருந்தா என்ன? நானும் சரின்னு சொல்லிட்டேன்” என்றார் லட்சுமி.
வசந்தி தன் அக்காவை அதிர்ச்சியுடன் பார்த்தார். கார்த்திக்கு பெண் கொடுக்க சம்மதம் என்று தன் அக்கா சொல்லியதற்கான காரணம் இது வரைக்கும் வசந்திக்கு தெரிந்திருக்கவில்லை. இப்போது மாமியார் வாயிலாக விஷயத்தை கேள்விப் பட்டவருக்கு தன் அக்காவின் மேல் ஆத்திரமாக வந்தது.
‘யார் வீட்டு சொத்தை யார் யாருக்கு கொடுக்குறது?’ என்று எண்ணியவர் அதை வெளிப்படுத்தியும் விட்டார்.
“சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதிங்க அத்தை. அகல்யா அண்ணிக்கு தான் போதும் போதும்ன்ற அளவுக்கு எல்லாமே பண்ணிட்டிங்களே? அது மட்டுமில்லாம, ஏற்கனவே அவங்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்து வேற இருக்கு. இதுல இப்ப என்ன புதுசா? அதுவும் கார்த்திகா பேர்ல. இதெல்லாம் சரியா இல்லை. இதை நான் ஒத்துக்கவும் மாட்டேன்” என்றார் வசந்தி.
“அத்தை அவங்க மகளுக்கு சேர வேண்டிய சொத்தை எழுதிக் குடுக்குறாங்க. இதுல உனக்கு என்ன பிரச்சனை வசந்தி?” என்று அவரின் அக்கா கேட்க,
“எனக்குப் பிரச்சனை இருக்குக்கா. கூடப் பிறந்த அக்காவாவே இருந்தாலும், என் வீட்டு சொத்தை எப்படி உனக்கு எழுதித் தர முடியும். அப்படியே உனக்கு வேணும்னா, கல்யாணத்துக்கு அப்பறம் கார்த்தி பேர்ல இருக்குறதை உன் பொண்ணு பேருக்கு மாத்திக்கோ. மத்தபடி நீ நினைக்கிறது கனவுல கூட நடக்காது” என்று அவரின் தங்கை என்று நிரூபித்தார் வசந்தி.
“என்ன தாமரை நீ எதுவும் பேசலையா?” என்றார் லட்சுமி.
“நான் பேசி என்ன ஆகப் போகுது அத்தை? இல்ல எனக்குத்தான் பிள்ளையா குட்டியா? சொத்தை வாங்கி நான் என்ன பண்ணப் போறேன். இந்த சொத்தை எழுதி வச்சா தான் கார்த்திக்கு ஒரு நல்லது நடக்கும்னா, எங்க பங்கையும் சேர்த்தே கார்த்திக்கு குடுங்க. எங்களுக்குப் பிள்ளையா தான் வர மாட்டேன்னு சொல்லிட்டான். இப்படியாவது அவனுக்கு செஞ்சுட்டு போறோம்” என்றார் தாமரை. கலங்கிய கண்களை மறைக்க கீழே குனிந்து கொண்டார். சேது ராமனுக்கு மனைவியின் வேதனை புரிந்தது.
‘தன் மனைவியின் இந்த குணத்திற்காகவாவது கடவுள் ஒரு குழந்தையைத் தங்களுக்கு கொடுத்திருக்கலாம்’ என்று எண்ணியவருக்கு வேதனை தான் மிஞ்சியது.
“அப்போ ஹரீஷ் உங்க பிள்ளை இல்லையாக்கா? நாத்தனார் பையனுக்கு கொடுக்க தெரிஞ்ச உங்களுக்கு இந்த வீட்டு வாரிசுக்கு குடுக்கனும்னு தோணலையா?” என்றார் வசந்தி ஆதங்கத்துடன்.
“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் ஹரீஷ் எங்களுக்கும் பையன் தான் வசந்தி. மொத்த சொத்தும் அவனுக்குத் தான். அதுல கொஞ்சத்தைக் குடுக்குறதுல நாம குறைஞ்சிட மாட்டோம்” என்றார் சேதுராமன்.
“வேற யாருக்கு போகப் போகுது வசந்தி? கார்த்திகா உன் அக்கா பொண்ணு தானே? உனக்கும் பொண்ணு மாதிரி தான? இதுல வீம்பு பிடிக்காத வசந்தி” என்றார் லட்சுமி.
“அதென்ன அகல்யா அத்தைக்கு சேர வேண்டிய சொத்தை கார்த்திக்கு மட்டும் குடுக்குறதா சொல்றிங்க? ஏன் நகுலனும் உங்க பேரன் தான? இவரையெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியலையா?” என்றாள் மகிமா நேரம் பார்த்து.
“நகுலனுக்கும் நான் செய்வேன்மா. ஏன் அவசரப்படுற மகிமா?” என்றார் சந்தான லட்சுமி நேர்பார்வையாய்.
“பாட்டி எனக்கு அதெல்லாம் வேண்டாம். நீங்க கார்த்திக்கே குடுங்க” என்ற நகுலனை முறைத்த மகிமா,
“நேத்து தான் அப்படி சண்டை போட்டிங்க. இப்போ சொத்தை தம்பிக்கு தாரை வார்க்குறிங்க?” என்றாள் நக்கலாய்.
“அது அப்பாவை அவமானப் படுத்திட்டான்ற கோபத்துல அவன் சட்டையைப் பிடிச்சு கேட்டேன் தான். யார் இல்லைன்னு சொன்னா? அதுக்காக அவனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கும் போது, சொத்து விஷயத்துலையும் சண்டை போட முடியுமா?” என்றான் நகுலன்.
“நகுல் நான் சொல்றதைக் கேளுங்க” என்று மகிமா மேற்கொண்டு பேச வர,
“நீ எதுவும் சொல்ல வேண்டாம் மகி. நான் கை நிறைய சம்பாதிக்கிறேன். எங்கப்பாவும் எங்களுக்கு ஓரளவுக்கு சேர்த்து வைச்சிருக்கார். எனக்கு அதுவே போதும்” என்று ஒரே முடிவாய் சொல்லி விட்டான் நகுலன்.
வசந்தி தன் அக்காவின் முகத்தில் தெரிந்த தவிப்பைப் பார்த்தவர் நடந்த விஷயத்தை சரியாகப் புரிந்து கொண்டார்.
“ஆமா அப்படித்தான் கேட்டேன். இப்போ அதுக்கு என்னாங்குற வசந்தி. அருமை பெருமையா பொண்ணை வளர்த்து வாயும் பேசாத காதும் கேட்காத ஒரு பையனுக்கு எதை நம்பி பொண்ணு குடுக்க சொல்ற? நான் கேட்டேன், அவங்க சரின்னு சொன்னாங்க. இதுல உனக்கு என்ன பிரச்சனை?” என்றார் கோபமாய்.
தன் அக்காவை முறைத்த வசந்தி,
“கண்டிப்பா இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன் அத்தை” என்றார் உறுதியுடன்.
“சொந்த தங்கச்சி இவளே இப்படி பிடிவாதமா பேசும் போது நானும் என் முடிவை சொல்லிடுறேன் அத்தை. நீங்க என் பொண்ணு பேர்ல எழுதிக் குடுத்தாத்தான் இந்த கல்யாணம் நடக்கும்” என்றார் வசந்தியின் அக்கா பிடிவாதமாய்.
“கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி சொத்தை எழுதிக் கேட்குறிங்க. நாளைக்கு உங்க பொண்ணு எப்படிங்க என் தம்பி கூட சந்தோஷமா குடும்பம் நடத்துவாங்க?” என்றான் நகுலன் கோபமாய்.
“இதென்னப்பா வம்பா இருக்கு? இதோ கல்யாணம் முடிஞ்ச உடனே உன்னோட பொண்டாட்டி கூட தான் உனக்கு சேர வேண்டிய சொத்தை இப்போ கேட்டா. நாங்க ஏதாவது சொன்னோமா? என்ன நாங்க முன்னாடியே கேட்குறோம், அவ்வளவு தான்” என்றார் வசந்தியின் அக்கா.
“பாட்டி எனக்கென்னமோ நீங்க அவசரப் பட்டுட்டிங்கன்னு தோணுது. இப்பவே சொத்து விஷயத்துல இவ்வளவு கறாரா இருக்குறவங்க, நாளைக்கு எப்படியும் மாறுவாங்க. கார்த்தியே இத்தனை நாள் கழிச்சு இப்போ தான் மனசு இறங்கி வந்திருக்கான். அவன் வாழ்க்கைக்குத் தேவை அன்பான பொண்ணு தானே தவிர, இப்படி எதையும் கறாரா கேட்குற பொண்ணு இல்லை” என்றான் நகுலன் தெளிவாக.
“எந்த குறையும் இல்லாத பசங்களுக்கே பொண்ணு கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு நகுலா. அதனால தான் சரின்னு சொன்னேன். விடுப்பா பார்த்துக்கலாம்” என்றார் லட்சுமி.
“சரி உங்க வழிக்கே வர்றோம். ஆனா இப்போதைக்கு கார்த்தி பேர்ல எழுதுறோம். மேரேஜ்க்கு அப்பறம் அவன் பார்த்து அவன் வொயிப் பேர்ல மாத்திக்கட்டும். இதுக்கு உங்களுக்கு சம்மதம்னா எங்களுக்கும் சம்மதம். இல்லையா மேற்கொண்டு என்ன பண்றதுன்னு நீங்க தான் சொல்லணும். ஆனா முடிவு இது தான்” என்றான் நகுலன் தீர்மானமாய்.