அங்கே அறையில் மகனைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த தயாளனோ வெகுவாய் சோர்ந்திருந்தார். இங்கு வந்து இத்தனை நாட்களாகியும் மகன் தன்னுடன் பேசாதது தயாளனை வெகுவாய் பாதித்திருந்தது. இத்தனை வருடங்களாக அவன் பேசாமல் இருந்தாலும் அவன் அருகில் இல்லாததால் எப்படியோ பொறுத்துக் கொண்டார். ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து வந்தும் தன்னிடம் பாராமுகமாய் இருக்கும் மகனை எண்ணி உள்ளுக்குள் கலங்கித் தான் போனார்.
“இன்னைக்கு எப்படி அவன் என்கிட்ட பேசாம போறானான்னு நானும் பார்க்குறேன்” என்று ஒரு முடிவு எடுத்தவராய் மகனைத் தேடி சென்றிருந்தார் தயாளன்.
அகன் அறைக்குள் சென்று கதவை அடைக்கும் முன் அவர் அவன் பின்னால் சென்றிருக்க, அவரைத் தன் அறையில் எதிர்பார்க்காதவன் சட்டென்று முகத்தைத் திருப்பி நின்று கொண்டான்.
“கார்த்தி” என்றவர் அவன் கையைப் பிடிக்க,கோபத்துடன் அவன் உதறிய உதறலில் தடுமாறி விழத் தெரிந்தார் தயாளன். அவரின் பின்னால் வந்த ரேவதி அவரை பிடித்து நிறுத்தியிருந்தார். ரேவதிக்கு இப்படித்தான் நடக்குமென்று ஏற்கனவே தெரியும். ஏற்கனவே இப்படி நடந்து கொண்டவன் தானே. அதை எண்ணித்தான் அவரும் கணவரின் பின்னாலேயே வந்திருந்தார்.
“இதென்ன பழக்கம் கார்த்தி? அவர் உன் அப்பா. ஒரு வயசான மனுஷனை இப்படி படுத்துறது உனக்கே நல்லா இருக்கா?” என்று முதன் முறையாக அவனிடம் கோபப்பட்டிருந்தார் ரேவதி.
தந்தைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்த ரேவதியை உக்கிரமாய் முறைத்தவன்,
“வெளிய போங்க” என்று கையைக் காட்டியிருந்தான்.
“போக முடியாது. நானும் போனா போகுதுன்னு பொறுத்துப் போய்ட்டு இருக்கேன். இன்னைக்கு எனக்கு காரணம் தெரிஞ்சே ஆகணும். இப்படி நீ வெறுக்குற அளவுக்கு அப்படி என்ன தப்பு பண்ணினார் உங்கப்பா? ஏன் யாரும் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறதே இல்லையா?” என்றார் ரேவதி.
“ரேவதி வாயை மூடு” என்று தயாளன் மனைவியை அதட்ட,
“இப்ப நான் மட்டும் வரலைன்னா, என்ன ஆகியிருக்கும்?” என்றார் ரேவதி.
“அவன் என் கையைத் தான் உதறுனான். நான் தான் தடுமாறிட்டேன். அவனே பிடிச்சு தள்ளின மாதிரி பேசிட்டு இருக்க?” என்றார் தயாளன் கோபமாய்.
அவர்கள் தன் முன் நின்று வாக்குவாதம் செய்வதைப் பார்த்து அவனின் கோபம் இன்னும் கூட, தன்னைக் கட்டுபடுத்தி பார்த்தவன் ஒரு கட்டத்தில் முடியாமல் போக, தலையைப் பிடித்து அவன் கத்திய கத்தல் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது. அவன் இப்படி ஆக்ரோஷமாய் கத்தி இதுவரை ரேவதி பார்த்ததில்லை. சிறுவயதில் அடிக்கடி இப்படித்தான் கத்துவான். அது தயாளனுக்கும் வீட்டினருக்கும் மட்டுமே தெரியும்.
ரேவதிக்கு தெரியாததால்,
“இப்போ எதுக்கு கார்த்தி இப்படி காரணமே இல்லாம கத்திட்டு இருக்க?” என்று அவர் அவனை கண்டிக்க முயல, அருகில் இருந்த ட்ரஸ்ங் டேபிளின் கண்ணாடியை ஓங்கிக் குத்தியிருந்தான்.
“கார்த்தி” என்ற ரேவதிக்கு பயத்தில் உடல் நடுக்கம் எடுத்திருந்தது. சத்தம் கேட்டு அனைவரும் என்னமோ ஏதோ என்று ஓடி வர, அங்கே அகனோ கையில் ரத்தத்துடன் ருத்ர மூர்த்தியாய் நின்றிருந்தான்.
அவனின் செயலில் அதிர்ந்த தயாளன் அதிர்ச்சியில் அப்படியே நிற்க, அவர் இன்னும் அவன் அறையை விட்டு செல்லாமல் இருப்பதைப் பார்த்தவன், அங்கிருந்த எல்லாப் பொருட்களையும் உடைக்க ஆரம்பித்தான்.
“தயாளா இப்ப எதுக்கு நீ கார்த்திகிட்ட பேச வந்த? அவன் இப்படித்தான் நடந்துப்பான்னு தெரியும்ல?” என்றார் பரமேஸ்வரி.
“கார்த்தி வேண்டாம்ப்பா” என்று லட்சுமி நெஞ்சில் கைவைத்து நிற்க, அவனுக்கு அருகில் செல்லவே அனைவரும் பயந்து போய் நின்றிருந்தனர்.
“இதென்னடி இவன் பைத்தியம் மாதிரி நடந்துக்கிறான்?” என்ற வசந்தியின் அக்காவிற்கு பயத்தில் வார்த்தைகள் தந்தியடித்தது.
மொத்த குடும்பமும் கூடியிருந்தாலும், அவன் பார்த்த பார்வையில் யாரும் அவன் அருகில் செல்லவில்லை. அவன் வர விடவில்லை என்பதே உண்மை.
“என்னாச்சு?” என்றபடி சாவகாசமாய் வந்த யுகந்தாரவிற்கு அனைவரின் முகத்தைப் பார்த்தும் குழப்பம்.
“என்னம்மா ஆச்சு? என்ன சத்தம்? ஏன் எல்லாரும் இப்படி நிக்கிறாங்க?” என்றாள் வேணியிடம்.
“ஷ்..! அமைதியா இரு தாரா” என்று வேணி மகளை அடக்க, அவர்களை விலக்கி முன்னே சென்று பார்த்தவள்,
அதிர்ச்சியில் “ஆ”வென்று வாயைத் திறந்திருந்தாள்.
“அடேய் நேத்து வரைக்கும் அடுக்கி வச்ச மியூசியம் மாதிரி இருந்த ரூம் இன்னைக்கு என்னடா நொறுக்கிப் போட்ட அப்பளம் மாதிரி இருக்கு?” என்று நினைத்தவள், அப்போதுதான் கை முழுவதும் ரத்தம் சொட்ட நின்றிருந்த அகனைக் கவனித்தாள். ஹெட் செட்டை மாட்டி நண்பர்களுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தவளுக்கு, சத்தம் எதுவும் கேட்டிருக்கவில்லை.
“அகன் ரத்தம்” என்றவள் முன்னே செல்ல முறபட, அவனோ விடுப்பட்டிருந்த ஒரு அலங்கார ஜாடியையும் எடுத்து உடைத்திருந்தான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் சீரியல் ஆர்டிஸ்ட் மாதிரி இருந்தியேடா? இப்ப என்னடா களைச்சுப் போன காஞ்சனா பேய் மாதிரி இருக்க?” என்று அந்த ரணகளத்திலும் புலம்பியவள்,
“அகன் ஸ்டாப்..! என்ன பண்ணிட்டு இருக்கீங்க? இந்த பக்கம் வாங்க முதல்ல” என்றாள் அவனின் முகம் பார்த்து நிதானமாய்.
அவனோ அவளை சட்டை கூட செய்யவில்லை. அதுவே அவளுக்கு கோபத்தை வரவழைத்தது.
“சொல்லிட்டே இருக்கேன்” என்று அவள் முன்னேறி செல்ல,
“தாரா” என்று வேணி வேகமாய் வந்து தடுத்திருந்தார்.
“ம்மா..! அகன் இப்போ டேஞ்சரஸ் மைண்ட்ல இருக்காரு. இப்போ ஸ்டாப் பண்ணலைன்னா அவர் இன்னும் ரொம்ப ஹார்ம்புலா நடந்துப்பாரு” என்று அன்னையின் கையை விலக்கியவள்,
வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன் அவன் அருகில் சென்றிருந்தாள். அவனோ அடுத்து உடைப்பதற்கு பொருளைத் தேட,
“அகன் நோ..! ஸ்டாப் திஸ். கண்ட்ரோல் யுவர் செல்ப்” என்றவள் அவன் கையைப் பிடிக்க முற்பட, அவனோ அவளை சட்டென்று உதறிவிட்டு உடைத்துப் போட்ட கண்ணாடித் துண்டுகளின் மேல் நடக்கப் போக, விபரீதம் உணர்ந்தவள், அவனின் கையைப் பிடித்து இழுத்து சப்பென்று ஓங்கி அறைத்திருந்தாள்.
“நிறுத்துன்னு சொல்றேன்ல” என்று அவள் கத்திய கத்தலில் அவள் முகம் பார்த்தவன் அப்போது தான் சற்று நிதானத்திற்கு வந்தான்.
“டாடி பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எடுத்துட்டு வாங்க” என்றவள், அவனை வெளியே இழுத்து வந்திருந்தாள்.
“பாட்டி ரூமை கிளீன் பண்ண சொல்லுங்க. இப்போ அகன் எதுக்காக இப்படி ரியாக்ட் பண்ணாருன்னு எனக்குத் தெரியாது. என்ன காரணமா இருந்தாலும் அது இப்போ அவர் கண் முன்னாடி இல்லாம இருக்குறது நல்லது” என்றாள் அவன் கைக் காயத்தை ஆராய்ந்தபடி.
“தயாளா?” என்று லட்சுமி மருமகனை பாவமாய் பார்க்க, அவரோ அதிர்ந்து கலங்கிய விழிகளுடன் சென்று விட்டார்.
அவனின் ஆக்ரோஷத்தைப் பார்த்து அரண்டு ஓடிய கார்த்திகா அறையை விட்டு வெளியே வரவே இல்லை.
சற்று நிதானத்திகு வந்த அகனுக்கு அப்போது தான்.. அவன் செய்து வைத்த காரியத்தின் வீரியம் புரிந்தது. சந்தான லட்சுமியை பார்வையால் வெறித்தான்.
“இதுக்குத்தான் இங்க வராமையே இருந்தேன். என்னைய வரவச்சு ஏன் இப்படி சித்திரவதை பண்றிங்க?” என்று கேட்பதை போல் இருந்தது அவன் பார்வை.
“கார்த்தி” என்று பேரனின் மறுகையை பிடித்துக் கொண்ட லட்சுமி சிறு குழந்தையாய் அழ ஆரம்பிக்க,
“பாட்டி இப்போ அகன் முன்னாடி அழாதிங்க” என்றாள் யுகந்தாரா. அவளின் பேச்சிற்கு கட்டுப் பட்டு லட்சுமி அமைதியாய் இருக்க, அவளோ அவன் காயத்தை ஆராய்ந்து அவன் கையில் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தாள். நிமிராமல் குனிந்திருந்தவளின் கண்கள் கலங்கியிருந்தது. அவளின் உடலில் ஓடிய நடுக்கம் அவள் கை வழியாக அவனையும் சென்றடைந்திருந்தது.
எவ்வளவு முயன்றும் அவளின் கண்ணீர் அவனின் காயத்தில் வந்து விழுந்திருக்க, பிறர் அறியாமல் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டவளை, அகனிடம் மட்டும் காட்டிக் கொடுத்திருந்தது அவளின் கண்ணீர்.
“பர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டேன். பெயின் இருந்தா பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல் போயிட்டு வரலாம்” என்றாள் அவன் முகம் பார்த்து.
“வேண்டாம்” என்பதைப் போல் தலையை ஆட்டினான்.
“க்ளாஸ் பீஸ் எதுவும் இல்லை. இருந்தாலும் ஹாஸ்பிட்டல்ல செக் பண்ணிக்கிறது நல்லது. ஒரு சின்ன பீஸ் இருந்தாலும் செப்டிக் ஆகிடும்” என்றாள் அக்கறையாய்.
வேணியும் பூமிநாதனும் மகளை ஆராய்ச்சியாய் பார்த்திருந்தனர். மகளின் மாற்றம் பெற்றோர்களுக்கு தெரியாமல் இல்லை. அகனின் மேல் அக்கறையையும் மீறிய ஒரு உணர்வு மகளுக்கு இருப்பது அவர்களுக்கு தெளிவாய் தெரிந்தது.
“இப்போ நீ கிளம்பினா, லட்சுமி பெரியம்மாவுக்கு யார் பதில் சொல்றது? கார்த்தி தம்பி இப்படி நடந்துகிட்டதால தான் கிளம்பி போய்ட்டிங்கன்னு நினைக்க மாட்டாங்க? நம்ம பொண்ணு மேல நம்மளே நம்பிக்கை வைக்கலைன்னா எப்படி வேணி?” என்றார் பூமி.
“அது தாங்க பிரச்சனையே? அவளுக்கு ஏதாவது வேணும்னா நம்மகிட்ட தான் வந்து கேட்பா. இப்போ இதையும் வந்து கேட்டுட்டா? அதை நினைச்சா தான் பயமா இருக்கு” என்றார் வேணி.
“அப்படி கேட்கும் போது பார்ப்போம். இப்போ கண்டதையும் கற்பனை பண்ணாம இரு” என்றார்.
அகனின் அறையை அடுத்த ஒரு மணி நேரத்தில் சுத்தம் செய்து முடித்திருந்தனர்.
அகனை அறைக்குள் விட்டவள்,
“சாரி, உங்களை கண்ட்ரோல் பண்றதுக்காகத் தான் அடிச்சேன்” என்று மன்னிப்பை வேண்டினாள்.
அவன் அவளை ஆழ்ந்து பார்க்க, அந்த பார்வையில் தடுமாறியவள்,
“ரெஸ்ட் எடுங்க” என்றபடி திரும்பி செல்ல முயன்றவளை இழுத்து அணைத்திருந்தான் அகன் கார்த்திகேயன். உடலின் சர்வாங்கமும் அதிர்ந்து நின்றது அவளுக்கு. இறுக்கமின்றி மென்மையாய் மட்டுமே அணைத்திருந்தான். அதில் வேறு எந்த விகல்பமும் தெரியவில்லை அவளுக்கு. ஆனால் அவளின் பாடு தான் திண்டாட்டமாய் இருந்தது.
மூளையோ அவனிடமிருந்து விலகு என்று சொல்ல, மனமோ அவனுடனேயே ஒட்டிக் கொண்டு நின்றது. அவளை அணைத்து உணர்வுகளுக்கு வடிகால் தேடிக் கொண்டான் அவன். அவளோ புதிதாய் பிறந்து உணர்வுகளுடன் போராடிக் கொண்டிருந்தாள்.
அவளை அணைத்து விடுவித்தவன்,
“தேங்க்ஸ் தாரா, பார் யுவர் கேர் அண்ட் யுவர் பிரண்ட்லி ஹக்” என்று டைப் செய்து காட்ட,
“என்னமோ நானே வந்து இவனுக்கு பிரண்ட்லி ஹக் குடுத்த மாதிரி பேசுறான் பாரு? அடேய் உன்னை சாக்லேட் பாய்ன்னு நினைச்சேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ரக்கட் பாய் மாதிரி இருந்த? இப்ப என்னடா ராக்கி பாய் மாதிரி பிகேவ் பண்ற? யாரு சாமி நீ? எங்கடா இருந்த இத்தனை நாளா?’ என்று புலம்பியவள், அவனிடம் தலையாட்டியபடி கீழே வந்தாள். செல்லும் அவளைப் பார்த்திருந்தவனின் முகத்தில் அத்தனை வலிகளைத் தாண்டியும் சிறு புன்னகை பூத்திருந்தது.