அத்தியாயம் 4:

அகனின் திருமண வேலைகள் தடபுடலாய் நடக்க, அடுத்து வந்த இரண்டு நாட்களும் சென்ற வேகம் தெரியாமல் சென்றிருந்தது. இந்த இரண்டு நாட்களும் அகனின் அருகில் செல்வதை முடிந்த அளவு குறைத்துக் கொண்டாள் யுகந்தாரா. அதற்கு வேணியும் ஒரு காரணம் என்று சொன்னால் தான் சரியாக இருக்கும். தாராவும் தன் மனம் அலைபாய்வதை விரும்பவில்லை.

அவளின் எண்ணத்தை தவிடு பொடி ஆக்குவதைப் போல், வழக்கத்திற்கு மாறாக, இரண்டு நாட்களும் அவள் கண் முன்னால் அதிகம் நடமாடிக் கொண்டிருந்தான் அகன் கார்த்திகேயன்.

“குட்மார்னிங் தாராம்மா. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்டா” என்ற பூமிநாதனின் குரலில் தான் அன்றைய அவளின் விடியல் ஆரம்பமானது.

“தேங்க்யுப்பா” என்றவளுக்கு கண்களைத் திறக்க முடியாத அளவிற்கு அப்படி ஒரு தூக்கம்.

“மணி என்னன்னு பாரு தாரா? இன்னும் எவ்வளவு நேரம் தான் தூங்குவ? பிறந்த நாள் அன்னைக்காவது சீக்கிரம் எழுந்துக்க கூடாதா?நாம என்ன நம்ம வீட்லையா இருக்கோம்?” என்று வேணி வழக்கம் போல் ஆரம்பிக்க,

“விடு வேணி! மணி ஆறுதான் ஆகுது. என்னமோ தாரா பத்துமணி வரைக்கும் தூங்குற மாதிரி பேசிட்டு இருக்க?” என்று மனைவியை அடக்கினார் பூமிநாதன்.

“அதானே, நம்ம வீடுன்னா செய்ய ஏதாவது இருக்கும். இங்க தான் ஒரு வேலையும் இல்லையே. எப்படியும் பகல் முழுக்க வெட்டியா தான் இருக்கப் போறேன். அதுக்கு எப்போ எழுந்திருச்சா என்ன?” என்றவள் மறுபடியும் தூங்கிப் போனாள்.

பூமிநாதன் எழுந்து வெளியே சென்று ஹாலில் அமர்ந்து பேப்பரைப் படிக்க ஆரம்பித்திருந்தார்.

வேணிக்கு தான் அங்கு தங்கியிருப்பது ஒரு வித அசௌகரியத்தைக் கொடுத்திருந்தது. இதற்கு முன்பு வந்த போது யுகந்தாராவை அழைத்து வந்ததில்லை. இத்தனை நாட்கள் தங்கியதுமில்லை. வசந்தி அவர்களை விரோதியைப் போல் பார்ப்பது வேணிக்கும் தெரிந்து தான் இருந்தது. ஆனால் அனைத்தையும் ஈடு செய்யும் விதமாக சந்தான லட்சுமியும், தாமரையும் அன்புடன் அவர்களை கவனித்துக் கொண்டனர்.

“இன்னைக்கு பழனி மலை முருகன் கோவிலுக்கு போகணும்னு சொன்னியே தாராம்மா” என்று வேணி ஞாபகப்படுத்தினார்.

“ஆமால்ல” என்றவள் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து தந்தையிடம் செல்ல,

“என்னடா தூங்குறேன்னு சொல்லிட்டு எழுந்துட்ட?” என்றார் அக்கறையாய்.

“பழனி மலைக்கு போகனும்ப்பா. நம்ம மூணு பேரும் போய்ட்டு வரலாம்” என்றாள். அவரின் கைகளைக் கட்டிக் கொண்டு தோளில் சாய்ந்து கண்களை மூடியவள் விட்ட உறக்கத்தை தொடர்ந்தாள்.

“தாராம்மா, அப்பாவுக்கு வேலை இருக்குடா. நீ வேணும்னா அம்மாவைக் கூட்டிட்டு போய்ட்டு வரியா?” என்றார் பூமி.

“இவ படியில தான் ஏறனும்னு சொல்லுவாங்க. எனக்கே முட்டிவலி. நான் எப்படி படி ஏற முடியும்?” என்றார் வேணி.

“உங்களை ரோப் கார்ல ஏத்திவிட்டுட்டு, நான் படியேறி வந்து உங்களை பிக்கப் பண்ணிக்கிறேன் மம்மி” என்றாள் கொட்டாவியுடன்.

“எங்க யாரை பிக்கப் பண்ண போற தாரா?” என்றபடி சந்தான லட்சுமி வர,

“சத்தியமா உங்க பேரனை இல்ல பாட்டி” என்றவளின் பதிலில் வேணி அவளை முறைக்க,

“இன்னைக்கு தாராவுக்கு பிறந்தநாள் பெரியத்தை. அதான் பழனி மலைக்கு போகலாம்னு சொல்லிட்டு இருக்கா” என்றார் வேணி.

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாரா குட்டி. என்னையெல்லாம் கோவிலுக்கு கூப்பிட மாட்டியா?” என்றார் லட்சுமி.

“வொய் நாட் பாட்டி? தாராளமா வாங்க. நீங்களும் மம்மியும் ரோப் கார்ல வாங்க. ரெண்டு பேரையும் சேர்த்து பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றாள்.

“அதுக்கு முதல்ல குளிக்கணும்” என்றார் வேணி.

“ஒரு டென் மினிட்ஸ்மா” என்றாள்.

“இவளை செல்லம் குடுத்து கெடுக்குறதே இவரு தான் பெரியத்தை” என்று வேணி குற்ற பத்திரிக்கை வாசித்தார்.

வேணியின் பேச்சில் சட்டென்று கண்களைத் திறந்து தாயை முறைத்தவள்,

“டாடி இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. நல்லா யோசிச்சு சொல்லுங்க, உங்க இந்த பொண்டாட்டியே தான் வேணுமா?” என்றாள்.

“வேற வழி இல்லடா” என்றார் பூமிநாதன் பாவமாய்.

“பட், எனக்கு ஒரே மம்மி கூட இருந்து போர் அடிக்குது. நீங்க ஏன் ஒரு நல்ல வக்கீலா பார்க்கக் கூடாது?” என்றாள்.

“வக்கீல் எதுக்குமா?” என்றார் லட்சுமி.

“எல்லாம் உங்க மருமகளை டிவோர்ஸ் பண்ணத்தான் பாட்டி” என்றாள் சிரிக்காமல்.

“அடிக் கழுதை” என்று வேணி அடிக்க வர,

“வயசான காலத்துல இப்படி ரிலே ஓட்டமெல்லாம் தேவையா மம்மி” என்று அவரை அணைத்துக் கொண்டவள்,

“நான் போய் குளிச்சுட்டு வர்றேன். நீங்க என்ன பண்றிங்க எனக்கு ஸ்ட்ராங்கா ஒரு காபி போட்டு வைக்கிறிங்க ஓகே வா” என்றாள்.

“இப்படி கட்டிப் பிடிச்சே ஆளைக் ஐஸ்ல குளிப்பாட்டிடுவா அத்தை” என்ற வேணியின் கைகள் தன் போக்கில் மகளை வருடிக் கொண்டிருந்தது.

“பிறந்த நாள் அதுவுமா புடவை கட்டுடா தாரா” என்ற லட்சுமியின் வார்த்தையில் வேணி பக்கென்று சிரிக்க, தாராவோ கேட்கக் கூடாததை கேட்டதைப் போல் முகத்தை வைத்துக் கொண்டாள்.

“சாரி பாட்டி. சேரி கட்டுறது எல்லாம் நம்ம அகராதியிலையே இல்லை. ஒரு தடவை காலேஜ்க்கு பிரண்ட்ஸ் செட் சேரி கட்டணும்னு சொல்ல, அன்னைக்கு நான் பட்ட பாடு இருக்கே, அதை சொல்லி மாளாது. அன்னையோட சரி, சேரி உனக்கு சாரின்னு சொல்லிட்டேன்” என்றாள்.

“சரிடா உனக்கு எது பிடிக்குதோ அதையே போட்டுக்கோ. ஆனா புடவை உனக்கு அழகா இருக்கும்” என்றார் லட்சுமி.

“அவளுக்குப் புடவை கட்டவே தெரியாது பெரியத்தை” என்றார் வேணி.

“என்ன தாரா இது? நீ ஒரு டாக்டர். உனக்கு புடவை கட்டத் தெரியாம இருக்கலாமா?” என்றார் லட்சுமி.

“நல்லா சொல்லுங்க பெரியத்தை, நாளைக்கு வாக்கப்பட்டு போற வீட்ல என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்கிங்க? ஒரு புடவை கட்டத் தெரியாமன்னு கேட்க மாட்டாங்க?” என்றார் வேணியும்.

“பாட்டி நீங்க இன்னும் சரோஜா தேவி காலத்துலயே இருக்கீங்க. புடைவை கட்டினா தான் டாக்டர்னு உங்க ஆள் மனசுல யாரோ பதிய வச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன். அப்பறம் மம்மி, ஆப்டர் மேரேஜ்  புடவை கட்டிவிடுற வேலை எல்லாம் என் புருஷன் பார்த்துப்பான். நீங்க வொர்ரி பண்ணிக்காதிங்க” என்றாள் கண்ணை சிமிட்டிய சிரிப்புடன்.

“உன் வாய் தெரிஞ்சும் உன்கிட்ட பேசுனேன் பாரு என்னை சொல்லணும். போய் குளிச்சுட்டு வா அராத்து” என்றார் வேணி தலையில் அடித்துக் கொண்டு.

“அந்த பயம் இருக்கணும்” என்றபடி அறைக்குள் செல்லப் பார்த்தவள் அப்போது தான் மாடிப் படியின் ஓரத்தில் நின்றிருந்த அகனைக் கவனித்தாள்.

கைகளைக் கட்டியபடி சுவரில் சாய்ந்திருந்தவன் அவளைத் தான் பார்த்திருந்தான்.

‘இந்த சிலுக்கு ஜிப்பா எப்போ வந்தான்? இவன் மட்டும் சீரியல் ஆர்டிஸ்ட் மாதிரி எனி டைம் மேக்கப்லயே இருக்கானே அதெப்படி? ஆறுமணிக்கெல்லாம் இப்படி குளிச்சு ஜம்முன்னு வந்து நின்னா, என் மனசு கம்முன்னா இருக்கும்? ஒருவேளை இந்த பம்பரக்கட்டை மண்டையன் என்னை மடக்க ட்ரைப் பண்றானோ?’ என்று யோசிக்க,

‘ச்சச்ச..! இருக்காது. அவனுக்குத் தான் கார்த்திகா இருக்காளே. அவன் என்கிட்ட பிரண்டா தான் இருக்கான். நான் எதையும் கன்ப்யூஸ் பண்ணிக்கக் கூடாது’  என்று நினைத்துக் கொண்டவள்,

“ஹாய் அகன், குட் மார்னிங்” என்றாள் மலர்ந்த முகத்துடன்.

“குட் மார்னிங்” என்பதைப் போல் தலையை ஆட்டினான். அவளுக்கு வாழ்த்து சொல்வதற்காக கையை நீட்ட,

தாராவோ,”நான் இன்னும் குளிக்கலை அகன். குளிச்சுட்டு வரேன். நீங்கதான் ஓவர் சுத்தம் ஆச்சே” என்றபடி நழுவிவிட்டாள். அவளின் சமாளிப்பு அவனுக்கு அப்பட்டமாய் தெரிந்திருந்தது.

‘ஒரு தடவை கை குடுத்த பீலே இன்னும் உள்ளுக்குள்ளயே இருக்கு. மறுபடியுமா? பாடி தாங்காதுடி தாரா” என்று புலம்பியபடி குளிக்கச் சென்றாள்.

“தாராவை இப்படி என் கண்ணுலையே காட்டாம வளர்த்துட்டியே பூமி. கடைசில நீ நினைச்சதை சாதிச்சுட்ட பூமிநாதா” என்றார் சந்தான லட்சுமி.

“பெரியம்மா? இப்ப எதுக்கு பழசெல்லாம்” என்றவர்,

“நான் போய் தாராக் குட்டிக்கு ஸ்வீட் செஞ்சுட்டு வர்றேன்” என்று நகர்ந்துவிட்டார்.

“கார்த்தி நான் தாரா கூட பழனி மலைக்குப் போறேன். நீயும் வரியாப்பா?” என்றார் லட்சுமி பேரனிடம்.

சற்று யோசித்தவன்,”சரி” என்று சொல்லியிருந்தான்.

“இந்த பெரியத்தை எதுக்கு இப்போ அகன் தம்பியை கூப்பிடுறாங்க. இந்த வசந்தி அதுக்கு வேற பேசுவாளே?” என்ற வேணிக்குத் தான் ஆயாசமாய் வந்தது.

குளித்து முடித்து மயில் கழுத்து வண்ண காஞ்சி காட்டன் சுடிதாரில் மிளிரும் அழகுடன் வந்து நின்றவளை  இமைக்காமல் பார்த்திருந்தான் அகன். வழமை போல் அவன் அமர்ந்திருந்த விதத்தில் ஈர்க்கப்பட்டவள், முயன்று தன் கவனத்தை அவனிடமிருந்து திருப்பினாள்.

“ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி” என்று லட்சுமியின் காலில் விழ,

“தீர்க்காயுசா இருடா” என்ற சந்தான லட்சுமிக்கு மனதிற்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு வந்து போக, அதை முகத்தில் காட்டாமல் இருக்க அரும்பாடு பட்டார்.

அவர் அறைக்குள் சென்று வந்தவரின் கையில் ஒரு அழகிய செயின் இருக்க,

“பாட்டியோட பிறந்தநாள் பரிசுடா” என்றார்.

காலை உணவிற்காக ஹாலில் கூடியிருந்த அனைவரின் கண்களும் அவர்களைத்தான் பார்த்திருந்தது.

அதிலும் வசந்திக்கோ எரிச்சலும் கோபமும் தான் அதிகம் இருந்தது.

“பார்த்தியாக்கா? கார்த்தியைக் கட்டிக்கப் போற கார்த்திகாவுக்கு இதுவரைக்கும் ஒன்னும் தரலை என் மாமியார்கார அம்மா. அந்த சமையல்காரர் மகளுக்கு கேட்காமையே எல்லாத்தையும் குடுக்குது. எல்லாம் நேரம்” என்று தலையிலடித்துக் கொண்டார்.

“பாட்டி உங்க லவ் மட்டும் போதும். கிப்டா இப்படி ஜிவெல் எல்லாம் வேண்டாம்” என்று தீர்மானமாய் மறுத்து விட்டாள் யுகந்தாரா.

“இது என் பொண்ணு அகல்யாவோடதுடா. இந்த ஒரு செயினை மட்டும் போட்டுக்கோ” என்றார் சந்தான லட்சுமி கெஞ்சுதலாய்.

“சாரி பாட்டி. என்னை தப்பா நினைக்காதிங்க. இப்படி காஸ்ட்லி கிப்ட் எல்லாம் எனக்கு வேண்டாம். அதுமட்டுமில்லாம வீட்ல இருக்க ஜிவெல்சையே நான் போடுறது இல்லை” என்றாள்.

“பிகு பண்ணாம வாங்கிக்கம்மா. நாங்க ஒன்னும் நினைக்க மாட்டோம்” என்றார் வசந்தி.

“நீங்க என்ன நினைச்சா எனக்கென்ன சித்தி? மத்தவங்க அப்படி நினைப்பாங்கன்னு நான் என்னைக்கும் என்னை மாத்திக்கிட்டது இல்லை. எனக்குத் தான் நான். நான் எப்படின்னு எனக்கும் என் பேரண்ட்ஸ்க்கும் தெரிஞ்சா போதும். ஒவ்வொருத்தருக்கா புளி போட்டு விளக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்றாள் பட்டென்று.

சந்தான லட்சுமியின் முகம் வாடிவிட,

“உங்களுக்கு எனக்கு ஏதாவது கிப்ட் குடுக்கனும்னு தோணுச்சுன்னா, என் கூட கோவிலுக்கு வர்றீங்க தான பாட்டி. அங்க கடையில நான் கேட்குறதை எல்லாம் வாங்கிக் குடுங்க. டீலிங் ஓகே வா?” என்றாள் கண் சிமிட்டி.

“சரிமா” என்றார் லட்சுமி மனமே இல்லாமல்.

“நானும் உங்க கூட வரவாக்கா?” என்றாள் இனியா.

“ஓ எஸ், தாராளமா வரலாமே இனியா” என்றாள் சிரிப்புடன்.

“அதெல்லாம் வேண்டாம். இதென்ன புதுப் பழக்கம் தெரியாதவங்களோட ஊர் சுத்தப் போறது?” என்றார் பரமேஸ்வரி பட்டென்று.

“சாரி இனியா. நீ உன் பாட்டி கூடவே இரும்மா. நான் அந்த அளவுக்கு நல்லவ எல்லாம் இல்லைடா” என்று சிரிப்புடன் சொன்னவள், பரமேஸ்வரியை ஒரு முறை முறைத்துவிட்டு வெளியே சென்றாள்.

வெளியே செல்லும்  முன் அவள் பார்த்த அகனின் முகம் கோபமாய் இருப்பதைப் போல் தெரிந்தது அவளுக்கு.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் நல்லாத்தான இருந்தான். திடீர்ன்னு என்ன ஆச்சு? ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி மாதிரி முகத்தை வச்சிருக்கான். சம்திங் ராங்’ என்று எண்ணிக் கொண்டே வந்தவள், சட்டென்று திரும்பிப் பார்க்க, அகனும் அவளுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தான்.

“இப்ப என்னதான் பிரச்சனை இவனுக்கு?” என்று எரிச்சலாய் வந்தது அவளுக்கு. அதை அவனிடமும் காட்டியிருந்தாள்.

“இப்ப எதுக்கு என் பின்னாடி வர்றீங்க அகன். அதுக்கும் உங்க அத்தை ஏதாவது பேசவா?” என்றாள் கடுப்புடன்.

அகனோ எதுவும் பேசாமல் அவளை முறைத்தவன் கையை நீட்ட,

‘இவன் கை குடுக்காம விட மாட்டான் போலயே. டேய் சிலுக்கு ஜிப்பா என்னை கவுத்தே ஆகணும்னு கங்கனம் கட்டிக்கிட்டு அலையறடா” என்று புலம்பிக் கொண்டே கையை நீட்டியிருந்தாள்.

பஞ்சு பொதியாய் அவன் கரத்திற்குள் அடங்கியிருந்த அவளின் கரத்தை அவன் பற்றியிருந்த விதத்தில் தாராவின் இதயம் தாறுமாறாய் துடிக்கத் தொடங்கியிருந்தது.

முதல் முறை அவன் கை குலுக்கியதற்கும் இப்போது அவன் கை குலுக்குவதற்கும் இடையில் அத்தனை வித்தியாசம் இருந்தது. அன்று அவள் விடாமல் பற்றியிருந்தாள். இன்று அவன் விடவே மாட்டேன் என்று பற்றியிருப்பதைப் போன்று இருந்தது அவளுக்கு.