அதற்கடுத்து வந்த ஒரு வாரமும் இரண்டு பேருக்கும் மாற்றி மாற்றி ஹாஸ்பிட்டலில் வேலை இருந்து கொண்டே இருக்க, கிடைத்த நேரத்தை தங்களுக்கான நேரமாக மாற்றிக் கொண்டனர் அகனும், யுகாவும்.
பூமிநாதனும் வேணியும் ஒருவாரமாக மடத்துக் குளத்தில் தங்கிவிட்டனர். அடித்து பிடித்து இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தால் சரி என்ற மன நிலைக்கு வந்திருந்தனர் இருவரும்.
அன்று அகன் சென்று வெகு நேரம் கழித்தே தாரா வீட்டிற்கு கிளம்பியிருந்தாள். எப்போதும் இருவரும் சேர்ந்து செல்வது தான் வழக்கம். ஆனால் அன்று ஏனோ அகன் முன்னமே சென்று விட்டான்.
அன்றைய நாளில் பாதி நாள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால், அவளுக்கு காலெல்லாம் வலி எடுத்திருக்க, அதோடு தலைவலியும் சேர்ந்து கொண்டது. களைப்புடன் வீட்டிற்குள் வந்தவள் கண்டது பிரஷாக இருந்த அகனைத்தான்.
“அகன் ஐ நீட் அ காபி” என்று சோர்வாய் அமர்ந்தவளை முறைத்தவன்,
“பர்ஸ்ட் குளிச்சுட்டு வா யுகா” என்றான் கட்டன் ரைட்டாக.
“சுத்தத்துக்கு பிறந்தவன், ஒரு காபி குடிச்சுட்டு குளிக்க போனா ஆகாதா?” என்று முனங்கியபடி சென்றவளைப் பார்த்து சிரித்துக் கொண்டான் அகன். அவள் இங்கு வந்ததில் இருந்து தினமும் நடக்கும் கூத்து தான். அவளின் சேட்டைகளை எல்லாம் சிறு சிரிப்புடன் கடந்து விடுவான்.
குளித்து முடித்து வந்த பிறகும் சோர்வுடன் இருந்தவளைப் பார்த்து அவனுக்குத் தான் கவலையாகிப் போனது.
ஆவி பறக்க காபியை அவள் கையில் கொடுத்தவன்,
“இன்னைக்கு த்ரீ கேஸ் மட்டும் தானே உனக்கு அலாட் பண்ணியிருந்தது. அதுக்கே இப்படி டயர்ட் ஆனா எப்படி மேடம்?” என்றபடி அருகில் அமர்ந்தவனை பார்வையாலையே எறித்திருந்தாள்.
“அதுவா அகன்? எங்க ஹாஸ்பிட்டல் ஓனர் ஒரு கஞ்சப் பைய. ரெக்ரூட்மென்ட் போட்டு எக்ஸ்ட்ரா ரெண்டு டாக்டர்ஸ அப்பாயின்ட் பண்ணவே மாட்டேங்குறான். இருக்குற ஸ்டாப்ஸ் வச்சு உசுர வாங்குறான். வொர்க் லோட் ஜாஸ்தி. பேசாம வேற நல்ல ஹாஸ்பிட்டலா பார்த்து மாறலாம்னு இருக்கேன்” என்று காபியை குடித்துக் கொண்டே அவள் புகார் வாசித்துக் கொண்டிருந்தாள்.
“நிஜமாவே வொர்க் லோட் அதிகமா இருக்கா யுகா. வேணும்னா நியூ டாக்டர்ஸ் அப்பாயின்ட் பண்ணுவோமா?” என்று யோசனையுடன் கேட்டவனைப் பார்த்து சிரித்துக் கொண்டாள். அது தான் அகன். அவள் கிண்டலுக்கு சொன்னால் கூட அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவான்.
“நான் கிண்டல் பண்ணேன் பாஸ். ஏற்கனவே ஹாஸ்பிட்டல்ல இருக்குற பாதிப் பேர் டாக்டர்ஸ் தான். சொல்லப் போனா பேஷண்ட்ஸ விட டாக்டர்ஸ் தான் அதிகமா இருக்கோம்” என்றாள் நமட்டு சிரிப்புடன்.
“நாம நாளைக்கு பழனிக்கு போகணும் யுகா. பாட்டிக்கு உடம்பு சரியில்லை. விடாம கால் பண்ணிட்டே இருக்காங்க” என்றவன் அவள் கால்களை மடி மேல் போட்டுக் கொண்டு மிதமாய் அமுக்கி விட்டபடி ஏதோ ஒரு யோசனையில் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவனின் முகம் பார்த்தவளுக்கு அவன் என்ன நினைக்கிறான் என்பது புரிந்தது.
“இப்ப என்ன பிரச்சனை உனக்கு. நான் தான பிடிச்சு விடுறேன். ரிலாக்ஸ் பண்ணு யுகா” என்றவனை அவ்வளவு பிடித்தது அவளுக்கு. பிடிதத்திற்கு அளவு கோல் எல்லாம் இல்லை.
“உங்களை பத்தி ஹாஸ்பிட்டல்ல என்ன பேசிக்கிறாங்க தெரியுமா அகன்?” என்றாள் பார்வையில் ரசனையுடன்.
“என்ன பேசிக்கிறாங்க?”
“நீங்க ஒரு ஹேண்ட்சம் சைலன்ட் வாரியர்ன்னு பேசிக்கிறாங்க” என்றாள் சிரிப்புடன்.
“சைலன்ட் வாரியர்ன்னு மட்டும் தான் பேசிக்கிறாங்கன்னு கேள்விப்பட்டேன். இந்த ஹேண்ட்சம்ன்ற வார்த்தை மேடம் போட்ட எக்ஸ்ட்ரா பிட்டு மாதிரி தெரியுதே” என்றான் அவளை அணைத்தபடி.
“யார் சொன்னா என்ன? உண்மை அது தானே” என்றவள் அவனில் இருந்து விலகப் பார்க்க,
“ஒன் வீக்கா ஹெவி வொர்க் பிரஷர்”
“அதுக்கு?”
“ம்ம் அதுக்கு கார்டிசோல் லெவலை குறைச்சு என்டோர்பின் ஆக்சிடோசின் ஹார்மோனை சுரக்க வைக்க போறேன்” என்றவன் மேற்கொண்டு அவளை பேச விடாமல் முத்தத்தின் மூலம் மொத்தத்தையும் எடுத்துக் கொண்டான்.
மறுநாள் காலையிலேயே பழனி வந்து சேர்ந்திருந்தனர் அகனும் யுகாவும். நான்கு வருடங்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்கு வருகின்றனர். தாராவிற்கு அந்த வீட்டில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் கண் முன் வர, அவர்களின் திருமண நிகழ்வும் கண் முன் வந்து சென்றிருந்தது. பலபல யோசனைகளுடன் வந்தவளை கலைத்தது ஹரீஷின் குரல் தான்.
“ராஜ குரு நீங்க எங்க இங்க? உங்க பாதம் இந்த ஏழை அரசனின் அரண்மனையில் பட நாங்க தான் புண்ணியம் பண்ணியிருக்கணும்” என்றவனின் குரலில் நிமிர்ந்தவள் ஹரீஷைப் பார்த்து கண் கலங்கிவிட்டாள்.
“எப்படி இருக்கீங்க அரசே” என்றவளுக்கு சிரிப்புடன் கண்ணீரும் சேர்ந்து கொண்டது.
“அப்பறம் சார் என்ன பண்றிங்க?” என்று தோளில் கை போட்ட அகனை கோபமாய் பார்த்தான் ஹரீஷ்.
“என்னடா பிரச்சனை உனக்கு?”
“பெரியவங்க மேல கோபம்னா நான் என்ன பண்ணேன் மாம்ஸ். எதுக்காக ரெண்டு பெரும் என்னை அவாய்ட் பண்ணிங்க?” என்றவனின் பேச்சில் இருந்த நியாயத்தில் இருவரும் வாயடைத்து நின்றனர்.
“சாரிடா” என்று தாரா தான் இறங்கி வந்து சமாதானப் படுத்த வேண்டியிருந்தது.
“ராஜ குரு..! சில உண்மையை எல்லாம் இப்படி சத்தமா பேசக் கூடாது. இதை மட்டும் வசந்தி கேட்டா என் நிலைமை என்ன ஆகுறது?” என்றான் பாவமாய்.
“இதென்ன புதுப் பழக்கம் ஹரீஷ்?” என்ற அகனை வேற்று கிரக வாசியைப் போல் பார்த்து வைத்தான் ஹரீஷ். அவன் பார்வையின் பொருள் உணர்ந்து தாரா சிரிப்பை அடக்கியபடி,
“அது ஒண்ணுமில்லை ஹரீஷ், அகன் அமேசான் காட்ல இருந்து வந்த அறிய வகை உயிரினம். இப்படித்தான் அப்பப்போ பேசுவார். இதை எல்லாம் பெருசா எடுத்துக்கக் கூடாது” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே குடும்பத்தினர் வெளியே வந்திருக்க அவர்களுடன் வேணியும் பூமிநாதனும் வந்திருந்தனர்.
“நீங்க எப்போ டாடி வந்திங்க?” என்றபடி வந்த மகளை தலை முதல் பாதம் வரை ஆராய்ந்தார் வேணி.
“என்ன மம்மி, ஒரு வாரத்துல ஒரு சுத்து பெருத்துட்டேனா?” என்றாள் கிண்டலுடன்.
அவளை முறைத்தவர்,
“நல்லா இருக்கிங்களா மாப்பிள்ளை” என்றார் அகனிடம்.
“நல்லா இருக்கோம் ஆன்ட்டி” என்றவனுக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை.
தாமரையும் சேதுவும் எதுவும் பேசாமல் நிற்க,
“என்னாச்சு லோட்டஸ்? ஏன் சைலண்ட்டா நிக்கிறிங்க? என்னையப் பார்த்த சந்தோஷமே இல்லையே உங்க முகத்துல?” என்றான்.
“நல்லா இருக்கோம்ப்பா. உனக்கு இப்போ உடம்புக்கு எல்லாம் நல்லாத்தானே இருக்கு கார்த்தி. அத்தை உன்னைய பார்த்துட்டு வந்து சொன்னாங்க” என்றார் தாமரை.
“நான் நல்லா இருக்கேன் லோட்டஸ்” என்றவன்,
“பாட்டி எப்படி இருக்காங்க?” என்றபடி வீட்டிற்குள் நுழையப் போக,
ஒரு நிமிஷம் இருங்க என்ற வசந்தி ஆரத்தி தட்டுடன் வந்திருந்தார்.
“இத்தனை வருசம் கழிச்சு இப்பதான் சேர்த்திருக்கிங்க. இனியாவது நல்ல முறைக்கு இருங்க” என்றபடி ஆரத்தி சுற்றியவரை அதிசயமாய் பார்த்திருந்தான் அகன்.
“நம்ப முடியலைல மாம்ஸ். எனக்கும் முதல்ல அப்படித்தான் இருந்தது. அப்பறம் தான் விஷயமே புரிஞ்சது” என்றான் ஹரீஷ்.
“என்னன்னு?”
“அய்யோடான்னு பீல் பண்ணிட்டு இருந்த என்னோட மம்மி அக்கடான்னு பீல் பண்ண ஒரே காரணம் நீங்க சொத்து எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டிங்களாமே? வில்லியா இருந்த என் அம்மா இப்போ கேரக்டர் ஆர்டிஸ்ட்டா மாறினதுக்கு அந்த ஒரு காரணம் போதாதா?” என்றான் சிரிக்காமல்.
வசந்தி அவனை முறைத்து விட்டு செல்ல, தன் பேரனையும் பேரனின் மனைவியையும் ஆசை தீர பார்த்திருந்தார் லட்சுமி.
நல்ல முறையில் நடமாடிக் கொண்டிருந்த பாட்டியை இப்படி படுக்கையில் பார்த்ததும் அகனுக்கும் ஒரு மாதிரியாகிப் போனது.
“என்ன பாட்டி பேரனோட பிள்ளையைக் கொஞ்சனும்னு ஆசையெல்லாம் இல்லையா உங்களுக்கு? சீக்கிரம் குணமாகி வர்றதுக்கான வழியைப் பாருங்க” என்ற தாராவின் கையைப் பிடித்துக் கொண்டார் சந்தான லட்சுமி.
“ரெண்டு பேரும் இதே மாதிரி எப்பவும் சந்தோஷமா இருக்கணும் தாரா” என்று நலிந்து ஒலித்தது அவர் குரல்.
“கண்டிப்பா பாட்டி. நீங்களும் அதை எங்க கூட இருந்து பார்ப்பிங்க” என்று ஆறுதல் பேசியவளின் வார்த்தைகளில் அவருக்கு கொஞ்சம் தெம்பு வந்திருந்தது.
“ரெண்டு பேரும் இன்னைக்கு ஒரு நாள் இங்க தங்கிட்டு போங்கடா” என்றார் தாமரை.
“ஏன் ரெண்டு நாள் தங்கினா ஒத்துக்க மாட்டிங்களா சித்தி?” என்றவளை கட்டிப் பிடித்து அழுது விட்டார் தாமரை.
நடந்து முடிந்ததைப் பற்றி பேசி யாரையும் நோகடிக்க அவளுக்கு விருப்பமில்லை.