அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன்,

“அப்பறம்?” என்றான் ஆழ்ந்த பார்வையுடன்.

“என்ன அப்பறம்? ஒன்னுமில்லையே?” என்றவள் கிட்சன் கவுன்ட்டர் டாப்பிலிருந்து குதித்து இறங்கப் பார்க்க, அவளுக்கு இருபுறமும் கைகளை ஊன்றி அவள் இறங்குவதைத் தடுத்திருந்தான்.

“ரொம்ப நேரமா மேடம் என்னையவே பார்த்துட்டு இருந்திங்களே அதான் கேட்டேன்” என்றான் சிரிப்பை அடக்கியபடி.

“நான் அப்படியெல்லாம் பார்க்கவே இல்லையே?” என்று நிறுத்தியவள், “அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். என் புருஷன் நான் பார்ப்பேன். யாரு கேட்பா?” என்றவளை இமைக்காமல் பார்த்திருந்தான் அகன்.

“இப்ப எதுக்கு நீங்க இப்படி பாக்குறிங்க?” என்றாள்.

“நீ சொன்ன அதே டயலாக் எனக்கும் பொருந்தும் தானே” என்றான் புருவத்தை உயர்த்தியபடி.

“யாரு பார்க்க வேண்டாம்னு சொன்னா? நீங்க மக்கு மண்ணாந்தையா இருந்தா அதுக்கு நானா பொறுப்பு?” என்றாள் உதட்டை சிலுப்பியபடி.

“அது சரி, மேடம் ஏன் பேச மாட்டிங்க? ஹார்ட் பீட் செக் பண்ண ஹார்ட்டு வேணும்னு கேட்டதோட சரி. மேடம் செக் பண்ணவே இல்லையே?” என்றான்.

“அதுக்குள்ள தான் நீ ஆடு மேய்க்க போயிட்டியே” என்றாள் கடுப்பாய்.

“அதான் நீயும் சேர்ந்து மேய்க்க வந்துட்டியே?” என்றான் விடாமல்.

“நான் எங்க ஆடு மேய்க்கிறேன். உங்களைத்தான் மேய்க்கிறேன். ஆனா ஒன்னு ஆடு மேய்க்கிறன்னு நினைச்ச நீ ஹார்ட்டு டாக்டரா இருப்பன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை டாக்டரே” என்றாள் நக்கலுடன்.

“யுகா” என்று எதையோ கேட்க வந்தவன், கேட்காமல் சட்டென்று விலகித் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள,

“அகன்” என்றவளின் குரலில் திரும்ப, அவளோ இரு கைகளையும் நீட்டியிருந்தாள். அடுத்து என்ன நடந்தது என்று தெளிவதற்கு முன் அவனின் இறுகிய அணைப்பிற்குள் சிக்குண்டிருந்தாள். அத்தனை ஆசுவாசம் அவனுக்கு. அவன் தனிமையின் தவிப்பும் அவன் துணைக்கான தவிப்பும் அந்த ஒற்றை அணைப்பில் அடங்கியிருந்தது.

“தேங்க்ஸ்டி” என்றவனின் ஒற்றைத் துளி கண்ணீர் அவளில் விழுந்திருந்தது.

“போனாப் போகுது, எனக்காக சிக்கன் டிஷ் எல்லாம் செஞ்சு குடுக்குறிங்களேன்னு மன்னிக்கிறேன்” என்று சிரிப்புடன் கூறியவளை மேலும் இறுக்கிக் கொண்டவன்,

“இப்படின்னு தெரிஞ்சிருந்தா வித விதமா சிக்கன் டிஷ் செஞ்சு குடுத்திருப்பேன் யுகா” என்றான் அகனும்.

“இப்பவும் ஒன்னும் கெட்டு போகலை, டெய்லி சமைச்சுக் குடுத்துடுங்க” என்றவளை விலக்கியவன், “பர்ஸ்ட் சாப்பிடு. நீ வேற பசி தாங்க மாட்ட” என்றபடி ஓவனில்  இருந்த சிக்கனை  எடுத்து அவளுக்குப் பரிமாறியிருந்தான்.

“நான் அங்க போய் டிவி பார்த்துட்டே சாப்பிடுறேன். அப்பத்தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும்” என்றவள் தட்டை எடுத்துக் கொண்டு ஹால் சோபாவிற்கு செல்ல, அந்த வீட்டை சுற்றி அவன் பார்வை வலம் வந்தது. வீடே இப்போது உயிர்ப்புடன் இருப்பதைப் போன்ற எண்ணம் அவனுக்கு. அந்த உணர்வில் இருந்து வெளிவராமல் அவன் நிற்க,

“அகன், சிக்கன் சூப்பர். டேஸ்ட் அல்ட்டி மேட்டா இருக்கு” என்றபடி சாப்பிட்டு முடித்திருந்தாள்.

அகனுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்து போன் வரவும் பேசி முடித்து வந்தவன், அவள் அருகில் வந்து அமர்ந்ததைக் கூட கவனிக்காமல் வெகு மும்பாரமாய் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“யுகா” என்றவனின் குரலில் திரும்பியவள்,

“சொல்லுங்க அகன்” என்றாள்.

“என் கற்போட எல்லா பிரான்ச்சும் அப்படியே தான் இருக்கு” என்று அவன் போகிற போக்கில் சொல்ல, அவளுக்கோ புரையேறியிருந்தது.

“ஹேய்..தண்ணியக் குடி” என்று பாட்டிலை நீட்ட, அவனை முறைத்தபடியே குடித்து முடித்தவளுக்கு அவனைப் பார்க்க முடியவில்லை.

‘இவனுக்கு காது கேட்காதுன்னு பேசி வச்சது எல்லாம் எனக்கே திரும்புது’ என்று நொந்து போனாள். அவனைப் பாவமாய் பார்க்க, டிவியை அனைத்துவிட்டு அவளை இழுத்துக் கொண்டு போனான்.

“நல்ல சீரிஸ் அகன். நானே சாட்டர்டே ஒரு நாள் தான் பார்ப்பேன்” என்று முனுமுனுத்தவளை அவன் சட்டை செய்யவே இல்லை.

அவளை மெத்தையில் அமர வைத்தவன், ஒரு பக்க கேர்ட்டைன்ஸ் முழுவதையும் விலக்க, சுவரின்றி ஒரு பக்கம் முழுவதும் கண்ணாடியால் தடுக்கப்பட்டிருக்க, அன்றைய பௌர்ணமி இரவின் முழு நிலவு அழகாய் ஜொலித்தது.

“வாவ்..! ரொம்ப அழகா இருக்கு அகன்” என்றவளின் முகம் இன்னொரு நிலவாய் ஜொலித்துக் கொண்டிருந்தது. அவளின் அருகில் அமர்ந்து அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன்,

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா யுகா?” என்றவனின் நித்திலமான குரலில் அவன் முகம் பார்த்தவள், அவனை கேள்வியாய் நோக்க..

“அகன் கார்த்திகேயன்னு ஒரு அரைப் பைத்தியம் இருந்தான். இதை நான் சொல்லலை. என் வீட்ல எல்லாரும் சொன்னது. நிஜமா எனக்கு அப்படி ஒரு டிசார்டர் இருந்ததான்னு அந்த வயசுல எனக்குத் தெரியலை. எல்லாரும் சேர்ந்து சொன்னதுல அப்படி ஆகிட்டேனோ என்னவோ? அந்த அகனுக்கு படுத்தா தூங்கவே முடியாது. எல்லாரும் எல்லா பக்கத்துல இருந்தும் என்னைத் தாக்க வர்ற மாதிரியே தோணும். என் முன்னாடி சூசைட் பண்ண என் அம்மா எனக்குள்ள இருக்குற மாதிரியே தோணும். குறிப்பிட்ட ஏஜ் வரைக்கும் அதுக்காக பயந்து கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி இப்படி நிறைய நடந்திருக்கு. ஆனா ஒரு நாள் கூட யாரும் என்னை அணைச்சு ஒன்னும் இல்ல,பயப்படாத அப்படின்னு சொன்னதே இல்லை. ஒரு வேளை அப்படி சொல்லியிருந்தா அப்பவே சரியாகியிருப்பேனோ என்னவோ? ஒரு செடி வளர்ற மாதிரி எனக்குள்ள இருக்குற பிரச்சனை நோயா மாறி வளர்ந்து நின்னுச்சு. தொடர்ந்து அதோட வாழப் பழகிட்டேன்.

என் பிகேவியர் பார்த்து ஹாஸ்ட்டல்ல கூட மத்த பசங்க எல்லாம் என்னோட சேர்ந்து இருக்க சம்மதிக்கலை. பிரண்ட்ஸ் இருந்தாங்க. ஆனா குளோஸ் பிரண்ட்ஸ்னு யாருமில்லை. ஒரு ஸ்டேஜ்ல நானே எல்லார்கிட்ட இருந்தும் விலக ஆரம்பிச்சேன். என்னை என்னால மட்டும் தான் பார்த்துக்க முடியும்னு ஒரு கான்பிடன்சை எனக்குள்ள வளர்த்துக்க ஆரம்பிச்சேன்.

இதைத்தான் படிக்கணும் அதையும் இங்க தான் படிக்கணும்னு எல்லா முடிவையும் எனக்கு நானே எடுத்தேன்.என்னோட எல்லா செலவையும் லட்சுமி பாட்டி பார்த்துகிட்டாங்க. அப்போ எனக்கு இருக்குற பிரச்சனையை பிரச்சனையா பார்க்காத ஒரு இடத்துக்கு போகணும்னு நினைச்சேன். அதான் ஆஸ்திரேலியா போனேன். என்னோட பிரச்சனையையும் சரி பண்ணேன்.

எந்த இடத்துலையும் மேரேஜ் பண்ணனும்னு நான் நினைக்கவே இல்லை. தெரிஞ்சே ஒரு பொண்ணு லைப்பை ஸ்பாயில் பண்ண வேண்டாம்ன்ற எண்ணம். ஆனா பாட்டி விடவே இல்லை. எனக்காக நிறைய பண்ண அவங்க பேச்சை மீற முடியாமத்தான் இந்தியா வந்தேன். அப்போ கூட எனக்கு பேச வரும்னு எல்லார்கிட்டயும் சொல்லணும் ஆசை தான். ஆனா முன்னைவிட அப்பத்தான் என்னை எல்லாரும் டேஞ்சரா பார்த்தாங்க. சோ  எப்பவும் போல இருக்குறது பெட்டர்னு தான் அதையே மெயின்டெயின் பண்ணிகிட்டேன். அந்த பொண்ணு கார்த்திகாவைப் பார்த்த உடனே தெரிஞ்சிடுச்சு, பாட்டி எப்படி சம்மதிக்க வச்சிருப்பாங்கன்னு.

அப்போதான் தேவதை மாதிரி ஒருத்தி வந்தா. எந்த கவலையும் இல்லாம, தப்புன்னா அந்த இடத்துலயே பேசி, சுய மரியாதையை எந்த இடத்துலையும் விட்டுக் குடுக்காம ஹியூமரஸ் சென்சோட இருந்த நிஜமான ஏஞ்சல் அவ. எல்லாரும் பைத்தியமா பார்த்த என்னை முதன் முதலா சைட் அடிச்ச பொண்ணு.

பர்ஸ்ட் டைம் அந்த பொண்ணு என்கிட்ட பிரண்ட்ஸா இருக்கலாம்னு சொன்னப்போ அந்த பீல் நல்லா இருந்தது. அவளோட அணைப்பு எனக்கு தேவைப்பட்டுச்சு. என்னை அணைச்சுகிட்டா. அவளோட அந்த ஒரு அணைப்பு நான் தனியா இல்லைன்னு என்னை உணர வச்சது. அவளுக்கு அது ஒரு பிரண்ட்லி ஹக் தான். ஆனா எனக்கு உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிருந்த என்னைய மீட்டெடுத்த அணைப்பு அது.

அந்த வீட்ல எனக்காக நிறைய இடத்துல நின்னுருக்கா. சண்டை போட்டிருக்கா. பேசவே பிடிக்காத எனக்கு பேசிட்டே இருக்க அவளை ரொம்ப பிடிச்சது. அவ பேசுறதை கேட்டுட்டே இருக்கணும்னு தோணுச்சு. அவ என்கூடவே இருக்கணும்னு தோணுச்சு. ஆனா, எனக்கு இருக்குற பிரச்சனையில எங்க அவளைக் கஷ்ட்டப் படுத்திடுவோம்னு நினைச்சு தான் அவ மேரேஜ் பண்ண கேட்டப்பக் கூட யோசிச்சேன். அப்படியும் விடாம என்னை மேரேஜ் பண்ணிகிட்டா அந்த வசியக்காரி. அப்பறம் பார்த்தா என்னைக் குணப்படுத்தியே தீருவேன்னு ஒத்தக்கால்ல நின்னா. அது எனக்குப் புரிஞ்சாலும் என் ஆள் மனம் அதை ஏத்துக்கலை. திடீர்ன்னு பார்த்தா விட்டுட்டுப் போய்ட்டா.

அப்போ தான் ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சது. அவ இல்லைன்னா, எனக்கு எதுவுமே இல்லை. ஏன் நானே இல்லைன்னு. எனக்காக அத்தனை பண்ணவளுக்கு நான் திருப்பி என்ன பண்ண முடியும்னு யோசிச்சேன். நான் சரியாகுறது தான் அவளுக்கு நான் செய்ற நல்லதா இருக்கும்னு நினைச்சேன். இதையெல்லாம் சொல்லிட்டு செஞ்சிருந்தா இந்த பிரிவு கூட இருந்திருக்காதோ என்னவோ? இத்தனையும் செஞ்ச எனக்கு இதை அவகிட்ட சொல்லிட்டு செய்யணும்னு தெரியாம போச்சு.

இதோ அந்த நிலா மாதிரி தான் அவ. இருண்டு போயிருந்த என் வாழ்க்கையில வந்த பௌர்ணமி நிலவே அவ தான். எனக்கு அவ மட்டும் தான். உனக்குப் புரியுதுல்ல யுகா. இன்பேக்ட் நான் அதிகா பேசுனதே இதுவாத்தான் இருக்கும். சரியா பேசிட்டேனா?” என்றவனை இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.

“என்னாச்சு?” என்றான் அமைதியான குரலில்.

“எனக்கு அழுகை வருது அகன். மனசெல்லாம் என்னவோ பண்ணுது. பீலிங் ஓவர் லோடேட். ஐ திங்க் என்னோட ஹார்மோன்ஸ் எல்லாம் கதக்களி ஆட ஸ்டார்ட் பண்ணிடுச்சுன்னு நினைக்கிறேன்” என்று சிரிக்க முயன்று தோற்றவளுக்கு கண்ணீர் தான் வந்திருந்தது.

“அன்னைக்கு என்னைத் தேடி வந்து மேரேஜ் பண்ணிக்கலாமான்னு கேட்ட நீதான் யுகா, இன்னைக்கு ஒவ்வொரு நொடியும் உன்னைத் தேட வைக்கிற?” என்றான் அவளின் கன்னம் புரண்ட முடியை விலக்கியபடி.

“யோவ் சிலுக்கு ஜிப்பா நீ என்னை இம்ப்ரஸ் பண்ணிட்ட” என்று தனக்குள் புதைந்து கொண்டவளை அணைத்துக் கொண்டவன்,

“மேடம் கற்போட மத்த பிரான்ச்சஸ எல்லாம் பார்க்கலாமா? என் கற்போட பிரான்ச் வேற அப்படியே இருக்கு” என்றவனை முறைத்தவள்,

“மானத்தை வாங்காதிங்க அகன்” என்றவளின் இதழைப் பூட்டியிருந்தவன், அவளையும் தனக்குள் சிறை செய்திருந்தான். யுகம் அகத்திற்குள் அடங்கியிருக்க, அகமோ யுகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்தது. முத்த சந்தங்கள் மட்டுமே சாட்சியாய் மாற, அவர்களின் இல்லறப் பயணமும் தொடங்கியிருந்தது. இருவரும் ஒருவராய் மாறியிருந்த தருணத்தில் இரு மனங்களுக்கு இடையே இருந்த இடைவெளிகள் அனைத்தும் காணாமல் போயிருந்தது.

கூடல் முடிந்து தன்னில் தஞ்சம் அடைந்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டவன்,

“என்ன பண்ற யுகா?” என்றான் அவள் காதோரத்தில்.

“ஸ்டெதஸ்கோப் இல்லாமையே உங்க ஹார்ட்பீட்டை செக் பண்றேன்” என்றாள் சிரிப்புடன்.

“மேடம் எப்படி பீல் பண்றிங்க? ப்ரொப்பஷன்ல படிச்சதை எல்லாம் வேற பிராக்டிகலா அப்ளை பண்ணி பார்த்திருக்கோம்” என்றவனின் வாயை மூடியவள்,

“அச்சோ வாயை மூடுங்க அகன்” என்றவளுக்கு வெட்கம் வந்து தொலைத்தது.

“உன் கற்போட மொத்த பிரான்ச்சும் இப்போ என்கிட்ட பத்திரமா இருக்கு”  என்று நமட்டு சிரிப்பு சிரித்தவனை,

“பேசத் தெரியாதுன்னு சொல்லி சொல்லியே என்னவெல்லாம் பேசுறிங்க நீங்க?”என்று அவனிலிருந்து விலகப் பார்க்க,

“உங்க ஸ்டாப்பிங் இன்னும் வரலை மேடம். எப்பவும் அதிகாலையில தான இறங்குவிங்க?” என்றான்.

“அது அன்னைக்கு எப்படி அப்படி தூங்குனேன்னு தெரியலை அகன்” என்றாள் பாவமாய்.

“இப்படி பாவமா முகத்தை வைக்காத யுகா. அன்னைக்கு மட்டும் என்னை கண்ட்ரோல் பண்ணாம இருந்திருந்தா என்ன ஆகிருக்கும்?” என்றான்.

“ம்ம் ஒன்னும் ஆகியிருக்காது. நம்மா பாப்பா பிரி ஸ்கூல் போயிருக்கும்” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.

“சோ அன்னைக்கு இருந்து உனக்கு டவுட். நான் இதுக்கு சரிப்பட்டு வருவேனான்னு? என்ன நான் சொல்றது சரிதான?” என்றான்.

“ம்ம்..! லைட்டா. ஒரு புதுப் பொண்டாட்டி அப்படி அரையும் குறையுமா  இருக்கும் போது எப்படி இப்படி இருக்கார்? இவரெல்லாம் என்னத்தைக் கழட்டப் போறார்ன்னு நினைச்சேன்” என்றவளைப் பார்த்து அவன் சிரிப்பை அடக்க,

“இப்ப எதுக்கு சிரிக்கிறிங்க?” என்றாள். அவன் ஜாடை காட்ட, அவன் பார்வை போன திக்கில் பார்த்தாள். கலைந்த ஆடைகள் கதியற்றுக் கிடக்க,

“இப்போ புரிஞ்சிருக்குமே” என்றவனை வாய் வாயாக அடித்தாள்.

“மானத்தை வாங்காதிங்க அகன்” என்றவளை இறுக அணைத்துக் கொண்டவன்,

“தேங்க்ஸ் பார் எவ்ரி திங்க் யுகா. என்னோட லைப் லைனே நீதான்டி. இந்த யுகத்தையே தாங்குற யுகந்தாரா இந்த அகத்தையும்  சேர்த்து தாங்குறா” என்றவனுக்குள் அப்படி ஒரு நிறைவு.