“அகன் உங்களுக்கு பீவர் குறையவே இல்லை” என்றாள் தவிப்புடன்.

“போர்,பைவ் ஹவர்ஸ் ஆகும். ஐ நீட் சம் ரெஸ்ட்” என்றவன்,

“இப் யு டோன்ட் மைன்ட் நீ கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு லைம் ஜூஸ் மட்டும் போட்டுக் குடுக்க முடியுமா. நானே போட்டுப்பேன் தான். பட் யாராவது போட்டுக் குடுத்தா நல்லா இருக்கும்னு தோணுது. ஜஸ்ட் பிரண்ட்லி ஹெல்ப். வேற எந்த அட்வான்டேஜும் எடுத்துக்க மாட்டேன்” என்றவனைப் பார்த்து எப்படி உணர்ந்தாள் என்றே தெரியவில்லை. வெளிவரத் துடித்த கண்ணீரை அடக்கியவள்,

“நான் போட்டு எடுத்துட்டு வரேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்றவளின் குரல் கமறியிருந்ததோ? மற்ற நேரமாக இருந்தால் கண்டு பிடித்திருப்பான்.

ஹாலை ஒட்டி இருந்த அந்த ஓப்பன் மாடுலர் கிட்சன் மிக  நேர்த்தியாக இருந்தது. அங்கிருந்த சுத்தத்தைப் பார்த்தவள் பழைய தாராவாக மாறியிருந்தாள்.

“ஓசிடிக்கு பிறந்தவன், இந்த சுத்தத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. வீடாடா இது மியூசியம் மாதிரி பீல் ஆகுது. ஒருத்தனுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய பிளாட்” என்று நினைத்துக் கொண்டே, ஜூசைத் தயாரித்துக் கொண்டிருந்தவளின் கண்கள் எதேச்சையாக ஹாலின் சுவரின் மீது படிய, கால்வாசி சுவரை மறைத்து தொங்க விடப்பட்டிருந்த, அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் அத்துணை அழகாய் இருந்தது.

அவர்களின் திருமணப் புகைப்படம் ஒன்றைக் கூட அவள் இதுவரை பார்த்திருக்கவில்லை. அப்படியிருக்கும் போது இப்போது பார்த்த அந்த புகைப்படத்தை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை அவளால். அவனை மட்டும் அழகன் என்று ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு முதன் முறையாக அந்த புகைப்படத்தைப் பார்த்து தானும் இத்தனை அழகா என்று தோன்றும் அளவிற்கு இருந்தது. ஒரு புகைப்படம் இத்தனை உயிர்ப்புடன் இருக்க முடியுமா? என்று தோன்றியது அவளுக்கு. நினைவுகள் அவள் திருமணம் நடந்த தினத்திற்கே சென்று வர, அதைத் தொடர்ந்து நடந்த பிரச்சனைகளும் அழையா விருந்தாளியாய் அவள் மனதில் வந்து குடி புகுந்திருந்தது.

ஜூசை எடுத்துக் கொண்டு அவனைத் தேடி செல்ல, அவன் படுக்கை அறையில் இருப்பது கண்டு அங்கே சென்றிருந்தாள். அகனோ ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.

“என்ன அதுக்குள்ள தூங்கிட்டானா? ஜூஸ் குடிச்சா தெம்பா இருக்குமே” என்று எண்ணியவளுக்கு அவனை எழுப்ப மனம் வரவில்லை.

அதற்குள் அவள் அலைபேசியில் அழைப்பு வர, வேணி தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்கம்மா”

“ஹாஸ்பிட்டல்ல இருந்து எப்போ கிளம்புவ தாரா? நாங்க கிளம்பி ரெடியா இருக்கோம்” என்றார்.

“எதுக்கு கிளம்பி ரெடியா இருக்கீங்க?” என்றவளுக்கு அப்போது தான் உறைத்தது மறுநாள் மடத்துக் குளத்தில் வேணியின் தங்கை மகளுக்கு நிச்சயதார்த்தம் என்பது.

“அம்மா” என்று அவள் தயங்க,

“என்னாச்சு தாரா? எப்பவும் போல் அர்ஜன்ட் கேஸ் எதுவும் வந்திருச்சா?” என்றார்.

“இல்லம்மா..! நான்..அது.. இங்க அகனோட வீட்ல இருக்கேன்மா. அகனுக்கு நல்ல பீவர். பார்த்துட்டு கிளம்பிடலாம்னு வந்தேன்” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“என்னாச்சு தாரா? நானும் அப்பாவும் வேணும்னா கிளம்பி வரவா?” என்றார் வேணி.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா. நானே இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பி வந்துடுவேன். நாம இயர்லி மார்னிங் கிளம்பி போகலாம்” என்ற மகளை என்ன செய்வது என்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தார் வேணி.

“லைன்ல இருக்கிங்களா?” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ அங்கேயே இருந்து கார்த்தி தம்பியை பார்த்துக்கோ. நானும் அப்பாவும் மட்டும் கிளம்பி போயிட்டு வரோம். முடியாம இருக்குறவரை விட்டுட்டு வரேன்னு சொல்ற? இப்படித்தான் வளர்த்தேனா உன்னைய?” என்று வேணி ஆரம்பிக்க,

“இவர் என்ன பால்குடிக்கிற பாப்பாவா? பக்கத்துலையே இருந்து பார்த்துக்க? அவரே கிளம்ப சொல்லிட்டார். நீங்க தான் மம்மி ஓவரா பேசிட்டு இருக்கீங்க?” என்றாள் கடுப்புடன்.

“நான் பேசுறது எல்லாம் அப்படித்தான் தோணும். நாளைக்கு நீ ஒரு பொட்டப் பிள்ளையை பெத்து வளர்த்துப் பாரு அப்போ தெரியும் என் கஷ்ட்டம் என்னன்னு. பேசுறதுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கும். அது எதுவும் நடைமுறைக்கு ஒத்து வராது. கோபத்தை எப்ப காட்டணும்னு ஒரு வரைமுறை வேண்டாம்” என்று வறுத்து எடுக்க, போனை வாங்கிய பூமிநாதன்,

“தாரா” என்றார் அமைதியாய்.

“இப்போ எதுக்கு டாடி மம்மி இப்படி பேசுறாங்க? இவங்க எப்பவுமே என்னை புரிஞ்சுக்கவே மாட்டாங்க” என்றாள் ஆதங்கத்துடன்.

“உனக்கு என்ன தோணுதுடா?” என்றார் நிதானமாய்.

ஒரு நிமிடம் யோசித்தவள்,

“அம்மா சொல்றதும் சரி தான் டாடி. நீங்க மட்டும் போயிட்டு வாங்க” என்றாள்.

“அவ்வளவு தான்டா. இதுக்கு ஏன் இவ்வளவு கோபம். எதையும் நிதானமா யோசிச்சுப் பாரு. என்ன பண்றதுன்னு உனக்கே தெரியும்” என்று அவர் போனை வைக்க, வேணி தான் வாயைப் பிளந்து நின்றிருந்தார்.

“நல்ல அப்பா நல்ல பொண்ணு” என்ற மனைவியைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.

‘மங்கூஸ் மண்டையனுக்கு ரசனை ஜாஸ்தி தான்’ என்று எண்ணியபடி அவனுக்கு போட்ட ஜூசை குடித்துக் கொண்டே அந்த வீட்டைச் சுற்றி வலம் வந்திருந்தாள்.

ஒரு அறை முழுவதும் மெடிக்கல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்தவள்,

‘நமக்கு மேல படிப்பான் போலயே’ என்று நினைத்துக் கொண்டாள். புத்தகங்களுக்கு இடையில் இருந்த டைரிகளைப் பார்த்தவளுக்கு,

‘இந்த நல்ல பழக்கமெல்லாம் இருக்கா இவனுக்கு’ என்றபடி ஒரு டைரியை எடுத்து விரிக்க, அதில் அவள் ரசித்த அவனின் அழகான கையெழுத்து.

‘அவன் பெர்மிஷன் இல்லாம இதைப் படிக்கிறது தப்பு’ என்று உள்மனம் அறிவுறுத்த,

‘பெரிய தங்கமலை ரகசியம். என்ன எழுதியிருக்க போறான். அன்னன்னைக்கு நடந்ததை எழுதியிருப்பான்’ என்று அசுவாரஸ்யத்துடன் படிக்க ஆரம்பித்தவளுக்கு அதை வைக்க முடியவில்லை. பல வெற்றுப் பக்கங்களும் இருந்தது. பேச முடியாத நாட்களின் எண்ணங்கள் முழுவதும் எழுத்து வடிவில் இருந்தது. அனைத்தையும் அப்போது படிப்பது சாத்தியமில்லை என்று அவளுக்குத் தெரியும். அவளுக்குத் தேவைப்பட்ட வருடங்களையும், நாட்களையும் மட்டும் புரட்டிப் படித்துக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில் முடியாமல் பட்டென்று மூடி விட்டாள். கண்கள் கலங்க டைரியை எடுத்த இடத்தில் தடம் மாறாமல் வைத்தவள் அப்போது தான் நேரத்தை கவனித்தாள். மூன்று மணி நேரங்களைக் கடந்திருந்தது.

“இவ்வளவு நேரம் ஆகிடுச்சா?” என்று வேகமாய் வெளியே வந்தவள், அகனை சென்று பார்க்க அவனோ இன்னும் உறக்கத்தில் தான் இருந்தான். நெற்றியில் கை வைத்து பார்த்தாள். காய்ச்சல் சற்று குறைந்திருந்தது.

சூடாக சாதமும் ரசமும் வைத்து ஹாட்பாக்ஸில் எடுத்து வைத்தவள், களைப்பாக உணர்ந்தாள். சோபாவில் அமர்ந்தவள் அப்படியே உறங்கிப் போக, எழுந்து வந்த அகன் கண்டது உறங்கிக் கொண்டிருந்த தாராவைத் தான்.

அவளைத் தொந்தரவு செய்யாமல் குளித்து முடித்து வந்தான். எதையாவது சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வயிறு கூப்பாடு போட, கிட்சனிற்குள் நுழைந்தவனுக்கு அவள் சமைத்து வைத்திருந்தது கண்ணில் பட்டது.

காய்ச்சல் வந்த வாய்க்கு அந்த சூடான சாதமும் ரசமுமே தேவார்மிர்தமாய் இருக்க, சாப்பிட்டு முடித்திருந்தான்.

அலைபேசியின் ஒலியில் உறக்கம் கலைந்தவள்,

“டாடி” என்றாள் தூக்கக் கலக்கத்துடன்.

“நாங்க  மடத்துக்குளம் வந்துட்டோம்டா. அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்” என்றார்.

“ஓகே டாடி” என்றவளுக்கு அப்போது தான் சுற்றம் உறைத்தது. வேகமாய் எழுந்து அமர்ந்தவள் எதிரே அமர்ந்திருந்த அகனைப் பார்த்தாள்.

“இப்போ பீவர் எப்படி இருக்கு அகன்” என்றாள்.

“பீலிங் பெட்டர் நவ் தாரா. தேங்க்ஸ் பார் யுவர் பிரண்ட்லி ஹெல்ப்” என்றான் அவள் கண் பார்த்து.

வந்த கோபத்தை மனதிற்குள் அடக்கியவள் “இட்ஸ் ஓகே அகன், இதுல என்ன இருக்கு? அப்போ நான் கிளம்புறேன்” என்றவள் கிளம்பிவிட்டாள்.

“நைட் ஆகிடுச்சு. எப்படி தனியா போவ ?” என்றான்.

“இதென்ன எனக்கு புதுசா? யாரையும் எதிர்பார்த்து நான் இல்லை. ஐ கேன் ஹேண்டில் மை செல்ப்” என்று அவனைப் போலவே கூறியவள் விறுவிறுவென கிளம்பியிருந்தாள்.

“நான் வந்து டிராப் பண்றேன்” என்று அவனும் கிளம்ப,

“நான் என் கார்ல வந்தேன் அகன். மறுபடியும் உங்களை டிராப் பண்ண வர முடியாது. இப்போதான் உங்களுக்கு கொஞ்சம் நல்லா இருக்கு. சோ நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துக்குறேன்” என்றாள்.

“நீ இன்னும் சாப்பிடலை” என்றான் மீண்டும்.

“இப்போ உங்களுக்கு என்ன தான் பிரச்சனை அகன்” என்றாள் கடுப்புடன்.

“எனக்கே தெரியலை யுகா. உன்னை போக விடக் கூடாதுன்னு தோணுது. ஆனா எப்படின்னு தெரியலை. இப்போ நான் எதைப் பண்ணாலும் அட்வான்டேஜ் எடுத்துக்கிற மாதிரி ஆகிடுமோன்னு பயமாவும் இருக்கு. ஏதோ பார்த்து பேசுற அளவுக்கு இருக்குற உன்னை எதையாவது பண்ணி அதையும் கெடுத்துக்க வேண்டாம்னு தான் அமைதியா இருக்கேன்” என்றான்.

அவள் அவனையே பார்த்துக் கொண்டு நிற்க,

“உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா இன்னக்கு ஒருநாள் இங்க தங்க முடியுமா? எனக்கு உன்கிட்ட பேசணும் யுகா” என்றான் கைகளை கட்டியபடி ஆழ்ந்த குரலில்.

‘பம்பரக்கட்டை மண்டையன் பொண்டாட்டியை டீல் பண்ற மாதிரியா பண்றான். ஏதோ டிடி சேனல்ல நியூஸ் வாசிக்கிற மாதிரி பேசுறான். நாலு வருஷம் என்ன நாற்பது வருஷம் ஆகியிருந்தாலும் நான் வாழ்க்கை குடுக்கலைன்னா உனக்கெல்லாம் கல்யாணமே நடந்திருக்காதுடா’ என்று எண்ணியவள் திரும்பி நின்று அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.