நான்கு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் தான் அங்கிருந்த அனைவராலும் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. பார்மாலிட்டிஸ் அனைத்தையும் முடித்து விட்டு வெளியே வந்தவளுக்கு யாரோ தன்னை பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு. சுற்றும் முற்றும் பார்க்க யாரும் அவள் பார்வையில் அகப்படவில்லை.
தன் அறைக்குள் சென்று ஆசுவாசமாய் அமர்ந்தவளுக்கு நல்ல பசி. காலையில் அவசரமாய் சாப்பிட்டுவிட்டு வந்த இரண்டு இட்லி எல்லாம் எந்த மூலைக்கு பத்தும்.
அதே நேரம் அங்கு வந்த நர்ஸ் சரிகா,
“டாக்டர் இதுல உங்க சைன் வேணும்” என்று ஒரு பேப்பரை நீட்ட, அது வழக்கமான நடைமுறை என்பதால் சரிகாவை பார்த்தபடி கையெழுத்திட்டிருந்தாள். அதற்கு பிறகு தான் அவளுக்கு ஞாபகம் வந்தது,
“ஆல்ரெடி சைன் பண்ணியாச்சே சரிகா” என்றாள்.
“இந்த ஆப்ரேஷன் டாக்டர் புருஷோத்தமன் சார் தான் ஹேண்டில் பண்றதா இருந்தது மேம். இந்த கேஸ பர்ஸ்ட் இருந்து அவர் தான் பார்த்துட்டு இருக்கார். இன்னைக்கு அவருக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட். அதனால லாஸ்ட் மினிட்ல ஏகே சார் தான் ஹேண்டில் பண்ணார். அதான் வேற பேப்பர் ரெடி பண்ணி கொண்டு வந்தேன் டாக்டர்” என்றாள்.
“நோ நீட் சரிகா. நமக்கு எப்பவும் வீட்டு லஞ்ச் தான்” என்றவளுக்கு அதற்கு மேல் நேரம் போனதே தெரியவில்லை. வேலை அவளை உள்ளிழுத்துக் கொண்டது.
வேணி அவளுக்கு அழைக்கவும் தான்.. காலையில் அவர் கூறியதே ஞாபகத்திற்கு வர,
“இன்னும் ஒன் ஹவர்ல கிளம்பிடுவேன்மா. நீங்க வந்துடுங்க” என்று அவருக்கு ஒரு புறம் பதிலுரைத்தவள், பார்த்துக் கொண்டிருந்த பைலை மூடினாள்.
சரிகாவை அழைத்தவள்,
“சீப் டாக்டரை இன்னைக்கு பார்க்க முடியுமா? அப்பாயின்மென்ட் வாங்கிட்டிங்களா?” என்றாள்.
“சார்க்கு இன்னைக்கு டைட் ஷெட்யூல் டாக்டர். நாளைக்கு பாக்குறதா சொல்லியிருக்கார்” என்றாள்.
“ஓகே டன். டியூட்டி டைம் ஓவர். நான் கிளம்புறேன். ஏதாவது எமர்ஜென்சினா உடனே கால் பண்ணுங்க” என்றவள் கிளம்பிவிட்டாள். தாரா கிளம்பவும் தான் சரிகா மூச்சு விட்டாள்.
“என்னாச்சு? மூச்செல்லாம் பலமா இருக்கே? புது டாக்டர் வச்சு செஞ்சுட்டாங்களா?” என்றாள் உடன் பணிபுரியும் இன்னொரு நர்ஸ்.
“ஆப்ரேஷன் தியேட்டர்லயே பெண்டு கழன்றுச்சு. அனஸ்தீசியா குடுக்கறதோட அவங்க வேலை முடிஞ்சிடுச்சுன்னு நினைக்காம கடைசி வரைக்கும் ரொம்ப கான்சியஸா இருந்தாங்க. டெக்னிகல் டீம் ஒரு மிஸ்டேக் பண்ணிட்டாங்க. ஏகே சாரே அமைதியா தான் ஹேண்டில் பண்ணார். மேடம் தான் வெளிய வந்து மட்ட வாங்கு வாங்கிட்டாங்க” என்றாள்.
“அவங்களுக்கு அசிஸ்ட் பண்றது கொஞ்சம் டப் தான் போலயே” என்றாள்.
“அப்படின்னு சொல்ல முடியாது. ஸ்வீட்டா தான் பேசுறாங்க. வேலையில கரெக்ட்டா இருக்குற வரைக்கும் பிரச்சனை இல்லை” என்றாள் சரிகா.
“பேச்சு மட்டுமில்லை, ஆளும் பார்க்க ஸ்வீட்டா தான் இருக்காங்க” என்றாள் அவள்.
ஹாஸ்பிட்டலை வேடிக்கை பார்த்துக் கொண்டே கார் பார்க்கிங் வரை வந்திருந்தாள் தாரா.
‘நாளைக்கு முதல் வேலையா சீக்கிரமே வந்து ஹாஸ்பிட்டல் புல்லா சுத்திப் பார்க்கணும்.எது எங்க இருக்குன்னே தெரியலை’ என்று எண்ணிக் கொண்டே தன் காரை நோக்கி சென்றவளுக்கு தன் காரை மறித்து நிறுத்தியிருந்த காரைப் பார்த்தவுடன் கோபம் ஏகத்திற்கும் வந்திருந்தது.
‘எந்த தடிமாடு இப்படி காரை பார்க் பண்ணியிருக்கு’ என்று கடுப்பானவள், செக்யூரிட்டியை அழைத்தாள்.
“மேடம்”
“காரை இப்படி பார்க் பண்ணா நான் எப்படி என்னோட காரை எடுக்க முடியும்? இதையெல்லாம் பார்க்க மாட்டிங்களா?” என்றாள்.
“சாரி மேடம்..! சார் தான் எப்பவும் இங்க பார்க் பண்ணுவார். இன்னைக்கு நீங்க பண்ணிட்டிங்க. அதான் இப்படியே பார்க் பண்ணிட்டு போய்ட்டார். நீங்க கொஞ்சம் ரிவேர்ஸ் எடுத்து அந்த கேட் வழியா வந்துடுங்க மேடம். இல்லைன்னா கீ குடுங்க நான் எடுத்து தரேன்” என்று அந்த செக்யூரிட்டி சொல்ல,
“இட்ஸ் ஓகே. இது என்னோட மிஸ்டேக் தான். சாரி, நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க” என்று உடனே மன்னிப்புக் கேட்டவளை செக்யூரிட்டி நல்ல விதமாய் பார்த்திருந்தார்.
‘ஏன் ஒரே இடத்துல தான் அந்த சாரு பார்க் பண்ணுவாராம்மா? ஒரு நாள் வேற இடத்துல பண்ணுனா ஆகாதா? என்கிட்ட வம்பு வளர்க்குறதுக்குன்னே வருவாங்களோ’ என்று பெருமூச்சு விட்டபடி தன் காரை நோக்கி சென்றவளுக்கு ஏனோ பார்வை மீண்டும் அந்த காருக்கே சென்று வந்தது.
‘என்னாச்சு எனக்கு? எதுக்கு கண்ணு அந்த காருக்கே போகுது?’ என்று யோசித்தபடி கிளம்பியிருந்தாள்.
ஏதேதோ சிந்தனையில் காரை ஓட்டிக் கொண்டிருந்தவள் சிக்னலில் நிற்கும் போது தான் கவனித்தாள், ஹாஸ்பிட்டலில் பார்த்த அதே கார் அவளுக்கு பக்கவாட்டில் நிற்பதை. கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டபட்டிருந்ததால் காரினுள் இருப்பது யார் என்று அவளால் பார்க்க முடியவில்லை.
‘கவர்மென்ட் எவ்வளவு ரூல்ஸ் போட்டாலும் இந்த ஸ்டிக்கர் ஒட்டுறதை விடமாட்டாங்க மக்கள்’ என்று எண்ணியபடி சிக்னல் விழுந்ததும் காரைக் கிளப்ப, அந்த கார் அவளை பின் தொடர்ந்து வருவதைப் போன்றே தோன்றியது அவளுக்கு.
அவளுக்கு சந்தேகம் தோன்றிய அடுத்த நிமிடம் கார் மற்றொரு வளைவில் திரும்பியிருக்க,
‘வரவர உன்னோட மனப் பிராந்திக்கு அளவே இல்லாம போய்டுச்சு தாரா’ என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவள், அந்த பிரபலமான ஷாப்பிங் மாலின் முன் நின்றிருந்த தன் பெற்றோர்களை பார்த்து விட்டு காரை பார்க் செய்து விட்டு வந்தாள்.