அத்தியாயம் 23:

முதன் முறையாக தன் வேதனையை அப்பட்டமாக முகத்தில் காட்டி நின்றான் அகன் கார்த்திகேயன். தாரா பேசிச் சென்ற வார்த்தைகளே அவன் சிந்தைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. தயாளன் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்று தலை குனிந்து நிற்க, உண்மை தெரிந்ததில் பரமேஸ்வரி கூட அதிர்ந்து தான் போயிருந்தார்.

“அம்மா இன்னும் ஒரு நிமிஷம் கூட இந்த ஆளு இந்த வீட்ல இருக்கக் கூடாது” என்றார் சேது கோபமாய்.

அகனின் அருகில் வந்த சுகந்தி வேதனையில் இருந்தவனின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். நீ எந்த அளவுக்கு வேதனையை அனுபவிச்சிருக்கன்னு இப்போ தான் புரியுது கார்த்தி. உன்னோட வெறுப்புக்கு  பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கும்னு எங்களுக்குத் தெரியாம போய்டுச்சு. அகல்யா அத்தாச்சிக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்க  வேண்டாம். நடந்த எதையும் மாத்த முடியாது கார்த்தி. நீ பட்ட வரைக்கும் போதும். இனியாவது உன்னோட வாழ்க்கையை நல்ல முறைக்கு வாழப் பார் கார்த்தி. நிஜமாவே தாரா உனக்கு கிடைச்ச பொக்கிஷம். எந்த காரணத்துக்காகவும் அவளை இழந்துடாத” என்றவர்,

“ரேவதி அத்தாச்சி எல்லாரும் கிளம்பலாம். எந்த முகத்தை வச்சுகிட்டு இனி இந்த வீட்ல இருக்க முடியும்? இவரை என் அண்ணன்னு சொல்லவே எனக்கு அசிங்கமா இருக்கு” என்றபடி சென்று விட்டார்.

மொத்தமாய் கலங்கி நின்ற தம்பியை அணைத்துக் கொண்ட நகுலனுக்கோ வார்த்தைகளின்றி கண்ணீர் தான் வந்திருந்தது.

“சாரிடா கார்த்தி, இத்தனை ரணத்தையும் மனசுக்குள்ள வச்சு, அதுவே ஒரு நோயா மாறி எவ்வளவு வலியை அனுபவிச்சுட்டு இருக்கன்னு எனக்கு இப்போ புரியுதுடா. எதுவுமே தெரியாம எப்படி இருந்திருக்கேன் நான். நான் ஒரு நல்ல அண்ணனே இல்லை. தாரா சொன்ன மாதிரி நாங்க யாருமே உன்னோட பிரச்சனையைத் தெரிஞ்சுக்கணும்னு நினைக்கலை, அதை சரி பண்ணனும்னு நினைக்கலை. விலகிப் போன உன்னை அப்படியே விலக்கியே வச்சுட்டோம்னு குற்ற உணர்ச்சியா இருக்குடா. என்னைப் பத்தி மட்டுமே யோசிச்சு சுயநலவாதியா இருந்துட்டேனோன்னு தோணுது. நானெல்லாம் மனுஷனே இல்லடா.  இந்த ஆள் பேச்சைக் கேட்டு கேட்டு நானும் இவரை மாதிரியே ஆகிட்டனோ என்னவோ?” என்று கலங்கி நின்ற அண்ணனைத் தாமாகவே அணைத்துக் கொண்டது அகன் கரங்கள்.

“இந்த ஆள் பண்ணதுக்கு நீ என்ன பண்ணுவ நகுலா? இந்த குற்ற உணர்ச்சியெல்லாம் உனக்குத் தேவையில்லை” என்றான் இயந்திரக் குரலில்.

மகிக்கும் வசந்திக்கும் கூட அகனைக் கண்டு பாவமாய் இருந்தது. அவன் நிலையும், அவன் வலியும் புரியாமல் தாங்கள் பேசியதை எண்ணி அவர்களுக்கே தங்களை நினைத்து அசிங்கமாய் இருந்தது.

“கார்த்தி” என்ற சந்தான லட்சுமியை மெதுவாய் அணைத்து விடுவித்தவன், யாரையும் திரும்பியும் பாராது அறைக்குள் சென்று விட்டான்.

தாரா இல்லாத வெற்று அறை அவனை வரவேற்றது. சற்று நேரத்திற்கு முன் நடந்தது எல்லாம் அவனுக்கு ஞாபக இடுக்குகளில் வந்து போக, முகத்தை கைகளில் தாங்கி அமர்ந்து விட்டான்.

இந்த குறுகிய நாட்களில் இப்படி ஒரு தாக்கத்தை அவனுள் அவள் ஏற்படுத்துவாள் என்று அவன் நினைக்கவே இல்லை. இப்படி ஒருத்தியை இங்கு சந்திப்போம் என்ற எண்ணம் கூட அவனுக்கு இல்லை. எங்கு பார்த்தாலும், அவளும் அவளின் நினைவுகள் மட்டுமே அந்த அறை முழுவதும் வியாபித்திருந்தது. அவளின் ரசனை, நக்கல், கிண்டல், கேலி, அன்பு, அக்கறை என்று அனைத்து பரிமாணங்களும் கண் முன் வந்து போக ஆழ்ந்து சுவாசித்தவன் அவள் பேசிச் சென்றதையும் யோசிக்க மறக்கவில்லை. புயல் காற்றாய் அவன் வாழ்வில் வந்து தென்றலாய் வருடி சூறாவளியாய் சுழற்றியடித்துவிட்டு சென்று விட்டாள். அவனின் ஒவ்வொரு உணர்விலும் இருந்தவள் தாரா மட்டுமே.

ஒவ்வொன்றையும் தெளிவாய், நிதானமாய் யோசித்தவன், தீர்க்கமான ஒரு முடிவை எடுத்திருந்தான். அவள் இல்லாத அறையில் அதற்கு மேல் அவனால் இருக்க முடியவில்லை.

அங்கே தாராவின் வீட்டில்..

மறுநாள் மறுவீட்டு அழைப்பு இருக்க, இன்று மகள் மட்டும் வந்து நின்றதில் பெற்றவர்களின் மனம் பதறித்தான் போனது. அவள் முகத்தை வைத்தே எதுவோ சரியில்லை என்று கணித்திருந்தார் பூமிநாதன்.

“என்னடா ஆச்சு? மதியம் தான அப்பாவை டிராப் பண்ணிட்டு போன?” என்றார் பூமி.

எதுவும் பேசாமல் அமர்ந்தவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் சொல்லித்தானே ஆக வேண்டும். அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல்  இருவரிடமும் கூறியவள், இறுதியாக தான் அகனிடம் பேசி விட்டு வந்ததையும் கூறியிருந்தாள்.

தாரா கூறியதைக் கேட்ட பூமிநாதனுக்கு எதையும் நம்ப முடியவில்லை. வேணியோ மகள் இப்படி வந்து நின்றதில் பதைபதைத்துப் போயிருந்தார்.

“என்னம்மா தாரா சொல்ற? தயாளன் இப்படி பட்டவரா?” என்றார் பூமி.

“எல்லாருக்கும் ஷாக் தான் டாடி. அகனுக்கு பின்னாடி இப்படி ஒரு ஸ்டோரி இருக்கும்னு நான் நினைக்கலை. அப்பறம் அந்த அகல்யா ஆன்ட்டி எப்படி அவங்களால இப்படி குரூயலா பண்ண முடிஞ்சது? என்னால அதை ஜீரணிக்கவே முடியலை” என்றாள்.

“ஒரு உணர்ச்சி வேகத்துல சட்டுன்னு முடிவெடுத்துடுறது தான் தாரா. அதை வச்சு அவங்களை ஜட்ஜ் பண்ணாதம்மா. நிஜமாவே அகல்யா நல்லவங்க” என்றார் பூமிநாதன்.

“சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதிங்க டாடி. புருஷன் இப்படின்னு பிறந்த வீட்ல சொல்லாம வைராக்கியமா இருக்கணும்னு நினைச்ச அவங்களுக்கு அதே வைராக்கியத்தோட இருந்து தன்னோட பிள்ளைங்களுக்காக வாழணும்னு ஏன் தோணாம போச்சு?எந்த இடத்துலையும் அவங்க அவங்களுக்காகவும் போராடலை. அவங்க பிள்ளைங்களுக்காகவும் போராடலை. அவங்க புருஷனுக்கும் அவங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை” என்றாள் கோபமாய்.

“எல்லாம் சரி தாரா. நீ ஏன் மாப்பிள்ளையை அங்க விட்டுட்டு வந்திருக்க? இங்க கையோட கூட்டிட்டு வந்திருக்கலாம்ல” என்றார் வேணி.

“அம்மா நான் சொன்னது தான். நான் வேணும்னா இனி அகன் தான் என்னைத் தேடி வரணும். இனி நான் அகனைத் தேடி போக மாட்டேன். இப்ப விட்டா எப்பவும் அகனை சரிப்படுத்தவே முடியாது. அம்மாவோட நினைவுகளுக்காக அந்த புதைகுழியை விட்டு எழுந்து வரவே மாட்டேன்னு அடம் பிடிக்கிற ஆளை வேற எப்படி சரி பண்ண சொல்றிங்க?” என்றாள்.

“அவர் வரலைன்னா என்னடி பண்றது? பிடிவாதம் பண்ற நேரமா இது. எதுவா இருந்தாலும் பக்கத்துல இருந்து தான் சரி பண்ணனும் தாரா. நீ தான் இந்த வாழ்க்கை வேணும்னு சொன்ன. இப்ப நீயே இப்படி உன் வாழ்க்கையை கெடுத்துக்கிட்டா நல்லாவா இருக்கும்?” என்ற வேணியின் குரலில் இருந்த ஒரு தாயின் தவிப்பை புரிந்து கொண்டாள் தாரா.

“நான் வேணும்னு கேட்ட வாழ்க்கை தான்ம்மா. அதை சரி பண்ணி சரியா வாழணும்னு நினைக்கிறேன். இதுல தப்பிருக்குற மாதிரி எனக்குத் தோணலை. எல்லா நேரமும் நான் தான் அகனைத் தேடி போயிருக்கேன். நானே வழியப் போய் அவன் வாழ்க்கையில சேர்ந்ததால என்னோட அருமை அகனுக்கு புரியவேயில்லை. இந்த தாராவோட அருமை புரிஞ்சு தாரா தான் வேணும்னு வரட்டும். அது வரைக்கும் இதைப் பத்தி என்கிட்ட பேசாதிங்க” என்றவளுக்கு கண்கள் கலங்க, எழுந்து அவள் அறைக்குள் சென்று விட்டாள்.

“என்னங்க அவ இப்படி சொல்லிட்டு போறா? நீங்களும் சும்மா நிக்கிறிங்க? ஏதவாது சொல்லி சமாதானப் படுத்துங்க” என்றார் வேணி.

மனைவியை தீர்க்கமாய் பார்த்தவர்,

“என் பொண்ணு என்ன தப்பு பண்ணினா வேணி அவளை சமாதானப்படுத்த. அவ எடுத்தது தான் சரியான முடிவு. ஒரு அப்பாவா நான் என் பொண்ணு கூட இருக்க வேண்டிய நேரம் இது. அவ சொன்னது தான் சரி. தாரா தான் வேணும்னு கார்த்தி தம்பி வரட்டும். அப்பறம் என்ன பண்றதுன்னு பார்ப்போம்” என்றார் பூமி.

“உங்களுக்கு புரியுதா இல்லையா? அந்த தம்பிக்குத் தான் புத்தி இப்போ ஒரு நிலையில் இல்லையே? அவர் தப்பா யோசிச்சு ஏதாவது முடிவெடுத்துட்டா, நம்ம பொண்ணு வாழ்க்கை என்ன ஆகுறது?” என்றார்.

“ஒன்னும் ஆகாது. அப்படி கார்த்தி அந்த முடிவை எடுத்தா, அப்பவும் என் பொண்ணு என்ன முடிவு எடுக்குறாளோ அது தான் என்னோட முடிவும்” என்றார் தெளிவாய்.

அறைக்குள் சென்ற தாராவிற்கு அத்தனை நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகை கட்டவிழ்ந்தது. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவனை விட்டு விலகும் எண்ணமோ, இல்லை அவனை விட்டு வரும் எண்ணமோ அவளிடம் அறவே இல்லை. ஆனால் இதை விட்டால் அவனை கடைசி வரை குணப்படுத்த முடியாது என்று அவளுக்கு தெளிவாய் தோன்றவும் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தாள். ஆனால் அது தனக்கு இத்தனை வலியைக் கொடுக்கும் என்று அவள் நினைக்கவில்லை. வீடு வந்து சேர்வதற்குள் அவள் அவளாகவே இல்லை.

அவளின் முதல் நேசத்திற்கு சொந்தக்காரன். அவள் தான் வாழ்க்கை என்று உருகியவன். அவன் அருகாமையில் அவளை உருக வைத்தவன். அவளிடம் அன்பிற்கு ஏங்கியவன். அவன் கோபம், சிரிப்பு, மேனரிசம் என்று அவள் அகத்தை முழுவதும் அகன் மட்டுமே நிறைத்திருந்தான். எங்கு திரும்பினாலும் அவன் சிரித்த முகமும் சிந்தனை வயப்பட்ட முகமுமே அவள் கண் முன் வந்து போக, அவனின் நினைவில் உழன்று கொண்டிருக்கும் தன்னைத் தானே நொந்து கொண்டாள் தாரா.

எப்படியும் அவன் தன்னைத் தேடி வந்துவிடுவான் என்று ஆழ்மனம் சர்வ நிச்சயம் நம்பியது. அந்த நம்பிக்கை தானே அவளை இவ்வளவு தூரம் கூட்டி வந்திருந்தது.

ஆனால் அவளின் நம்பிக்கை பொய்த்திருந்தது. அவன் வரவில்லை. அவனிடமிருந்து குறுஞ்செய்தி மட்டுமே வந்திருந்தது.

“ஐ ஆம் லீவிங் பார் ஆஸ்திரேலியா. பாய் டேக் கேர். தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்” என்று மட்டுமே அனுப்பியிருந்தான்.

அந்த செய்தியை திரும்பத் திரும்ப படித்தவளுக்கு, ஆத்திரமும் ஆதங்கமும் ஒருசேர எழுந்தது. கண்ணீர் நிற்காமல் வர,

“போ..! யார் வேணாம்னா? என் நினைப்பு இல்லாதவனை நினைச்சு நான் ஏன் அழனும்? இந்த தாரா ஸ்ட்ராங் பெர்சன். எதுக்காகவும் அழ மாட்டா” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவளுக்கு ஏனோ அழுகை மட்டும் நின்றபாடில்லை.

அடுத்ததாக சந்தான லட்சுமியிடம் இருந்து அழைப்பு வந்தது அவளுக்கு.  யாரின் அழைப்பையும் ஏற்கும் எண்ணமே இல்லை அவளுக்கு. அலைபேசித் திரையையே வெறித்திருந்தவள், அவர் மீண்டும் மீண்டும் அழைக்க வேறு வழியின்றி எடுத்தாள்.

“அம்மாடி தாரா, கார்த்தி அவசர அவசரமா ஆஸ்திரேலியா கிளம்புறான்மா. உனக்கு என்ன கோபம்னாலும் அதைக் காட்டுற நேரம் இது இல்லைம்மா. நீ சொன்னா மட்டும் தான் அவன் கேட்பான். தயவு செஞ்சு வேணாம்னு சொல்லுமா. இப்போ போனா எப்போ திரும்பி வருவான்னு தெரியாது” என்றார் படபடப்புடன்.

“போறேன்னு சொல்லி போறவங்களை கையைக் காலைக் கட்டியா இழுக்க முடியும். விடுங்க போகட்டும். யாரையும் என்னால தடுக்க முடியாது” என்றாள் பட்டென்று.