தாய் வீட்டு சம்பிரதாயங்களை முடித்தவள் மீண்டும் பழனி வந்து சேர்ந்திருந்தாள் அகனுடன்.
அவர்கள் வருவதற்கு முன்பே..ஒரு சண்டையை முடித்திருந்தார் வசந்தி.
“அந்த சமையல்காரர் பொண்ணு என்னை அந்த பேச்சு பேசுது. நீங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க? என் பொண்டாட்டியை எப்படி இப்படி பேசப் போச்சுன்னு வந்து நீங்க கேள்வி கேட்டிருக்க வேண்டாமா?” என்று புவியரசுவை பாடாய் படுத்திவிட்டார் வசந்தி.
“விடுங்க சித்தி, சித்தப்பாவை பேசி என்ன ஆகப் போகுது? அவள்லாம் ஒரு ஆளுன்னு நீங்க இப்படி டென்ஷன் ஆகுறிங்க?” என்றாள் மகிமா.
“என் பேத்தி பேசுனதுல என்ன தப்பிருக்கு வசந்தி?” என்றார் லட்சுமி.
“பேத்தியா?” என்று வசந்தி வாயைப் பிளக்க,
“பேரன் பொண்டாட்டி பேத்தி தான. இன்னொரு தடவை தாராவை சமையல்காரன் பொண்ணுன்னு சொன்ன, நானும் பேச வேண்டியது வரும். கொஞ்சம் கூட மாமியார்ன்ற மரியாதை இல்லை, என் முன்னாடியே என் மகனை இந்த மிரட்டு மிரட்டுற? ஏன் இந்த வீட்டுக்கு நீ என்ன சீர் செனத்தியோட வந்தேன்றது மறந்து போயிடுச்சா?” என்றார் லட்சுமி கடுமையாக.
“அத்தை”
“இப்பத்தான் அத்தைன்றது கண்ணுக்குத் தெரியுதா உனக்கு? நானும் எதுவும் பேசக் கூடாதுன்னு பொறுமையா இருந்தா, வர வர உனக்கு வாய் அதிகமாயிடுச்சு” என்றவர்,
“சொல்லி வச்சுக்க அரசு உன் பொண்டாட்டிகிட்ட. சொத்து முழுசும் என் பேர்ல தான் இருக்கு. அதை யாருக்கு எப்போ எழுதி வைக்கனும்னு எனக்குத் தெரியும். சொத்தை வச்சு இன்னொரு தடவை இந்த வீட்ல பேச்சு வரக் கூடாது. முக்கியமா அகன் வந்த பிறகு அவன் முன்னாடி இனி இதைப் பத்தி பேசவே கூடாது” என்றார் லட்சுமி.
“உனக்கும் தான் மகிமா. நகுலனுக்கு பிடிச்சிருக்குன்னு சொன்ன ஒரே காரணத்துக்காகத் தான்,உன்னை அவனுக்கு முடிச்சு வச்சோம். இப்போ இது உன்னோட குடும்பம். இங்க நல்லது கெட்டது எது நடந்தாலும் அது உன்னையும் தான் பாதிக்கும். அதனால் தேவையில்லாத வேலையெல்லாம் செய்ய வேண்டாம்” என்று அவளையும் எச்சரித்திருந்தார்.
“அத்தை டென்ஷன் ஆகாதிங்க. உங்க உடம்புக்கு அது நல்லதில்லை” என்றார் தாமரை அக்கறையுடன்.
“பின்ன என்ன தாமரை? எவ்வளவு பிரச்சனை. அவன் அப்படி என்ன பண்ணான் இவங்களுக்கு? அவனால ஏதாவது தொந்தரவு இருந்திருக்கா இது வரைக்கும். அப்படி இருக்க பையன் மேல வெறுப்பைக் கொட்டி என்ன வாரிக் கட்டிக்க போறாங்க? என் பேரன் சம்பாதிப்பான் இதை விட நாலு மடங்கு சொத்து” என்றார் லட்சுமி.
“அந்த பைத்தியக்கார பேரன் மேல எம்புட்டு நம்பிக்கை பார்த்தியா மகி என் மாமியார்கார அம்மாவுக்கு” என்று வசந்தி அப்போதும் மகிமா காதைக் கடிக்க,
“நீயெல்லாம் திருந்துற ஜென்மமே இல்லை” என்பதைப் போல் பார்த்து வைத்தார் புவியரசு.
அகனும்-தாராவும் வருவதைக் கண்டவர்கள் அப்படியே அமைதியாகிப் போக, அந்த அமைதியிலேயே தெரிந்து போனது ஏதோ நடந்திருக்கிறது என்று.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அகன் அங்கிருந்து சென்று விட்டான். ஏனோ வசந்தியும் மகிமாவும் இருக்குமிடத்தில் அவனால் இயல்பாய் இருக்க முடிவதில்லை.
“அது தாரா, கார்த்தி இப்போ நல்லா இருக்கான்ல. அவனுக்கு பிரச்சனை எதுவும் இல்லையே?” என்றார் லட்சுமி.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல பாட்டி. அவரைப் பத்தி கவலைப் படுறதை முதல்ல விடுங்க. அதான் நான் இருக்கேனே,நான் பார்த்துக்கிறேன்” என்றாள்.
அவள் அறைக்கு செல்ல எத்தனிக்க,
“நல்ல நேரம் பார்த்து தான் போகணும் தாரா” என்றார் தாமரை.
“சித்தி இந்நேரம் வரைக்கும் அகன் கூடத்தான் இருந்தேன். இனியென்ன? நார்மல் பார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாம். இன்பேக்ட் அகனுக்குமே இதெல்லாம் ஒத்து வராதுன்னு நினைக்கிறேன்” என்றாள் அமைதியான குரலில்.
“நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதாம்மா” என்றார் தாமரை சங்கடத்துடன்.
“அதெல்லாம் திவ்யமா புரியுது சித்தி. பால் மட்டும் பிளாஸ்க்ல குடுத்துடுங்க. அகனுக்கு சூடு ஆறினா பிடிக்காது” என்றாள் சிரிப்புடன்.
“இவ என்ன இப்படி பேசிட்டு இருக்கா? பொண்ணுன்னா ஒரு கூச்சம் நாச்சம் வேண்டாம்?” என்றார் வசந்தி.
“டாக்டருக்கு படிச்சவளுக்கு ஒன்னும் தெரியாமையா இருக்கும் சித்தி. அப்பறம் எங்க இருந்து கூச்சமெல்லாம் இருக்கும். எப்படி சாதாரணமா பேசிட்டு இருக்கா பாருங்க” என்றாள் மகிமாவும்.
“என்ன சித்தி சொல்றிங்க? அதுவும் ஏன் இப்படி சொல்றிங்க?” என்றாள் மகி.
“அட ஆமாம் மகி. அந்த கார்த்தி பையன் நடுஜாமத்துல கத்துவான். ஏன் கத்துறான்னு அவனுக்கும் தெரியாது எங்களுக்கும் தெரியாது. இப்பவாவது பரவாயில்லை. சின்னப் பையன்ல கண்ட்ரோல் பண்ணவே முடியாது. ஸ்கூல் காலேஜ் ஹாஸ்ட்டல்ல கூட அவன் தனியாத்தான் இருந்தான். அவன் கூட யாருமில்லை. அதனால தான் இவ்வளவு உறுதியா சொல்றேன்” என்றார் வசந்தி.
“பாவம்ல அப்போ.. யாரும் கூட இல்லாம இருக்குறது ரொம்ப கஷ்ட்டம் சித்தி” என்றாள் மகி.
“என்ன திடீர்ன்னு கொழுந்தன் மேல அக்கறை பொழியுது” என்றார் வசந்தி.
“அப்படியெல்லாம் இல்லை. ஆனா, கொஞ்சம் பாவமாவும் தான் இருக்கு” என்றாள்.
“பாவம் தான். அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? என்னோட பிரச்னைக்கு வராத வரைக்கும் அவனுக்கும் எனக்கும் என்ன இருக்கப் போகுது சொல்லு. என் மகனுக்கான உரிமையை நான் கேட்டா எல்லாருக்கும் நான் தான் வில்லியா தெரியறேன். நான் இப்படித்தான். இப்படியே இருந்துட்டு போறேன்” என்றவர் தாமரை வரவும் வாயை மூடிக் கொண்டார்.
“என் எதிர்காலத்தை நோக்கிய இனிமையான பயணம் அரசே. இந்த பயணத்துல மேடு பள்ளம் வராம என்னை பத்திரமா கொண்டு போய் சேர்த்துடு ஆண்டவான்னு வேண்டிகிட்டு பொடி நடையா போய்கிட்டு இருக்கேன்” என்றாள் நக்கலுடன்.
அவளின் அருகில் வந்து கையைப் பிடித்துக் கொண்டவன்,
“சாரிக்கா” என்றான் ஆத்மார்த்தமாய்.
“என்னாச்சு ஹரீஷ்?” என்றாள் புரியாமல்.
“இன்னைக்கு அம்மா நடந்துகிட்ட முறைக்காக நான் சாரி கேட்டுக்கிறேன்க்கா. உங்களோட இந்த நாளை அவங்க ஸ்பாயில் பண்ணது தப்புத்தான?ஆனா நீங்க கார்த்தி மாமாவை ரொம்ப அழகா ஹேண்டில் பண்ணிங்க. நிஜமாவே அவருக்கு ஏத்த ஜோடி நீங்க தான்” என்றான் ஹரீஷ்.
அவன் வார்த்தைகளில் நெகிழ்ந்தவள், “என்னடா திடீர்ன்னு இன்னைக்கு இப்படி பெர்பார்ம் பண்ற. படபடன்னு வருதா இல்லையா?” என்றவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.
“நாளைக்கு ஹாஸ்ட்டல் கிளம்பிட்டா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் க்கா. நான் இயர்லி மார்னிங்கே கிளம்பிடுவேன். உங்களை பார்க்க முடியுமான்னு தெரியலை. அதான் இப்பவே சொல்லிடலாம்னு வந்தேன்” என்றவனை அணைத்துக் கொண்டவளுக்கு ஏனோ கண்கள் கலங்கியது. உடன் பிறந்தவர்கள் இல்லாத குறையை தீர்த்து வைத்தவன் ஆயிற்றே.
“நானும் உன்னை மிஸ் பண்ணுவேன் ஹரீஷ்” என்றவளை,
“சரிசரி ஓவர் பீலிங்கா போயிட்டு இருக்கு. அது நமக்கு செட்டாகாது ராஜ குரு. தங்களின் பயணத்தை தொடருங்கள். மங்களம் உண்டாகட்டும்” என்றபடி இடத்தை காலி செய்தவனை ஆதுரமாய் பார்த்திருந்தாள்.
‘வசந்தி சித்திக்கு இப்படி ஒரு பையன்?’ என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அகன் அங்கே லேப் டாப்பில் வேலையாய் இருக்க, அதைப் பார்த்தவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது. பிளாஸ்க்கை அவள் நங்கென்று வைக்க, அந்த சத்தத்தில் நிமிர்ந்தவன்,
“ஆமா ஆஸ்திரேலியால என்ன வேலை பார்க்குறிங்க?” என்றாள்.
“ஏன் உனக்குத் தெரியாதா? எல்லாம் நீ சொன்னது தான். ஆஸ்திரேலியால ஆடு தான் மேய்க்கிறேன்” என்றான் சிரிக்காமல்.
“அடப்பாவி நிஜமாவே அப்போ ஆடு தான் மேய்க்கிறியா? அப்பறம் எதுக்கு இந்த பொட்டியை வச்சு சீன் போடுற?” என்றாள் அதிர்ந்தபடி.
“ஏன் எனக்கு வேலை இல்லைன்னா,என்னை கண் கலங்காம பார்த்துக்க மாட்டியா தாரா?” என்றான்.
“உங்களை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கிறேன் பாஸ்” என்றவளுக்குத் தெரியவில்லை, காலம் அவளுக்கு நிறைய காயங்களை வைத்திருக்கிறது என்று.
“உங்களுக்கு பேச்சு எதனால போச்சு? எப்படி திரும்ப வந்துச்சு? ஏன் அதை யார்கிட்டயும் சொல்லலை நீங்க” என்றாள் எதார்த்தமாய். அவனுக்கோ அத்தனை நேரம் இருந்த இலகுத் தன்மை நொடியில் மறைந்திருந்தது.
அவனின் முக மாற்றத்தை கவனித்த தாரோவோ,
“அடியே தாரா இன்னைக்கு வாய்ல உனக்கு வாஸ்து சரியில்லை. எதுவும் பேசாம அமைதியா போறது தான் உனக்கு நல்லது” என்று தனக்குத் தானே அறிவுரை சொல்லிக் கொண்டிருக்க, இயல்பாய் இருந்த அகன் இறுகிப் போயிருந்தான்.