ஏனோ அவ்விடத்தில் யாரையும் தெரியாமல் யாருடனும் பேச முடியாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் அகன் கார்த்திகேயன். பூமிநாதன் அவ்வப்போது அவனிடம் வந்து பேசி, அவனுக்கு என்ன தேவை என்பதைக் கேட்டுக் கொண்டே இருந்தார்.
அவனோ தாராவையே பார்த்திருக்க, பூமிநாதனுக்கு மகளின் மேல் முதன் முறையாக கோபம் வந்தது. அதை மற்றவர்கள் அறியாதவாறு மறைத்தவர்,தாராவை தனியே அழைத்துச் சென்றார்.
“என்னம்மா பண்ணிட்டு இருக்க நீ?” என்றார் எடுத்த எடுப்பில்.
“என்னாச்சு டாடி?” என்றாள் புரியாமல்.
“கார்த்தி தம்பிக்கு இங்க யாரையும் தெரியாது. அவர் கூட இருக்குறதை விட்டுட்டு இப்படி உன் கேங்கோட சேர்ந்து எப்பவும் போல இப்பவும் கும்மியடிச்சுகிட்டு இருந்தா எப்படிம்மா? மாப்பிள்ளை என்ன நினைக்க மாட்டார்? அவர் தனியா இருக்கார். உனக்கு புரியுதா இல்லையா தாரா?” என்றார் பூமிநாதன்.
“அகனுக்குப் புரியணும்னு தான் டாடி தனியாவே விட்ருக்கேன்” என்றாள் தந்தையை நேர் பார்வையாய் பார்த்து.
“தாரா”
“அவனுக்கு என்ன தேவைன்னு அவனுக்கு முன்னாடியே நான் போய் பண்றதால தான், அவனுக்கு என்னோட அருமை புரியலை டாடி. பம்பரகட்டை மண்டையன் என்கிட்டையே என்மேல லவ் பீலிங் எல்லாம் இல்லைன்னு சொல்றான். பீலிங்கே இல்லாதவன் பீல் பண்றதைப் பத்தி நான் ஏன் கவலைப் படனும்?” என்றாள் வீம்பாய்.
“நீங்க போங்க, நான் பேசிக்கிறேன்” என்ற வேணி மகளை முறைத்தார்.
“இப்போ எதுக்கு என்னை முறைக்கிறிங்க?” என்றாள்.
“மாப்பிள்ளையை முதல்ல ரூம்க்கு கூட்டிட்டு போ தாரா. அவருக்கு அங்க ஹால்ல உட்கார முடியலை. உன்னையத்தான் பார்த்துட்டே இருக்கார்.இதெல்லாம் தப்பு தாரா. அவர் குணமெல்லாம் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணிகிட்ட. இப்போ கல்யாணம் ஆன அன்னைக்கே இப்படி பண்றது உனக்கு தப்பா தெரியலையா?” என்றார் வேணி.
“ம்மா”
“தாயில்லாம வளர்ந்த புள்ள. வீட்டுலையும் சரியா யார்கிட்டயும் ஒட்டுதல் இல்லை. இதுல அவருக்கு இருக்குற பிரச்சனையும் தெரியும் உனக்கு. அங்க வச்சு என் புருஷனைப் போல உண்டான்னு எல்லாரையும் கேள்வி கேட்டா பத்தாது. அதுக்கு ஏத்த மாதிரி உனக்கும் நடக்கத் தெரியனும்” என்றார் வேணி.
வேறு வழியின்றி அகனிடம் சென்றவள்,
“நீங்க ரூம்ல வந்து ரெஸ்ட் எடுங்க அகன்” என்றாள்.
“எனக்கு வேற யார் ரூமையும் ஷேர் பண்ண பிடிக்காது” என்றான் பட்டென்று. அவன் பதிலில் திகைத்தவள்,
“நான் என்னோட ரூம்ல தான் ரெஸ்ட் எடுக்க சொன்னேன்” என்றாள் பல்லைக் கடித்து.
“யார் நீ?” என்றான் கடுமையாக.
அவள் அவனை முறைக்க,
“இவ்வளவு நேரம் அப்படித்தான நடந்துகிட்ட. இனியும் அப்படியே இரு தாரா” என்றவன் மொபைலைப் பார்த்தபடி குனிந்து கொண்டான்.
“இன்னைக்கு நான் எது பண்ணாலும் ராங்காவே போகுது. இவன் வேற அப்பப்போ ரக்கட் ராக்கி பாய் மாதிரி பேசுறான். கடைசில என் நிலைமை இப்படி ஆகிடுச்சே” என்று புலம்பியவள், விளையாட்டுத் தனத்தை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு அவனருகில் அமர்ந்தாள்.
“என்ன தான் பிரச்சனை அகன் உங்களுக்கு?” என்றாள் சோர்வாய்.
“நான்தான் கேட்கணும். வீட்ல இருக்க வரை நல்லாத்தான் இருந்த. அப்பறம் ஏன் திடீர்ன்னு இப்படி ரியாக்ட் பண்ற தாரா? எனக்குப் புரியலை? நான் என்ன பண்ணேன்னு யோசிச்சே எனக்கு தலை வலிக்குது. திடீர்னு நல்லா பேசுற. திடீர்னு சைலன்ட் ஆகிடுற. இதோ அவங்க எல்லாகிட்டையும் நல்லாத்தான் பேசிட்டு இருந்த. என்கிட்ட வந்தா மட்டும் இப்படி ரியாக்ட் பண்ற. வாட்ஸ் யுவர் பிராப்ளம் தாரா?” என்றான்
‘அவன் சொல்றதும் சரியா தான் இருக்கோ? நான் என்ன எதிர்பார்க்குறேன் இவன்கிட்ட இருந்து?” என்றவளின் பார்வை ஒரே இடத்தில் நிலைத்திருக்க,
“அங்க என்ன தெரியுது?” என்றான் அகன்.
“ம்ம் பியூச்சர் பிரைட்டா தெரியுது” என்றாள்.
“சொன்னாலும் சொல்லாட்டியும் நம்ம பியூச்சர் பிரைட்டா தான் இருக்கும், டோன்ட் வொர்ரி” என்றான்.
“இருக்கும் இருக்கும்..ஏன் இருக்காது? புதுப்பொண்டாட்டி பக்கத்துல வந்து உட்கார்ந்தா, ஏன் உரசிகிட்டு உட்காரன்னு கேட்குறவன் பியூச்சர் கண்டிப்பா பிரைட்டா தான்டா இருக்கும் பம்பரக்கட்டை மண்டையா?” என்று தனக்குள் பேசிக் கொண்டவள், அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
எப்போதும் போல் கால்மேல் கால் போட்டு தன் தோரணையில் அமர்ந்திருந்தவனை கண் எடுக்காமல் பார்க்க,
“சோ வாட்? இனி லவ் பண்ணிட்டா போச்சு” என்றான் தோள்களைக் குலுக்கி.
“லவ் பீலிங் எல்லாம் இல்லைன்னு சொன்னிங்க?” என்றாள் கேள்வியாய்.
அவளின் கேள்வியில் தான் அவனுக்கு உரைத்தது அவள் விலகலுக்கான காரணம். சுற்றி இருந்தவர்களை ஒரு முறை பார்த்தவன், அவர்களின் கவனம் தங்களிடம் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டே அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“இதுக்காகத்தான் இவ்வளவு நேரம் என்னை டார்ச்சர் பண்ணியா தாரா?” என்றான் நிதானமாய்.
“டார்ச்சர் எல்லாம் பண்ணலை. பட், இந்த தாராவோட இம்பார்ட்டன்ஸ் உங்களுக்கு புரியணும்னு நினச்சேன். அதுல ஒன்னும் தப்பில்லையே?” என்றாள்.
“லவ் பீலிங் அப்போ இல்லைன்னு சொன்னேன். இப்போ இல்லைன்னு நான் சொன்னேனா? இல்லை வரவே வராதுன்னு சொன்னேனா?” என்றான் புருவத்தை உயர்த்தி.
“எப்படி சொன்னாலும் அதுக்கு அர்த்தம் ஒண்ணுதானே அகன். உன்னோட லைப்ல நான் இம்பார்டன்ட் பெர்சனா இருக்கணும்னு நினைக்கிறது தப்பில்லையே” என்றாள் தாரா. அதை சொல்லும் போது மட்டும் ஏனோ குரல் பிசிறடித்தது அவளுக்கு.
“சோ வாட்? இருந்துட்டு போகட்டும்” என்றவன், அவள் காதருகில் குனிந்து “யுகா” என்றான் தன் மொத்த உணர்வையும் தேக்கி. அந்த குரலும் அதில் இருந்த உணர்வுகளும் இப்போது தான் அவள் செவி வழி சரியாக நுழைந்து மனதை சென்றடைந்தது. அவன் குரல் தந்த உணர்வில் ஈர்க்கப்பட்டவள், அவனை முழுங்குவதைப் போல் பார்க்க,
“இந்த அகன் வாழ்க்கையில நீ ரொம்ப முக்கியமான பெர்சனா இருக்கனும்னு நீ நினைக்கிற” என்று நிறுத்தி அவள் முகம் பார்த்தவன்,
“ஆனா இந்த அகன் அவனோட வாழ்க்கையே இந்த யுகா தான்னு நினைக்கிறான்” என்று அவன் சொல்லி முடித்த அடுத்த நிமிடம் அவளுக்கு கண்ணீரே வந்து விட்டது. பாய்ந்து கழுத்தோடு அவனைக் கட்டிக் கொண்டாள்.