அதுவரை நார்மலாய் பேசிக் கொண்டிருந்தவனுக்கு, அவரின் அருகாமை ஏதோ செய்து அவன் ஆக்ரோஷ உணர்வுகளைத் தூண்ட,
“நகுலா இவரை தள்ளிப் போக சொல்லு” என்றான் மறுபுறம் திரும்பியபடி.
“கார்த்தி நான் சொல்றதைக் கேளுப்பா” என்றார் தயாளன் மீண்டும்.
“தள்ளிப் போங்கன்னு சொல்றேன்ல. எதுக்கு பக்கத்துல வந்து என்னை மிருகமா மாத்துறிங்க? தள்ளிப் போங்க” என்று அவன் கத்திய கத்தலில் வீடே அதிர்ந்தது.
ஒரு நிமிடத்தில் அவனுக்குள் நடந்த மாற்றத்தில் இந்த முறை பூமிநாதனும், வேணியுமே அரண்டு விட்டனர்.
“கார்த்தி காம்டவுன்..! என்னடா ஆச்சு உனக்கு?” என்று நகுலன் அவன் கையைப் பிடிக்க வர,
“அவரை முதல்ல தள்ளிப் போகச் சொல்லு நகுலா. என் கண் பார்வையில படக் கூடாது. அப்பறம் நான் ஏதாவது பண்ணிடுவேன்” என்றான் முன்னெச்சரிக்கையாய். அவன் முகத்தில் தெரிந்த மாற்றமும், உடல் மொழியும் அனைவரையும் திகைக்க வைக்க,
“என்ன சித்தி திடீர்னு இப்படி நடந்துக்குறான்?” என்றாள் மகிமா பயந்தபடி.
“தாராம்மா, கொஞ்சம் எழுந்து வெளிய வாயேன். அங்க கார்த்தி தம்பி திடீர்ன்னு கோபம் வந்து கத்துறாரு. அவர் நடவடிக்கை எதுவுமே சரியில்லை” என்றார் வேணி கலவரமான முகத்துடன்.
தூக்கம் இருந்த இடம் தெரியாமல் சென்றது தாராவிற்கு.
“என்னம்மா சொல்றிங்க? என்ன நடந்தது?” என்றாள்.
வேணி நடந்ததை சுருக்கமாய் சொல்ல,
“தயாளன் அங்கிள் பக்கத்துல போனாலே இவர் இப்படி பிகேவ் பண்ண ஆரம்பிச்சுடுறார்னு நினைக்கிறேன்” வேகமாய் எழுந்தவள், வெளியே சென்றாள்.
வாழ்க்கை வெறுத்துவிட்டது தயாளனுக்கு. தன்னுடைய குற்றமும், செயலும் மகனை இப்படி மன நோயாளி ஆக்கும் என்று அவர் நினைத்திருக்கவில்லை. அவர் செய்த குற்றம் உயிர் உள்ளவரை நிம்மதியுடன் இருக்க விடாது என்று அவருக்குத் தெரியும். ஆனால் மகனை இந்த அளவிற்கு பாதித்ததை தான் அவரால் இப்போது தாங்க முடியவில்லை.
“போதும் கார்த்தி. நீ நடந்துக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை. ஏதோ சின்ன வயசுல இருந்து கோபம் அதான் இப்படி இருக்கன்னு நினைச்சு நானும் பொறுமையா இருந்தேன். உங்கப்பா கோபக்காரர் தான், ஆனா நீ இப்படி அவரை வெறுக்குற அளவுக்கு அவர் ஒன்னும் மோசமானவர் இல்லை. நானும் அவரைக் கட்டிட்டு வந்த அன்னைக்கு இருந்து பார்க்குறேன். நீ இப்படித்த்தான் நடந்துக்கிற? அவரும் நீ எவ்வளவு அவமானப் படுத்தினாலும் உன் பின்னாடியே வர்றார். காலையில கல்யாண மேடையில வச்சும் அவரை அவமானப்படுத்துற? பார்க்குறவங்க என்ன நினைக்க மாட்டாங்க?
சின்ன வயசுல அப்படி இருந்தன்னா,சரி தாயில்லாத சின்னப் பையன் இப்படி இருக்கான்னு நினைச்சேன். இப்போ வளர்ந்து இவ்வளவு பெரியவனானதுக்கு அப்பறமும் அப்படியே இருந்தா எப்படி கார்த்தி?” என்றார் ரேவதி.
“என்னைக் கேள்வி கேட்குற எந்த அதிகாரமும் உங்களுக்கு இல்லை” என்றான் பட்டென்று.
“கார்த்தி என்ன பேச்சு இது? அம்மாவுக்கு அப்பறம் அவங்க தான் நமக்கு அம்மாவா இருந்திருக்காங்க. என்னைக்காவது நம்மளை பிரிச்சுப் பார்த்திருப்பாங்களா? அவங்ககிட்ட இப்படி பேசுறது தப்பு” என்றான் நகுலன்.
“நான் இப்படித்தான் நகுலா. நான் பண்றது தான் தப்பு. அப்படியே இருந்துட்டு போறேன். ஆனா இவர் என்கிட்ட இருந்து ஒதுங்கி இருக்குற வரைக்கும் தான் இவருக்கு நல்லது” என்றான் சிவந்த கண்களுடன்.
“என்னை ஏதாவது பண்ணாத்தான் நீ சரியாவன்னா அதை பண்ணிடு கார்த்தி. நீ என்ன பண்ணாலும் எனக்கு சம்மதம் தான்” என்ற தயாளன் அவனின் கையைப் பிடிக்க, அவன் உடலுக்குள் ஒரு நடுக்கம், கண் முன்னால் சிறு வயது நிகழ்வுகள் எல்லாம் வந்து போக, நடுக்கம் இறுக்கமாக மாற, அவன் நிலையில் அவன் இல்லை.
“அகன் கண்ணா” என்று அகல்யா அழைப்பதைப் போன்ற ஒரு மாயை அவனுக்குள் உருவாக,
“இவரைத் தள்ளிப் போகச் சொல்லுன்னு சொல்லிட்டே இருக்கேன்ல. நான் பேசாம தூரமா தான இருந்தேன். ஏன் என்னைய வர வச்சு இப்படி கொலைகாரன் ஆக்கப் பாக்குறிங்க. ஒதுங்கிப் போனாலும் ஏன் என்னை விடாம டார்ச்சர் பண்றிங்க?” என்றவன் ஆத்திர மிகுதியில் உடைக்க பொருளைத் தேட, எதுவும் கைக்கு அகப்படாததால் ஓங்கி தன் கையை தானே சுவற்றில் விடாமல் குத்திக் கொண்டதில் ஏற்கனவே காயம் பட்டிருந்த கையில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியிருந்தது.
ரத்தம் வந்து காயம் ஆன போதும் அவன் விடாமல் தன்னைக் காயப்படுத்திக் கொண்டிருக்க, சுற்றி இருந்தவர்கள் மிரண்டு விட்டனர்.
இந்த முறை அவன் தன்னைக் காயப்படுத்திக் கொள்வதை நகுலனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“அப்பா நீங்க போங்கப்பா” என்றான் தந்தையிடம்.
“என்ன நகுலா நீயே இப்படி பேசுற?” என்றார் ரேவதி.
“அவனைப் பார்த்திங்க தானே? இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பண்ணிட்டு இருந்தான்னா, அவன் கையே ஒடிஞ்சு போய்டும். எனக்கு எதுவும் சரியா படலை. அவன் இந்த அளவுக்கு இருக்குறதுக்கு ஏதோ காரணம் இருக்கு” என்றான் நகுலன் தந்தையைப் பார்த்தபடி.
“கார்த்தி வேண்டாம்ப்பா” என்று லட்சுமி தவிக்க,
“அகன் என்ன பண்றிங்க?” என்றபடி வந்த தாராவிற்கு அவனின் நிலையைக் கண்ட பிறகு முதன் முறையாக அவனைக் கண்டு அவள் கண்களில் பயம் வந்து போனது.
“தாரா எனக்கு எதுவும் சரியா படலை. அன்னைக்கு ஏதோ கோபத்துல அப்படி நடந்துக்கிறார்ன்னு நினைச்சேன். ஆனா, இன்னைக்கு நடந்துக்கிறதைப் பார்த்தா நிஜமாவே எல்லாரும் சொல்ற மாதிரி கார்த்தி தம்பிக்கு” என்று பேசிக் கொண்டிருந்த வேணி, மகளின் பார்வையில் அப்படியே வாயை மூடிக் கொண்டார்.
“சற்று நேரத்திற்கு முன்பு அறையில் தன்னிடம் மென்மையாய் நடந்து கொண்டவனா இவன்?” என்கிற ரீதியில் இருந்தது அவனின் தோற்றமும் செயலும்.