“இப்போ எதுக்கு முகத்தை மூணு முழத்துக்கு தூக்கி வச்சிருக்கிங்க? நியாயப்படி பார்த்தா நான் தான் இப்படி இருக்கணும். நீங்க தான் வந்து சமாதானப்படுத்தனும். பாவம் சாப்பிடலையேன்னு எடுத்துட்டு வந்தா ஓவரா சீன் போடுறிங்க நீங்க” என்றாள் கடுப்புடன்.

“எனக்காக பாவப்பட்டு இரக்கப்பட்டு நீ எதுவும் செய்ய வேண்டாம் தாரா” என்றான் பட்டென்று.

அவன் பதிலில் தொய்ந்தவள்,

“இங்க பாருங்க அகன்.. இன்னும் உங்க சொந்த பந்தமெல்லாம் வீட்ல தான் இருக்காங்க. சொல்லப் போனா எனக்கு மேரேஜ் நடந்த பீலே இல்லை. நைட் சரியா தூங்கலை. காலையில மேரேஜ்ல ஸ்டார்ட் பண்ணி இப்போ வரைக்கும் பிரச்சனை. உண்மையை சொல்லனும்னா இப்படிப் பட்ட சிச்சுவேஷன்ஸ் எல்லாம் இதுக்கு முன்னாடி எனக்கு வந்ததே இல்லை. இன்பேக்ட் நான் ஏன் இப்படி ரியாக்ட் பண்றேன்னு எனக்கே தெரியலை. நான் இப்படி இருக்குற ஆளே கிடையாது.

அதுக்காக நீ பண்ணது சரின்னும் ஆகிடாது. அது அப்படியே தான் இருக்கு. நம்ம பிரச்சனையை அப்பறம் பார்ப்போம். இப்போ நாம எங்க வீட்டுக்கு போகணும். இன்னும் நிறைய பார்மாலிட்டிஸ் இருக்கு. உனக்கு எப்படியோ தெரியாது, ஆனா எனக்கு எல்லாத்தையும் கண்டிப்பா பண்ணியே ஆகணும். அது எதையும் நீ ஸ்பாயில் பண்ண மாட்டேன்னு நம்புறேன். அதுக்கு முதல்ல நீ சாப்பிடனும்” என்றாள் தாரா.

அவன் அவளை மீண்டும் அதே அழுத்தமான பார்வை பார்க்க, அவளோ சோர்ந்து போனாள்.

“அகன் ப்ளீஸ்..! ஐ பீல் வெரி டயர்ட். எனக்கு என்னன்னு சொல்லத் தெரியலை, ஆனா மனசுக்குள்ள ஏதோ பாரமா அழுத்துற மாதிரி இருக்கு” என்றாள் சோர்வுடன்.

எப்போதும் துறுதுறுவென்று இருப்பவளைப் இப்படி பார்க்க அவனுக்கும் ஒரு மாதிரி இருந்தது போலும். தன் கோபம் விடுத்து அவளின் அருகில் சென்றவன் அவளை மென்மையாய் அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் அத்தனை இதம் தெரிந்தது அவளுக்கு. ஆத்மார்த்தமான அவனின் ஒற்றை மென்மையான அணைப்பே அவளின் பாதி மன அழுத்தத்தை குறைத்திருந்தது.

“ரிலாக்ஸ் யுகா” என்றவனின் குரலில் இருந்த இதம் அவளை வேறு உலகிற்குள் அழைத்து செல்ல, அவளின் கைகளும் தானாகவே அவனை அணைத்துக் கொண்டது.

தன் அணைப்பில் இருந்தவளை, அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தவன்,

“கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு யுகா” என்றான்.

அவன் குரலில் ஏதோ வசியத்திற்கு கட்டுப்பட்டவள் போல் அமர்ந்திருக்க,

“யுகா” என்றான் மீண்டும் அழுத்தமாய்.

“ங்கான்” என்று விழித்தாள் தாரா.

“கொஞ்ச நேரம் தூங்கு” என்றான்.

“இருக்கட்டும் அகன். இந்த மேக்கப் எல்லாம் கலைஞ்சிடும்” என்றாள்.

“ஒன்னும் பிராப்ளம் இல்லை. யு நீட் சம் ரெஸ்ட் நவ்” என்றான் அவள் கண் பார்த்து.

“இல்ல, வெளிய எல்லாரும் இருக்காங்க அகன். எல்லாம் என்னைக் கேட்பாங்க. இந்த நேரத்துல தூங்குறது சரி வராது. நான் வேணும்னா எங்க வீட்டுக்கு போனதுக்கு அப்பறம் தூங்கிக்கிறேன்” என்றாள் வேகமாய்.

“நான் தான் சொல்றேன்ல யுகா. நான் பார்த்துக்கிறேன்” என்றவன் வம்பாய் அவள் தலையை தலையணையில் சாய்த்து விட, அடுத்த பத்தாவது நிமிடத்தில் உறங்கிப் போனாள் யுகந்தாரா.

மணப் பெண் அலங்காரத்திலேயே உறங்கிக் கொண்டிருந்தவளைத் தான் பார்த்திருந்தான் அகன். அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை அவனுக்கு. பின் சாப்பிட்டு முடித்து அறையை விட்டு வெளியே வந்தவனைப் பிடித்துக் கொண்டார் சந்தான லட்சுமி.

“கார்த்தி எங்க போய்ட்டிங்க ரெண்டு பேரும்?தாரா எங்க ஆளைக் காணோம்?இன்னும் கோபமா தான் இருக்காளா?” என்றார் தவிப்புடன்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்னு நான் தான் தூங்க சொன்னேன்” என்றான் அகன்.

“என்னது தூங்குறாளா?” என்ற வேணி கார்த்தியை பாவமாய் பார்த்து வைத்தார்.

“என்னாச்சு?” என்றான்.

“நல்ல ஆளைப் பார்த்து தூங்க சொன்னிங்க தம்பி. தூங்கிட்டா அவளுக்கு இந்த உலகம் இயங்குறதே தெரியாது. அப்படி ஒரு தூக்கம் தூங்குவா. அங்க நம்ம வீட்டுக்கு வேற போகணும். அதுவுமில்லாம இன்னும் ஆட்கள் வந்துட்டு போயிட்டு தான் இருக்காங்க. இப்பவே அங்க பொண்ணு மாப்பிள்ளையை காணோம்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க” என்றார் வேணி.

“அதான் எல்லாம் முடிஞ்சதே ஆன்ட்டி? இன்னும் என்ன? பார்மாலிட்டிஸ் எல்லாம் வேண்டாம் ஆன்ட்டி” என்றான் நிதானமாய்.

“கார்த்தி பொள்ளாச்சிக்கு நம்ம வீட்டுக்கும் போகனும்ப்பா. அது தான் முறையும் கூட” என்றார் ரேவதி.

“எனக்கு அங்க வர்றதுக்கு விருப்பம் இல்லைங்க. இனி எப்பவும் அங்க வரமாட்டேன்” என்றான் அகன் பட்டென்று.

“கார்த்தி இப்படி சொன்னா எப்படிடா? முறைன்னு ஒன்னு இருக்குள்ள? என்ன இருந்தாலும் இது நமக்கு பாட்டி வீடு. பொள்ளாச்சியில இருக்குறது தான நம்ம வீடு. உனக்கு என்ன கோவம்னாலும் இதுல காட்டாத கார்த்தி. அங்க இருக்குற நம்ம சொந்த பந்தமெல்லாம் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பிச்சுடுவாங்க. அதனால அப்பாவுக்குத் தான தலைகுனிவு” என்றான் நகுலன் பொறுமையாக.

“ஆமா கார்த்தி, சொன்னா கேளுப்பா” என்று பரமேஸ்வரியும், சுகந்தியும் ஒத்து ஊத, அவர்களை ஒரு முறை  பார்த்தவன்,

“நீங்க எத்தனை முறை கேட்டாலும் என் பதில் ஒன்னு தான். நான் அங்க வர மாட்டேன். அன்னைக்கு கூட வந்திருக்க மாட்டேன். அம்மாவோட போட்டோவை எடுக்கத்தான் வந்தேன். அந்த வீட்டுக்கு வர்ற எண்ணம் துளி கூட எனக்குக் கிடையாது” என்றான் உறுதியாக.

“அப்படி என்னதான்டா உனக்கு பிரச்சனை?” என்றான் நகுலன் பொறுமை இழந்து.

“இப்போ உனக்கு என்ன பிரச்சனை நகுலா? சொந்த பந்தத்தைப் பத்தி கவலைப் படுற ஆளெல்லாம் நீ இல்லையே? இன்னைக்கு என்ன திடீர்ன்னு?” என்றான் அகன் யோசனையுடன்.

தயாளன் சொன்னதைத் தானே அவன் பேசிக் கொண்டிருக்கிறான். இப்போது அகனும் சரியாக அதையே கேட்க, நகுலனிடம் தான் பதில் இல்லை.

“இன்னும் எதுக்கு நகுல் உங்க தம்பிகிட்ட இப்படி கெஞ்சிகிட்டு நிக்குறிங்க? இதெல்லாம் நல்லாவா இருக்கு? இவர் அந்த வீட்டுக்கு வந்தா என்ன? வரலைன்னா உங்களுக்கென்ன? கல்யாணத்துக்கு வந்தோம், பார்த்தோம், சாப்பிட்டோம், இப்போ கிளம்பலாம்” என்றாள் மகிமா.

“அண்ணன் தம்பி என்னமோ பேசிட்டு போறாங்க? இடையில நீ ஏன் மூக்கை நுழைக்கிற மகி?” என்றார் சுகந்தி.

“அப்படி எல்லாம் விட முடியாது சித்தி. இவர் கொஞ்சம் கூட நகுலை மதிக்கிறதே இல்லை. அதைப் பத்தி யாரும் பேச மாட்டேங்குறிங்க. ஆனா, என் புருஷன் மட்டும் இங்க இருந்து இவர்கிட்ட அவமானப்பட்டுகிட்டே இருக்கனும் உங்களுக்கு?” என்றாள்.

“இப்ப யாரு நகுலனை அவமானப்படுத்துனா? நீயா எதையாவது இழுத்து விடாத. காலையில தான் ஒரு பஞ்சாயத்தை இழுத்த. இப்போ மறுபடியுமா?” என்றார் சுகந்தி.

“ஹோ.. நான் தான் சண்டைக்காரி உங்க எல்லாருக்கும். இவர் வரமாட்டேன்னு சொன்னா அந்த தாரா தான பேசி கூட்டிட்டு வரணும். ஆனா என்ன நடந்தா எனக்கென்னன்ற மாதிரி தூங்கப் போய்ட்டா. புகுந்த வீட்ல போய் இன்னும் விளக்கு கூட ஏத்தல அதுக்குள்ள இப்படி தூங்குனா விளங்கிடும்” என்றாள்  மகிமா விடாமல்.

“இப்ப உங்க எல்லாருக்கும் என்ன தான் பிரச்சனை? பேச்சு என்னோட தான் இருக்கணும். அதைத்தான்டி யுகாவை பேச்சுக்குள்ள இழுத்தா நல்லா இருக்காது சொல்லிட்டேன். நகுலா உன்னோட வொயிப்ன்றதுனால தான் பொறுமையா இருக்கேன்” என்றான் அகன் பல்லைக் கடித்துக் கொண்டு.

“அவ சொல்றதும் சரிதான கார்த்தி. வாழ வந்த பொண்ணு, அங்க புகுந்த வீட்ல விளக்கேத்துறது தான முறையா இருக்கும்” என்றார் லட்சுமி.

“விளக்கு தான் ஏத்தனும்னா அதை இங்கயே ஏத்த சொல்லுங்க. லோட்டஸ்க்கு நான் பையன் மாதிரின்னா, அவ அவங்களுக்கு மருமக தானே. பண்ற எல்லா பார்மாலிட்டிசையும் இங்கயே பண்ணுங்க. இல்ல, கூடாதுன்னா எதுவும் பிரச்சனை இல்லை. அப்படி ஒரு பார்மாலிட்டிஸ் தேவையே இல்லை” என்றான் அகன்.

“நான் சொல்லலை வசந்தி சித்தி. இவர் பெரிய பிளானோட தான் வந்திருக்கார். முதல்ல தனக்கு பேச்சு வந்ததை மறைச்சு நாடக மாடினார். இப்போ இந்த வீட்ல விளக்கேத்த வச்சு, தாமரை பெரியம்மாவுக்கு ஒரே வாரிசாகிடலாம்னு பார்க்குறார் போல” என்றாள் மகிமா நக்கலாக.

“ஆமா மகி, நானும் என்னவோன்னு நினைச்சுட்டேன். இப்போ தானே தெரியுது? சும்மா சொல்லக் கூடாது எல்லாத்தையும் முன்கூட்டியே யோசிச்சு தெளிவா பண்ணியிருக்காங்க” என்றார் வசந்தியும்.

“வசந்தி பார்த்துப் பேசு” என்று தாமரை அவரை அதட்ட,

வசந்தியின் பேச்சைக் கேட்ட தயாளனுக்கு கோபமாய் வந்தது. கோபத்தில் தன்னை மீறி அகனின் அருகில் வந்தவர்,

“இந்த பேச்செல்லாம் தேவையா கார்த்தி? ஏன் நமக்கு வீடு இல்லையா? சொத்து சுகம் தான் இல்லையா? நீ இப்படி நடந்துக்கிறதால தான் இப்படி கேவலமான பேச்சை எல்லாம் கேட்க வேண்டியிருக்கு” என்றார் கோபமாய்.