தன் முன் இலையில் இருந்த பதார்த்தங்களை வெறித்துக் கொண்டிருந்தாள் யுகந்தாரா. எதையும் சாப்பிடும் மனநிலையில் அவள் இல்லை. ஆனால் பசி வேறு அவள் வயிற்றை கிள்ளியது..
“என்னாச்சு ராஜகுரு? எதுக்காக இப்படி எல்லாத்தையும் வெறிக்க வெறிக்க பார்த்துட்டு இருக்கீங்க? யாரும் பிடுங்கிக்க மாட்டாங்க. கண்டிப்பா உங்களுக்குத் தான், சாப்பிடுங்க” என்றான் ஹரீஷ்.
“டேய்..! உனக்கு இன்னைக்கு நேரம் சரி இல்லைன்னு நினைக்கிறேன். பேசாம போய்டு” என்றாள் தாரா.
அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த அகனோ தானும் சாப்பிடாமல் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
“ஆஸ்திரேலியா துரைக்கு இந்த ஊர் சாப்பாடு எல்லாம் பிடிக்காது” என்றாள் பட்டென்று.
அகன் அவளை இடுங்கிய பார்வையுடன் பார்க்க, எதுவும் பேசாமல் இருந்தவனின் முகமோ இறுகிக் கொண்டே போனது. சற்று முன் நடந்தது வேறு அவன் நினைவிற்கு வந்து போனது.
அவனின் அணைப்பில் இருந்து திமிரி விலகியவள்,
“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா அகன். ஐ ஹேட் யு. எனக்கு உன்னைப் பிடிக்கலை. நீ ஒரு சீட்டர்” என்றாள் கோபமாய்.
“யுகா” என்றவனின் குரலில் இருந்த உணர்வை அவள் சரியாக புரிந்து கொள்ள முற்படவில்லை. அவள் பேசப் பேச அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்திருந்தது. தன்னை நிலைப்படுத்தியவன்,
“இப்பவும் சொல்றேன், நான் பேசுறது பிடிக்கலைன்னா சொல்லிடு தாரா. இனி எப்பவும் பேசவே மாட்டேன். பேசாம இருக்குறது எனக்கு புதுசும் இல்லை. அது எனக்கு கஷ்ட்டமும் இல்லை” என்றான் இறுகிப் போன குரலில்.
அவளுக்கு இருந்த டென்ஷனில் அவனின் முக மாற்றத்தையோ குரல் மாற்றத்தையோ கவனிக்கவில்லை.
“நீ பேசுனா எனக்கென்ன? பேசலைன்னா எனக்கென்ன அகன்? அதான் என்னை நல்லா முட்டாளாக்கிட்டியே? இதுக்குமேல என்ன இருக்கு?” என்றாள் கோபமாய்.
“நான் பேசலைன்னா அதைப் பத்தி உனக்கு கவலை இல்லை ரைட்” என்றான் அவள் முகத்தையே பார்த்தபடி.
“ஆமா கவலையில்லை. இதுக்கு மேல நான் ஏமாற மாட்டேன். உனக்கு பேச வரும்னு ஏன் முன்னமே சொல்லலை. எல்லாரோட சேர்த்து என்னையும் முட்டாளாக்கியிருக்க அகன் நீ. இப்ப என்னமோ இதெல்லாம் தெரிஞ்சு தான் நான் உன்னை மேரேஜ் பண்ணேன்ற மாதிரி பேசுறாங்க? சொல்லப் போனா நீதான் என்னை ஏமாத்தி மேரேஜ் பண்ணியிருக்க அகன்” என்றாள் கோபமாய்.
“ஸ்டாப் இட் தாரா” என்ற அவன் கத்தலில் அவள் மிரண்டு போய் பார்க்க, அவள் பார்வையின் மிரட்சியில் தன் கோபம் குறைத்தவன்,
“கார்த்திகா பேமிலி இஷ்யூஸ் வந்தப்போ, நான் பெருசா ரியாக்ட் பண்ணலை. இன்பேக்ட் அந்த மேரேஜை வேண்டாம்னு ஸ்டாப் பண்ணாதே நான்தான். அதே நாள்ல அதே நேரத்துல மேரேஜ் பண்ணியே ஆகணும்னு நான் நினைக்கவே இல்லை.எந்த இடத்துலையும் நான் உன்னை மேரேஜ் பண்ணிக்கவும் கேட்கலை. இன்பேக்ட் நீதான் வந்து கேட்ட. அப்பவும் நான் சரி வராதுன்னு தான் சொன்னேன். பட் நீ நம்பிக்கையா பேசுன. நீ பேசின விதம் எனக்குப் ஓகேவா இருந்தது. நானும் ஓகே சொன்னேன். இதுல எங்க இருந்து நான் உன்னை சீட்டிங் பண்ணேன்?” என்றான் கோபமாய்.
“இப்போ வாய் கிழிய பேசுற நீ அப்போ வாயைத் திறந்து பேசியிருக்க வேண்டியது தானே? நானே வந்து கேட்கவும் தான் உனக்கு இளக்காரம் அகன்? தப்புப் பண்ணிட்டேன், பெரிய தப்பு பண்ணிட்டேன்” என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.
அவள் கலங்கிய முகத்தைப் பார்த்தவனுக்கு மனதிற்குள் ஏதோ பிசைய,
“யுகா நான் அப்படி மீன் பண்ணி சொல்லலை. பேசாத அகனைப் பிடிச்ச உனக்கு ஏன் பேசுற அகனைப் பிடிக்கலை? அகனைப் பிடிக்கலையா? இல்லை அகன் பேசுறது பிடிக்கலையா?” என்றான்.
“மொத்தமா உன்னையவே பிடிக்கலை போடா” என்றவள் தான்,தந்தையின் கட்டாயத்தில் பந்தியில் வந்து வீம்புடன் அமர்ந்திருந்தாள். அவளுக்கு அருகில் வந்து அமர்ந்தவனும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான்.அவன் அவளையே பார்த்திருக்க, அவளோ அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.
“தாரா என்ன இது புதுப் பழக்கம்? இப்படி பிடிவாதம் பிடிக்கிற பழக்கமெல்லாம் உன்கிட்ட இல்லையே? இப்ப என்ன திடீர்ன்னு?” என்றார் பூமி நாதன்.
“உங்களுக்கு கூட ஏன்னு புரியலையா டாடி. இவர் என்கிட்ட உண்மையை மறைச்சது தப்புத்தானே” என்றாள் கோபமாய்.
“மத்தவங்ககிட்ட சொல்லி, உன்கிட்ட மட்டும் மறைச்சிருந்தா தான்டா தப்பு. அவர் தான் யாருகிட்டயுமே சொல்லலையே?” என்றார் பூமி.
‘அப்படி ஒன்னு இருக்கோ?’ என்றவளின் மனம் சற்று ஆசுவாசம் அடைய,
“இருந்தாலும் தப்புத்தான்” என்றாள்.
“சரி தப்புத்தான். அதுக்கு இப்போ என்ன பண்ணனும்?” என்றார் பூமி .
“ஒன்னும் பண்ண வேண்டாம். நான் முதல்ல சாப்பிடுறேன். சண்டை போட தெம்பு வேணும்ல” என்றாள்.
“அதைத்தான் நானும் அப்ப இருந்து சொல்லிட்டு இருக்கேன் தாராம்மா. பர்ஸ்ட் நீ சாப்பிடுடா. எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம்” என்றார் பொறுமையாக.
தந்தையின் சமையலை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் தாரா. அருகில் ஒருவன் இருக்கிறானா இல்லையா என்று திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அகனோ எதையும் சாப்பிடாமல் அமைதியாகவே இருந்தவன், அவள் சாப்பிட்டு முடித்தவுடன் இலையை அப்படியே மடக்கிவிட்டு எழுந்து சென்று விட்டான். அவன் செல்வதைக் கண்டதும் இவளுக்கு ஒரு மாதிரியாக,
“என்னமோ ஆகிடுச்சு எனக்கு? இவன் சோகமா இருந்தா நான் ஏன் இப்படி பீல் பண்ணனும்? இப்ப அப்படியென்ன சோகம் அவனுக்கு?அவன் பண்ணதுக்கு கோபம் வராம என்ன செய்யும்? ஏன், எனக்கெல்லாம் கோபமே வரக்கூடாதா?” என்று எண்ணிக் கொண்டாள்.
“கார்த்தி தம்பி சாப்பிடவே இல்லைடா. நீ என்னடான்னா கண்டுக்காம சாப்பிட்டு முடிச்சுட்ட? அவர் முன்னாடி உன்னைக் கண்டிக்கவும் முடியலை? என்னடா தாரா இதெல்லாம்?” என்றார் பூமி.
“இப்ப என்ன பிரச்சனை டாடி உங்களுக்கு? நான் சாப்பிடலைன்னாலும் திட்டுறிங்க. சாப்பிட்டதுக்கும் திட்டுறிங்க. என்னதான் பண்ணட்டும் நான்?” என்றவளை அவர் பாவமாய் பார்க்க,
“டாடி, ஓவரா மாமனார் பாசத்துல பொங்காதிங்க. நல்ல காலத்துலயே அகன் இப்படி சாப்பிட மாட்டார்னு உங்களுக்கு தெரியும் தானே. அதுலயும் நீங்க ஊத்தியிருக்கிற நெய் வாசனையில அவருக்கு பசியே அடங்கியிருக்கும். அதான் துரை சாப்பிடலை. நான் அகனுக்கு எடுத்துட்டு போறேன் டாடி” என்ற மகளை அப்போது தான் நிம்மதியாக பார்த்திருந்தார் பூமிநாதன்.
எப்போதும் போல் அவன் சாப்பிடும் ஐட்டங்களை மட்டும் தனியாய் எடுத்துக் கொண்டவள்,
“அதையெல்லாம் அப்பா மறப்பேனாடா. இதையெல்லாம் நீ சொல்லனுமா தாரா?” என்றவர் மனைவியைத் தேடிச் சென்றார்.
“யக்கோவ், மாம்ஸ்க்கு தனி கவனிப்பா? புட் எல்லாம் ஸ்பெஷலா போகுது?” என்றான் ஹரீஷ்.
“என்னமோ இன்னைக்குத்தான் அப்படி போற மாதிரி? தினமும் அந்த பம்பரக்கட்டை மண்டையனுக்கு இப்படித்தான் போகுது” என்றபடி அகனைத் தேடி சென்றாள் தாரா.
அவன் அறைக்குள் சென்றவள் கண்டது என்னவோ, கைகளைக் கட்டியபடி இலக்கின்றி பார்த்துக் கொண்டிருந்தவனைத் தான். பட்டு வேஷ்டி சட்டையில் கைகளை கட்டியபடி நிமிர்ந்து நின்றிருந்தவனின் தோற்றம் அப்படியே அவள் மனதிற்குள் அழகாய் பதிந்து போனது.
‘எப்படி உம்முன்னு இருக்கும் போது கூட ஜம்முன்னு இருக்கான் பார்?இந்த ரணகளத்துலையும் நம்ம மானங்கெட்ட மனசு இவனை சைட் அடிக்குதே? இந்த கொடுமையை எல்லாம் எங்க போய் சொல்ல?’ என்று நினைத்துக் கொண்டவள்,
“அகன் வந்து சாப்பிடுங்க” என்றாள் தாரா.
அவளின் குரலில் திரும்பியவன், அவளையும் அவள் கொண்டு வந்த உணவையும் பார்த்தவன்,
“அங்க வச்சுட்டு போ” என்ற ரீதியில் பார்த்து வைக்க, பொறுமையாய் இருந்தவளுக்கு மீண்டும் கோபம் வந்தது.