தயாளனும் ரேவதியும் மேடையேறி வரும் போதே பட்டென்று எழுந்திருந்தான் அகன். தாரா அவனை அதிர்ச்சியுடன் பார்க்க, அவளின் முகத்தைப் பார்த்து, அவள் கண்களில் இருந்த அதிர்ச்சியைக் கண்டவன், முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மீண்டும் அமர்ந்தான்.
அவன் தனக்காகத்தான் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டிருக்கிறான் என்பது வரை அவளுக்கும் புரிந்து தான் இருந்தது.
வசந்தியோ அவன் பிரச்சனை செய்வதைப் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க,
ஒரு நிமிடம் கண்களை மூடி நிதானித்தவன், பின் யாரையும் சட்டை செய்யாமல் தாலியைத் தானே எடுத்து தாராவின் கழுத்தில் கட்டிவிட்டான்.
“இதென்ன? எந்த சடங்கையும் செய்யாம நேரா தாலியை கட்டிட்டார் மாப்பிள்ளை” என்று வந்தவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொள்ள,
“இந்த மட்டிலும் அவன் விட்டானே” என்று தாரா நிம்மதி பெருமூச்சுவிட, அந்த பெருமூச்சிற்கும் ஆயுள் இல்லை போலும்.
“நீ பண்றது எதுவுமே சரியில்லை கார்த்தி. அவர் நம்ம அப்பாடா. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி அவரை அவமானப்படுத்திட்டே இருப்ப?” என்றான் நகுலன் கோபமாய்.
“நல்ல விஷயம் நடக்கும் போது வாக்குவாதம் வேண்டாம் நகுலா. வந்திருக்கவங்களை போய் கவனி” என்று பெரிய மகனை திசை திருப்பி விட்டார். நகுலன் அப்போதைக்கு சென்றானே தவிர அவன் கோபம் குறையவேயில்லை.
சந்தான லட்சுமியிடம் ஜோடியாய் ஆசீர்வாதம் வாங்க, அன்று தான் அவர் தொலைத்த நிம்மதி எல்லாம் மீண்டிருந்தது. பூமிநாதன்-வேணியிடம் ஆசீர்வாதம் வாங்கியவர்களை, தயாளன்-ரேவதியிடம் வாங்க சொல்ல, தாரா மட்டுமே சென்றாள். அகனோ இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. அவர்களை நோக்கி சென்ற தாராவையும் விடாமல் தன்னருகில் இழுத்துக் கொண்டான்.
“அகன் நான் மட்டுமாவது ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன்” என்ற தாரா அவன் பார்த்த பார்வையில் அப்படியே அடங்கிப் போனாள்.
சந்தானலட்சுமி, கார்த்திகாவிற்கு போட்ட நகையை திருப்பிக் கொடுக்க வந்த வசந்தியின் அக்கா குடும்பத்தினர் கண்டது அகனின் திருமணத்தை தான். எப்படியும் தங்களிடம் வந்து கண்டிப்பாய் பேசுவார்கள் என்று எண்ணியிருந்த வசந்தியின் அக்கா குடும்பத்திற்கு அகனின் திருமணம் அதிர்ச்சி தான். அதிலும் தாரா தான் பெண் என்றது அதை விட அதிர்ச்சி அவர்களுக்கு.
“இப்போ உனக்கு சந்தோஷமா வசந்தி. நீ மட்டும் அமைதியா இருந்திருந்தா இப்போ கார்த்திகா அந்த இடத்துல இருந்திருப்பா. என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்ததே நீதான்” என்று வசந்தியின் அக்கா அவரை கடுமையாய் சாடினார்.
“நீதான் சொத்துக்கு ஆசைப்பட்டு பொண்ணு வாழ்க்கையைப் பத்தி யோசிக்கலை, அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? எப்படியும் உன்னை கெஞ்சிகிட்டு நிப்பாங்கன்னு நீ பார்த்த. அது நடக்கலைன்ன உடனே பழியைத் தூக்கி என்மேல போடுறியாக்கா. போனவா சும்மாவாவது போனியா, அவனுக்கு பைத்தியம்னு பட்டம் கட்டிவிட்டுட்டு வேற போயிருக்க. ஏற்கனவே உன்மேல கொலைவெறில இருக்காங்க. வந்த தடம் தெரியாம கிளம்பிடு” என்று வசந்தி அக்காவை எச்சரித்துக் கொண்டிருந்தார்.
“பைத்தியத்தை கல்யாணம் பண்ணிட்டு இவ்வளவு திமிரு தேவையில்லம்மா” என்ற வசந்தியின் அக்கா.. அவளை முறைத்துக் கொண்டு நகரப் பார்க்க,
“என்னம்மா? கல்யாணப் பொண்ணு மாறிடுச்சா? உங்க பொண்ணைத் தானே லட்சுமி அம்மா பேரனுக்கு பேசியிருந்திங்க” என்று விபரம் அறியாத உறவுக்காரர் கேட்க,
“ஆமா மாமா. கடைசி நேரத்துல தான் பையனுக்கு மனநிலை சரியில்லைன்னு தெரிஞ்சது. அதான் மாட்டேன்னு சொல்லிட்டோம்” என்றார் அவர் வீம்புக்கென்று.
“அப்படியா? பையனுக்கு அந்த பிரச்சனை வேற இருக்கா? என்னத்தை சொல்ல?” என்று அவர் புலம்பியபடி செல்ல, தாராவோ வந்த கோபத்திற்கு அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கும் முடிவுடன் இருந்தாள்.
“தாரா” என்று வேணி அழைக்க, அவர்களை முறைத்தவள், தாயை நோக்கி சென்றாள்.
“அவங்ககிட்ட உனக்கு என்ன பேச்சு? அங்க பாரு கார்த்தி தம்பி முகமே சரியில்லை. நீ என்னடான்னா அங்க போய் அவங்ககிட்ட பேசிட்டு இருக்க?” என்றார்.
“அவங்க பிரச்சனை பண்ணனும்னு வந்திருக்கிற மாதிரி இருக்கும்மா.அதான் பேசிட்டு இருந்தேன்” என்றவள் அகனின் அருகில் சென்றாள்.
போட்டோ எடுத்து, வந்தவர்களை வரவேற்று அவனுக்கும் சேர்த்து அவளே பேசி என்று மிகவும் சோர்வடைந்து விட்டாள் தாரா. அகனோ யாருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியின் நின்றிருக்க, அவனைப் பார்த்து கடுப்படைந்தவள்,
“டால்டா மண்டையன், கொஞ்சமாவது அசறானா பாரு. நெடுமாடு மாதிரி நிக்கிறான். ஒருத்தியா இப்படி கஷ்ட்டப்படுறாளேன்னு எண்ணம் இருக்கா இவனுக்கு? கல் நெஞ்சக்காரன். அடியே தாரா இன்னைக்கே நாக்குத் தள்ளிடும் போலயே உனக்கு. வாழ்க்கையில ஒரே ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு நான் படுற பாடு இருக்கே” என்று விரல்களால் வீசிக் கொள்ள,
“என்னாச்சு ராஜகுரு? இப்படி சலிச்சுக்கிறிங்க?” என்று கையில் ஜூசுடன் வந்த ஹரீஷை நன்றி பார்வை பார்த்தவள், ஜூசை வாங்கி கடகடவென்று குடித்து முடித்தாள்.
“நன்றி அரசே” என்றாள் தெம்பாய்.
“நன்றி எனக்கு சொல்லாதிங்க ராஜ குரு. தங்கள் கணவருக்கு கூறுங்கள், அவரின் ஆணைப்படி தான் பழச்சாறு தங்களைத் தேடி வந்தது” என்றான் ஹரீஷ்.
“பார்றா” என்று எண்ணியவள் அகனைப் பார்க்க, அவனோ அதே விறைப்புடன் நின்றிருந்தான்.
“இவன் என்னடா கல்யாண மேடையில மிலிட்டரிக்கு ஆள் எடுக்க போற மாதிரி நின்னுட்டு இருக்கான். எப்ப எப்படி பெர்பார்ம் பன்னுவான்னே தெரிய மாட்டேங்குது” என்று புலம்பினாள் தாரா.
“மேரேஜும் மிலிட்டரியும் ஒன்னு தான ராஜ குருவே” என்றான் ஹரீஷ்.
“அடேய் லூசுப் பயலே, இங்க ஓட்டிகிட்டு நிக்கவே வழியில்லையாம், இதுல கட்டிக்கிட்டு நிக்கனுமாம்” என்று முனுமுனுத்தாள் தாரா. அவளைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட அகன், சட்டென்று அவளை பின்னிருந்து அணைத்து அவளின் தோளில் முகம் பதித்து சிரித்தவாறு போஸ் கொடுத்து நிற்க,
“சூப்பர் மாம்ஸ், செம்ம போஸ்” என்றவன் அதை தன் அலைபேசியிலும் படம் பிடித்துக் கொண்டான்.
அவனின் திடீர் செய்கையில் அவள் விழிவிரித்து அவனை சற்று திரும்பிப் பார்க்க, அது கவிதையாய் இருந்தது.
“சூப்பர் கேண்டிட் ஸ்டில்” என்ற ஹரீஷின் குரலில் திரும்பியவளுக்கு முகம் முழுவதும் வெட்க ரேகைகள் படர,
“தாரா, யுகந்தாரா..! என்னம்மா வெட்கமா?” என்று ஹரீஷ் வடிவேல் பாணியில் கேட்டு வைத்தான்.
“டேய்” என்றவளால் எவ்வளவு முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் சிரித்துக் கொண்டிருக்க, அகனோ அவளை ரசனையுடன் பார்த்திருந்தான். அதை சிறந்த புகைப்படமாக தனது கேமராவில் அடக்கிக் கொண்டார் போட்டோ கிராபர்.