அத்தியாயம் 12:

அதற்கடுத்து அனைத்தும் ஜெட் வேகத்தில் நடக்க, மணப் பெண்ணிற்கான சர்வ அலங்காரங்களுடன் தயாராகி நின்றவளைப் பார்த்த பூமிநாதனுக்கும் வேணிக்கும் தன் பெண்ணின் முகத்தை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை.

“என்னம்மா அப்படி பார்க்குறிங்க? இந்த புடவை கொஞ்சம் வெயிட்டா இருக்கு” என்றாள் பாவமாய்.

“அழகா இருக்கடா. புடவையும் அவ்வளவு அழகா இருக்கு. இது நாம எடுத்ததுட்டு வந்ததது இல்லையே?” என்றார் வேணி.

“அம்மா இது அகன் செலக்சன். லாஸ்ட் மினிட்ல எப்படி அரேஞ்ச் பண்ணியிருக்கார் பாருங்க” என்றாள் சிரிப்புடன்.

“எப்படிமா?” என்றார் வேணி திகைப்புடன்.

“எல்லாமே ஆன்லைன் தான். இதோ இவங்க தான் பொட்டிக் ஓனர் பிளஸ் மேக்கப் ஆர்டிஸ்ட். இவங்களை காண்டாக்ட் பண்ணித் தான் எல்லாத்தையும் பண்ணியிருக்கார். எனக்கே இவங்க சொல்லித்தான் தெரியும். ரெடிமேட் பிளவுஸ் மட்டும் லைட்டா கொஞ்சம் லூஸ் பிட்டா இருக்கு. மத்தபடி எல்லாம் ஓகே தான்” என்றாள்.

“என் பொண்ணு இன்னைக்குத் தான் பொண்ணு மாதிரி இருக்கா” என்றார் பூமி நாதன்.

“ஏன் டாடி? அப்போ இத்தனை நாள் பூதம் மாதிரி இருந்தேனா?” என்றாள் நக்கலுடன்.

“இப்போ வரைக்கும் அப்படித்தான் இருக்கீங்க ராஜ குருவே” என்றபடி வந்த ஹரீஷ், அங்கு தாராவைக் கண்டு,

“வாவ்..!வாட்ட பிகர்” என்றான்.

“லூசுப் பயலே, நான் உனக்கு அக்கா முறையாகனும்” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

“ஹோ, அக்காவை பிகர்ன்னு சொல்லக் கூடாதோ?” என்றவன்,

“அடடே என் சகோதரி என்ன அழகு?” என்றான் சிரிப்புடன்.

“நான் அழகுன்னு எனக்கேத் தெரியும்” என்றாள் சிலுப்பிக் கொண்டு.

“ஒரு சின்ன பொய் தான் சொன்னேன். அதுவே உங்களுக்கு எவ்வளவு கான்பிடன்ஸ் கொடுக்குது” என்றவன் சிரிக்க,

“அடேய் இருக்குடா உனக்கு” என்றாள் கடுப்பாக.

தாராவை அழைக்க வந்த வீட்டுப் பெண்கள் அனைவரும் அவளை ஒரு நிமிடம் நின்று ரசிக்க,

“புடவையில அம்சமா இருக்க தாரா” என்றார் தாமரை.

“சித்தி எப்போடா இந்த பொம்பளை வேஷத்தை கலைப்போம்னு இருக்கு. எப்படித்தான் நீங்க தினமும் புடவையிலையே இருக்கிங்களோ?” என்றாள் சலிப்பாய்.

“அண்ணி வாங்க போகலாம்” என்று இனியா வர,

“அக்காவை நான்தான் கூட்டிட்டு வருவேன்” என்ற ஹரீஷ் வம்படியாய் அவளுடனேயே இருந்தான்.

“அரசே என்ன திடீர்ன்னு என்மேல் தாங்களுக்கு அப்படி ஒரு பாசம்?” என்றாள் ஹரீஷிடம் திரும்பி.

“உங்கள் திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைக்க வேண்டியது இந்த சமஸ்தானத்தின் அரசனாய் என் கடமை அல்லவா?” என்றான் சிரிக்காமல்.

“டேய் ஓவரா நடிக்காதடா? விஷயத்துக்கு வா” என்றாள் பட்டென்று.

“தாங்களின் அருகிலேயே இருக்க வேண்டும் என்பது கார்த்தி மாமாவின் கட்டளை ராஜகுரு” என்றான்.

“நிஜமாவா?” என்றாள் தாரா.

“நிஜமாத்தான், நீங்க எப்படியும் டென்ஷனா இருப்பிங்களாம். நான் இருந்தா கொஞ்சம் ஈசியா பீல் பண்ணுவிங்களாம். அப்படின்னு கார்த்தி மாம்ஸ் தான் எனக்கு மெசேஜ் போட்ருக்கார்” என்றான் ஹரீஷ்.

“ஹோ, இந்த அளவுக்கு நோட் பன்றானா இந்த பம்பரக்கட்டை மண்டையன்” என்று எண்ணிக் கொண்டவளை மணமேடைக்கு அழைக்க, அவள் செல்ல முற்படும் முன் அகனே எழுந்து வந்திருந்தான்.

“கார்த்தி நீ போகக்  கூடாதுப்பா” என்று யார் சொன்னதும் அவன் காதில் விழவில்லை. அவனுக்குத்தான் கேட்காதே.

“என்னடா அகன் இங்க வர்றார், நான் தான அங்க போகணும்?” என்றவள், பட்டு வேஷ்ட்டி சட்டையில் தோரணையாய் வந்தவனை ‘ஆ’ வென்று பார்த்திருக்க,

“ராஜகுரு, உங்க வாயெல்லாம் ஜொள்ளு. இப்படியா பப்ளிக்கா சைட் அடிப்பிங்க. குளோஸ் யுவர் மவுத்” என்றான் ஹரீஷ் சிரிப்புடன்.

“அந்த அளவுக்கா வெளிய தெரியுது?” என்றாள் வேகமாய்.

“அப்பட்டமா தெரியுது. கார்த்தி மாமாவே பார்த்திருப்பார்” என்று மெதுவாய் கூறினான்.

நேராய் வந்தவன், அவளிடம் கையை நீட்ட,

“இப்படி கையைக் குடுத்தே, லைப் புல்லா உன் கையைப் பிடிக்க வச்சுட்டியேடா சிலுக்கு ஜிப்பா” என்று எண்ணியவள், தன் கையை அவன் கையுடன் இணைத்துக் கொண்டாள்

பெண்ணை மாப்பிள்ளையே மணமேடைக்கு அழைத்து வருவதை அனைவரும் ‘ஆ’ வென்று பார்த்திருக்க, முதன் முறையாக யுகந்தாரவிற்கு வெட்கம் என்னும் பூ பூத்திருந்து முகத்தில்.

“மாம்ஸ் சம்பவம் பண்றாரே” என்று எண்ணிக் கொண்ட ஹரீஷின் முகத்திலும் அப்படி ஒரு சந்தோசம்.

திருமணம் நின்று விட்டதாய் பாதிப் பேருக்கு தகவல் தெரிந்திருக்க, தகவல் தெரியாதவர்கள், விஷயம் தெரிந்து வந்திருந்த சொந்த பந்தம் என்று சபை நிறைந்து தான் இருந்தது. பூமிநாதனும் வேணியும் உள்ளூரில் இருக்கும் நெருங்கிய சொந்த பந்தங்களுக்கு அலைபேசியிலேயே அழைப்பு விடுத்திருக்க, அனைவரும் வந்திருந்தனர்.

ஆக, சிறு சிறு குறைகளைத் தவிர அகன்- தாரா திருமணம் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்தது.

“பொண்ணு,பையனோட அம்மா அப்பாவை மேல வரச்சொல்லுங்க” என்றவுடன் தயாளனும்-ரேவதியும் மேடை ஏற, அவர்கள் ஏறி வருவதைப் பார்த்த அகனுக்கு உடலெல்லாம் இறுகியது. கைமூடி விரல்களுக்குள் தன் அழுத்தத்தை அடக்கிக் கொண்டிருந்தவனின் நிலையை நொடியில் கண்டு கொண்டாள் தாரா.

அவன் கையை அவள் இறுகப் பற்றிக் கொள்ள, அவன் கொடுத்த அழுத்தத்தில் அவள் கை விரல்கள் கன்றி சிவந்திருந்தது.

மகனின் முக மாற்றத்தை கவனித்த தயாளனின் கால்கள் இடையிலேயே நகராமல் நிற்க, அவரின் அருகில் சென்ற நகுலனோ,

“அப்பா வாங்க!” என்றான்.

“இல்ல நகுலா, கல்யாணம் நல்ல படியா நடந்தா போதும். நான் அவன் பக்கத்துல போய் ஏதாவது அசம்பாவிதம்னா நல்லா இருக்காது” என்றார் மெதுவாய்.

“இத்தனை பேர் இருக்கும் போது அவன் அப்படியெல்லாம் நடந்துக்க மாட்டான்” என்றான் நகுலன் நம்பிக்கையாய்.

“இல்ல வேண்டாம்ப்பா” என்றார்.

“ஏங்க? அதுக்காக செய்ற முறையை செய்யாம இருக்க முடியுமா?” என்றார் ரேவதி.

நடப்பதை எல்லாம் பார்த்த மகிமாவோ,

“இன்னைக்கு சம்பவம் இருக்கும் போலயே” என்று நினைத்துக் கொண்டாள்.

தாரா தான் பயத்துடன் அமர்ந்திருந்தாள். இப்போது மட்டும் அகன் தன் கட்டுப்பாட்டை இழந்தால், கார்த்திகா குடும்பத்தினர் சொன்ன  பொய்யை வந்திருப்பவர்கள் நம்பி விடக் கூடுமே என்ற பயம் தான் அவளுக்கு.

தயாளனோ தயக்கத்துடன் மேலே வர, அகனின் உடலோ இறுகிக் கொண்டே சென்றது. அவனின் மாற்றம் அங்கிருந்த அனைவரும் தெரிய,

“என்னாச்சு?” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

“அகன் பிளீஸ்” என்று அவன் கையை இறுகப்  பிடித்தவளுக்கு அழுகையே வந்துவிடும் போல் இருந்தது. அவனை மற்றவர்கள் பைத்தியக்காரனாய் பார்ப்பதை தாங்க முடியவில்லை அவளால்.

“இந்த சடங்கெல்லாம் வேண்டாம்” என்று வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன் கூறியிருந்தாள் தாரா.

“என்னமா பேசுற? அதுக்காக செய்ற முறையை மாத்த முடியுமா? என் அப்பாவும் அம்மாவும் செய்ற முறையை செய்யத்தான் செய்வாங்க. அவன் ஏத்துகிட்டு தான் ஆகணும்” என்றான் நகுலன்.

“உங்களுக்கு நான் ஏன் இப்படி சொல்றேன்னு புரியுதா புரியலையா?” என்றாள் கேள்வியாய்.

“அதெல்லாம் எனக்குப் புரியுதுமா தாரா. அவன் எதுவும் பண்ண மாட்டான்” என்றான் நகுலன் நம்பிக்கையாய். இப்படியாவது தம்பியை மாற்றிவிட மாட்டோமா என்ற எண்ணம் அவனுக்கு. ஆனால் அகன் என்ன வேண்டுமென்றா செய்கிறான்? அது அவனுக்கு மன நோயாகவே மாறிவிட்டிருந்ததை நகுலனுக்கு யார் சொல்லிப் புரிய வைப்பது.