“என்னாச்சு டாடி? ஏன் அகன் அப்படி அதே இடத்துல இருக்கார்?” என்றாள் புரியாமல்.

“தெரியலைடா. ஆனா நீ போனப்ப இருந்து அங்க தான் இருக்கார்” என்றார் பூமி.

“நான் போய் பேசிட்டு வரேன்” என்றவளை,

“நேரம் என்னாகுது தாரா. தூங்க வேண்டாமா?” என்றார்.

“ம்மா பத்து நிமிஷம். நீங்க போங்க நான் வர்றேன்” என்றவளின் கால்கள் தன்னால் அவனை நோக்கி சென்றிருந்தது.

தன்னருகில் வந்து அமர்ந்தவளை உணர்ந்து கொண்டாலும் அவள் புறம் திரும்பவில்லை அகன்.

அவனின் முகத்தை வம்பாக திருப்பியவள்,

“ஏன் இங்கயே உட்கார்ந்திருக்கிங்க அகன்? என்ன பிரச்சனை?” என்றாள்.

அவன் அவள் மொபைலைக் காட்ட, அப்போது தான் அவன் அனுப்பியிருந்த செய்தியை கவனித்தாள்.

“நீ ஒரு வேகத்துல சரின்னு சொல்லிட்டன்னு நினைக்கிறேன் தாரா. இந்த மேரேஜ் சரியா வரும்னு எனக்குத் தோணலை. உனக்குள்ள நிறைய குழப்பம் இருக்கு. அதோட இந்த மேரேஜ் நடக்குறது சரியா வராது” என்று அனுப்பியிருந்தான்.

அதைப் படித்தவளுக்கு வந்ததே கோபம். பல்லைக் கடித்து கட்டுப்படுத்திக் கொண்டவள்,

“ஆமா எனக்கு நிறைய குழப்பம் இருக்கு. யார் இல்லைன்னு சொன்னா? ஆனா அது எதையும் நீ தீர்த்து வச்ச மாதிரி தெரியலையே? அட்லீஸ்ட் ‘நான் இருக்கேன் உனக்கு ‘ அப்படின்ற உணர்வைக் கூட நீ எனக்குக் குடுக்கலை. இதுல நான் தெளிவா இல்லை, அதனால மேரேஜ் வேண்டாமாமே” என்று மூச்சை விட்டுக் கொண்டவள்,

“இங்க பாரு அகன், உனக்கு என்ன தோணுதோ அதையே பண்ணிக்க. அவ்வளவு கட்டாயப்படுத்தி நீ என்னை மேரேஜ் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை புரியுதா? நீ எப்படி எந்த விதத்துலையும் குறைஞ்சு போயிடலையோ, அதே மாதிரி நானும் எந்த விதத்துலையும் குறைஞ்சு போயிடலை. நாலு மணி நேரத்துக்கு முன்னாடி ஒரு மாதிரி பேசுன. இப்போ ஒரு மாதிரி பேசுற. என்னை என்ன பண்ண சொல்ற நீ? உனக்கு நாளைக்கு மேரேஜ்ன்றது நீ மைண்ட்ல பிக்ஸ் பண்ண ஒரு விஷயம். ஆனா எனக்கு அப்படி இல்லை. இங்க உனக்கும் நான்தான் பேசுறேன். எனக்கும் நான் தான் பேசுறேன். சோ நான் டயர்ட் ஆகிட்டேன் அகன்.

ஒன்னும் அவசரமில்லை, விடியற வரைக்கும் நேரமிருக்கு. யோசிச்சுட்டு சொல்லு. பட் எதுவா இருந்தாலும் இயர்லி மார்னிங்கே சொல்லிடு. இந்த பட்டுப் புடைவையை எல்லாம் கஷ்ட்டப்பட்டு கட்டிட்டு உடனே கலைக்க முடியாது. குட் நைட்” என்று அவன் முகம் பார்த்து தெளிவாய் தீர்க்கமாய் உரைத்தவள் அவனைத் திரும்பியும் பாராது சென்று விட்டாள்.

“இவ என்ன ரகம்?” என்பதைப் போல் பார்த்து வைத்தான் அகன் கார்த்திகேயன்.

உறங்க சென்றவளுக்கு உறக்கம் என்பது துளியும் வரவில்லை.

“திமிர் பிடிச்சவன், எவ்வளவு திமிர் இருந்தா மேரேஜை நிறுத்தனும்னு சொல்லுவான். அப்பறம் எதுக்கு முதல்ல சரின்னு சொன்னான்? இவனுக்கு இந்த தாரா அவ்வளவு ஈசியா போயிட்டாளா?” என்று உள்ளுக்குள் பொருமித் தள்ள,

“அவனுக்கு இருக்குற டிசார்டர் பத்தி தான் உனக்குத் தெரியுமே தாரா. மனம் ஒரு நிலையில யோசிக்க விடாதுன்னு தெரியாதா உனக்கு? அவனோட நிலமையில இருந்து யோசி” என்று மனசாட்சி சொல்ல,

“அந்த பம்பரக்கட்டை மண்டையனுக்கு யோசிச்சு யோசிச்சு என் தலையில இருக்குற முடியெல்லாம் கொட்டிடும் போல. இருக்குடா உனக்கு” என்று புலம்பிக் கொண்டே தூக்கத்தை தழுவியிருந்தாள் தாரா.

அதிகாலை நான்கு மணிக்கு அவளின் அலைபேசி விடாமல் அலற,கஷ்ட்டப்பட்டு கண்களைத் திறந்தவளுக்கு அழைப்பது அகன் என்றதும் தூக்கமெல்லாம் நொடியில் அவளை விட்டு சென்றது.

‘என்ன இந்த நேரத்துக்கு வீடியோ கால் கூப்பிடுறான்? ஒரு வேலை நிஜமாவே மேரேஜை ஸ்டாப் பண்ண சொல்லப் போறானோ?’ என்றவளுக்கு காரணமே இல்லாமல் மனம் பாரமாக, பதட்டத்துடன் தான் அவன் அழைப்பை ஏற்றிருந்தாள்.

“இன்னும் புடவை கட்டலையா?” என்று செய்தி அனுப்பியிருந்தான்.

“இப்போ தான் எழுந்தேன்” என்று அனுப்பியவள்,

“என்ன முடிவு பண்ணியிருக்கிங்க?” என்றாள்.

“நீ புடவை கட்ட வேண்டாம்” என்று அனுப்பியிருந்தான். அவளுக்கோ கண்கள் கலங்கிப் போக, அதை மறைத்தவள்,

“ரொம்ப நல்லது. அப்போ நான் இவ்வளவு சீக்கிரம் எழுந்துக்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் தூக்கத்தை கண்டினியூ பண்றேன். மேற்கொண்டு எதை நிறுத்தனுமோ அதை நீயே நிறுத்திக்கோ அகன், பாய் குட் நைட்” என்று அனுப்பிவிட்டு அவன் முகம் பார்த்தாள். அவனோ அவளை முறைத்துக் கொண்டிருக்க,

“போடா டால்டா! நான் தான் சொன்னேனே? ஒன் டைம் ஆபர் தான் உனக்குன்னு. இப்போ ஆபர் முடிஞ்சு போய்டுச்சு” என்று அனுப்பியிருந்தாள்.

“அடிங்க..! புடவை கட்ட வேண்டாம்னு தான் சொன்னேன். குளிச்சுட்டு ரெடியா இரு. புடவையும் வரும், பியூட்டிசியனும் வருவாங்க” என்று அனுப்பியிருந்தான்.

இப்போது அவள் அவனை முறைக்க, அவனோ இதழ் மடக்கி சிரிப்பை அடக்கியிருந்தான்.

‘இவன் ஒருத்தன் காலையில சிரிச்சே கொல்லுவான்’ என்று மனதிற்குள் ரசித்தவள்,

“ஒன்னும் தேவையில்லை” என்று செய்தி அனுப்பினாள்.

“ஓகே நோ பிராப்ளம், இன்பேக்ட் இப்போ நீ இருக்குற அதே ட்ரஸ்ல இருந்தாலும் எனக்கொன்னும் பிரச்சனையில்லை” என்று அவன் அனுப்ப,

“இதுலையா?” என்று தன்னை அசட்டையாக கவனித்தவளுக்கு அப்போது தான் தான் இருந்த நிலையே உரைத்தது. அணிந்திருந்த இரவு உடை அலங்கோலமாய் இருக்க,

“அய்யோ” என்றவள் செல்போனை நெற்றியில் வைத்துத் தட்டிக் கொள்ள, வீடியோ அழைப்பில் இருந்தவனோ சட்டென்று அழைப்பை துண்டித்திருந்தான்.

செல்போனை நெற்றியில் தட்டிக் கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் அவன் இன்னமும் அழைப்பில் இருப்பதே ஞாபகம் வர, வேகமாய் செல்போனைப் பார்க்க, அவன் அழைப்பில் இல்லாதது கண்டு நிம்மதி பிறந்தது அவளுக்கு. அதெல்லாம் அவனின் அடுத்த செய்தியை படிக்கும் வரை தான்.

“யார்கிட்டயும் வீடியோ கால் பேசும் போது போனை முன்தலையில் வச்சு தட்டாத” என்று அனுப்பியிருந்தான்.

“ஏன் தட்டினா என்ன?” என்று நினைத்தவளுக்கு அப்போது தான் அவன் சொன்னதன் அர்த்தம் புரிந்தது.

“மை காட்..! இன்னைக்கு என்ன காலையிலேயே இப்படி சொதப்புது” என்று எண்ணிக் கொண்டவளுக்கு ஏனோ மனம் அத்தனை இலகுவாய் இருந்தது.