மடத்துக்குளத்தில் தன் வீட்டின் வரவேற்பறையில் பாவமாய் அமர்ந்திருந்த பூமிநாதனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் யுகந்தாரா.

கோபமாய் அந்த சோபாவில் தொம்மென்று அமர்ந்தவள் தந்தையை முறைக்க, அவரோ அப்பராணி போல் பார்த்து வைத்தார். இவர்களின் நாடகத்தை ஒரு சிரிப்புடன் பார்த்திருந்தார் வேணி.

“உங்களுக்கு சிரிப்பென்ன வேண்டி கிடக்கு?” என்றாள் கடுப்பாய்.

“அம்மாடி அப்பா சொல்றதை கொஞ்சம் கேளுமா?” என்றார் பூமிநாதன்.

“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம். போக வேண்டாம்னா போக வேண்டாம் தான். ஆளுங்களை மட்டும் அனுப்பி விடுங்க” என்றாள் உறுதியாய்.

“அது சரியா வராதுடா. இது சீசன் டைம் வேற. நிறைய ஆர்டர் இருக்கு. ஆளும் இல்லைடா” என்றார் பொறுமையாய்.

“அப்பா டாக்டர் உங்களை ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்கார். அதுவாவது ஞாபகம் இருக்கா உங்களுக்கு? இப்பப் போய் மறுபடியும் கரண்டியைத் தூக்குறேன்னு சொல்றிங்க?” என்றாள் கோபமாய்.

“நான் என்ன தனியாவா செய்யப் போறேன்? அதுமட்டுமில்லாம லட்சுமி அம்மா எனக்கு பெரியம்மா முறை வேணும். ஒண்ணுவிட்ட சொந்தமும் கூட. அது நம்ம வீடு மாதிரிடா. அங்க சமைக்கிறதுல என்ன இருக்கு? அவங்க வீட்ல நடந்த எல்லா விசேஷத்துக்கும் அப்பா தான் சமைச்சேன். இப்போ மாட்டேன்னு சொன்னா நல்லா இருக்காதுடா” என்றார்.

“கல்யாணத்துக்கு சமைக்குறதுன்னா கூட ஓகே. அதென்ன அவங்க வீட்ல போய் சமைக்கிறது. இதை என்னால அக்சப்ட் பண்ணிக்கவே முடியாதுப்பா” என்றாள் கோபமாய்.

“அது அவங்க வழக்கம்டா. எல்லா விசேஷத்துக்கும் இப்படி தான் சமைச்சோம். மத்த இடம்னா ஆளை அனுப்பிடலாம். இங்க அப்படி அனுப்பினா அவங்களை அவமதிக்கிற மாதிரி ஆகிடும் தாராம்மா. எவ்வளவு பெரிய மனுஷங்க? அவங்க நினைச்சா பெரிய பெரிய கேட்டரிங் பண்றவங்ககிட்டயே குடுக்க முடியும். ஆனா நம்ம தான் பாரம்பரியமா செய்றோம். அதை அவங்களும் மறக்காம இருக்காங்க. அப்போ நாமளும் அதுக்குத் தக்கன சரியா நடந்துக்கணும்டா” என்றார் மகளுக்கு விளக்கமாய்.

“அப்பா தான் இவ்வளவு தூரம் சொல்றாருல்ல தாரா. அதுமட்டுமில்லாம குடும்பத்தோட கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வர சொல்லியிருக்காங்க” என்றார் வேணி.

“அவங்க சொல்லுவாங்க. அதுக்காக நாம அப்படி போக முடியுமா?” என்று யோசித்தவள்,

“உங்களை நம்ப முடியாதுப்பா. வேணும்னா நானும் உங்க கூட வர்றேன்” என்றாள்.

“உனக்கு எதுக்குடா சிரமம்?” என்ற பூமிநாதனை முறைத்தவள்,

“ஒரு சிரமமும் இல்லை. நான் தான உங்களைப் பார்த்துக்கணும். எனக்கு இருக்கிறது ஒரே அப்பா வேற?” என்று வேணியைப் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தாள்.

“உனக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சு” என்ற வேணி மகளை முறைக்க, பூமிநாதன் மகளை ஆதுரமாய் பார்த்திருந்தார்.

திருமணம் முடிந்து பத்து வருடங்களுக்கு பிறகு, தவமாய் தவமிருந்து பெற்ற ஒற்றை மகள் தான் யுகந்தாரா. சொந்த பந்தங்களால் மலடி பட்டம் பெறப்பட்ட தன் அன்னையின் துயரைத் துடைப்பதற்காகவே வேணியின் வயிற்றில் வந்து உதித்த அவர்களின் அன்பு பொக்கிஷம்.

இருபத்தி நான்கு வயது இளந்தென்றல்.ஜீரோ சைசில் இல்லாமல் கொஞ்சம் பூசினார்போல் குலுக்கும் முழுக்கு கன்னங்களுடன், காந்த கண்ணழகியாய் இருப்பவளின் முகத்தில் எப்போதும் புன்னகை உறையாமல் இருக்கும். அதுவே அவளுக்கு ஒரு தெய்வீக அழகைக் கொடுத்திருந்தது.

பிடிவாதமாய் தந்தையுடன் வந்து அந்த வீட்டின் முன் இறங்கியவளுக்கு, ஏதோ தனி ஊருக்கு வந்ததைப் போன்று இருந்தது. அங்கிருந்த அலங்காரங்களும், இயற்கை எழில் கொஞ்சும் அழகும் அவளை பிரமிக்க வைத்திருந்தது.

‘பழனியில இப்படி ஒரு இடமா?’ என்று ஒரு நிமிடம் யோசித்தவள்,

“கல்யாணம் இங்கயேவாப்பா” என்றாள்.

“ஆமாடா! எப்பவும் ஊர்லையே பெரிய மண்டபத்துல தான் நடக்கும். கார்த்தி தம்பி அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடுச்சு போல. அதான் வீட்லயே சிம்ப்ளா வச்சிருக்காங்க” என்றார் பூமிநாதன்.

“எதே” என்று திகைத்தவள்,

“இதுவே சிம்ப்ளா உங்க அகராதியில” என்று எண்ணிக் கொண்டாள்.

அவரின் வருகையை அறிந்த சந்தான லட்சுமி வாசலுக்கு வந்து வரவேற்றார்.

“நல்லா இருக்கிங்களா பெரியம்மா?” என்றார் பூமி.

“வா பூமி! எனக்கென்ன? காடு வாவாங்குது வீடு போபோங்குது ” என்ற சந்தான லட்சுமி அப்போது தான் அவரின் அருகில் இருந்த யுகந்தாரவை கவனித்தார்.

“நம்ம தாராக்குட்டியா இது? எவ்வளவு பெரிய பொண்ணா வளர்ந்துட்டா?” என்று அவளின் கைகளை பிடித்துக் கொள்ள, அவளோ என்ன பேசுவதென்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்றாள்.

“பாட்டின்னே கூப்பிடுமா” என்றார் அவளின் யோசனை அறிந்து.

“சரிங்க பாட்டி” என்றாள்.

“நான் போய் எல்லாத்தையும் ரெடி பண்றேன் பெரியம்மா” என்று பூமிநாதன் சொல்ல,

“ஒரு அவசரமும் இல்லை பூமி. உன்னோட உடம்பையும் பார்த்துக்கோ. ரொம்ப சிரத்தை எடுத்துக்க வேண்டாம். மேற்பார்வை மட்டும் பாருப்பா” என்றார் அக்கறையாய்.

“என்னை மேற்பார்வை பார்க்குறதுக்காகவே என் பொண்ணு கூட வந்திருக்காம்மா” என்றார் பூமிநாதன் சிரிப்புடன்.

யுகந்தாரா அவரை முறைக்க,

“சரிசரி முதல்ல உள்ள வாங்க ரெண்டு பேரும்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே வந்தார் சேது.

“எப்படி இருக்கீங்க பூமி ” என்று அவர் நலம் விசாரிக்க, யுகந்தாராவோ அவர்களின் பேச்சில் கலந்து கொள்ளாமல் வீட்டைச் சுற்றி பார்வையை சுழல விட்டாள்.

“யார் நீ? எதுக்கு இப்படி பெராக்கு(வேடிக்கை) பார்த்துட்டு இருக்க?” என்ற வசந்தியின் அதட்டலில் திரும்பியவள், அவரை நேருக்கு நேர் பார்த்து வைத்தாள்.

“மடத்துக்குளம் பூமிநாதன் பொண்ணு” என்றாள் தெளிவான குரலில்.

“ஹோ, சமையல்காரர் பொண்ணா?” என்றார் வசந்தி இளக்காரமாய்.

“சமையல் காண்ட்ராக்டர்” என்றாள் திருத்தமாய்.

“எல்லாம் ஒன்னு தான? வந்தா வந்த வேலையைப் பார்க்கணும். அதென்ன வீட்டுக்குள்ள வந்து வேடிக்கை பார்க்குறது?நான் இனி இப்படியெல்லாம் உன்னை இங்க பார்க்கக் கூடாது ” என்றார் கடுமையாய்.

வசந்திக்கு பதில் சொல்லாமல், தந்தையின் அருகில் சென்றவர்,

“அப்பா கிளம்புங்க போகலாம்” என்றாள் பட்டென்று.

“தாரா என்னடா ஆச்சு?” என்றார் பூமி பதட்டமாய். அருகில் இருந்த சந்தான லட்சுமியும், சேதுவும் எதுவும் நினைத்துக் கொள்வார்களோ என்ற பயம் அவருக்கு.

“என்னம்மா ஆச்சு?” என்றார் லட்சுமி.

“எங்களுக்கான மரியாதை ரொம்ப முக்கியம் பாட்டி. எங்கப்பா சமையல் காண்ட்ராக்டர் தான், அதுல எந்த கௌர குறைச்சலும் எங்களுக்கு இல்லை. உங்களுக்கு எங்க தேவை இருக்கு. எங்களுக்கு உங்ககிட்ட வேலை இருக்கு, அவ்வளவு தான். நீங்க நினைச்சதை விட அப்பா சிறப்பா பண்ணித் தருவார். வந்த வேலையைப் பார்க்காம இப்படி உங்ககிட்ட உறவு முறை சொல்லிட்டு பேசிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்? முக்கியமா, அதை உங்க வீட்டு ஆளுங்க சொல்ற மாதிரி வச்சுக்கக் கூடாதுல்ல, அதான்” என்றவள்,

“விருந்துக்கு சமைக்க வெளிய இடம் ஒதுக்கியிருக்காங்கப்பா. நாம அங்க இருக்குறது தான் சரி வரும்” என்றாள்.

வசந்தி ஏதோ பேசி இருக்கிறாள் என்று அனைவருக்கும் புரிந்தது.

“இங்கயே தங்கிக்கலாம்மா. அந்த ரூம் தான் உங்களுக்கு” என்றார் சேது.

“இல்லைங்க, அது சரியா வராது. நாங்க நைட் வரைக்கும் இருந்துட்டு எங்க வீட்டுக்கு போயிட்டு, காலையில வந்திடுறோம்.அது தான் சரியா வரும். இடையில ஏதாவது வேணும்னா எங்க ஆட்கள் இருப்பாங்க. மாஸ்டர்ஸ் மூணு பேர் இங்கயே தான் இருப்பாங்க. இங்க தங்குறது எல்லாம் சரிப்பட்டு வராது” என்றாள் கட்டன் ரைட்டாக.

“பூமியும் எனக்கு மகன் மாதிரி தான்மா. நாங்க எப்பவும் அவனைப் பிரிச்சுப் பார்த்ததில்லை” என்றார் லட்சுமி.

“மாதிரி தானே பாட்டி, மகன் இல்லையே. மாதிரிக்கு எல்லாம் இங்க வேலையே இல்லை. எதுவும் அளவோட இருந்துட்டா யாருக்கும் பிரச்சனை இல்ல பாருங்க” என்றாள் வசந்தியைப் பார்த்துக் கொண்டே.

‘ஒரு வார்த்தை சொன்னதுக்கு இவ என்ன ஒரு பக்கத்துக்கு பேசுறா?’ என்று நெஞ்சில் கை வைத்து விட்டார் வசந்தி.

“பாட்டி,பந்திக்கு வெளிய பந்தல் போட்ருக்கிங்க. அப்போ வீட்டு ஆட்களுக்கு இங்க குடுத்து விடணுமா? இல்லை, அங்க வந்து சாப்பிடுவிங்களா?” என்றாள்.

“அங்க வந்தெல்லாம் சாப்பிட முடியாது. இங்கயே வந்து பரிமாறிட்டு போங்க” என்றார் வசந்தி முந்திக் கொண்டு.

“சப்ளையர்ஸ் வருவாங்க. நீங்களே பரிமாறிகிட்டாலும் சரி, இல்லை அவங்க பரிமாறனும்னாலும் பண்ணிடுவாங்க” என்றாள்.

“எப்பவும் உங்கப்பா தான் பண்ணுவார். வழக்கத்தை எல்லாம் மாத்த முடியாது” என்றார் வசந்தி.

“வசந்தி” என்று லட்சுமி ஒரு அதட்டல் போட, முறைத்துக் கொண்டு நின்றார்.

“அது முன்னாடி அப்படி நடந்திருக்கலாம். ஆனா இப்போ அப்படி முடியாது” என்றவளை ஆயாசமாய் பார்த்திருந்தார் பூமிநாதன்.

“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லடா, பார்த்துக்கலாம்” என்ற லட்சுமி,

“ஒரு விஷயம் மட்டும் இந்த பாட்டிக்காக பண்ணனும். என் பேரன் ஆஸ்திரேலியால இருந்தவன், அவனுக்கு மட்டும் மெனு அவன்கிட்டயே கேட்டுக்கங்க. அவன் கேட்குறத நல்ல முறைக்கு பண்ணிக் குடுக்கனும்” என்றார்.

“நான் பார்த்துக்கிறேன் பெரியம்மா” என்றார் பூமிநாதன்.

தன் தந்தை அவர்கள் முன் இப்படி பணிந்து பேசுவது யுகந்தாராவிற்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. அந்த பகுதியில் பேர் சொல்லும் பெரிய சமையல் காண்ட்ராக்டர் அவர். அவருக்கு கீழ் அத்தனை பேர் வேலை பார்க்க, இங்கு மட்டும் தானே செய்வேன் என்று வந்திருப்பவரின் மேல் கோபமாக வந்தது அவளுக்கு.

இவர்கள் பேசுவதை எல்லாம் மேலே நின்று பார்த்திருந்த அகன் கார்த்திகேயன், நிதானமாய் இறங்கி வந்தான்.

“கார்த்தியே வந்துட்டான், அவன்கிட்டயே மெனு கேட்டுக்கங்க” என்றார் சேது.

“நான் வாங்கிட்டு வரேன், நீங்க போங்கப்பா” என்றவள் திரும்பிப் பார்க்க, நிதான நடையில் வந்து கொண்டிருந்தவனைப் பார்த்து திகைத்திருந்தாள்.

‘இவன் தான் அந்த ஆஸ்திரேலியா பார்ட்டியா? ஆள் செம்மையா இருக்கானே?’ என்று நினைத்தவள், எண்ணங்களை முகத்தில் காட்டவில்லை.

அவனோ அவர்கள் யாரையும் சட்டை செய்யாமல் சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்தவன்,தனது போனை எடுத்து எதையோ தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் செய்கையில் கடுப்பானவள்,“திமிர் பிடிச்சவன்” என்று மனதிற்குள் திட்டியபடி அவனின் அருகில் சென்றாள்.

“ஹெலோ சார், அடுத்த டென் டேய்ஸ்க்கு உங்க டெய்லி மெனு குடுங்க சார்” என்றாள் நோட்பேடும் கையுமாக. அவனோ அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

“எக்ஸ்கியூஸ்மி உங்களைத்தான்” என்றாள் மீண்டும் பொறுமையாக. அவனோ அவள் பொறுமைக்கு பொங்கல் வைத்துக் கொண்டிருந்தான்.

“ஹெலோ, சார்” என்றாள் மீண்டும்.

சந்தான லட்சுமி அவனின் அருகில் அமர்ந்து அவனைத் தொட, சட்டென்று நிமிர்ந்தான் அகன்.

“உனக்கு சாப்பிட என்ன வேணும்னு சொல்லு கார்த்தி” என்றார் தாராவை காட்டியபடி.

தாராவிடம் திரும்பியவன், அவள் கையில் இருந்த நோட்பேடை நோக்கி கைநீட்ட, அவளோ கடுப்புடன் அவனிடம் திணித்தாள். வாங்கியவன் கடகடவென்று எழுதிக் கொடுத்திருந்தான். அவனைப் போலவே அவன் கையெழுத்தும் அத்தனை அழகு.

எழுதி முடித்து அவளிடம் நீட்டியவன், மீண்டும் குனிந்து கொள்ள,

“பெரிய மன்மத துரை இவரு, நாங்க கூப்பிட்டா நிமிர மாட்டாரு. திமிரு புடிச்சவன்” என்று முணுமுணுத்தவள், கடுப்புடன் அங்கிருந்து கிளம்ப, அவளின் பின்னால் வந்த சந்தான லட்சுமி,

“ஒரு நிமிஷம் தாரா” என்று நிறுத்தினார்.

“சொல்லுங்க பாட்டி” என்றாள் கடுப்பை மறைத்து.

“கார்த்தியை எதுவும் தப்பா நினைக்காதடா” என்றார்.

“நான் நினைக்க என்ன இருக்கு பாட்டி. ஆனா, கொஞ்சமாவது மரியாதை தெரிஞ்சிருக்கலாம்” என்றாள் கடுப்பை குரலில் காட்டி.

“அது” என்று தயங்கியவர்,

“அவனுக்கு காது கேட்காதுமா, பேசவும் வராது. அவன் முகத்தைப் பார்த்து பேசினா, சரியா புரிஞ்சுக்குவான்” என்றார் மெதுவான குரலில்.

“என்ன சொல்றிங்க பாட்டி?” என்றவளுக்கு அதிர்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை.

“இவனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?” என்றவள் அவனைப் பார்க்க, எதார்த்தமாய் நிமிர்ந்தவனும் அப்போது தான் அவளைப் பார்த்தான்.

“என்ன?” என்பதைப் போல் புருவத்தை உயர்த்தி கேட்டவனின் பாவனையில் ஏதோ அவளுக்குள் இடறியது.

“ஒன்றுமில்லை” என்பதைப் போல் தலையசைத்தவள் வேகமாய் வெளியே சென்று விட்டாள்.