Advertisement

அத்தியாயம்.1

நாமக்கல் டூ திருச்செங்கோடு இடையில் கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத  ஊர் மாணிக்கம்பாளையம். 

அவ்வூரில் உள்ள  வேம்பரசு(வேப்பமரம்,அரசமரம்) நிழலில் குடிகொண்டிருந்த பிள்ளையாருக்கு ஆறு வருடங்களாக வெள்ளிக்கிழமை தோறும் வேண்டுதல் நிறைவேறுவதற்காக நூற்றியெட்டு குடம் ஊற்றிக்கொண்டிருக்கிறாள் அலமேலு மங்கை என்கிற ஷர்மி. அலமேலுமங்கை அவளின் தாத்தா வைத்த பெயர். ஷர்மி வீட்டினர் அவளை அழைப்பதற்காக வைத்தப்பெயர்.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்து குளித்துவிட்டு வந்து கோவில் அருகிலிருந்த பைப்பில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து மூச்சுவாங்க ஊற்றிக்கொண்டிருந்தாள்.

அவள் இதுவரையிலும் என்ன வேண்டுதல் வைத்து பிள்ளையார்க்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறாள் என்பது அவளின் அண்ணன் அகிலேஷ் மற்றும் இன்னொருவரை தவிர அவளுடைய அம்மா, அப்பாவிற்கு கூட தெரியாது.

அவர்களை பொறுத்தவரையும் மகளுக்கு பிடித்த கடவுள் பிள்ளையார் என்பதால் தண்ணி ஊற்றுகிறாள் என சாதாரணமாக நினைத்து கொண்டு இருந்தனர்.

மகளின் வேண்டுதல் தெரிந்திருந்தால் அவளின் ஆசை நிறைவேறாது என்பதை எடுத்துக் கூறியிருப்பார்களோ என்னவோ??

ஷர்மி பிள்ளையார்க்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருப்பதை கோவிலின் வழியாக சாலையில் வயலுக்கு ஆடு, மாடுகளை ஓட்டிச்செல்பவர்களும், வேலைக்குச் செல்பவர்களும் கவனித்து இருந்தாலும், அது சாதாரண நிகழ்வு என்பதால் அவளைப் பார்த்து புன்னகைத்து ஓரிரு வார்த்தை பேசிவிட்டுக் கடந்து சென்றனர்.

அலமேலுமங்கை (எ) ஷர்மி.,  21 வயதே ஆன கிராமத்து தேவதை, அவள் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும்.

அவளின் தாய், தந்தை திருமணம் நடந்து 12 வருடங்கள் கழித்தும் குழந்தை இல்லாததால் கோவில் கோவிலாக ஏறி இறங்கினர். அவர்களின் வேண்டுதலுக்கு வரமாக வந்து பிறந்தவள்தான் அந்த வீட்டின் குலவிளக்கு. அவளின் அப்பத்தா போல் உருவத்தைக் கொண்டு பிறந்து, அவரின் பெயரையும்  தனதாக்கிக்கொண்டாள் அலமேலுமங்கை. அவளின் தாத்தாவுக்கு அலமுவாகவும், மற்றவர்களால் ஷர்மியாகவும் அழைக்கப்படுகிறாள்.

ஒற்றை பெண் வாரிசு அதுவும் நீண்ட வருடங்கள் கழித்து அவளின் அப்பத்தாவை உரித்துவைத்துக்கொண்டு பிறந்ததால் அவளின் அப்பா,அம்மாவிற்கு மட்டுமில்லாமல் தாத்தா, சித்தப்பா, சித்தி, அவர்களின் மகன் அகிலேஷ்க்கும் செல்லப்பெண். அவளின் அம்மா லஷ்மியை தவிர மற்ற அனைவரும் செல்லம் கொடுப்பதாலையோ என்னவோ அவளுக்கு பிடிவாதக்குணம் அதிகம். ஆனால் பாசக்காரி.

சுந்தரமூர்த்தி, அலமேலுமங்கை தம்பதிக்கு மூன்று குழந்தைகள். மூத்தவர் முருகேசன் இரண்டாவது பெண் லலிதா, மூன்றாவது தமிழரசன்.

முருகேசன் அவருடைய மனைவி லஷ்மி அவர்களுக்கு பிறந்தவள்தான் அலமேலுமங்கை (எ) ஷர்மி.

தமிழரசன் – இந்துமதி தம்பதிக்கு பிறந்தவன் அகிலேஷ். அகிலேஷ் ஷர்மியை விட ஐந்து வயது மூத்தவன்.

சுந்தரமூர்த்தியின் பசங்க இருவரும் இன்னமும் தந்தையின் வார்த்தையை மீறமாட்டார்கள் தந்தை சொல்வதே வேதவாக்கு.

அண்ணன் தம்பி இருவரும் கூட்டுக் குடும்பமாக தான் வாழ்கின்றனர். தந்தை செய்து வந்த பரம்பரை தொழில் ஆன விவசாயத்தை தான் அண்ணன், தம்பி இருவரும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் உயிர்மூச்சு விவசாயம் மட்டுமே.

சுந்தரமூர்த்தியின் இரண்டாவது மகள் லலிதா. அவர் தன் தாய் மாமன் மகனான ராமகிருஷ்ணனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு முப்பது வயதில் ரகுநந்தன் என்கிற மகன் இருக்கிறான். 

லலிதா அதே ஊரில் திருமணமாகி அலமேலுமங்கையின் பிறந்தவீட்டில் மருமகளாக வாழ்ந்தாலும்  காதலித்தவனோடு வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக்கொண்டதால் இன்றுவரை பிறந்த வீட்டினருடன் பேச்சுவார்த்தை இல்லை.

மகள் ஓடிப்போன அதிர்ச்சியில் அலமேலுமங்கை படுத்த படுக்கையாகி விடவும் சுந்தரமூர்த்தியின் குடும்பத்தினர் லலிதாவின் உறவை முறித்துக்கொண்டனர்.  படுத்த படுக்கையாக இருந்த அலமேலுமங்கை மகளை நினைத்தே ஒரே வருடத்தில் உயிரை விட்டு விட்டார்.

மனைவியின் இறப்பு சுந்தரமூர்த்தியை நிறையவே பாதித்து விட்டது. அலமேலுமங்கை உயிருடன் இருந்திருந்தாளாவது மகளை தன் குடும்பத்துடன் சேர்த்து வைத்திருப்பாரோ என்னவோ…? அவர் இறப்பிற்கு பிறகு லலிதாவை குடும்பத்தினர் மொத்தமாக தலைமுழுகி விட்டனர்.

ஷர்மி பிள்ளையார்க்கு தொன்னுற்றி இரண்டாவது குடம் தண்ணி ஊற்றிக்கொண்டிருக்கும்போது அவளின் சித்தப்பாவின் மகன் அகிலேஷ் அங்கு வந்தான்.

“ஏய் ஷர்மி இன்னுமா உன்னோட பிள்ளையாருக்கு தண்ணி ஊத்தற??? வெரசா ஊத்திட்டு வா… காலேஜ் போக நேரமாச்சு…”

“இன்னும் பதினாறு குடம் ஊத்தணும்டா அகி.., ப்ளீஸ் எனக்கு பதிலா நீ ஊத்துடா என்னால முடியலை” மூச்சுவாங்கிக்கொண்டே கோவிலின் படியில் அமர்ந்துகொண்டாள்.

அவளின் பக்கத்தில் வந்து அமர்ந்தவாறே “உன்ற வேண்டுதலை நீதான் ஷர்மி நிறைவேத்தனும்..,நா ஊத்துனா பலிக்காது எழுந்து ஊத்திட்டு வா போலாம்” என்றான்.

“ப்ளீஸ்டா அகி… பிள்ளையார் ஆரு தண்ணி ஊத்தினாலும் ஏத்துக்குவார் போய் ஊத்திட்டு வாடா…”

“சோம்பேறி…” அவளைத் திட்டிக்கொண்டே எழுந்து சென்று குடத்தில் தண்ணீர் பிடித்து வந்து அவளின் அருகில் வைத்தவன் “இத எடுத்து நீயே ஊத்து ஷர்மி” என்றான். 

இது அடிக்கடி நடப்பது தான் தங்கையின் வேண்டுதலுக்காக பாதி நாட்கள் அகிலேஷ்ம் பிள்ளையார்க்கு தங்கையின் சார்பில் அவளின் வேண்டுதல் நிறைவேறுவதற்காக  தண்ணி ஊற்றிக்கொண்டு இருக்கிறான்….

ஷர்மியின் ஆசை, வேண்டுதல் நிறைவேறுமா? என்பது காலத்தின் கையில் தான் இருக்கிறது.

“தேங்ஸ்டா அகி…” அவனின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சிவிட்டு தண்ணீரை பிள்ளையார்க்கு ஊற்றிவிட்டு வெறும் குடத்தை அவனிடம் கொடுத்தாள்.

அவளின் செயலில் புன்னகைத்தவன் குடத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.

அகிலேஷ் தன் தங்கையின் மேல் உயிரையே வைத்திருக்கிறான். அவளுக்காக எதையும் செய்பவன்.., அவளுக்கும் அகிலேஷ்  ஒரு உற்ற நண்பனைப் போலத்தான்.., அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில்  எந்த ரகசியமும் கிடையாது.

ஷர்மி படிப்பில் சுமார் ரகம் என்பதால் எதோ கல்லூரி போகவேண்டும் என்பதற்காகவே தன் அண்ணன் வேலை செய்யும் கல்லூரிலே பி.ஏ தமிழ் எடுத்து இறுதி வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

அகிலேஷ் ஷர்மியை போல் இல்லாமல் படிப்பதில் ஆர்வம் உள்ளவன்.., B.E இன்ஜினியரிங் முடித்துவிட்டு M.E மாஸ்டர்  டிகிரி முடித்து வேலையில் சேர்ந்தவன் தான் எடுத்த துறையிலையே சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக Ph.D படித்துக்கொண்டே  தங்கை படிக்கும் கல்லூரிலே பேராசிரியராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறான். 

பிள்ளையார்க்கு தண்ணீர் ஊற்றி முடித்ததும் இருவரும் வீட்டிற்குச் சென்றனர்.

அவர்களின் வீடு அந்தகாலத்தில் கட்டப்பட்ட மிகப்பெரிய மச்சுவீடு. சுந்தரமூர்த்தி அந்த ஊரில் பணபலம், சொத்து ஆகியவற்றில் செல்வாக்கு மிகுந்த சில குடும்பங்களில் அவர் குடும்பமும் ஒன்று..,  சுந்தரமூர்த்தி வயதில் மூத்தவர் மட்டுமில்லாமல் நேர்மையானவர்  என்பதால் அவரின் வார்த்தைக்கு அந்த ஊரில் மதிப்பு அதிகம். ஊரின் பொது விசயம் என்றால் அவரிடம்தான் கருத்துக் கேட்பார்கள்.

இன்றும் அதேபோல் கோவில் விசயமாக அவரிடம் பேச ஊரில் உள்ள பெரியவர்கள் எல்லாம் வந்திருந்தனர்.

சுந்தரமூர்த்தி காவி வேட்டி அணிந்து தோளில்  துண்டுமட்டும் போட்டுக்கொண்டு எண்பத்தையிந்து வயதிலும் நிமிர்வாகத் தன் வீட்டின் முன் நிழலுக்காக தென்னங்கீற்றால் வேயிந்திருந்த தாழ்வாரத்தில் கயிற்று கட்டிலில்  அமர்ந்திருந்தார்.  அவரின் தலைமுடிமட்டும் நரைத்திருந்தது. அவர் சிவனின் தீவிர பக்தர் என்பதால் நெற்றியில் திருநீர் பூசியிருந்தார். அந்த வயதிலும் அவரின் கண்களிலிருந்த கூர்மை எதிராளியைப்  பயம் கொள்ள வைக்கும்.., பொறுமையாக வந்திருந்தவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

பேரனும் பேத்தியும் உள்ளே வருவதைப் பார்த்ததும் பேசிக்கொண்டிருந்தவரைக் கைகாட்டி பேசுவதை நிறுத்தியவர் தன் மனைவியின் மறுபிறப்பாய் வந்து பிறந்திருந்தவளைக் கண்களின் அன்பு பொங்கப் பார்த்தவர் “என்றா அலமு உன்ற பிள்ளையாருக்கு தண்ணீர் ஊத்தி முடிச்சிட்டு வந்துட்டியா?” என்றார்.

“ம்ம்… ஆமாங் தாத்தா” அவளின் அடக்கமான பதிலில் அகிலேஷ் மனதில் அவளின் நடிப்பைப் பார்த்துப் புன்னகைத்தான்.

வெளியாட்கள் முன்னால் மட்டும்தான் அடக்கமான பொண்ணுமாதிரி நடிப்பாள். இதுவே யாருமில்லாமல் அவளுடைய தாத்தா மட்டும் இருந்திருந்தால்,”ஆமா மூர்த்தி, நானும் ஆறுவருசமா  பிள்ளையாரிடம் எப்படியாவது வரம் வாங்கிடலாம்னு பாக்கறேன்.. அவரு மனசு இறங்கி வரம் குடுக்கமாட்டேங்கறாரு நீ வேனா உன்ற பரமசிவனிடம் சொல்லி ரெக்காமென்ட் பண்ண சொல்லேன்…”  என தாத்தாவிடம் வம்பிழுப்பாள்.

சுந்தரமூர்த்தியும், பேத்தி தன்னை மனைவி அழைப்பதைப் போல் மூர்த்தி எனப் பேர் சொல்லி அழைப்பதை அவ்வளவு ரசிப்பார்.

சுந்தரமூர்த்தியும் அலமேலுமங்கையும் அத்தை பொண்ணு, மாமன் பையன். அந்தகாலத்துலையே லவ் மேரேஜ் அலமேலுமங்கை பிறந்தவீட்டை எதிர்த்துக் கொண்டுதான் அவரை கரம் பிடித்தார். சுந்தரமூர்த்தி குடும்பத்துக்கும், அலமேலுமங்கை குடும்பத்துக்கும் இருந்த சின்ன மனஸ்தாபம் இவர்கள் திருமணத்தினால் பெரிய அளவில் பகையாக மாறிவிட்டது. இப்போது சுந்தரமூர்த்தியின் மகள் லலிதாவும் அலமேலுமங்கையின் பிறந்த வீட்டுக்குத்தான் வாழப் போயிருக்கிறாள்.

சுந்தரமூர்த்தி அலமேலுவை விட இரண்டுவருடமே மூத்தவர். அலமேலும் சின்னவயதிலிருந்தே அவரை பேர் சொல்லித்தான் கூப்பிடுவார்.., அலமேலு பிறந்த வீட்டினர் தன்னை ஒதுக்கியதை நினைத்து வருந்தாத நாளில்லை. ஆனால், அந்த வருத்தத்தைக்கூட கணவனிடம் காட்டமாட்டார்.

மனைவி தன் வருத்தத்தைச் சொல்லவில்லை என்றாலும் காதலித்து கரம் பிடித்த காதல் கணவனுக்கு மனைவியின் மனதில் இருப்பது புரியாமலா இருக்கும். மனைவியின் வருத்தத்தைப் போக்க தன் காதலை திகட்டத் திகட்ட மனைவியின் மேல்  காட்டினார் என்றுகூடச் சொல்லலாம்.., அலமேலுவும் கணவனின் காதலில் உருகித்தான் போய்விடுவார்.

அலமேலுவை எதிர்பாராமல் மகள் தன் பிறந்த வீட்டுக்கே மருமகளாகப் போனது அவரை மனதளவில் முற்றிலும் சிதைந்து போகவைத்துவிட்டது. தன்னை தண்டிப்பதாக நினைத்து எங்கு மகளை துன்புறுத்திவிடுவார்களோ என்ற கவலையே அவரை மரணத்தை நோக்கிப் போகவைத்துவிட்டது.. அவர் மகளைப் பற்றி மட்டுமே யோசித்தாரே தவிரத் தன்னை மட்டுமே நேசித்து தனக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் கணவனை நினைக்காமல் போனதுதான் விதியின் விளையாட்டோ???

சுந்தரமூர்த்தி மனைவி படுக்கையில் விழுந்த அன்றே மனதளவில் தனிமைபட்டுப்போயிவிட்டார்….

மனைவியின் இறப்பிற்கு பிறகு முற்றிலும் துறந்து சன்னியாசியாகவே பத்து வருடங்கள் வாழ்ந்தவர். சாவை மட்டுமே எதிர்நோக்கி பரமசிவனை நினைத்துக்கொண்டு தவவாழ்வு வாழ்ந்தார்.., மனைவியின் உருவத்தில் பேத்தியின் வரவுதான் அவரை சன்னியாசியிலிருந்து ஆசாபாசம் உள்ள சாதாரண மனிதனாக மாற்றியது.

அதன்பிறகு பேத்திதான் அவரின் உலகம். அவளுக்காகவே மிச்ச வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

காதல் என்ற ஒற்றை வார்த்தையின் மாயாஜாலம் தான் எத்தனை??? எத்தனை??? காதலால் மட்டுமே உலகில் உள்ள மொத்த சந்தோசத்தையும் தன் இணைக்கு  குடுக்கவும் முடியும். அதே சமயம் குடுத்த அத்தனை சந்தோசத்தையும் அழித்து உயிரைக் கொல்லும் விஷமாக மாறவும் முடியும்.

Advertisement