Advertisement

அத்தியாயம்.7

அன்று சனிக்கிழமை கல்லூரி விடுமுறை என்பதால் அகிலேஷும், ஷர்மியும் வீட்டிலிருந்தனர்.

லஷ்மி, “அடியேய் இப்போ எழுந்து வந்து சாப்டபோறியா இல்லையாடி?”

“எனக்கு ஒன்னும் வேணாம் அந்த பருப்பு சோத்த நீயே கொட்டிக்கோ லச்சு…”

“உனக்கு திமிருடி… எல்லாம் இந்த வூட்டு ஆம்பளைங்க குடுக்கர செல்லம் அதான் தலைகால் புரியாம ஆடிட்டு இருக்க…”

காலையில் ஆரம்பிச்ச சண்டை அம்மாவுக்கும் மகளுக்கும் இன்னும் முடியவே இல்லை.

ஷர்மி கேட்டு அகி வாங்கிட்டுவந்த மட்டன்பிரியாணிய பார்த்ததும் லஷ்மி கோபத்தில் அதைபிடிங்கி தூக்கி எறிந்துவிட்டார். அந்த கோபத்தில் ஷர்மியும் வீம்பு பிடித்துக்கொண்டு காலையிலிருந்து சாப்பிடாமல் அந்த இடத்தைவிட்டு அசையாமல் அமர்ந்திருக்கிறாள்.

லஷ்மிக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அவரின் வேண்டுதலால்தான் குழந்தை இல்லாத அவர்க்கு 12 வருடம் கழித்து மகள் பிறந்துள்ளாள் என்பதை முழுமையாக நம்பினார். அதனாலையே செய்வாய், வெள்ளி, சனி, அம்மாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, பிரதோசம் இப்படி ஒருநாளையும் விடமாட்டார். அந்த நாட்களில் வீட்டில் கண்டிப்பாக அசைவம் சமைக்கவும் மாட்டார். வீட்டாட்கள் வெளியில் சாப்பிட்டு வந்தாலும் அன்னைக்கு கச்சேரி உண்டு., மற்றவர்களெல்லாம் அவரின் நம்பிக்கைக்காக அந்த நாட்களில் சாப்டமாட்டார்கள் ஆனால்,  கோவில் கோவிலாக ஏறி வரத்தினால் பெற்ற அவரின் தவபுதல்வி மட்டும் அம்மாவை வெறுப்பேற்றுவதற்காகவே அந்தநாட்களில் சாப்பிட்டு வருவாள்.

இந்த விஷயத்தில் மட்டும் முருகேசன்  மனைவி மகளுக்கு இடையில் வரவே மாட்டார். அப்படி வந்தால் உருளப்போவது அவரது தலையல்லவா? அதனை நன்றாக உணர்ந்ததால் இன்றும் காத்தாலையே வயலுக்கு போனவர்தான் காலை சாப்பாடு, மதியம் சாப்பாடு ரெண்டுமே தோட்டத்துக்கு கொண்டுவர சொல்லி அங்கையே சாப்பிட்டுக்கொண்டார்.

அண்ணனே தப்பித்து ஓடும்போது அவருடைய தம்பி தமிழரசன் அண்ணன் வார்த்தையை மீறாதவராயிற்றே… அவரும் காலையிலே அண்ணன்கூடவே வயலுக்கு வந்துவிட்டார். அம்மா மகள் சண்டை முடியும்வரையிலும் இருவரும் வீட்டுபக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டார்கள்(பிழைக்கத் தெரிந்தவர்கள்).

இந்து, “அக்கா ஏ இப்படி பிடிவாதம் பிடிக்கறிங்க? ஒருநாள்தானே விடுங்களேன்…”

“நானா பிடிவாதம் பிடிக்கறேன்… இம்புட்டுநாளா நா சொல்றத கேக்காம வெளிலதா சாப்புட்டு வந்துட்டு இருந்தா… இன்னைக்கு நல்லநாளும் அதுவுமா நடுவூட்ல வச்சி சாப்படறேங்றா…  அவளுக்கு நீயும் சப்போர்ட் பண்ணிட்டு ஏங்கிட்ட பேசிட்டு இருக்க?”

“அவ சின்ன புள்ளக்கா… ஆசைப்பட்டா சாப்புட்டுதா போகட்டுமே…”

அகிலேஷ், “ப்ளீஸ் பெரியம்மா… ஆசையா கேட்டா அதான் வாங்கிட்டு வந்தேன்…”

 “விடேன்ம்மா… அலமு பசி தாங்கமாட்டானு உனக்குத்தா தெரியும்ல புள்ள காத்தால இருந்து வெறும் வயித்தோட இருக்கு…” சுந்தரமூர்த்தியும் செல்ல பேத்திக்காக மருமகளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார்.

லஷ்மிக்கும் மகள் சாப்பிடாம இருப்பது ஒருமாதிரி இருக்கவும் பிடிவாதத்தை விட்டு இறங்கி வந்தவர்,

“சரி என்னமோ பண்ணுங்க… ஆனா, கண்ட கருமாந்துரத்த எல்லாம் வூட்டுக்குள்ள கொண்டுவரக்கூடாது. வாசல்லையே வச்சி சாப்புட்டு தலையோட தண்ணி ஊத்திக்கிட்டு வூட்டுக்குள்ள வரமாதிரி இருந்தா வாங்கிட்டு வந்து குடுங்க…”

அவர் ஒத்துக்கொண்டதும் ஷர்மி ஓடிவந்து அம்மாவை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவாறே “தேங்ஸ் லச்சுமா…” என்றாள்.

மகளின் செயலால் இவ்வளவு நேரம் இருந்த கோபம்கூட கரைந்துவிட்டது.  முத்தம் குடுத்த கன்னத்தை துடைத்தவர் “ச்சீசீ… கருமம் கருமம்… என்னடி இதெல்லாம்?” என்றார்.

“அவரை விட்டு சிறிது தூரம் நகர்ந்து நின்றவள் “ஏ லச்சுமா உன்ற புருசன் உனக்கு இதெலாம் தந்ததே இல்லையா? அப்பறம் எப்படி புள்ள பெத்துக்கிட்ட? கேட்டுவிட்டு அவருடைய கைக்கு சிக்காமல்  அகிலேஷை இழுத்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டாள்.

“அடியே வெளக்கமாத்த எடுத்தேன் தோல உரிச்சிப்போடுவேன்…வாய் ரொம்ப நீளுது…”, அவள் கைக்கு மாட்டாமல் வெளியே ஓடிப்போகவும் “திரும்ப வூட்டுக்கு வந்துத்தானே ஆகணும் அப்போ கரண்டிய காயவச்சி நாக்குலையே சூடுபோட்டுவிடறேன்… ” என்று திட்டினார்.

வெளியே ஓடி வந்தவள் “டேய் வெரசா வண்டிய எடுடா உன்ற பெரியம்மா கைல சிக்குனேன் இன்னைக்கு நா காலி…”

“அவனும் வண்டியை எடுத்தவாறே “ஏன்டா ஷர்மி பெரியம்மாவ கோபபடுத்தற? இப்படிலாம் பெரியவங்ககிட்ட பேசக்கூடாதுடா…”

“நானா உன்ற பெரியம்மாவ கோபபடுத்துறேன்? எம்புட்டு பாசமா முத்தம் குடுத்தேன் அதுக்குப்போய் ச்சீசீ… கருமம்ங்து அதான் வெறுப்பேத்தி விட்டேன்…”

“உன்னெல்லாம் திருத்தவே முடியாது ஷர்மி…?”

“நீ திருத்தறதுக்கு நா என்ன பரிட்சை பேப்பறாடா?”

“ஐயோ தெய்வமே ஆளைவிடு… எதோ தெரியாம அட்வைஸ் பண்ணிட்டேன் அதுக்கு இப்படி மொக்கை ஜோக்கெல்லாம் சொல்லி என்னைக் கொல்லாத…”

அவனின் முதுகில் தட்டிவாறே “ம்ம்… அந்த பயம் இருக்கட்டும் கண்ணா…” என்றாள்.

அப்போது எதிரில் சைக்கிளில் வந்த செல்வியை பார்த்ததும் அகிலேஷ் பைக்கை நிறுத்தினான்.

செல்வி மூச்சிரைக்க சைக்கிள் ஓட்டிவந்தவள் அவர்களை பார்த்ததும் பைக்கின் அருகில் வந்து காலை தரையில் ஊன்றி நின்றவாறே “மாமா எங்க போறிங்க?” என்றாள்.

ஷர்மி, “ஏன்டி எருமை போறப்ப எங்க போறிங்கனு கேட்டா அது வெளங்குமா?”

“ஓஓ.. சாரி ஷர்மி நா எதோ பதட்டத்துல கேட்டுடேன்.”

செல்வியின் முகத்தில் இருந்த பதட்டத்தை பார்த்த அகிலேஷ் “செல்வி என்னாச்சு ஏ உன்ற முகமெல்லாம் இப்படி வேத்துருக்கு?”

“உங்க அத்தைக்கு பேச்சு, மூச்சு இல்லாம ஹாஸ்பிட்டல்  தூக்கிட்டு போயிருக்காங்க மாமா…”

“இந்த வூர்ல பாதிபேர் நம்ம சொந்தக்காரங்கத்தான் அதுல நீ எந்த அத்தைய சொல்றனு தெளிவா சொல்லுடி?” என்றாள் ஷர்மி.

“உங்க லலிதா அத்தை ஷர்மி…”

“ஏய் என்னடி சொல்ற? அத்தைக்கு என்னாச்சு…?”

“தெரியலை ஷர்மி சரோஜா அக்காத்தான் அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாங்க அப்பதான் எனக்கே தெரியும். அதான் உங்க வூட்ல சொல்லலாமேனு வந்தேன்.”

அகிலேஷ், “எந்த ஹாஸ்பிட்டல் போயிருக்காங்கனு தெரியுமா செல்வி?”

“அது தெரியலை மாமா… நா கேக்கல?”

“அது விசாரிச்சுக்கலாம் அகி, நீ முதல்ல வூட்டுக்கு போ… தாத்தாவ கூட்டிட்டு போகலாம்”

 “நாம மட்டும் போயிட்டு வரலாம் ஷர்மி… வீட்ல சொன்னா பெரியப்பாவும், அப்பாவும் போகவிடுவாங்ளோ என்னவோ…?”

“லூசாடா நீ… இந்தமாதிரி நேரத்துலதான் நாம எல்லாரும் அத்தைக்கு தேவை… அதலாம் நா பாத்துக்கறேன் நீ பேசாம வா…”

“செல்வி நீ வூட்டுக்கு போயிட்டு அவங்க எந்த ஹாஸ்பிட்டல் போயிருக்காங்கனு விசாரிச்சுட்டு சொல்லு…”

“சரி ஷர்மி நா வூட்டுக்கு போயிட்டு போன் பண்றேன்” என்றவாறே சைக்கிளை திருப்பிக்கொண்டு சென்றாள்.

“டேய் அகி நீ இன்னும் என்னடா யோசிச்சிட்டு நிக்கற… வண்டிய திருப்பு…” என்றவள் வண்டியில் உட்கார்ந்திருந்தவாறே எட்டி தன் அண்ணனின் சட்டை பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து  தந்தைக்கு அழைத்தாள்.

அவர் போனை எடுத்ததும் “அப்பா உடனே சித்தப்பாவ கூட்டிட்டு வூட்டுக்கு வாங்க…” படபடவென பேசினாள்.

“என்னனு சொல்லும்மா இங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு அத முடிச்சிட்டு ஒட்டுக்கா வந்துடறோம்…”

“ஓஓஓ என்னனு சொன்னாத்தா வருவிங்ளோ?” அவளின் வார்த்தையில் அனல் தெரித்தது.

“ஏன்ம்மா இம்புட்டு கோபமா பேசறீங்க? அம்மா எதாவது திட்டிட்டாளா?”

“அப்பா…” ஷர்மி கத்தவும்

 அவர்,”ஷர்மிமா என்னனு விசயத்த சொல்லாம கோபபட்டா எங்களுக்கு என்னம்மா தெரியும்?”

“ம்ம்… நீ எக்கேடோ கெட்டுப்போனு முப்பது வருசத்துக்கு முன்னாடி தலைமுழுகுன உங்க தங்கச்சி சாக கெடக்குதாம்…”

“மகள் சொன்னதை கேட்டதும் முருகேஷனுக்கு கை நடுங்க ஆரம்பித்துவிட்டது. அப்படியே ‘தொப்பென்று’ வரப்பில் அமர்ந்துவிட்டார்.

கொஞ்சம் தூரத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த  தமிழரசு அவரின் செய்கையில் அதிர்ந்துப்போய் அவரின் அருகில் ஓடிவந்து  “அண்ணா என்னாச்சு?” என்றார்.

அண்ணன் இன்னும் போனை காதில் வைத்திருப்பதை பார்த்துவிட்டு அதனை வாங்கி யாரென பார்த்தவர் அதில் மகனின் பேர் இருக்கவும் “சொல்லுடா…” என்றார்.

சித்தப்பாவின் குரல் கேக்கவும் ஷர்மி “லலிதா அத்தைக்கு உடம்பு சரியில்லையாம் சித்தப்பா… நாம ஹாஸ்பிட்டல் போகோணும் உடனே உங்க அண்ணன கூட்டிட்டு வூட்டுக்கு வாங்க சித்தப்பா…” வேகமாக பேசிவிட்டு அவரின் பதிலைக்கூட கேக்காமல் வைத்துவிட்டாள்.

அவள் பேசிமுடிக்கும்போது அகிலேஷ் வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்தவும் சரியாக இருந்தது. இறங்கி உள்ளே வந்தவளை பார்த்த இந்து “என்றாகண்ணு அதுக்குள்ள வந்துட்ட? பிரியாணி வாங்கத்தானே போன?”

“அதலாம் அப்பறம் சொல்றேன் இந்துமா நீங்களும் உங்க அக்காவும் முதல்ல கிளம்புங்க நாம உடனே ஹாஸ்பிட்டல் போகணும்…   அப்பாக்கும், சித்தப்பாவுக்கும் சொல்லிட்டேன் அவங்களும் வந்துடுவாங்க…” படபடவென பேசினாள்.

“என்றா கண்ணு? எதுக்கு ஹாஸ்பிட்டல் போகணும்? ஆருக்கு என்னாச்சு…?”

“லலிதா அத்தைக்கு உடம்பு சரியில்லைனு ஹாஸ்பிட்டல் கூட்டிபோயிருக்காங்ளாம் இந்துமா… நாம உடனே போகணும் நீங்க கிளம்புங்க நா தாத்தாகிட்ட சொல்லி கூட்டிவறேன்.”

“அண்ணிக்கு என்னாச்சுடா கண்ணு…?”

“தெரியலை இந்துமா… செல்விதான் சொன்னா நாம ஹாஸ்பிட்டல் போனாதான் தெரியும்… ஆமா எங்க உங்க அக்கா…?”

“மாட்டுக்கு தீனிபோட கட்டுதரைக்கு போனாங்க கண்ணு…”

“சரி இந்துமா நீங்க உங்க அக்காகிட்ட சொல்லி கிளம்புங்க நா தாத்தாகிட்ட சொல்றேன்…”

“சரி கண்ணு…”

அடுத்த கால்மணி நேரத்தில் மொத்த குடும்பமும் மருத்துவமனையை நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தது.

ஷர்மி தாத்தாவிடம் சொன்னதிலிருந்து அவர் என்ன மனதில் நினைக்கிறார் என்பதை யாராலும் கண்டுபுடிக்கமுடியவில்லை.., முகத்தில் எந்தவித உணர்வையும் காட்டாமல் காரில் வந்துக்கொண்டிருந்தார்…

ஆனால், அவரின் மூத்த மகன் முருகேசனோ முற்றிலும் உடைந்துப்போய் அமர்ந்திருந்தார்.., மகள் சொன்னதிலிருந்து அவரையே அவரால் மன்னிக்கமுடியவில்லை…, சிறுவயதிலிருந்தே தங்கை மேல் அத்தனை பாசம் வைத்திருந்தவர்  திடிரென ஒருநாள் அவள் ஓடிப்போயிவிட்டாள் என்ற அதிர்ச்சிலிருந்து மீள்வதற்குள்ளாகவே  உறவுகள் அனைத்தும் பேசிய வார்த்தைகளால் அவர் அம்மா கட்டிலில் படுத்த படுக்கையாகிவிட்டார். அன்று இருந்த கோபத்தில் மன்னிக்கமுடியவில்லை… அதன்பிறகு அவள் போன வீட்டில் சந்தோசமாக இல்லை என தெரிந்தாலும் போய் பேச ஏதோ ஒன்று தடுக்கவும் இத்தனை வருடங்கள் அமைதியாகவே இருந்துவிட்டார்.., ஆனால், இன்று கூடப்பிறந்தவள் முடியாமல் கிடக்கிறாள் என்றதும் மொத்த ஈகோவும் பாசத்திற்கு முன்னால் தூள்தூளாக சிதறி காணாமல் போயிவிட்டது. 

தங்கைப்பாசமா? ஈகோவா? என்கிற கேள்வி வந்ததும் உடன்பிறந்தவளின் மேல் வைத்திருந்த பாசமே வென்றுவிட்டது.

 நாமக்கல்லில் கொஞ்சம் பெரிய மருத்துவமனை அவர்கள் ஊரிலிருந்து ஹாஸ்பிட்டல் வர சிறிதுநேரம் ஆனது.., காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே சென்று ரிசப்சனில் விசாரித்துவிட்டு ஐசியூ வார்டு இருந்த ப்ளோருக்கு சென்றவர்கள் அங்கு கண்ட காட்சியை ஒருத்தரை தவிர மற்றவர்கள் அனைவரும்  நம்பமுடியாமல் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

இத்தனை நாள் அவர்கள் உண்மையென்று  நம்பிக்கொண்டிருந்த ஒன்று இன்று அவர்கள் கண்முன்னாடியே உடைந்து தூள் தூளானதை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

Advertisement