Advertisement

அத்தியாயம்.6

கொடைக்கானலின் குளுமையை அனுபவித்தவாறே இருள்பிரியும் காலை வேலையில் பால்கனியில் நின்றுகொண்டு தந்தையும் மகனும் காபி குடித்துக்கொண்டிருந்தனர்.

“அடுத்து என்ன ப்ளான் கண்ணா…?”

“ப்ளான் எதுவும் இல்லைப்பா. வீட்டுக்கு போலாம்ப்பா…”

“சரிகண்ணா போலாம்…”

“அப்பா உங்களுக்கு ஏங்கிட்ட எதுவும் கேக்கணும்னு தோனலையா?”

“அப்பாகிட்ட சொல்ற விஷயமா இருந்தா நீயே சொல்லிருப்ப கண்ணா…”

 வெளியே வேடிக்கை பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்தவன் தந்தையின் பதிலில் வியப்புடனே திரும்பி அவரை பார்த்தவாறே “இது என்ன பதில்ப்பா… உங்களுக்கு என்ற மேல கோபமே வராதா…?”

“எதுக்கு கண்ணா கோபப்படணும்? நீ எதாவது தப்பு செஞ்சிட்டியா என்ன? அப்படியே தப்பு செஞ்சிருந்தாலும் அத நீயே தா உணரனும் நா கோபப்பட்டு என்னாகப்போகுது?”

அவரின் தோளின் மேல் கைப்போட்டு அணைத்துக்கொண்டவன் “சான்சே இல்லப்பா நீங்க வேற லெவல்.”

“கல்யாணம் பண்ணி பொண்டாட்டிக்கூட ஹனிமூன் வந்து அனுபவிக்கவேண்டிய வயசுல இன்னொரு ஆம்பளைய கட்டிக்கிட்டு நிக்கறியே உனக்கு வெக்கமா இல்லையா கண்ணா…” அவர் சிரிக்காமல் அவனை கலாய்த்தார்.

“நோ ப்பா… வெக்கம், மானம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டையெல்லாம் நமக்கெதுக்குப்பா… நாம என்ன அப்படியா வளர்ந்துருக்கோம்?”

“அடேய் மகனே உன்றக்கூட என்ன எதுக்குடா கூட்டு சேக்கற? எனக்கு அதெல்லாம் இருக்குடா…”

“அப்படியாப்பா? சொல்லவே இல்லை…?”

அவனின் முதுகில் லேசாக அடித்தவாறே “படவா ராஸ்கல் அப்பாவையே கலாய்க்கற?”

“என்ற அப்பாவ நா கலாயிக்காம வேற ஆரு கலாயிக்கறது ப்பா”

“என்னப்பா நேத்து ஜவுளிக்கடையில அந்த பொண்ண விட்டுட்டே வர மனசில்லாத மாதிரி திரும்பி திரும்பி பாத்துட்டு வந்திங்ளே புடிச்சிருந்தா கூச்சப்படாம சொல்லுங்ப்பா நானே போய் அந்த பொண்ணு வூட்ல பேசறேன் எங்க அப்பாவுக்கு உங்க பொண்ண புடிச்சிருக்குனு…”

அடேய் மகனே உன்ற அப்பா  ஏகபத்தினி விரதன்டா உன்ற அம்மாவ தவிர வேற ஒரு பொண்ண கனவுல கூட நினச்சதில்லடா என்னப்போய் என்ன வார்த்தை சொல்லிபோட்ட…”

இவ்வளவு நேரம் இருந்த இலகுத்தன்மையை முற்றிலும் இழந்தவனாக முகம் இறுக, “அதுதான் எனக்கே தெரியுமே அப்பா அத நீங்கவேற சொல்லனுமாப்பா?” 

அவனின் குரலில் இருந்த மாற்றத்தில் துணுக்குற்றவர் அவனின் மனநிலையை மாற்ற எண்ணி, “எந்த பொண்ண சொல்ற கண்ணா அந்த ஆரஞ்சி கலர் சேலை கட்டிருந்துச்சே அந்த பொண்ணா?”

தந்தையின் எண்ணம் புரிந்தவனாக கோபத்தை விட்டு இயல்புக்கு திரும்பியவன்  “அது இல்லைப்பா…”

வேற எது என யோசித்தவர் “புளு கலர் சுடிதார் போட்ருந்ததே அதுவா கண்ணா?”

“ம்கும் அதுவும் இல்லப்பா…”

“நீயே சொல்லிடு கண்ணா எனக்கு நியாபகம் வரல?

“வெள்ளைகலர்ல ப்ராக் போட்டு பப்புள்ஸ் ஊதிட்டு இருந்துச்சே அந்த பொண்ண சொன்னேம்ப்பா… “

“ஓஓஓ… குட்டி ஏஞ்சலா…?” அதை சொல்லும்போதே அவர் முகத்தில் அத்தனை சந்தோஷம் தெரிந்தது.

“ஆனாப்பா  ஏகபத்தினி விரதன்னு சொல்லிட்டு கரெக்ட்டா சேலை கலர், சுடிதார் கலெரெல்லாம் நியாபகம் வச்சி சொல்றிங்ளே?”

“எப்பவும் நா ஏகபத்தினி விரதன்தான் கண்ணா” ஆனா நா பாத்தது என்ற மகனுக்கு இந்த மாதிரி பொண்ணு இருந்தா நல்லாருக்குமானு…”

“ஏன்ம்ப்பா உங்க மகன் நிம்மதியா இருக்கறது புடிக்கலையா? அப்பத்தா நா சொல்றதை கேக்கமாட்டைங்துனா நீங்களுமா?” அவன் குரலில் சலிப்பு மட்டுமே.

“உனக்கு ஆரு கண்ணா சொன்னா கல்யாணம் பண்ணா நிம்மதி போயிடும்னு?”

“இத வேற ஒருத்தர் வந்து சொல்லனுமாப்பா… அதான் உங்களை பாத்தாவே தெரியுதேப்பா… நீங்க கல்யாணம் பண்ணி என்ன நிம்மதிய கண்டிங்க?”

“நா நிம்மதியா இல்லைனு நீ எப்படி சொல்ற கண்ணா? மனசுக்கு புடிச்ச பொண்டாட்டி… தோளுக்குமேல வளர்ந்தாலும் இன்னமும் அப்பா, அப்பானு என்னையே சுத்திவர ஒரு மகன், எப்பவும் திட்டிக்கிட்டே இருந்தாலும் நா நல்லாருக்கனும்னு மனசார நினைக்கர அம்மா, தூரதேசத்துல இருந்தாலும் எனக்காக கவலைபடற அக்கா இதவிட ஒரு மனசனுக்கு வாழ்க்கையில வேற என்ன சந்தோசம் இருந்துடப்போகுது கண்ணா… உண்மையா சொல்லோணும்னா நா குடுத்துவச்சவன்தான்.”

“மத்த எல்லாமே சரிதான்ப்பா… ஆனா மனசுக்கு புடிச்ச பொண்டாட்டினு மட்டும் சொல்லாதிங்கப்பா? நீங்க சந்தோசமா வாழறிங்கனு சொல்லறத நம்பறதுக்கு நா ஒன்னும் சின்னக்குழந்தை இல்லப்பா… ஆரம்பத்துல வேனா கணவன் மனைவி உறவுனா எப்படினு தெரியாம இருக்கலாம்ப்பா… ஆனா இப்போ எனக்கு முப்பது வயசு ஆகுது.”

“கல்யாணம் பண்றதே வம்சவிருத்திக்காகவும், கணவன் மனைவி இருவருடைய உடல்தேவைய தீர்த்துக்க அங்ககரிக்கப்பட்ட ஒரு உறவு அவ்வளவுதான். உங்க கல்யாணத்துல இது எதுவுமே இல்லையேப்பா? அப்பறம் எப்படி சந்தோசமா இருக்கிங்கனு சொல்லுவிங்க? நீங்க சொல்லலாம் அதான் வாரிசுக்கு நீ இருக்கியே கண்ணானு… நா பொறந்ததே மெடிக்கல் மிராக்கல்தான்…”

“உன்னோட அடிப்படையே தப்பா இருக்கே கண்ணா… கணவன் மனைவி உறவுங்றது வெறும் உடல்தேவையை மட்டும் தீர்த்துக்கறது கிடையாது கண்ணா…   அதையும் தாண்டி காதல், அன்பு, பாசம், விட்டுக்குடுத்து போறது,  இப்படி நிறைய இருக்கு. திருமண உறவுல தாம்பத்தியமும் உண்டுதான் நா இல்லைனு சொல்லல… ஆனா அது மட்டும் வாழ்க்கை இல்லை.”

“உனக்கு ஒன்னு தெரியுமா கண்ணா? நீங்க எல்லாரும் நினைக்கறமாதிரி உங்க அம்மா என்ன விட்டு விலகி நிக்கல? நாந்தான் விலகி நிக்கறேன். அதுவும் அவ ஏங்கிட்ட கேட்ட  ஒரே வார்த்தைக்காக… இப்பவும் அவ எனக்கு தேவைனா நாம்போய் கூப்பிட்டா போதும் எந்தமறுப்பும் சொல்லமாட்டா வருவா…  ஆனா அதுல உயிர்ப்பு இருக்காது… நீ சொல்ற வெறும் உடல்தேவைய தீர்த்துக்கறத்துக்காகதான் இருக்கும். அது எனக்கு தேவையில்லை…”

 “நா ஒன்னும் சன்னியாசி கிடையாது கண்ணா… எனக்கும் எல்லா ஆசையும் இருக்கு அதையும்விட உங்க அம்மா மேல ஏகப்பட்ட காதல் இருக்கு.  ஆசையா? காதலானு பார்த்தா காதல்தான் பெருசு… காதலுக்காக எதையும் விட்டுக்குடுக்கலாம்.”

“என்னமோ போங்கப்பா உங்க காதலும் புரியலை, கல்யாணமும் புரியலை… என்ன இப்படியே விட்ருங்க நா சந்தோசமா வாழோணும்னு ஆசைபடறேன்.”

மகனின் பதில் அவரை பயமுறுத்தியது. அதற்குமேல் எதுவும்பேசாம முடியாமல் அமைதியாகிவிட்டார்.

அவரின் அமைதி அவனையும் கொன்றது. அப்பா எதாவது சொல்லுங்ப்பா ஏ பேசாம இருக்கிங்க?”

“என்ன கண்ணா பேச சொல்ற? என்னோட சந்தோசமே நீதான்… எல்லா அப்பா மாதிரி நானும் உனக்கு கல்யாணம் பண்ணி பேரன் பேத்தியோட கடைசிகாலத்த வாழ்ந்து முடிக்கோணும்னு ஏகப்பட்ட கனவு கண்டுருக்கேன்… ஆனா, அது அத்தனையும் வெறும் கனவுனு நீ இப்போ சொன்னதும்தான் புரியுது கண்ணா…” அவரின் குரலில் அத்தனை வருத்தமிருந்தது.

அவரின் வருத்தம் அவனையும் பாதித்தது. “ஏப்பா இப்படிலா பேசறிங்க? இப்போ என்ன நா கல்யாணம் பண்ணிக்கோணும் அம்புட்டுதானே நா பண்ணிக்குறேன் போதுமாப்பா?”

“இன்னொருத்தர்க்காக கல்யாணம் பண்ணிக்ககூடாது கண்ணா… அது உனக்கு மட்டுமில்லாம வர போர பொண்ணுக்கும் நீ செய்யற துரோகம். உனக்கு புடிச்சா மட்டும்தான் அப்பாவுக்காக வேண்டாம்…”

“சரிப்பா எனக்கு புடிச்ச பொண்ணா பாருங்க நா பண்ணிக்குறேன்”

“நெசமாவா கண்ணா … அப்பறம் மனசு மாறமாட்டியே?”

“நா உங்க மகன்ப்பா சொன்ன வார்த்தையையும் குடுத்த வாக்கையும் மாத்தமாட்டேன்…”

“தேங்ஸ்டா கண்ணா…” அவரின் முகத்தில் அத்தனை சந்தோசம்.

“அவரின் மகிழ்ச்சியை பார்த்தவன் ‘உங்க சந்தோசத்துக்காக நா எதவேனாலும் செய்வேன்ப்பா…’ மனதில் நினைத்துக்கொண்டான். 

மகன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டதும் அவரின் மனதில் ஷர்மிதான் நினைவு வந்தாள். அப்போதுதான் நேத்து அவ பேசிய அத்தனையும் நினைவு வந்தது.

 “கண்ணா நேத்தே கேட்டேன் நீ ஒழுங்கா பதில் சொல்லாம மழுப்பிட்ட? ஷர்மி பொண்ணு ஏ அப்படி சொல்லுச்சு? உன்ன அந்த பொண்ணு லவ் பண்ணுதா?”

“அப்படித்தான் சொல்லிட்டு திரியராப்பா?”

“என்ன கண்ணா சொல்ற?  உனக்கு அந்த பொண்ண புடிச்சிருக்கா?”

“எந்த ஆம்பளைக்குதான் தன்னை மாமா மாமானு சுத்தி வர முறைப்பொண்ண பிடிக்காம இருக்கும்…? எனக்கும் அவள புடிக்கும் ஆனா அது நீங்க நினைக்கரமாதிரி காதல் கிடையாது…”

“அவ நேத்து என்ன சொன்னானு தெரியுமாப்பா… நா அவளை கண்ணாலம் பண்ணிக்கலைனா பஞ்சாயத்த கூட்டி என்னோட குழந்தை அவ வயித்துல வளருதுனு சொல்லுவாளாம்.., அரையடி உசரத்துல இருந்துகிட்டு என்ன பேச்சு பேசறா தெரியுமாப்பா… அவ பேசறத கேட்டிங்னா நீங்களே அசந்துப்போயிடுவிங்க…” 

மகனின் முகத்தில் வந்துப்போன ரசனையான உணர்வுகளை பார்த்தவாறே மனதில் ஒரு முடிவெடுத்துக்கொண்டு  “அந்த பொண்ணையே உனக்கு பேசிமுடிச்சிடலாமா கண்ணா?” என்றார்.

“வேணாம்ப்பா…”

“ஏங்கண்ணா… உனக்குதா அந்த பொண்ண புடிச்சிருக்கே?”

“ம்ம்… புடிச்சிருக்குத்தான்ப்பா ஆனா அந்த வீட்டு பொண்ணு வேணாம்ப்பா…”

“உங்களுக்கு ஒன்னு தெரியுமாப்பா? இத்தனை நாளா எனக்கு வர வரனையெல்லாம் கலச்சிவிட காரணமா இருந்தது ஆருனு தெரியும்ங்ளாப்பா…?

“நேத்து வரைக்கும் நீதா பண்றேனு நினச்சிட்டு இருந்தேன்… ஆனா, நேத்து அந்த பொண்ணு சொன்னதும்தான் அதுக்கு காரணம் நீ இல்லை  புரிஞ்சது…”

“அவ மட்டும் இல்லப்பா…”

“அகிலேஷ்…?”

“அவன் இல்லாம உங்க மச்சினன் மகள் எதையுமே செய்யமாட்டாப்பா… அவங்களுக்கு பின்னாடி ஒரு ஆள் இருக்குப்பா அவங்க பேர சொன்னா நம்பமாட்டிங்க…”

“என்ன கண்ணா சொல்ற? ஆரு அது…?”

“உங்க மாமனார்…”

மகனின் பதிலை கேட்டு நம்பமுடியாமல் பார்த்தார்.

“என்னப்பா நம்பமுடியலையா…?”

“உனக்கு எப்படி தெரியும் கண்ணா?”

” அப்பத்தா ஜாதகம் பாக்கற ஜோசியரும், உங்க மாமனாரும் ப்ரண்ட்ஸ்… இப்போ புரியுதுங்ளாப்பா?”

“அப்பத்தா வர பொண்ணு ஜாதகத்த அவர்கிட்டத்தா குடுத்து பாத்துட்டு இருக்காங்க…  உங்க மாமனாரும் அவர்ட்ட அந்த அளவுக்கு ஏம்மேல பாசம் இருக்கமாதிரி காட்டிவச்சிருக்காரு அதுல நம்பி உங்க பேரனுக்கு இந்த ஜாதகம் பொருந்தியிருக்குனு பொண்ணுவிட்டு அட்ரஸ் முதல்கொண்டு எதார்த்தமா சொல்லிடுவார். இவரும் அவர்ட்ட நல்லவர்மாதிரி பேசிட்டு பேத்திகிட்ட சொல்லி பேரனும் பேத்தியும் ஆள்வச்சி பொண்ணுவிட்டுக்காரங்ககிட்ட நம்ம குடும்பத்த பத்தி தப்பு தப்பா  சொல்லி கலச்சி விட்றது. அதையும் மீறி ஒன்னு ரெண்டுபேர் நம்ம வூர்க்கே வந்து விசாரிச்சாலும் ஊர்ல உள்ளவங்களும் நாம உங்க பொண்டாட்டிய கொடுமைபடுத்தரோம்ன்னு தானே நம்பராங்க. அதையே அவங்க கேட்டதும் சொல்லிடறாங்க  அத நம்பி வரவங்களும் திரும்பி போயிடறாங்க.”

மகன் சொன்னதை கேட்டு வருத்தம் வந்ததை விட சந்தோசமே வந்தது. மாமனார்க்கு தன் மகன்மேல பாசம் இருக்கு என்று தெரிந்ததும்… “மாமா உன்ன பேரனா ஏத்துகிட்டாரா கண்ணா…”

Advertisement