Advertisement

“அது எனக்கு தெரியாதுப்பா ஆனா, பேத்தி ஆசைபட்ட வாழ்க்கைய அமைச்சி குடுக்கனும்ங்றதுல தெளிவா இருக்கார்.  நா இந்த ஜென்மத்துல அந்த வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்ங்றது பாவம் அவர்க்கு தெரியலைப்பா… பேத்திக்கு புடிச்ச வாழ்க்கைய அமைச்சிக்குடுக்க முடியலைனு அவரும், நீங்க அனுபவிச்ச வலிய அந்த குடும்பமும் அனுபவிப்பாங்கப்பா… கண்டிப்பா அனுபவிப்பாங்க…”

“கண்ணா என்ன பேசற நீ? என்னோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு அவங்க காரணம் கிடையாது கண்ணா… அந்த வயசுல நானும் உன்னோட அம்மாவும் அவசரபட்டு எடுத்த முடிவுனால ஒரு உயிர் போயிடுச்சு.”

” உங்க பொண்டாட்டினு சொல்லுங்ப்பா…”

“அடேய்…” அவரால் பல்லை மட்டுமே கடிக்கமுடிந்தது. மற்ற விசயத்தில் எல்லாம் அவர் சொல்வதை தட்டாமல் கேட்பவன் அம்மா விசயத்தில் மட்டும் பிடிவாதம்.

“சும்மா சும்மா உயிர் போயிடுச்சுனு சொல்லாதிங்ப்பா… அவங்களே அந்த இழப்பை மறந்துட்டு நல்லாதா வாழ்ந்துட்டு இருக்காங்க உங்கள மாதிரி அங்க ஆரும் வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்கல?”

“ஏங்கண்ணா புரிஞ்சிக்க மாட்டேன்ங்ற… என்னோட வாழ்க்கை முடிஞ்சிபோச்சு… ஆனா, உன்னோட வாழ்க்கை இனிதான் ஆரம்பிக்கவே போகுது. நம்மல உசுரா நினைக்கற வாழ்க்கை துணை கிடைக்கறது வரம் கண்ணா அத உன்னோட கோபத்தால கெடுத்துக்காத…”

“அத நா பாத்துக்குறேன்ப்பா நீங்க கிளம்புங்க வீட்டுக்கு போலாம்” அவரின் பேச்சை கேக்க விருப்பமில்லாமல் அறைக்குள் நுழைந்தவன் துண்டை எடுத்து தோளில் போட்டவாறே குளிக்கச்சென்று விட்டான்.

‘நீ நினைக்கறது நடக்கவிடமாட்டேன் கண்ணா… நா முடிவுபண்ணிட்டேன் அவதான் நம்மவீட்டு மருமக… இத நடத்த நா எதவேனாலும் செய்வேன்.’ என்று மனதிற்குள் உறுதி எடுத்துக்கொண்டார்.

சிறிது நேரம் அங்கையே நின்றவர் பின் மகன் குளித்து வந்ததும் தானும் குளிக்கசென்றார்.

கொடைக்கானலில் இருந்து காலை ஆறு மணிக்கு  புறப்பட ஆரம்பித்தவர்கள் இடையில்  தாராபுரத்தில் ஒரு ஹோட்டலில்  சாப்பிட்டு முடித்ததும் திரும்ப பைக் பயணம். 

“அப்பா என்ன நம்ம ஆபிஸ்கிட்ட இறக்கிவிட்ருங்க”

“ஏங்கண்ணா வூட்டுக்கு வந்துட்டு செத்தநேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்ல… அதான் ரமேஷ் இருக்கான்ல”

“ரெஸ்ட் எடுக்க எல்லாம் நேரமில்லைப்பா ஏகபட்ட வேலை கிடக்குது… ஆடிட்டர்க்கு வேற கணக்கு குடுக்கணும்.”

“வேலை அதிகமா இருந்தா சொல்லு கண்ணா நானும் வரேன்…”

“அதலாம் வேணாம்ப்பா நானே பாத்துக்குவேன் நீங்க வீட்டுக்கு போங்க…” என்றவன் அவர்கள் ஆபிஸ் வந்ததும் இறங்கிக்கொண்டான்.

“மகனை இறக்கிவிட்டு வீட்டிற்கு வந்தவர் வெயிலில் வந்தது களைப்பாக இருக்கவும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார்.

அவரின் விழிகள் தன்னவளைத்தான் தேடியது. நேற்று மனைவியிடம் கோபமாக பேசிச்சென்றபோது உயிரற்ற பார்வையால் தன்னை வெறித்த மனைவியின் முகமே மனதில் வந்துக்கொண்டிருக்கிறது. தன்னவளை பார்த்துவிட்டால் அவரின் மனதின் வலி குறையுமோ என்னவோ? ஆனால், அவரின் மனையாளோ சுயநினைவே இல்லாமல் அந்த  அறையின் சுவர் ஓரத்தில் சாயிந்து கிடப்பதை அறியாமல் சமையலறையின் வாயிலை பார்த்தவாறே அமர்ந்திருந்தார்.

கணவன் மனைவி இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லையென்றாலும் கணவனுக்கான தேவைகளில் உடல் தேவையை தவிர வேற எதிலும்  குறை  வைத்ததில்லை அவரின் மனையாள்.., அவருக்கும் இதையாவது செய்கிறாளே என்ற நிம்மதி. 

மற்ற நாட்களாக இருந்தால் அவர் களைத்த முகத்தை பார்த்த அடுத்த சில நிமிடங்களிலே அவருக்கு பிடித்த சுவையில் இஞ்சி டீ வந்திருக்கும். ஆனால் இன்று வந்து பத்து நிமிடம் ஆகியும் மனைவியை காணாததால் ‘என்னாச்சு லதாமாவுக்கு நா நேத்து பேசுனதுல கோபமா இருக்காளா? ஆனா என்ற லதாமாவுக்கு கோபமே படத்தெரியாதே?’ மனம் யோசிக்க ஆரம்பித்தது. 

அப்போதுதான் உள்ளே வந்த அப்பத்தா மகனை பார்த்ததும் பிடித்துக்கொண்டார்.  “அப்பனும் மகனும் என்னடா நினச்சிட்டு இருக்கிங்க? சொல்லாம,கொள்ளாம எங்கடா போய் தொலைஞ்சிங்க? இங்க ஒரு பெரியமனுசி வூட்டுல இருக்காளே அவகிட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு போவோணும்னு தோணுதா? நெனச்சா அப்பனும் மகனும் கிளம்பிடறிங்க? இங்க நாந்தா நீங்க வரவரைக்கும் உசுர கையில புடிச்சிட்டு இருக்கேன். எனக்கு வயசாகிபோச்சுடா…  உங்களை நினச்சே பாதி உசுரு போயிடுச்சு. உனக்கு ஒரு நல்லது பண்ணமுடியலைங்ற கவலையே என்ன கொல்லாம கொல்லுது.., இப்போ உன்ற மகனும் உன்னமாதிரியே இருந்துருவானோனு நினைச்சா ராத்திரி எல்லாம் தூக்கமே வரமாட்டைங்து.

அவரின் பலநாள் கவலை எல்லாம் வார்த்தைகளாக கொட்ட ஆரம்பித்தார். பாவம் அவரும்தான் என்ன பண்ணுவார் கோபபட்டு கத்தியும் பார்த்துவிட்டார், கெஞ்சியும் பார்த்துவிட்டார் மகன் எப்படி பிடிவாதமாக நின்றாரோ அதேபோல் பேரனும் பிடிவாதத்தின் மறு உருவமாக நிற்கிறான்.

“ப்ளீஸ்ம்மா வந்தவுடனே ஆரம்பிக்காதிங்க… தலைவலிக்குது…”

“ஆமாடா நா பேச ஆரம்பிச்சாவே உனக்கும் உன்ற மகனுக்கும் தலைவலிக்க ஆரம்பிச்சிடும்…” திரும்பவும் அவரின் ஆதங்கத்தை கொட்ட ஆரம்பித்தார்.

அவர் பேசி முடிக்கும் வரையிலும் அமைதியாக இருந்தவர் எதாவது சொன்னால் திரும்பவும் ஒரு பஞ்சாயத்து ஆரம்பித்தாலும் ஆரம்பித்துவிடுவார் என்பதால் தாயை சமாதான படுத்த முனைந்தார்.

“அம்மா இப்போ என்ன உங்க பேரனுக்கு கண்ணாலம் ஆகனும் அம்புட்டுதானே?” 

“ம்ம்… வேற என்னடா எனக்கு ஆசை…”

“அப்போ நாளைக்கே என்ற மாமனார் வீட்டுக்கு போவோம்…”

மகன் சொன்னது புரியாமல் “உன்ற மாமனார் வீட்டுக்கு போறதுக்கும் என்ற பேரனுக்கு கண்ணாலம் ஆகறதுக்கும் என்னடா சம்பந்தம்? அதுவுமில்லாம உன்ற மாமனார் வீட்டுக்கும் நமக்கும்தா பேச்சுவார்த்தையே இல்லையேடா?”

“சம்பந்தம் இருக்கும்மா… உன்ற பேரனுக்கு கண்ணாலம் ஆகனும்னு ஆசைப்பட்டினா என்ற மாமனார் வீட்டுக்கு போய் பொண்ணு கேட்டுதா ஆகனும். உன்ற பேரன் மனசுல என்ற மச்சானோட பொண்ணுதான் இருக்கா… அவள தவிர வேற ஒரு பொண்ண உன்ற பேரன் கட்டமாட்டான்.”

“அவருக்கு இப்போதுதான் புரிந்தது… ” ரகு அந்த வாயாடிய தான் காதலிக்கரானாடா…?”

“ம்ம்… ஆமாம்மா…”

“இத முன்னாடி சொல்லிருந்தா நா அவங்க கால்ல கையில விழுந்தாவது என்ற பேரனுக்கு கண்ணாலம் பண்ணிவச்சிருப்பேனேடா…”

“பக்கத்துலையே பொண்ணவச்சிட்டு நா ஊர் ஊரா என்ற பேரனுக்கு பொண்ணு தேடிட்டு இருந்துருக்கேன்…” அவரின் முகத்தில் பேரனுக்கு கண்ணாலம் ஆகப்போவது என தெரிந்ததும் அத்தனை சந்தோசம்.

அம்மாவின் மகிழ்ச்சி அவரையும் தொற்றிக்கொண்டது.  அதே மகிழ்ச்சியுடன் “எங்கம்மா லதாமாவ காணாம்?” கேட்டார்.

“என்னடா அதிசியமா பொண்டாட்டிய பத்தியெல்லாம் கேக்கற?”

“இதுல என்னம்மா அதிசியம் அவ என்ற பொண்டாட்டி… அவளை பத்தி நான் கேக்காம வேற ஆரு கேப்பாங்க?”

“ம்க்கும்… இதுக்கும் ஒன்னும் குறைச்சலில்லை ஒழுங்கா அவளை வச்சி குடும்பம் நடத்திருந்தா நானும் சந்தோஷப் பட்டு இருப்பேன்…”

“இப்பவும் அவளோடதானேம்மா குடும்பம் நடத்தறேன்…”

“எது நீ ஒரு ரூம்லையும் அவ ஒரு ரூம்லையும் இருக்கறதுதான் குடும்பம் நடத்தற லட்சனமாடா…? என்ற வாய கிளறாதடா எதாவது பேசிப் போட போறேன்.”

அவர்க்கு மட்டும் ஆசையில்லையா என்ன? காதலிச்சவளே மனைவியாய்… அழகு சிலையாய் கண்முன்னாடி வலம்வருபவள்… அவளுடன் தொட்டு உறவாடி முடிவில் அவளை மார்பில் அணைத்துக்கொண்டு தலைகோதி உறங்க வைக்கவேண்டும்… செல்ல செல்ல சீண்டல்களால் தன்னவள் நாணத்துக்கும், கூச்சத்துக்கும் இடையில் போராடுப்பபோது தன் கைவளைவில் கொண்டுவந்து அவளின் நாணத்தை ரசிக்கவேண்டும்.தாய்மை பூரிப்பில் இருப்பவளை இன்னொரு தாயாய் மாறி சேவை செய்யவேண்டும்.  தன்னவள் தன் உயிரில் உருவான உயிரை பிரசவிக்க வலியில் துடிக்கும்போது அவளின் கையை இறுகபற்றிக்கொண்டு அவள் உடல்வலியில் அனுபவிக்கும் வலியை தான் மனதளவில் அனுபவிக்கவேண்டும்.., தன் மொத்த காதலையும் கொட்டி தன்னவளை திக்குமுக்காட வைக்கவேண்டும்.., மனம் பாரமாக இருக்கும்போது அவளின் மடியில் படுத்து ஆறுதல் தேடவேண்டும்.., பின் அவளின் மடியிலே படுத்து  மெல்லியவிரல்களால் தலை கோத அந்த சுகத்தில் துயில் கொள்ளவேண்டும்.., தன்னவளுக்கு எல்லாமுமாய் தானே இருக்கவேண்டும்.., இறுதியில் அவளின் உயிர் பிரிந்த அடுத்தநொடி தன்னுடைய உயிரும் பிரிய வேண்டும் எத்தனை எத்தனை ஆசைகள்., ஆனால், அது அத்தனையும் வெறும் கனவாய் போனதை யாரிடம் சொல்வார்.

 விதி என்னும் கோரம் அவரின் வாழ்வை திசை தெரியாமல் மாற்றிவிட்டதே… மகனின் முகம் வாடவும், “சரி உடனே மூஞ்சிய தூக்காத நீ போனதுல இருந்து ஓ பொண்டாட்டி அந்த அறைக்குள்ளையேதா அடைஞ்சிகிடக்கறா… ராத்திரி நானும் கோபத்துல அவள கண்டுக்கல காத்தால மனசு கேக்காம போய் சாப்ட கூப்ட்டேன் அசையவே இல்லை சிலை மாதிரி உட்கோர்ந்துருந்தா…ரெண்டுமுறை கத்திக்கூப்டதுக்கப்பறம்  என்ன வெறிச்சி பாத்துட்டு திரும்ப போட்டோவ பாக்க ஆரம்பிச்சிட்டா…”

“என்னம்மா சொல்ற? நேத்து  இருந்து சாப்டாம இருக்காங்றத இம்புட்டு அசால்ட்டா சொல்ற? சரி மதியமாவது சாப்ட குடுத்தியா இல்லையா?” கோபத்தில் கத்திவிட்டு எழுந்து மனையாளின் அறைநோக்கி சென்றார்.

“ஏங்கிட்ட ஏன்டா கத்தற? வயசான காலத்துல நா எத எததான்டா பாக்கறது. உம்பொண்டாட்டி பாதிநாளு விரதம் இருக்குறேனு பட்டினியாதா கிடப்பா… சரி அதேபோல இப்பவும் இருக்காளோனு நினைச்சி விட்டுட்டேன்., அப்படி இருந்தும் மனசு கேக்காம அவமேல இருந்த கோபத்தெல்லாம் விட்டுட்டு போய் சாப்ட சொல்லி கேட்டேன்.. ஆனா, அவ என்ன ஒரு மனுசியாக்கூட மதிக்கல…” அவரும் பேசிக்கொண்டே மகனின் பின்னால் சென்றார்.

அறைக்கு சென்றவர் தன்னவள் இருந்த கோலத்தை பார்த்ததும் அங்கையே நொறுங்கிவிட்டார். விழிகளில் அவரையறியாமலே கண்ணீர் தடம் பதித்தது.

புகைப்படத்தை பார்த்தவாறே அமர்ந்திருந்த லலிதா மயங்கிய நிலையில் அப்படியே போட்டோவை அணைத்துக்கொண்டே சரிந்துகிடந்தாள்.

மகனின் பின்னால் வந்த பொன்னுதாயி மருமகளின் நிலையை பார்த்ததும் அவளின் மேல் இருந்த கோபமெல்லாம் போய் “ஐயோ என்னடா ஆச்சு இவளுக்கு இப்படி கெடக்கறா…?” என பதறியவாறே அறைவாயில் அதிர்ந்துப்போய் நின்ற மகனை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றவர் கீழே தரையில் அமர்ந்து மருமகளின் தலையை தூக்கி மடியில் வைத்து கன்னத்தை தட்டி எழுப்பினார்… 

மருமகள் கண்முழிக்காமல் இருக்கவும்  செம்பில் இருந்த நீரை எடுத்து முகத்தில் தெளித்து எழுப்ப ஆரம்பித்தார்.

எந்த அசைவும் இல்லாமல் கிடப்பவளை பார்த்தவரின் மூளை எதோ ஒன்றை அறிவுறுத்தவும்.., மனம் பதற அவரின் கை நடுங்க மருமகளின் நாசியின் அருகில் விரலை வைத்து பார்த்தார்.

அவர் அறிவு சொன்னதைபோல் இல்லாமல் மூச்சுக்காற்றை உணர்ந்ததும் மனம் நிம்மதியாக அறைவாயில் தன்னை மறந்து மனைவியை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த மகனை பார்த்து “டேய் ராம் என்னடா அப்படியே இடிஞ்சிப்போய் நின்னுட்ட வாடா வந்து மருமகள தூக்கு ஹாஸ்பிட்டல் போவோம்…” என கத்தினார்.

அவரின் கத்தலில் சுயநினைவு வந்ததும் மனைவியின் அருகில் வந்து அவரை தூக்க முயன்றவரால் கைகளும்,கால்களும் நடுங்கியதால் முடியாமல் போகவும் “என்னால முடியலைம்மா…” குரலும் நடுங்க கூறினார்.

“டேய் வெரசா தூக்குடா இல்லைனா உம் பொண்டாட்டிக்கு எதாவது ஆகிடப்போகுது…”

அம்மாவின் வார்த்தை அவரின் மூளையை சென்றடையவும்  ‘என்ற லதாமாவுக்கு எதுவும் ஆக விடமாட்டேன்…’ மனதில் கூறிக்கொண்டு அதே பிடிவாதத்துடன் மனையாளை தன்கைகளில் ஏந்திக்கொண்டார்.

அவர் லலிதாவை தூக்கியதும் அவளின் கைகளில் வைத்திருந்த போட்டோ நலுவி கீழே விழுந்தது. போட்டோ கீழே விழவும் என்வென்று பார்த்தவர் போட்டிவில் இருந்த உருவத்தை பார்த்ததும் மனைவியின் காதல் அவரை ஒரு நொடி தடுமாற வைத்தது. பின் அவளின் நிலை கண்டதும்  தன்னவளை காப்பாத்தவேண்டும் என்ற நினைவு மட்டுமே… கார் வரையும் சென்றவர் பொன்னுதாயி கதவை திறந்துவிட்டதும் மனைவியை ஒரு குழந்தையைபோல படுக்கவைத்துவிட்டு அம்மா ஏறியதும் காரை எடுத்தார்., கார் மருத்துவமனையை நோக்கி பறந்தது.

அவர்களின் எதிர் வீட்டில் இருந்த பெண்மணி  சத்தம் கேக்கவும் வெளியே வந்து பார்த்தவரின் விழிகளின் ராம் லலிதாவை தூக்கிசெல்லும் காட்சியும் பொன்னுதாயி அழுதுக்கொண்டே சென்ற காட்சியை கண்டதும் அடுத்த நொடி பக்கத்து வீட்டுகாரங்களிடம் அவரோட கற்பனையும் கலந்துகட்டி சொல்ல சென்றுவிட்டார். அது இந்துவின் அண்ணன் குடும்பத்திற்கும் தெரியவர செல்வி தன் அத்தை விட்டுக்கு ஓடினாள்.

Advertisement