Advertisement

அத்தியாயம்.5

வீட்டிற்கு வந்த ஷர்மி செருப்பை வாசலில் ஒழுங்காகக்கூட கழட்டிபோடாமல் மூலைக்கு ஒன்னு எறிந்துவிட்டு உள்ளே வந்தவள் பேக்கை கழட்டி கட்டிலில் போட்டவாறே மூஞ்சியை தூக்கிவைத்துக்கொண்டு அமர்ந்தவள் தன் அம்மாவிடம்  “லச்சுமா சாப்ட எதாவதுக்குடு ரொம்ப பசிக்குது…” என்றாள்.

“முதல்ல போய்  கைகால் கழுவிட்டு வாடி…”

“அதலாம் அப்பறம் பண்ணிக்குறேன் லச்சுமா… நீ சாப்ட எதாவது குடு பசில கண்ணக்கட்டுது…”

இந்து, அவளின் செய்கையை பார்த்து சிரித்தவாறே “ஏங்கண்ணு நீ மட்டும் தனியா வந்துருக்க அகி எங்க…?” என்றார்.

  “இந்துமா நா உங்க மகன் மேல செம்ம கோபத்துல இருக்கேன் இனிமே அவனபத்தி என்றக்கிட்ட கேக்காதிங்க…” 

“ஏங்கண்ணு என்னாச்சு…? ரெண்டுபேரும் சண்டை ஏதும் போட்டுகிட்டிங்ளா..?”

“சண்டையெல்லாம் போடலை இந்துமா… இன்னைக்கு என்ன தனியா அனுப்பிவச்சிட்டான் எருமை… பசி வேற … அந்த எருமைமாடு கூட்டிவந்துருந்தா எதாவது வாங்கிக்குடுத்து கூட்டி வருவான்… அவன் வராததால பசியோடையே பஸ்டாப் வந்தா நம்மூர்க்கு வர தகரடப்பா வண்டி அரைமணிநேரம் லேட்டா வருது…” இவ்வளவு நேரம் இருந்த கோபத்துடன் பொறிந்தாள்.

மகளுக்கு முறுக்குடன் டீப்போட்டு எடுத்துக்கொண்டு வந்த லஷ்மி “ஏன்டி கழுத இப்போ அவன எதுக்குடி திட்ர…அவன் என்ன உன்னமாதிரி பெஞ்ச தேய்க்கவா காலேஜ் போறான்…? மாசம் ஆனதும் சம்பளம் வந்தவுடனே அவன்கிட்ட அத வாங்கிக்குடு இத வாங்கிக்குடுனு என்ற தங்கம் கஷ்டபட்டு சம்பாதிச்ச காச   எல்லாம் காலிபண்றியே அது எங்க இருந்து வருதாம்…அவன் உழைக்கறதாலதான்டி வருது.”

“அதானே பாத்தேன் எங்கடா  இன்னும் மகனுக்காக வரிஞ்சிக்கட்டிக்கிட்டு வரலையேனு… நானும் காலேஜ் போகலைனுதா சொல்றேன் லச்சுமா… ஆனா, உன்ற மகன்தான் பொம்பளை புள்ளைக்கு படிப்பு ரொம்ப முக்கியம்னு அட்வைஸ் ஆ பண்ணி உசுர வாங்கறான்.”

அவள் தலையில் நங்கென்று கொட்டியவர் “காப்பிய குடிச்சிட்டு போய் வேலைய பாருடி… எப்பப்பாரு அவனையே குறை சொல்லிட்டு திரியவேண்டியது…” என்றுவிட்டு சென்றார்.

தலையை தேய்த்துக்கொண்டே ” வளர்ற புள்ள தலைல கொட்டி கொட்டியே என்ன வளரவிடாம பண்ணிட்ட லச்சுமா…இந்த பாவமெல்லாம் உன்ன சும்மாவிடாது சொல்லிபுட்டேன்.” 

 சமையலறையிலிருந்து கரண்டி பறந்து ஹாலுக்கு வந்ததை பார்த்தவள், ‘ஆத்தி லச்சு செம்ம கோபத்துல இருக்கும்போல…அடியேய் ஷர்மி எஸ் ஆகிடுடி…’ என தனக்குத்தானே பேசிக்கொண்டே டீயில் முறுக்கை போட்டு குடித்துவிட்டு  எழுந்து தோட்டத்திற்கு ஓடிவிட்டாள்.

அன்று இரவு சென்னையிலிருந்து வந்த மகேஷ் தன் அத்தை வீட்டுக்கு வந்திருந்திருந்தவன் மொட்டைமாடியில் அகிலேஷுடன் பேசிக்கொண்டிருந்தான்.

அவன் முகத்தில் தெரிந்த வாட்டம் அகிலேஷை யோசிக்கவைத்தது.

“டேய்…  என்னடா ஆச்சு வந்ததுல இருந்து சோகமாகவே இருக்க? ஆபீஸ்ல எதாவது பிரச்சனையா…?”

“ம்ம் பிரச்சனைதான் ஆனா அது ஆபிஸ்ல இல்லைடா  லைப்லதான்…”

“என்னடா சொல்ற? புரியலை?”

“வினோ அவங்க அப்பாகிட்ட எங்க லவ்வ சொல்லிட்டா…”

“நல்லவிசயம்தானேடா… அதுவுமில்லாம இது என்னைக்கா இருந்தாலும் வீட்ல சொல்லித்தானேடா ஆகனும்…”

“ம்ம்ம்…” அவன் சுரத்தே இல்லாமல் ‘ம்ம்’ கொட்டினான்.

” சரி அவங்க அப்பா என்ன சொன்னாரு…?”

“அவரு ஓகே சொல்லிட்டாருடா…”

“கங்ராட்ஸ்டா…” சந்தோசத்தில் நண்பனை கட்டிக்கொண்டான் அகி.

 மகேஷின் முகத்தில் சந்தோசமில்லாமல் இருக்கவும் “டேய் உன்ற முகத்துல சந்தோசத்தையே காணாம்? என்னடா ஆச்சு?”

“அவரு என்ன அப்பா, அம்மாவோட வீட்ல வந்து பொண்ணு கேக்க சொல்றாரு டா… நா எப்படி அப்பாகிட்ட சொல்லுவேன்? உனக்குத்தா தெரியும்ல நம்ம வீட்டு ஆளுங்க மனசுல என்ன இருக்குனு?”

“ஆனா ஷர்மி மனசுல அந்த ஆசை இல்லையே மகேஷ் அப்பறமென்னடா…?”

 “அது நமக்கு மட்டும்தானேடா தெரியும்.”

அகிலேஷ்க்கு நண்பன் சொல்ல வருவது புரிந்தது.

” இப்ப போய் நா என்னோட காதல சொன்னேனா நம்ம ரெண்டு குடும்பத்துக்குள்ளையும் பிரச்சனை வரும்? அதுக்கப்பறம் உன்னோட அப்பாவும்,பெரியப்பாவும் என்ற தங்கச்சிய இந்த வீட்டு மருமகளா ஏத்துக்குவாங்ளா?”

 

“உன்னோட காதலும் ஜெயிக்கனும் அதேசயம் நம்ம குடும்பமும் பிரியக்கூடாது அவ்வளவுதானேடா? இதுக்கு ஏங்கிட்ட ஒரு ஆள் இருக்கு அவங்க சொன்னா இது எல்லாமே ஈசியா நடக்கும்.”

“ஷர்மிய சொல்றியா அகி… ஆனா, இந்தவிசயத்துல அவ சொல்றத கேப்பாங்ளா அகி…?”

“கண்டிப்பா… அவ பேசியே சம்மதிக்க வச்சிடுவா…”

“இரு அவள கால் பண்ணி மேல வர சொல்றேன்…” என்றவன் அவளுடைய மொபைலுக்கு அழைத்தான்.

டீவி பாத்துக்கொண்டிருந்தவள் போன் வரவும் எழுந்துப்போய் பார்த்தவள் ‘அகி காலிங்’ என வரவும் அதனை எடுத்து “நா உன்ற மேல கோபத்துல இருக்கேன் அகி ஏங்கிட்ட பேசாதடா…”  என்றாள்.

அவளின் சிறுபிள்ளைத்தனமான பேச்சில் புன்னகைத்தவன் “என்ற தங்கம்ல இந்த ஒரு தடவை உன்னோட அகிய மன்னிச்சிடுடா ஷர்மி…”

“மாட்டேன் போடா தடிமாடு…”

“என்ற செல்ல தங்கச்சில…”

“இல்லை…”

“அம்முகுட்டிதானே…”

“இல்லை…”

“ப்ளீஸ்டா ஷர்மி இந்த ஒரு தடவை மன்னிச்சிடுடா…”

“மட்டன் பிரியாணி வாங்கித்தறேனு சொல்லு    நா மன்னிக்கறேன்டா…”

” நாளைக்கு வாங்கித்தறேன்டா நீ இப்போ மாடிக்கு வா…”

“ம்ம் சரி வரேன் வைடா…”

ஹாலில் அமர்ந்து டீவி பாத்துக்கொண்டிருந்த இரு தந்தைக்கும் ஷர்மியின் பேச்சு சிரிப்பை வர வைத்தது.

 “அகிக்கு எதோ  நம்மகிட்ட வேலை ஆகோணும் போல அதான் தூதுக்கு அம்மாவ கூப்டறான்…” சிரித்துக்கொண்டே கூறினார் தமிழரசன்.

“கத்திரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகனும் தம்பி”

“அதுவும் சரிதானுங்ண்ணா…”

மாடியில் மகேஷ் அகிலேஷை முறைத்துக்கொண்டிருந்தான்.

“போனை வைத்த அகிலேஷ் “ஏன்டா என்ன முறைக்கர?”

“நா எவ்வளவு டென்ஸ்சன்ல இருக்கேன் இப்போத்தா அண்ணனும் தங்கச்சியும் கொஞ்சிக்கிட்டு இருக்கிங்க…”

“சாயிந்தரம் எனக்கு வேலை இருந்ததால தனியா அனுப்பி வச்சிட்டேன்… மேடம் அந்த கோபத்துல வந்ததுல இருந்து ஏங்கிட்ட பேசமா மூஞ்சிய தூக்கிவச்சிட்டு சுத்திட்டு இருக்காங்க… அதான் அவள பேசி சமாதானபடுத்தி வரவச்சேன்.”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே மாடிக்கு வந்தவள் சுவற்றில் ஏறி அமர்ந்தவாறே “சொல்லுடா என்னால உனக்கு என்ன காரியம் ஆகோணும்?” என்றாள்.

“எனக்கு இல்லை ஷர்மி மகேஷ்க்குதா உன்னோட கெல்ப் வேணும்…”

“ஓஓஓ… சரி சொல்லுடா நா என்ன பண்ணனும்?”

“எங்க காதல் வினோ வீட்ல தெரிஞ்சிபோச்சு ஷர்மி…”

“உடனே அவங்க அப்பா வேற மாப்பிள்ளை பாத்துட்டாராக்கும்? சரி விடு உனக்கு நானே வேற நல்ல பொண்ணா பாத்து என்ற தலைமையில கட்டி வைக்குறேன்.”

“விளையாடாத ஷர்மி நா சீரியஸா பேசிட்டு இருக்கேன்”

“சீரியசா பேசறவன் என்ன எதுக்குடா கூப்பிட்டிங்க போங்கடா நா போறேன்…” என்றவள் சுவற்றிலிருந்து இறங்கப்போனாள்.

“ப்ளீஸ் ஷர்மி…” அவன் கெஞ்சவும்,

“சரி ரொம்ப கெஞ்சாத பாக்க சகிக்கல ஆம்பளைனா கெத்தா திமிரா இருக்கனும் இப்படி கெஞ்சக்கூடாது சரியா… நீ என்ன மேட்டர்னு சொல்லு நா தீர்த்துவைக்குறேன்.”

சுருக்கமாக நடந்ததைக்கூறியவன் வீட்ல சொல்லி அப்பாவ சம்மதிக்க வைக்கனும் ஷர்மி.”

“அவ்வளவுதானே… மாமாவ சம்மதிக்கவச்சா  எனக்கு என்ன தருவடா?”

“நீ என்னக்கேட்டாலும் தறேன் ஷர்மி”

“ஓஓஓ.. அப்போ ஆப்பில் ஐ போன் வாங்கி குடுத்துடுடா” சாதாரணமாக கூறினாள்.

தங்கை கூறியதை கேட்டு அகிலேஷ்க்கூட ஒரு நொடி அதிர்ந்தவன் “ஷர்மிமா போனமாசம்தானே புது போன் வாங்கி குடுத்தேன். ரெண்டு போன் வச்சிட்டு என்னடா பண்ணப்போற?” என்றான்.

“நீ வாங்கிக்குடுத்தது பழசானதும் இத யூஸ் பண்ணிக்குவேன் அகி…”

“அது சரிடா ஆனா அதுக்கு இம்புட்டு பெருசாவா கேப்ப பாவம்டா அவன்…” நண்பனுக்காக பரிந்து வந்தான்.

“நா அவனோட லைப்பையே காப்பாத்திக்குடுக்கப்போறேன் அதுக்கு இதக்கூட செய்யமாட்டானாடா? அவனால முடியலைனா நீ வாங்கிக்குடு”

“ஆத்தி ஆளவிடுங்கடா சாமி நீயாச்சு அவனாச்சு…”

“டேய் முடியுமா? முடியாதா? படக்குனு சொல்லு எனக்கு வேலை கெடக்குது…”

“ம்ம் வாங்கித்தறேன் ஷர்மி…”

“என்னடா பொசுக்குனு சரினு சொல்லிட்ட ரொம்ப கம்மியா கேட்டேனோ? இன்னும் பெருசா கேட்ருக்கோனுமோ? அவள் சந்தேகமாக இழுக்கவும்,

“ஷர்மி நா பாவம்டா…” மகேஷ் அழுவதை போல் கூறினான்.

“சரி பொழச்சிப்போ” என்றவள், “நா கீழப்போறேன் ரெண்டுபேரும்  வாங்க…” என்றுவிட்டு கீழே சென்றாள்.

கீழே வந்தவள் நேராக அவளுடைய தாத்தாவிடம்தான் சென்றாள்., வாசலில் கயிற்று கட்டிலில் படுத்திருந்தவர் பேத்தியை பார்த்ததும் “என்னடா அலமு…” என்றார்.

அவரின் அருகிலே அமர்ந்தவள் “மூர்த்தி எனக்கு ஒரு உதவி செய்வியா…?”

“என்ற அலமு கேட்டு நா மாட்டேனு சொல்லுவேனா? என்னனு சொல்லுடாம்மா…”

மகேஷ் சொன்னதை அவரிடம் சொன்னவள் சதா மாமாகிட்ட நீதா பேசி சம்மதிக்க வைக்கனும்…”

“அவ்வளவுதானேடா நீ போய் உன்ற அப்பனையும் சித்தப்பனையும் வர சொல்லு நா பேசிக்குறேன்.”

“அவரின் கன்னத்தில் முத்தம் வைத்தவள் “தேங்ஸ் மூர்த்தி” என்று கூறிவிட்டு உள்ளே தந்தையிடம் சொல்ல ஓடினாள்.

பேத்தியின் சந்தோசத்தை புன்னகையுடனே பார்த்துக்கொண்டிருந்தவர், மகன்கள் வந்ததும் அவர்களிடம் பேசிவிட்டு இளைய மருமகளின் அண்ணனை வீட்டிற்கு வரவைத்தார்…

முருகேசனும், தமிழரசனும் தந்தை சொல்வதை கேட்டு முதலில் அதிர்ந்தாலும் பின்பு புரிந்துக்கொண்டனர். 

தமிழரசு தன்னுடைய மச்சானுக்கு போன்போட்டு தங்களுடைய வீட்டுக்கு வர சொல்லவும் சதாசிவமும், ராஜியும் என்னமோ எதோவென நினைத்து வந்தனர்.

இந்துவுக்கும், லஷ்மிக்கும் இன்னும் விசயம் தெரியாததால் திடிரென அவர்களை பார்த்ததும் லஷ்மிதான் “என்னாச்சு தம்பி இன்னேரத்துல ரெண்டுபேரும் வந்துருக்கிங்க? என்றார்.

“மாமா வர சொன்னாங்கனு தமிழ் மாப்பிள்ளை போன் பண்ணார்க்கா…”

“ஓஓஓ… சரி தம்பி”

எல்லாரும் அமைதியா இருக்கவும் சுந்தரமூர்த்தி முதலில் பேச ஆரம்பித்தார்.

“எல்லாம் நல்லவிசயம்தான் சதா… மகேஷ் கூட வேலை பாக்கர  பொண்ண விரும்பறான் பொண்ணுவீட்டு நம்மல பொண்ணுகேட்டு வர சொல்லிருப்பாங்க போல அதான் ஏங்கிட்ட வந்து சொன்னான்.., நானும் விசாரிச்சேன் பொண்ணோட அப்பா நம்ம ஆளுங்கதான் போல… நல்ல குடும்பம்தான் இங்க பக்கத்துல திருச்செங்கோடுதான் சொந்த ஊர்.”

“முதலில் அதிர்ச்சியிலிருந்து மீண்ட சதாசிவம் மகனை முறைத்தவாறே “என்ன மாமா சொல்றிங்க? இது எப்படி சரியா வரும்? அவனுக்குதான் ஷர்மி கண்ணு இருக்கே…?” என்றார்.

“அது நம்மளோட ஆசைதானே சதா… புள்ளைங்க மனசுல அப்படி ஒரு எண்ணமே இல்லைங்ற போது எப்படி ரெண்டுபேருக்கும் கண்ணாலம் பண்ணிவைக்கறது., உனக்கு தெரியாததா புள்ளையோட விருப்பம் தெரியாம நாங்க எடுத்த அவசர முடிவால எங்க குடும்பம் எத்தனைய இழந்துச்சுனு… திரும்பவும் அப்படி ஒரு நிலமை என்ற பேத்திக்கு வேணாம் சதா…” அவரின் குரலில் இருந்தது வலியா? விரக்தியா? ஏதோ ஒன்று அனைவரையும் வாயடைக்க வைத்தது.

ஷர்மி “மாமா நீங்க என்ன நினச்சி கவலை படாதிங்க எனக்கு மகேஷ்மேல அப்படி ஒரு எண்ணமே கிடையாது மகேஷ்ம் அகியும் எனக்கு ஒன்னுதான்.”

தாத்தாவும், பேத்தியும் ஒருவழியாக சதாசிவத்தையும், ராஜியையும் மகேஷின் காதலுக்கு ஓகே சொல்லவைத்தனர்.

சதாசிவத்துக்கு தன் தங்கை மாமனாரின் மீது நிறைய மதிப்பிருந்தது. இன்று அவரே தன் மகனுக்காக பேசும்போது மறுக்கவா செய்வார்.

அவர் ஒத்துக்கொண்டதும்தான் மகேஷ்க்கு உயிரே வந்தது. அவரின் முன்னாள் சென்று அமர்ந்தவன் “தேங்ஸ்ப்பா…” என்றான்.

மகனின் தலையை பாசமாக தடவிக்குடுத்தவர் “எனக்கு எதுக்குடா தேங்ஸ் சொல்ற மாமாவுக்கும், ஷர்மிக்கும் சொல்லு… அவங்க பேசலைனா நா ஒத்துருந்துருக்க மாட்டேனுதா நினைக்குறேன்…” உண்மையை ஒத்துக்கொண்டார்.

அதுக்கப்பறம் அந்த வீட்டில் சந்தோசத்திற்கு சொல்லவா வேண்டும். ஷர்மியும், அகிலேஷுமே மகேஷை ஓட்டி எடுத்துவிட்டனர்.

பெரியவர்கள் பொண்ணு பார்க்க நல்லநாள் பார்க்க ஆரம்பித்தனர்.

“நாளை மறுநாள் ஞாயிற்றுகிழமை நாள் நல்லாருக்கவும் அன்றே பொண்ணு பார்த்துவிட்டு உறுதி நகை போட்டுவிட்டு வந்துடுங்க” என சுந்தரமூர்த்தி கூறினார்.

சதாசிவம் “மாமா ஜாதகம்லாம் பாக்காம நாளை மறுநாளே உறுதி நகை எப்படி போடறதுங் மாமா?”

“பையனுக்கும், பொண்ணுக்கும் மனசுக்கு புடிச்சபிறகு ஜாதகம் எதுக்கு சதா பாக்கனும்? ஒருவேளை ஜாதகம் ஒத்துவரலைனா நமக்கும் மனசுல உறுத்திட்டே இருக்கும். அதனால ஜாதகம்லாம் பாக்கவேண்டாம் சதா… உங்க மனதிருப்திக்காக வேணும்னா நாளைக்கு நீயும் உன்ற பொண்டாட்டியும்  குலதெய்வகோவில்ல போய் பூ போட்டு கேட்டு வந்துடுங்க.. அதுவும் உங்க நிம்மதிக்காகத்தான் பூ வாக்கு மாறி வந்தாலும் புள்ளைங்க ஆசைய தடுக்காதிங்க… மனசு ஒத்துபோயிட்டா எதுவுமே தேவையில்லை…”

அவர்க்கு இந்த கல்யாணம் சீக்கரமாக நடந்துமுடிந்தால் பேத்தியின் ஆசை வீட்டில் தெரியும்போது பெரியதாக பிரச்சனை வராது என நினைத்து மகேஷின் திருமணத்தை விரைவாக நடத்த ஆசைப்பட்டார்.

மூர்த்தி சொன்ன பிறகு அந்த வீட்டில் மறுத்து பேச ஆருக்குத்தான் தோன்றும்…

 அவர் சொன்னதை கேட்டு சதாசிவமும் “சரிங் மாமா நீங்க சொன்னபடியே செஞ்சிடறேன்…” சம்மதித்து விட்டார். பையனுடைய தந்தையே ஒத்துக்கொண்ட பிறகு மற்றவர்களும் ஒத்துக்கொண்டனர்.

 அப்போதே சதாசிவம் மகனிடம் பொண்ணு வீட்டு நம்பர் வாங்கி தங்கள் சம்மதத்தையும்,தன் குடும்பம் உறுதி நகை போட வருவதையும் கூறி விட்டார்.

Advertisement