Advertisement

அத்தியாயம். 29

அன்றைய பொழுது இரு குடும்பத்துக்கும் மகிழ்ச்சியை வாரி வழங்கிக் கொண்டிருந்தது.

மகன் மருமகள் சேர்ந்ததில் பொன்னுதாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பொன்னுதாயின் புன்னியத்தால் ராம், லலிதாவின் வாழ்க்கை அன்று ஊரில் உள்ளவர்களுக்கு வாயிக்கு அவலாக கிடைத்துவிட்டது. பாதிபேர் வாழ்த்தினர் என்றால் ஒருசிலர் கேலியும் செய்தனர். 

பொன்னுதாயி அதனை எல்லாம் கண்டுக்கொள்ளும் நிலையில் இல்லவே இல்லை. அவருக்கு மகன் மருமகள் சந்தோசமாக வாழ வேண்டும் அது நிறைவேறி விட்டது. அந்த சந்தோசத்தில் மருமகளை பாசத்தில் திக்குமுக்காட செய்துவிட்டார்.

அவர் பண்ணிய கூத்தில் அங்கு ரகுநந்தன், ஷர்மி புது மாப்பிள்ளை, புது பொண்ணா இல்லை ராமகிருஷ்ணன், லலிதா புதுசா கல்யாணம் ஆனவர்களா என தெரியாத அளவுக்கு இருந்தது.

வயதாகி மகனுக்கு திருமணம் முடித்த பிறகும் கூட பெண்களுக்கு நாணம் வரும் என்பதை  லலிதா நிருபித்துக்கொண்டிருந்தாள். 

அதே சந்தோசத்துடனே கோதையை ஊருக்கு வழியனுப்பி வைக்க மொத்த குடும்பமும் கிளம்பி  ஏர்போர்ட்டுக்கு சென்று கோதையையும், அரவிந்த்தையும் அனுப்பி வைத்துவிட்டு வீடு திரும்பினர்.

அவர்கள் வீடு வந்து சேர்ந்த சிறிது நேரத்திலே முருகேசன், லஷ்மி, தமிழரசன், இந்து நால்வரும் மகளையும் மருகனையும் மறுவீட்டு விருந்துக்கு  அழைத்துப் போக  வந்துவிட்டனர்.

ரகுவையும், ஷர்மியையும் மறுவீட்டு விருந்துக்கு அழைக்க வந்த முருகேசன் தங்கையின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்ததும் மனமகிழ்வுடன் தங்கையின் தலையை பாசமாக தடவிவிட்டு “நல்லாருடா குட்டிமா…” என்று வாழ்த்தினார்.

  தமிழரசன், தன் அக்கா மாமாவை கட்டிக்கொண்டு தன் சந்தோசத்தை பகிர்ந்துக்கொண்டார்.

பின் ஆண்களெல்லாம் நாளை மறுநாள் நடக்கப்போற கிடா விருந்தை பற்றி  பேச ஆரம்பித்து விட பெண்கள் மூவரும் லலிதாவை சுற்றி அமர்ந்துக்கொண்டு ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அதில் லலிதா முகம் சிவந்து கிடந்தது.

இதெல்லாத்தையும் கன்னத்தில் கை குடுத்தவாறே சேரில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஷர்மி தன்னை யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்ற பொறாமை உணர்வு தலை தூக்க நகத்தை கடித்து துப்பிக்கொண்டே அவர்களை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 ரகு அவளின் முகத்தில் தெரிந்த பொறாமை உணர்வை கண்டு புன்னகைத்தான்.

கணவன் தன்னை பார்த்து சிரிக்கவும் அதில் கோபம் வர வேகமாக எழுந்து சென்று அவனின் அருகில் சோபாவில் ‘தொப்’ என்று அமர்ந்தவள் “எதுக்குடா சிரிக்குற?” மெதுவாக கேட்டாள்.

அவளின் மரியாதை இல்லாத அழைப்பில் பதறியவன் அவள் கூறியது யாருடைய காதிலாவது விழுந்துவிட்டதா…? என சுற்றிப் பார்த்தான்.

எல்லாரும் நாளை மறுநாள் நடக்க இருந்த பந்தக்கிடா விருந்து பற்றி பேசிக்கொண்டிருக்கவும் சிறிது நிம்மதியானவன் “ஏன்டி குட்டிபிசாசு எல்லாரும் இருக்கப்ப டா.. போட்டு கூப்டற ஆரு காதுலையாவது விழுந்தா என்ன நினைப்பாங்க…” என்றதும்,

“கேட்டா கேக்கட்டும் நீ என்ற புருசன் நா அப்படித்தான் டா சொல்லுவேன். நீ எதுக்கு என்ன பாத்து சிரிச்ச?”

“நீ எதுக்கு அம்மாவ பாத்து முறைச்சிட்டு இருந்த? அத முதல்ல சொல்லுடி? நா அப்பறமா ஏன் சிரிச்சேனு சொல்றேன்.”

“பின்ன என்ன மாமா இங்க நாந்தானே புது பொண்ணு லச்சுமாவும், இந்துமாவும் வந்ததுல இருந்து என்ன கண்டுக்கவே இல்லை தெரியுமா? இதுக்கூட பரவாலைனு பார்த்தா நேத்து வரைலும் என்ன கொஞ்சிட்டு இருந்த அம்முக்கூட இன்னைக்கு என்ன கண்டுக்கவே இல்லை…” 

தன்னவளின் குழந்தைதனமான பேச்சில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. ஆனால் சிரித்தால் இன்னும் கோபபடுவாளே என்றதால் சிரிப்பை அடக்கிக்கொண்டு தங்களை ஆராது பார்க்கிறார்களா? என பார்த்துக்கொண்டே தன் கரத்தை அவளின் இடையை சுற்றி வளைத்து அவளின் சேலை மறைக்கபடாத வெற்றிடையில் அழுத்தி பிடித்தவன் “அவங்க எல்லாம் உன்ன கண்டுக்கலைனா என்னடி அதான் உன்ற புருசன் நா இருக்கேன்ல உன்ன கண்டுக்கறதுக்கும் இப்படி கட்டிக்கறதுக்கும்…” அதற்கு மேல் இன்னும் சில அந்தரங்க சொற்களை அவளின் காதில் மெதுவாக கூறி அவளை சிவக்க வைத்தான்.

ஆடவனின் கரம் பெண்ணவளின் இடையில் அழுந்தியதுமே இவ்வளவு நேரம் இருந்த இயல்பு பறிபோய் தடுமாற்றம் வந்து ஒட்டிக்கொண்டதென்றால் அவன் காதில் கூறிய வார்த்தை அவளை நாணத்தில் சிவக்க வைத்தது.

அதோடு விடாமல் அவளின் இடையை சுற்றியிருந்த தன் விரல் கொண்டு கோலமிட ஆரம்பித்தான்.

அவனின் சில்மிசத்தில் அவளின் மூச்சே நின்று விடுவதை போல உணர்ந்தவள் “என்ன மாமா பண்ற? என்ன விடு? ஆராவது பாத்தா என்ன நினைப்பாங்க?” அவன் கூறிய வார்த்தையை இப்போது அவள் கூறினாள்.

“ஆரு பாத்தா எனக்கென்னடி நா என்ற பொண்டாட்டிக்கிட்டதானே விளையாடறேன்…” அவனும் அவள் சொன்னதையே திரும்ப கூறினான்.

“ப்ளீஸ் மாமா… என்னால முடியலை உடம்பும் மனசும் என்னமோ பண்ணுது…” அவள் கெஞ்சவும், 

அதற்குமேல் அவளின் உணர்வோட விளையாடாமல் இடையில் இருந்த கரத்தை விலக்கி விட்டான்.

அவன் கையை எடுத்த மறுநொடி எழுந்தவள் யாரையும் பார்க்காமல் தன்னறைக்கு எழுந்து ஓடிவந்து விட்டாள்.

அறைக்கு வந்து கதவை சாற்றி அதன்மேல் சாயிந்து நின்ற பிறகும் கூட இடையில் கணவனின் கரம் தீண்டும்போது இருந்த உணர்வை இப்போதும் உணர முடிந்தது. 

“ச்சீசீ… நீ ரொம்ப கெட்ட பையன் மாமா”அவன் முன்னால் இருப்பதை போல் முகத்தை மூடிக்கொண்டு கூறினாள்.

பின் சிறிது நேரத்திலே ரகுவின் மொத்தக் குடும்பமும் சுந்தரமூர்த்தி வீட்டுக்கு கிளம்பிச் சென்றது.

முருகேசனும், லஷ்மியும் மறுவீட்டு விருந்துக்கு மகள், மருமகன் கூடவே ராம், லலிதா, பொன்னுதாயையும் சேர்த்து அழைத்துச் சென்றனர்.

ராமும், பொன்னுதாயும் ரகுவையும், ஷர்மிய மட்டும் கூட்டிப்போக சொன்னதை லஷ்மி பிடிவாதமாக மறுத்து மகள் மருமகனுடன் மொத்த குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு தான் சென்றார்.

இந்துவின் அண்ணன் குடும்பமும் மகள் வீட்டுக்கு வந்து விட்டனர்.

 ஒரே வீட்டில் நான்கு குடும்பமும் ஒன்றாக சேர்ந்தால் அந்த வீட்டில் மகிழ்ச்சிக்கு தான் அளவு ஏது…??

 பெண்கள் இரவு சமையலுக்கான வேலையில் மூழ்கி இருந்தனர். ஆண்கள் பெரியவர்களெல்லாம் பழைய கதைகளை பேசிக்கொண்டிருந்தார்கள் என்றால் இளைஞர் பட்டாளம் கூத்தும் கும்மாளமாக அடித்துக்கொண்டிருந்தது. 

அந்த வீடு உறவினர்களால் மட்டும் நிரம்பி வழியவில்லை. மகிழ்ச்சியாலும் நிரம்பி வழிந்தது.

எப்போதும் உறவுகளை இழுத்து பிடிப்பதில் லஷ்மியை அடித்துக்கொள்ளவே முடியாது. முன்கோபக்காரியாக அவர் இருந்தாலும் குடும்பம் உறவுகள் என வரும்போது அதற்கு உன்டான மதிப்பை தந்து விடுவார். இன்றும் இந்த வீடு இவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பதற்கு அவரும் ஒரு காரணம் தான்.

இதில் எதிலும் சேராமல் அமைதியாக விலகி இருந்தது ராம், ரகுநந்தன் மட்டுமே… 

ராம் விலகி இருந்ததுக்கு காரணம் அவரால் அத்தனை எளிதில் மற்றவர்களுடன் ஒன்ற முடியவில்லை. அவர் மனதில் சிறு தயக்கம். அதோடு அல்லாமல் அவரின் இயல்பே அமைதிதான். தேவைக்கு மட்டுமே பேசுபவர்.

ரகு தந்தையின் அருகில் அமர்ந்து அவர்களின் மகிழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தான் என்பதை வெறித்துக்கொண்டிருந்தான் என்பதே பொருந்தும். 

வீட்டிலிருந்து இங்கு வரும் வரையிலும் இருந்த மகிழிச்சி மனையாளின் பிறந்த வீட்டிற்கு வந்ததும் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்துக்கொண்டது. 

அவர்களின் சந்தோசம் அவன் மனதில் தனது குடும்பம் இத்தனை வருடம் அனுபவித்த ஆறாத வடுவின் சுவடை கிளரி விட்டு விட்டது. 

இவர்கள் தனது அம்மாவையும், அப்பாவையும் மன்னித்து ஏற்றிருந்தால் தனது குடும்பம் சந்தோசத்தையும் நிம்மதியையும் இத்தனை வருடங்கள் தொலைத்திருக்காதே? என்ற கோபம் அவன் மனதில் மீண்டும் துளிர்விட ஆரம்பித்தது.

அவனின் முக மாற்றத்தை அங்கிருந்தவர்களில் அவனை பற்றி முழுதாக அறிந்திருந்த ராம், மூர்த்தி, ஷர்மி மூன்று பேரும் கண்டுவிட்டனர்.

அவர்களைத் தவிர மற்றவர்களால் அவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை துளியும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. 

அமைதியாக சிறிது நேரம் அவர்களை வெறித்துக் கொண்டிருந்தவன் பின் யாரிடமும் எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே வந்து விட்டான்.

அவன் எழுந்து சென்றதை சுந்தரமூர்த்தி,ராம், ஷர்மி மூவரையும் தவிர மற்றவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்.

வீட்டிலிருக்கும் போது அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி இங்கு வந்ததும் குறைந்துவிட்டதை முன்பே உணர்ந்திருந்த ராம் மகன் எழுந்து செல்லவும் தானும் எழுந்து மகனின் பின்னே சென்றார்.

அதுவரையிலும் இயல்பாக பேசிக்கொண்டிருந்த அண்ணனும், தம்பியும் ‘என்னாச்சு மாப்பிள்ளைக்கு?’ என்ற  கேள்வியுடன்  பார்த்தனர். 

சுந்தரமூர்த்தி மகன்களுக்கு விழிகளாலையே ‘நான் பார்த்துக்கொள்கிறேன்…’ என பதில் கூறிவிட்டு எழுந்து வெளியே செல்ல ஆரம்பித்தவரின் அருகில் வந்த ஷர்மி “மூர்த்தி நானும் வரேன்… மாமா கோபத்துல உன்ன எதாவது சொன்னாலும் சொல்லிடுவார்…?” என்றாள்.

“இல்லாடா அலமு… அதலாம் நா பாத்துக்கறேன்… நீ இங்கையே இரு…” என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.

தனது தாத்தாவை பற்றி தெரிந்ததால் அதற்கு மேல் அவரை வற்புறுத்தாமல் போக விட்டு விட்டாள்.

அதற்குள்ளாகவே மகனின் பின்னால் வந்த ராம் வாசலில் திரும்பி நின்றிருந்த மகனின் தோளில் கை வைத்து “கண்ணா…” என்றார்.

தந்தையின் ஒற்றை அழைப்பு இவ்வளவு நேரம் அவனின் மனதில் இருந்த இறுக்கத்தை சிறிது குறைத்து.

 “நா கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வரேன்ப்பா…” என்றான்.

அவனின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்தவர் “என்னாச்சு கண்ணா…? நீ நார்மலா இல்லைங்றது உன்னோட முகமும், குரலும் காட்டிக்குடுக்குது…”

“ப்ளீஸ்ப்பா… இப்போ எதுவும் கேக்காதிங்க… நா கொஞ்ச நேரம் வெளிய போயிட்டு வந்தா சரியாகிடுவேன். நீங்க இங்க ஆராவது கேட்டா மட்டும் சமாளிங்க…”

அவன் தந்தையிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த மூர்த்தி “மனசுல தோன்ற கேள்விகளுக்கு விடை தெரியாத வரையிலும் நீ எங்கபோனாலும் உன்ற மனசு உன்ன நிம்மதியா இருக்க விடாது கண்ணு…” என்றார்.

பின்னால் வந்த குரல் ரகுவின் மனதை போல உடலையும் இறுகச் செய்தது. கைகளை இறுகமூடி கோபத்தை அடக்க முயன்று கொண்டிருந்தான்.

பழசு எல்லாத்தையும் மறந்து தனது மாமா, அத்தையை ஏற்றுக்கொள்ள முடிந்த ரகுநந்தனால் தன் தாத்தாவை மன்னித்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் சிறு முயற்சியாவது செய்திருந்தால் தன் தந்தையின் இத்தனை வருட வாழ்க்கை வீணாகாமல் காப்பாற்றி இருக்கலாம் என்பது அவன் மனதில் பதிந்துவிட்டது. அதை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

ராம், “ஒரு வேலை இருக்கு அதான் கண்ணாவ போயிட்டு வர சொல்லிட்டு இருக்கேன் மாமா…” சமாளித்தார்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி மத்தவங்களோட மனசு வருந்தக்கூடாதுனு உண்மைய மறச்சி நடிச்சிட்டு இருக்கப்போறிங்க மாப்பிள்ளை…?”

மாமனாரின் கேள்வி ராமை தடுமாற வைத்துவிட்டது. அவரால் மாமனார் சொன்னதை மறுத்து கூறமுடியவில்லை. 

ரகு, “என்ற அப்பா இப்படி ஆனதுக்கு காரணமே நீங்கதான்… இப்போ வந்து கேள்வி கேட்டுட்டு இருக்கிங்க?” அவன் குரலில் அத்தனை கோபமிருந்தது.

“என்ன பழக்கம் கண்ணா… பெரியவங்ககிட்ட இப்படித்தான் பேசுவியா?” மகனை கண்டித்தார் ராம்.

“பெரியவங்க தப்பு செய்யும்போது சின்னவங்க கேள்வி கேக்கறதுல தப்பில்லை மாப்பிள்ளை… நா செஞ்ச தவறதானே என்ற பேரன் சுட்டிக்காட்றான். எனக்கு இதுல சந்தோசம் தான் மாப்பிள்ளை…” ராமிடம் கூறிக்கொண்டிருந்த சுந்தரமூர்த்தியின் குரலில் பாசம் மட்டுமே…

“அப்பா எனக்கு ஆரோட கதாகலாட்சபத்தையும் கேக்க நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை. நீங்கவேனா கேட்டுட்டு இருங்க நா போறேன்…” என கூறிவிட்டு வேகமாக தனது பைக் நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு செல்லப்போனவனை மூர்த்தியின் குரல் தடுத்து நிறுத்தியது. 

“ஆர கண்டு பயந்து ஓடர கண்ணு?” மூர்த்தியின் குரலில்,

போனவன் அதே வேகத்தில் திரும்பி தத்தாவின் முன் வந்து நின்று “வாட்… என்ன சொன்னிங்க? திரும்ப சொல்லுங்க…” கோபத்தில் சிலிர்த்துக்கொண்டு நின்றான்.

பேரன் தன் முன்னால் சிலிர்த்துக்கொண்டு நிற்பதை புன்னகையுடன் ரசித்தவர் “நீ ஆர கண்டுப் பயந்து ஓடறேனு கேட்டேன் கண்ணு…?” 

“நா பயந்து ஓடறேனா? அதுவும் உங்கள பாத்து…, இது உங்களுக்கே ஓவராத்தெரியலை…?” நக்கலாக கேட்டான்.

ராம்…, மாமனாரும், மகனும் எதிர் எதிர் துவங்களாக நின்று பேசிக்கொள்வதை தடுக்க முடியாமல் தடுமாறி நின்றிருந்தார்.

“அப்போ நீ பயந்து ஓடலைனா அத ஏங்கிட்ட நிருபிச்சு காட்டு கண்ணு”

“ஆமா நா எதுக்கு உங்ககிட்ட நிருபிச்சிக்காட்டனும்?.,” 

அப்போ உனக்கு ஏங்கிட்ட பேச பயம்ங்றத ஒத்துக்கோ கண்ணு..,” அவனின் ஈகோவை தூண்டிவிட்டார்.

அவரின் வார்த்தை அவனின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டது. தன் தலையை கோதி அதை அடக்க முயற்சித்தவன் அதில் வெற்றியும் கண்டான். 

பின் மூர்த்தியின் முன் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு திமிராக நின்றவன் “ம்ம் ஓகே மிஸ்டர் சுந்தரமூர்த்தி நா பேச ரெடி” என்றான்.

ராம், “கண்ணா தாத்தாவ போய் பேர் சொல்லி கூப்டற? இதுதான் நீ பெரியவங்ககிட்ட பேசற  லட்சணமா?”

“அப்பா ப்ளீஸ்… நீங்க கொஞ்சநேரம் அமைதியா இருங்க…, எனக்கு இவர்கிட்ட தீர்க்க வேண்டிய பல வருட கணக்கு இருக்கு.”

பேரன் தன் முன்னால் நின்ற விதத்தை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டிருந்தவர் “சரி கண்ணு நாம இங்க பேசவேண்டாம்.. எல்லாரும் இருக்காங்க.., வா தோட்டத்துக்கு போய் பேசுவோம்.”

“அவன் எதோ கோபத்துல பேசறான் மாமா ., நீங்க போங்க நா அவன்ட்ட பேசிக்குறேன்.”

“நா என்ற பேரன் கிட்ட மட்டும் பேசனும்னு சொல்லலை மாப்பிள்ளை. உங்ககிட்டையும்தான் பேசப்போறேன் நீங்களும் வாங்க..”

“மாமா…” என்றவாறே ராம் தயங்கி நிற்கவும்..,

“வாங்க மாப்பிள்ளை..,

பேரனிடம், “போலாமா கண்ணு?.” 

அவரை முறைத்துவிட்டு முன்னால் நடக்க ஆரம்பித்தான்.

மூர்த்தியும் பேரனின் கோபத்தை ரசித்துக்கொண்டே அவனின் பின்னால் நடக்க ஆரம்பித்தார்.

மாமனாரையும் மகனையும் தடுக்க முடியாமல் அவர்களுடன் நடக்க ஆரம்பித்தார் ராம்.

Advertisement