Advertisement

கணவனின் வரவிற்காக ராமின் அறையில் காத்திருந்த லலிதா ரொம்ப நேரம் ஆகியும் கணவன் பாத்ரூமை விட்டு வெளியே வராமல் போகவும் மனதில் சிறு பயம் எழவே செய்தது. கிட்டதட்ட ஒரு மணிநேரம் கடக்கவும் பயந்துப்போன லலிதா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குளியலறையின் கதவை தட்டி “மாமா…” என்றழைத்தாள்.

தினமும் இரவு குளித்து விட்டு படுக்கும் பழக்கம் கொண்ட ராம் அறைக்கு வந்ததும் துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவர் ஷவரை திறந்து விட்டு அதன் கீழ் நின்று விட்டார். குளிர்ந்த நீர்க்கூட அவரின் மனதின் சூட்டை தணிக்க முடியவில்லை. நினைவுகள் முழுவதும் தன்னவளே ஆக்ரமித்துக்கொள்ள நேரம் போறதே தெரியாமல் நீர்க்கடியில் நின்றிருந்தவர் மனைவியின் அழைப்பில் சுயநினைவு வந்தார்.

ஆனாலும் மனைவின் குரல் கற்பனை என நினைத்தவர், “என்னால முடியலை லதாம்மா… உன்னோட குரலும் நினைவும் என்ன விடாம தொரத்திட்டே இருக்கு. பைத்தியம் பிடிச்சிருமோனு பயமா இருக்கு லதாம்மா…” வாய் விட்டே கூறினார்.

குளியலறை கதவின் முன் நின்று திரும்ப கதவை தட்டி கூப்பிடபோன லலிதா கணவனின் வார்த்தையை கேட்டு அந்த இடத்திலே வேரோடி நின்று விட்டார்.

கணவன் கதவை திறந்து தன்னை கண்டு சில நொடி நின்று விட்டு பின் கடந்து சென்றதைக்கூட உணராமல் அங்கேயே நின்றிருந்தார்.

குளியலறை விட்டு வெளியே வந்த ராமிற்கோ நம்பமுடியாத ஆச்சர்யம். 

தன்னவள் தன் அறையில் அதுவும் உரிமையாக ‘மாமா’ என்ற அழைப்புடன்…

 தன்னவளை பார்த்ததில் மனதில் இவ்வளவு நேரம் இருந்த வலி குறைந்ததை உணர்ந்தார்.

அதற்குமேல் மனைவியிடம் எதுவும் கேட்க்க தோன்றாமல் உடையை மட்டும் மாற்றிக்கொண்டு ஈரத்தலையை துவட்டாமலே தூங்குவதற்காக தரையில் பெட்ஷிட்டை விரிக்க ஆரம்பித்தார்.

இத்தனை வசதிகள் இருந்தும் ராம் அதனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவார். மனைவியை விலக்கி வைத்த நாளில் இருந்து எல்லா ஆசைகளையும் குழிதோண்டி புதைத்து விட்டு ஒரு தவ வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

குளியலறையின் முன் நின்றிருந்த லலிதா தன் கணவனின் ஒவ்வொரு செய்கையையும் வெறித்துக் கொண்டிருந்தவள் ராம் கீழே படுக்க போனதை பார்த்ததும் தயக்கத்தை விடுத்து கணவனின் அருகில் வந்து கையை பற்றி கட்டிலில் அமர வைத்துவிட்டு கபோர்டில் இருந்த துண்டை எடுத்து தலையை துவட்ட போனாள்.

மனைவின் உரிமையான கை பற்றுதலில் சிறிது அதிர்ந்திருந்த ராம் அவள் இழுத்த இழுப்பிற்கு சென்று கட்டிலில் அமர்ந்து ஆச்சர்யம் விலகாத விழிகளுடன் தன்னவளின் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தவர் துண்டையை எடுத்து வந்து அவள் அவரின் தலையை துவட்ட ஆரம்பிக்கவும் தான் சுய உணர்வே வந்தது.

லலிதாவின் செயலை தடுத்து விட்டு எதுவும் பேசாமல் எழுந்து சென்று படுக்க போனார்.

கணவன் ஒதுக்கியதில் சிலநொடிகள் விக்கித்து நின்றவள் பின் கணவனின் பயமும் புரிந்தது. அதனை போக்க வேண்டுமென்றால் அவரை மனம் விட்டு பேச வைக்க வேண்டும் அதற்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை என்பதை உணர்ந்த லலிதா தன் உயிரையே பணையம் வைக்க துணிந்தாள்.

“உங்களை தொடக்கூட எனக்கு உரிமை இல்லைன்னு சொல்லாம சொல்றிங்களா மாமா? நா அம்புட்டு தேவையில்லாத குப்பையா ஆகிட்டேன்ல… உங்களுக்கே புடிக்காதப்ப நா ஏன் இருக்கனும்…? இனிமே உங்களை கஷ்டபடுத்த நா இருக்க மாட்டேன் நீங்க நிம்மதியா இருங்க மாமா…” அழுகையுடன் கூறியவள் வேகமாக அறையை விட்டு வெளியேறி சென்றாள்.

மனைவி பேசியதை கேட்டு சர்வமும் ஆடிப்போய் நின்ற ராம் லலிதா வெளியேறி செல்லவும், சிலநொடிகளில் தன்னை சுதாரித்துக்கொண்டு லலிதாவின் பின்னே தானும் வெளியே வந்தவர் அவள் சமையலறைக்கு செல்லவும், அவரும் சமையலறை நோக்கி ஓடினார். அங்கு தன்னவளின் கரத்தில் இருந்த கத்தியை பார்த்ததும் இதயமே ஒரு நொடி நின்று விட்டது.

கத்தியை பாத்ததும் தன்னவள் செய்ய இருந்த காரியத்தை உணர்ந்ததும் கோபம் எல்லையை கடக்க இரண்டே எட்டில் லலிதாவை நெருங்கி அவளின் கரத்திலிருந்த கத்தியை பிடிங்கி எறிந்தவர், அதே கோபத்துடன் இங்கு நின்று சண்டை போட்டு மற்றவர்களை எழுப்ப மனமில்லாமல் மனைவின் கரத்தை பிடித்து இழுத்து வந்து தன் அறையின் கட்டிலில் தள்ளிவிட்டு திரும்ப சென்று கதவை லாக் பண்ணி விட்டு வந்து லலிதாவின் முன் ருத்ரமூர்த்தியாக நின்றார்.

கணவனின் தோற்றத்தை பார்த்து மிரண்டுப்போன லலிதா உடல் பயத்தில் நடுங்க கட்டிலிருந்து எழுந்து நின்றாள்.

 அடுத்த நொடி திரும்பவும் கட்டிலில் விழுந்தாள். கன்னம் எரிய ஆரம்பிக்கவும் தான் தன் கணவன் தன்னை அறைந்ததையே உணர்ந்தாள்.

எரிந்த கன்னத்தை கை வைத்து மூடியவாறே கண்கள் கலங்க “மாமா…” என்றாள். 

ரொம்ப வருடங்களுக்கு பிறகு இரண்டாம் முறையாக கணவனின் கோபத்தை முழுவதுமாக உணர்ந்தாள்.

தன்னவளை அடித்த பிறகேதான் தன் தவறை உணர்ந்தார் ராம். தலையை கோதி கோபத்தை குறைக்க முயன்றவர் முடியாமல் தடுமாறினார். அவளுக்கு வலித்ததை விட அதிகமாக தன்னவளின் விழிகளில் நீரை பார்த்ததும் ராம் உள்ளுக்குள் துடித்துவிட்டார். அவளின் கண்ணீர் ராமின் கோபத்தை குறைத்தது. தன்னவளின் வலிக்கு மருந்தாக தானே அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்.

 ராமின் விழிகளும் கலங்கி விட்டது. “நீ இல்லாத ஒரு நொடிக்கூட என்னால வாழ முடியாது லதாம்மா… இனி எப்பவும் இப்படி பேசிடாத நா செத்துருவேன். நீ என்ற கண் முன்னாடி இருந்தாவே போதும். வேற எதுவும் வேண்டாம் லதாம்மா. உன்ன கஷ்டபடுத்திக்கிட்டு நீ மத்தவங்களுக்காக செய்யாத. நீ நீயாவே இரு எனக்கு அது போதும்.”

கணவன் அணைத்ததும் தானும் அவனின் இடுப்பை இறுக கட்டிக்கொண்டு வயிற்றில் முகம் புதைத்து மனதிலிருந்த வலி தீர மட்டும் அழுதாள்.

சிறிது நேரம் அழுதவள் பின் தலையை மட்டும் நிமிர்த்தி கணவனின் முகம் பார்த்து “மீதி இருக்க கொஞ்ச நாளாவது நா உங்கக்கூட வாழனும் மாமா…, என்ன ஏத்துக்குவிங்களா?” என்றாள்.

“அவளின் ஏக்கம் சுமந்த விழிகளும் குரலும் ராமை தடுமாற வைத்து விட்டது.

 “லதாம்மா…”

“ஆமா மாமா… எனக்கு உங்கக்கூட திகட்ட திகட்ட ஒரு வாழ்க்கை வாழனும்னு ஆசை வருது மாமா… ஆனா இம்புட்டு வயசானதுக்கப்பறம் கேக்கறதே ரொம்ப அபத்தமா இருக்குல மாமா…?”

ராமால் மனைவியின் கேள்விக்கு பதில் கூட சொல்ல முடியவில்லை. தன்னவளுக்காக எதையும் செய்ய துடிக்கும் ராம் அவள் வாய் விட்டு கேட்டதை செய்ய முடியாத நிலையை நினைத்து துடித்தார்.

‘பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயதில் என்ன ஆசை லதாம்மா…? இப்போ வந்து என்னால செய்யமுடியாதத கேக்கறியே லதாம்மா…’ உள்ளுக்குள் மட்டுமே அவரால் கேக்க முடிந்தது.

கணவன் மனைவி காதலோட சந்தோசமா வாழ்வதற்கு வயது தடையில்லை என்பதை ராமிற்கு யார் புரிய வைப்பது. திருமணம் ஆன புதியதில் கணவன் மனைவிக்கு இடையில் அதிகம் மோகம் மட்டுமே இருக்கும்…, அதுவும் ஒரு குழந்தை வந்துவிட்டால் பணத்தை தேடி ஓட ஆரம்பிக்கும் நிலை. வயதான பின்தான் கணவன் மனைவிக்கு இடையில் அன்பும், அனுசரனையும் அதிகம் தேவை. ஒருத்தர்க்கு ஒருத்தர் காதலை உணரும் தருணம். தோள் சுருங்கி கிழப்பருவம் எய்தும் வயதில் கூட கணவன் மனைவியும் காதலை உணர்ந்து முழுமையாக வாழும் தம்பதிகளே உண்மையான காதலர்கள். 

கணவனின் மன எண்ணத்தை உணர்ந்தவள் “பேரன் பேத்தி எடுக்க வேண்டிய வயசுல இப்படி கேக்கறேனு நீங்க என்ன தப்பா நினைக்குறிங்களா மாமா…? ஏன் மாமா உடம்பு ரெண்டும் சேர்ந்தா மட்டும்தான் சந்தோசம் கிடக்குமா…? இந்த வயசுல உங்கக்கூட தாம்பத்தியம் வச்சிக்கனும்லாம் எனக்கு ஆசை இல்லை மாமா. நா அத கேக்கவும் இல்லை. ஆனா எங்கிட்ட சாதாரணமாவது பேசுலாமே மாமா. நீங்க என்ன ஒதுக்கறப்போ செத்துடலாம் போல இருக்கு…”

“ஏன் லதாம்மா… இப்படிலாம் பேசற? உன்ற நிம்மதிக்காக மட்டுமே இத்தனை வருசம் விலகி இருந்தவன் நான்… இப்போ நீ வாய் விட்டு கேட்டபிறகு மறுப்பேனா? உன்ற சந்தோசத்துக்காக நா எதை வேணாலும் செய்வேன் லதாம்மா…” மனைவின் கண்ணீரை துடைத்து விட்டவாறே “இனி நீ எதுக்காகவும் அழக்கூடாது லதாம்மா…” என்றார்.

சிறிது நேரம் கழித்து மனைவியை விலக்கியவர் “நீ போய் தூங்கு லதாம்மா. ரொம்ப நேரமாச்சு…” என்று கூறிவிட்டு கீழே படுக்க போனார்.

கணவன் தன்னை விலக்கி விட்டு போகவும் “மாமா… நா உங்க அறையிலையே தூங்கட்டுமா?” என்றாள்.

“இதென்ன கேள்வி லதாம்மா. என்னோடது எல்லாமே உனக்கும் முழு உரிமை இருக்குங்றது மறந்துடாத… இனி இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேக்காத… இங்க இருக்க கட்டில்லையே படுத்துக்க…” என்றவர் சென்று தரையில் விரித்திருந்த பெட்சீட்டில் படுத்துக் கொண்டார்.

கணவன் படுக்கும் வரையிலும் கட்டிலில் அமர்ந்தவள் பின் எழுந்து சென்று தானும் கணவன் விரித்திருந்த பெட்ஷீட்லையே கணவனின் அருகில் படுத்து கொண்டாள்.

மனைவியின் செயல் ராமின் மனதை குளிர்வித்தது. இருந்தும் அவள் கீழே படுப்பது சங்கடத்தை தர “லதாம்மா… நீ ஏன் இங்க படுக்கற கட்டில்ல போய் படுத்துக்கோ…” என்றார்.

“எனக்கும் தரையில் படுத்துதான் பழக்கம் மாமா… பேசாம தூங்குங்க…” என்றவள் விழிகளை மூடிக்கொண்டாள்.

அதற்கு மேல் அவளை வற்புறுத்த மனமில்லாமல் திரும்பி படுத்து தன்னவளின் சிகையை கோதி விட்டார்.

கணவனின் மென் ஸ்பரிசத்தில் நிம்மதியாக உறங்கினாள்.

இத்தனை நாள் கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்த அவளின் அருகாமை இன்று கிடைக்கவும் ராம் அதனை இழக்க மனமில்லாமல் தூக்கத்தை தொலைத்துவிட்டு அதனை ரசித்து தன் இதயக்கூட்டுக்குள் சேமித்து வைத்தவாறே விடியலை எதிர் பார்த்திருந்தார்.

இரு ஜோடிகளும் அந்த இரவை மனநிறைவுடனே கழித்தனர்.

Advertisement