Advertisement

அத்தியாயம்.4

ஷர்மியால் ரொம்ப நேரத்துக்கு கோபத்தை இழுத்து வைக்க முடியாது. அவன் தன்னுடைய குடும்பத்தை இழுத்து பேசியதும் கோபத்தில் அவளும் பதிலுக்கு பதில் பேசி விட்டாள். சிறிது நேரத்திலே கோபம்  குறைந்ததும் எதுவுமே நடக்காததை போல அவனிடம் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டாள்.

“உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும் மாமா… அத ஏன் மாமா நீ புரிஞ்சிக்க மாட்ற?”

   அவளிடம் பேச விருப்பமில்லாததால் பிடிவாதமாக மனதோடு சேர்த்து காதையும் இறுக முடிக்கொண்டு கண்களை மூடி சாய்ந்தவாறே அமர்ந்துக்கொண்டான்.

அவனின் செய்கையில் ஷர்மி மனதில் அடிவாங்கினாள். ஆனாலும், அவளுடைய பிடிவாதக் குணம் அவனின் விசயத்தில் தலைதூக்கியது., ‘பாக்கறேன் மாமா எத்தனை நாளைக்கு என்ன விட்டு விலகி இருக்கேனு’ மனதில் கூறிக்கொண்டாள்.

நடத்துனர்  டிக்கெட் குடுக்க அருகில் வந்ததும் ஷர்மி உரிமையாக மாமனின் சட்டைபையிலிருந்தே காசு எடுத்து இருவருக்கும் டிக்கெட் வாங்கிக்கொண்டாள்.

அவள் தன் சட்டைபையிலிருந்து பணம் எடுத்ததை உணர்ந்தாலும் விழிகளை திறக்காமலே அமர்ந்திருந்தான்., சிறிது நேரம் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவள் பின்பு தன் மாமனை சைட் அடிக்க ஆரம்பித்து விட்டாள்.

தமிழ்நாட்டு பசங்களுக்கே உரித்தான மாநிறத்தில், ஆறடி உயரத்தில் உயரத்திற்கு ஏற்ற உடல்வாகுடன், ஜீன்ஸ்பேன்ட் நீலக்கலர் புல்ஹேன்ட் சட்டை  அணிந்து.., முழங்கை வரையிலும் மடக்கிவிட்டவாறு கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு சீட்டில் இலகுவாக சாய்ந்தவாறு விழிகளை மூடியிருந்தவனின் தோற்றம் அத்தனை பாந்தமாக இருந்தது. 

‘அழகன் மாமா நீ…’ மனதிற்குள் கூறிக்கொண்டாள்.

தங்களுடைய ஊர் வரவும் இருவரும் பேருந்தைவிட்டு இறங்கும்போதே ரகுநந்தனின் அப்பா ராமகிருஷ்ணன் அவனை அழைத்து செல்வதற்காக வந்து நின்றுக்கொண்டிருந்தார்.

பஸ்ஸை விட்டு இறங்கியவளை பார்த்தவரின் விழிகளில் ஆச்சர்யத்துடன் பாசமும் தெரிந்தது. மகனுக்கு அவளை கண்டாலே ஆகாது அப்படி இருக்கும்போது இருவரும் ஒன்றாக இறங்கி வருவதை நம்பமுடியாமல் பார்த்தார்.

அப்பாவின் விழிகளில் தெரிந்த பாசத்தில் அவனால் பல்லை மட்டுமே கடிக்கமுடிந்தது., ‘இவ அவர கொடுமைக்காரன்னு கற்பனை பண்ணிவச்சிருக்கா அது தெரியாம இவரும் இந்த குட்டிப்பிசாச பாசமா பாத்துட்டு இருக்கார்…’ என மனதிற்குள் தன் தந்தையை திட்டிக்கொண்டான்.

 “அப்பா வண்டிய எடுங்க எம்புட்டு நேரம்தா உங்க பொண்டாட்டியோட அண்ணன் மகளையே பாப்பிங்க” மெதுவாக அவருக்கு மட்டும் கேட்குமாறு கடிந்தான்.,

இதுக்குமேல இங்க நின்றால் மகன் கோவிச்சிக்கிட்டு நடந்தே போனாலும் போயிடுவான் என்பதை உணர்ந்தவர் வண்டியை ஸ்டார்ட் செய்தார்.

பேருந்தை விட்டு இறங்கும்போதே அவரை பார்த்துவிட்டவளின் முகம் கோபத்தில் சிவந்தது. அவளுக்கு அவரை பார்த்தாலே அத்தனை கோபம் வரும்.

 ‘என்ற அத்தையோட வாழ்க்கையவே கெடுத்துபோட்டு இவர் மட்டும் நிம்மதியா புதுமாப்பிள்ளை கணக்கா வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில வயசு பையன்மாதிரி இருக்காரு. ஆனா, என்ற அத்தை வேலைக்காரி மாதிரி அந்த வூட்ல வாழ்ந்துட்டு இருக்காங்க… உங்க வூட்டுக்கு மருமகளா வந்து உங்களோட நிம்மதிய மொத்தமா அழிக்கறேன் மாமனாரே…’ மனதிற்குள் சொல்லிக்கொண்டவள் வெளியே சாதாரணமாக அவரை பார்த்து பேச ஆரம்பித்தாள்.

ஆமாம் ஷர்மி சொல்வதைப்போல ராமகிருஷ்ணன் ஐம்பது வயதிலும் இளமையாகவும் கம்பீரமாகத்தான் இருக்கிறார். அப்பாவையும் மகனையும் ஒன்றாக பார்த்தால் அண்ணன் தம்பி என்றுதான் சொல்லமுடியும். அவரின் இத்தனை வருட உழைப்பே அவரை கம்பீரமாக காட்டுகிறது. பள்ளி படிப்பு முடிந்தவுடனே பதினெட்டு  வயதில் லாரியில் க்ளினராக போக ஆரம்பித்தவர். அவரின் கடுமையான உழைப்பு இன்று ஒரு பெரிய டிரான்ஸ்போர்ட் கம்பெனியின் ஓனர்., அவரிடம் கிட்ட தட்ட இருபது லாரிகள் சொந்தமாக இருக்கு. மூன்று மினி பேருந்தும், மூன்று டூரிஸ்ட் பேருந்தும் அவரின் கைவசம். அதுபோக பெரிய அளவில் பைனான்ஸ் தொழிலும் உண்டு. அத்தனையையும் மூன்று வருடத்திற்கு முன்னால் மகனிடம் கொடுத்துவிட்டு இப்போது மகனுக்கு உதவியாக  தொழிலை மேற்ப்பார்வை மட்டும் பார்த்தவாறே தனது  பூர்வீக நிலத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அவரின் மகனோ அவருக்குமேல் இருந்தான். தந்தை எட்டடி பாயிந்தால் மகன் பதினாறு அடி பாய்ந்துக் கொண்டிருக்கிறான். சென்னையில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு அப்பாவிடம் கூட தொழில்பண்ண பணம் வாங்காமல் அவனே பேங்க்கில் லோன் வாங்கி அவனுக்கு பிடித்த தொழிலான பைக் ஷோரூம் நாமக்கல்லில் ஆரம்பித்தான்., அவனின் ஷோரூமில் இல்லாத பைக் மாடலே கிடையாது.  இன்று ஈரோடு,கருர், திருச்செங்கோடு ,நாமக்கல் என எல்லாப் பெருநகரங்களிலும் அதன் கிளையை தொடங்கி  வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறான்.

“ஹாய் மாம்ஸ்… எப்படி இருக்கிங்க? நா ஒரு மடச்சி அதான் உங்கள பாத்தாவே தெரியுதே நீங்க சந்தோசமா இருக்கறது…” என்று நக்கலாக கூறியவள்,  “என்ன மாமா உங்க அம்மா ஏம்புருசனுக்கு தீவிரமா பொண்ணு தேடுதாமே?” 

 வண்டியை ஸ்டார்ட் பண்ணபோனவர் அவளின் பேச்சை கேட்டதும் அப்படியே நின்றுவிட்டார்.

“நீங்க எத்தனை பொண்ணு பார்த்தாலும் உங்க மகனை ஒருத்தியும் கட்டிக்க வரமாட்டா மாமா… அப்படியே வந்தாலும் நா விடமாட்டேன்… திரும்பவும் கலச்சிவிட்ருவேன்னு உங்க அம்மாகிட்ட சொல்லி வைங்க… வயசான காலத்துல வீணா பேரனுக்கு பொண்ணு தேடி அலைஞ்சி படுத்துக்கபோகுது… அப்பறம் நா உங்க வூட்டுக்கு மருமகளா வரும்போது அத கொடுமை படுத்த முடியாம போயிடும்” என்று கூறியவள்,

அவளின் பேச்சைக்கேட்டு அதிர்ந்து நிற்பவரைக்கூட கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்றுவிட்டாள்.., அவர் அதிர்ந்து நிற்பதை பார்த்ததும் ரகு அவரை உலுக்கினான்.

“அப்பா…” அவனின் கத்தலில் சுயநினைவு வந்தவர், அவனை கேள்வியுடன் பார்த்தார்.

“அந்த குட்டிப்பிசாசு பேசறதெல்லாம் கண்டுக்காதிங்ப்பா… வாங்க வூட்டுக்கு போலாம்…” என்று கூறிவிட்டு அவனே வண்டியை எடுக்கபோனான்.

“ரகு…”  அத்தனை அழுத்தம் அவரின் குரலில்.

“ப்ளீஸ்ப்பா… நா காலைல இருந்து சாப்டல உங்க கேள்வி எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் சாப்பிட்டதும் கேளுங்க… எல்லாத்துக்கும் பதில் சொல்றேன்.”

அவரும் அதுக்குமேல் மகனை வற்புறுத்தாமல் அவனுடன் கிளம்பிச்சென்றார்.

வீட்டிற்கு வந்ததும் பைக்கை நிறுத்திவிட்டு அவன் மட்டும் உள்ளே சென்று அங்கிருந்த சோபாவில் ‘தொப்பென்று’ அமர்ந்தான்.

பேரனை பார்த்ததுமே காலையில் விட்டதை திரும்பவும் ஆரம்பித்தார் பொன்னுதாயி., “டேய்… உன்ற மனசுல என்னடா நினச்சிட்டு இருக்க? காத்தால நா பேசிட்டு இருக்கும்போதே எழுந்திருச்சிப்போற? என்ன பாத்தா அப்பனுக்கும், மகனுக்கும் பைத்தியக்காரி மாதிரி தெரியுதாடா…?”

” திரும்பவும் ஆரம்பிக்காதிங்க அப்பாத்தா…நாந்தா ஏற்கனவே சொல்லிட்டேன் எனக்கு கல்யாணம் வேண்டானு… ஏ புரிஞ்சிக்கமாட்றிங்க? என்ன இப்படியே நிம்மதியா இருக்க விடுங்க” என கத்தினான்.

“என்னடா கத்தற? கண்ணாலம் பண்ணாம என்ன பண்ணாலாம்னு இருக்க? உன்ற அப்பன் ராப்பகலா ஓடி சம்பாதிச்சு வச்சிருக்கானே அதலாம் கண்டவன் தின்னுட்டுபோறதுக்கா? ஒழுங்கு மரியாதையா நா சொல்றப்பொண்ண கட்டிக்கிட்டு வாழற வழியப்பாரு…” அவரும் பதிலுக்கு கத்த ஆரம்பித்தார்.

‘ம்க்கும்… எனக்கு கண்ணாலம் ஆகறதுக்கு அந்த குட்டிபிசாசு விட்டாத்தானே அதுபுரியாம இந்த அப்பத்தா வேற தெனம் என் உசுர வாங்குது’ நினைத்துக்கொண்டான்.

மகனுடன் வீட்டிற்கு வந்த ராம் போன் வரவும் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தவர் உள்ளே கேட்ட சத்தத்தில் “நா அப்பறமா பேசறேன் முத்து…” என்று கூறிவிட்டு போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு உள்ளே ஓடிவந்தார்.

அவர் வருவதற்குள்ளாகவே அப்பத்தாவுக்கும், பேரனுக்கும் சண்டை முற்றிவிட்டது.

“மொதல்ல நீங்க சொல்ற பொண்ணு கண்ணாலத்துக்கு ஒத்துக்குதானு பாருங்க அப்பத்தா…”

“ஓஓஓ.. அப்ப இத்தனை நாளா நீதா வர சம்பந்தத்த எல்லாம் கலச்சிவிடறியாடா?”

‘நா செய்யலாம்னு போறதுக்குள்ளையே அவ எனக்கு முன்னாடி போய் போய் கலைச்சிவிட்டறாளே’ மனதிற்குள் தான் நினைத்துக்கொண்டான்.

பேரன் பதில் சொல்லாமல் இருக்கவும் உள்ளே வந்த மகனை பார்த்தவர் “டேய்… ராமு இங்க வந்து இவனை என்னனு கேளுடா… என்ற ஆயுசு முடியறதுக்குள்ள என்ற பேரன் கண்ணாலத்த கண்குளிர பாத்து போடோணும்னு ஆசை ஆசையா இவனுக்கு பொண்ணு தேடுனா கடைசில எல்லாத்தையும் இவனே கலச்சிவிட்டுட்டு இருந்துருக்கான்…” கூறியவாறே பொலம்ப ஆரம்பித்தார்.

“அம்மா…” மகனின் அதட்டல் தான் பொன்னுதாயை  வாயை முட வைத்தது.

“உங்க ஆசை கண்டிப்பா நடக்கும்மா…” ஷர்மி கூறியதை மனதில் நினைத்துக்கொண்டு கூறியவர் “நீங்க அவனுக்கு சாப்ட எதாவது கொண்டுவாங்க. காத்தால இருந்து சாப்டாம இருக்கான்.” 

அவர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே லலிதா மகனுக்கு தோசை வார்த்து எடுத்து வந்தவர் மகனின் முன்னால் இருந்த டீபாயில் வைத்தார்.

மகன் உள்ளே வரும்போதே அவனுடைய முகத்தில் தெரிந்த களைப்பை பார்த்ததுமே அவனின் பசியை உணர்ந்தவர் வேகவேகமாக அடுப்பில் தோசைக்கல்லை வைத்து தோசை வார்த்துக்கொண்டே தேங்காய் சட்னி அரைத்து  ஐந்தே நிமிடத்தில் எடுத்துக்கொண்டு வந்து அவனின் முன் வைத்தார்.

அவர் தட்டை வைத்த அடுத்த நொடி தட்டு பறந்து சென்று சுவரில் மோதி தோசை சிதறி தரையில் விழுந்தது., அதில் அங்கிருந்த அனைவருமே அதிர்ந்துபோய் நின்றுவிட்டனர்.

தட்டை தள்ளிவிட்டவன் அதே வேகத்தில் எழுந்து நின்று அவரின் கண்களை பார்த்துக்கொண்டே “உங்ககிட்ட நா எனக்கு சாப்பாடு கொண்டுவாங்கனு கேட்டேனா?? நீங்க ஆரு எனக்கு சாப்பாடு கொண்டு வர? உங்க எல்லை எதோ அதோட நின்னுக்கோங்க., ஏங்கிட்ட நெருங்க பாக்காதிங்க, என்ன கவனிச்சிக்க என்ற அப்பாவும், அப்பத்தாவும் இருக்காங்க… கண்டவங்க எல்லாம் என்ன பாத்து பரிதாப படற நிலமைல நா இல்ல….” அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவனின் கன்னத்தில் ‘இடியென’ ராமின் கரம் இறங்கியது…

“டேய் ராமு…” அப்பத்தாவின் குரல் மட்டுமே அதிர்வாக வந்தது.

அவர் அடித்தத கன்னத்தை பிடித்துக்கொண்டே தன் அம்மாவைத்தான் இமைக்காமல் பார்த்தான்.., அவன் எதிர்பார்த்த எதுவும் அவரின் முகத்தில் தெரியாததால் கோபத்துடன் தன் அறைக்கு சென்று கதவில் தன் அத்தனை கோபத்தையும் காட்டினான்.

ராமகிருஷ்ணன் மகனை அறைந்துவிட்டு அவனைவிட அவரே துடித்துப்போய்விட்டார். மகன் போனதைக்கூட உணராமல் அப்படியே சோபாவில் சரிந்து அமர்ந்தார்.

மகன் சாப்பாட்டு தட்டை தள்ளிவிட்டபோதும் சரி, அவனின் நெருப்பான வார்த்தைகளை கேட்டு போதும் சரி , கணவன் மகனை அறைந்தது எதற்கும் லலிதாவின் முகத்தில் எந்த உணர்வும் வரவில்லை . அவளின் விழிகள் எந்த  உணர்வும் காட்டாமல் வெறும் பார்வையாளராக யாரோ யாரையோ சொல்வதைப்போல மகன் தள்ளிவிட்டதால் கீழே கொட்டிக்கிடந்த தோசையை சுத்தம்பண்ண ஆரம்பித்தாள்.

அழுகை, கோபம், வெறுப்பு, ரோசம், கவலை எல்லா உணர்வுகளை கொன்று பல வருடங்கள் ஆயிற்று., உணர்வுகளற்ற வெறும் உயிரை மட்டுமே அவளின் உடல் தாங்கிக்கொண்டிருக்கிறது. உணர்வுகளை எல்லாம் கொன்றுவிட்டாலும் சில நேரங்களில் மகனின் கோபம் அவளை மனதளவில் உடைந்துபோகவைக்கிறது அதனை வெளிக்காட்ட மனமில்லாமல் வெற்று பார்வையுடன் நிற்கிறாள்.

இன்றும் மகனின் கண்டவங்க என்ற சொல் அவளின் இதயத்தை தாக்கவே செய்தது, ஆனாலும் அதனை வெளிக்காட்டாமல் நடித்துக்கொண்டிருக்கிறாள்.

பேரனை மகன் அடித்த அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த அப்பத்தா மருமகளை பார்த்ததும் கோபம் எல்லையை கடந்தது.  “என்ன பொம்பளடி நீ… பெத்த பையன் அடிவாங்கிட்டு நிக்கறான் அப்பக்கூட பதறாம கல்லு மாதிரி நிக்கற??? மகன் மேல உசுரையே வச்சிருந்த என்ற மகன் இன்னைக்கு உன்ன ஒருவார்த்தை சொன்னதும் அடிச்சிட்டான்., இப்போ உனக்கு சந்தோசமாடி…”  என்று அவர் கத்தவும், 

அதில் சுயநினைவு வந்த ராம் “அம்மா…” தாயை அதட்டினார்.

“நா உன்ற பொண்டாட்டிய ஒன்னும் சொல்லலடா… உன்னை மதிக்காதப்பவே இந்த தாங்கு தாங்கற இன்னும்  உன்ன மதிச்சி கூட வாழ்ந்தானா உன்ன கையிலையே பிடிக்க முடியாதுடா…” அவர் பாட்டுக்கு பொலம்பிக்கொண்டே சென்றார்.

Advertisement