Advertisement

அத்தியாயம். 27

அந்த இரவு நேரத்தில் மகனுடன் தெருவில் நடந்து கொண்டிருந்தவரின் மனதில் இருந்த புழுக்கம் துளியும் குறையவில்லை. தோற்றுப்போன வாழ்வின் சுவடு அவரை நிம்மதியில்லாமல் துடிக்க வைத்து கொண்டிருந்தது.

மனதின் அயர்ச்சி உடலையும் தளர செய்தது. உடல் ஓய்வுக்கு கெஞ்சிய பிறகு தான் வீட்டிற்கு திரும்பும் எண்ணமே வந்தது. வந்தவழியே திரும்ப நடக்க ஆரம்பித்தனர்.

ரகுவும் தந்தையை தொந்தரவு பண்ண விரும்பாமல் அவரின் போக்கிலே விட்டு தானும் நடந்தான். அவன் மனதில் எப்படியாவது அம்மாவையும், அப்பாவையும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே…

சிறிது நேரம் நடந்துவிட்டு வீட்டிற்கு வந்தனர்.

அவர்களுக்காக காத்துக்கொண்டிருந்த லலிதா வீட்டிற்குள் நுழைந்த தன் கணவனின் முகத்தை தான் முதலில் பார்த்தார்.

ராமின் முகத்திலிருந்த வேதனை லலிதாவையும் வாடச்செய்தது.

உள்ளே வந்த ராம் அங்கு தன்னவள் இருப்பதை பார்த்தாலும் அவளை கண்டுக்கொள்ளாமல் தனது அறைக்கு சென்று விட்டார்.

ரகு தான் “அம்மா.., எங்க அத்தை?” என்றான்.

“அண்ணி வீட்டுக்கு போயிட்டாங்க ரகு…, நீ உன்ற ரூம்க்கு போ ஷர்மி அங்க தான் இருக்கா…” 

“சரிம்மா… நீங்களும் போய் தூங்குங்க…” என்றவன் தனது அறைக்கு செல்ல படியேறினான்.

மகன் சென்றதும் லலிதா மூடியிருந்த கணவனின் அறையை தான் பார்த்தார். அறையை போல ராமின் மனமும் இறுக மூடிதான் கிடந்தது. அதை திறக்கும் சாவி தன்னிடம்தான் இருக்கிறது என்பதை அறியாமல் கணவனை எப்படி பேச வைப்பது என்று மலைத்துபோய் நின்றிந்தவள் ஒரு முடிவுடன் கணவனின் அறைநோக்கி சென்று கதவில் கை வைத்ததும் அது சுலபமாக திறந்து கொண்டது. 

உள்ளே நுழைந்த லலிதா அங்கு கணவன் இல்லாமல் பாத்ரூமில் இருந்து நீர் கொட்டும் சத்தம் கேட்க்கவும் கணவனின் வரவிற்காக கட்டிலில் அமர்ந்துக் கொண்டார்.

அந்த வீடு இரண்டு அடுக்குகளை கொண்ட வீடு. கீழ் தளத்தை போலவே மேல் தளத்திலும் மூன்று அறைகள் இருந்தன. அதில் ஒன்றில்தான் ரகுவின் அறை.

அந்த வீடு முழுவதும் ராமின் உழைப்பில் கட்டியது. தன் மகனுக்காக பார்த்து பார்த்து கட்டி இருந்தார். அதை வீடு என்று சொல்வதை விட பங்களா என்றுதான் சொல்ல வேண்டும். 

அம்மாவிடம் பேசிவிட்டு மாடியிலிருந்த தன் அறைக்கு வந்த ரகு கதவை திறந்து உள்ளே நுழைந்தவன் அங்கு கண்ட காட்சியை பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த மன இறுக்கம் போய் அவனின் முகம் புன்னகை பூசிக்கொண்டது.

கைகளை மார்பில் கட்டிக்கொண்டு கதவிலே சாய்ந்தவாறு நின்று மனைவியை ரசித்துக் கொண்டிருந்தான்.

அந்த அறை முதலிரவுக்கென்று ஆடம்பரமாக அலங்கரிக்காமல் கட்டிலில் மட்டும் சிறிது பூக்களை தூவி பழம் இனிப்பு மட்டுமே வைத்திருந்தனர்.

பூக்களை தூவிய மெத்தையில் ஷர்மி சமனங்கால் போட்டு அமர்ந்துக்கொண்டு துளியும் பயமில்லாமல் தட்டில் வைத்திருந்த பழத்தில் ஒரு ஆப்பிளை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

தன்னை யாரோ பார்ப்பதைப் போல தோன்றவும் திரும்பாமலே “நா ஒண்ணும் சொல்லமாட்டேன் உள்ள வந்து என்ன சைட் அடி மாமா…” என்றாள்.

அவளிடம் சிறு பதட்டமோ, பயமோ எதுவும் இல்லாததை பார்த்து அவன் வியந்துதான் போனான்.

உள்ளே வந்தவன் “ஏன்டி உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா…?” 

“அதலாம் டன் கணக்குல இருக்கு மாமா… ஆனாலும் அத வெளிய காட்டிக்கிட்டா ஷர்மியோட கெத்து என்னாகறது மாமா.. அதுவுமில்லாம என்ற தாத்தா எப்பவும் நம்ம மனசுல இருக்க பயத்த வெளிய காட்டிக்கவே கூடாது. அப்படி காட்டிக்கிட்டா எதிராளி ஜெயிச்சுடுவான்னு சொல்லி குடுத்துருக்கார். இப்போ அததான் பாலோ பண்றேன் மாமா…”

இப்படி ஒரு பதிலை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை…

அவளை நெருங்கி வந்தவன் அவளின் இருபக்கமும் கட்டிலில் கையை ஊன்றியவாறே “அப்போ ஏங்கிட்ட பயமெல்லாம் இருக்குனு சொல்ற அப்படித்தானே குட்டிபிசாசு…?”

அவன் அவ்வாறு நெருங்கியதில் உடல் நடுங்கினாலும் அதனை மறைக்க முயன்று தோற்றுப்போனவள், “இங்க பாரு மாமா எதுவா இருந்தாலும் நாலு அடி தள்ளி நின்னே பேசு…, உடம்பெல்லாம் பதறுதுல…”

அவனின் மூச்சுக்காத்து அவளை தீண்டி செல்லும் அளவுக்கு இன்னும் நெருங்கி வந்தவன், “ஏன்டி நாலு அடி தள்ளி நிக்கவா உன்ற கழுத்துல தாலி கட்டிருக்கேன்…?”

அவனின் அதித நெருக்கத்தில் விழிகளை மூடிக்கொண்டவளின் இதய துடிப்பு அதிகரிக்க உடலெல்லாம் குப்பென்று வேர்த்து கொட்டியது.

சில நொடிகள் அவளின் பயந்த முகத்தை ரசித்தவன் மனதிற்குள் “வாய் மட்டும் தான் போல கிட்ட வந்ததுக்கே இம்புட்டு பயப்படறாளே…, ரகு உன்ற நிலமை ரொம்ப மோசம் டா…, கல்யாணம் ஆகியும் நீ கட்ட பிரம்மச்சாரியா தான்டா வாழப்போற…’  மனதிற்கு பேசிக்கொண்டவன் அவளை விட்டு விலகி நின்று கைகளை தன் மார்பில் கட்டிக்கொண்டு அவளை பார்த்தான்.

அவள் நினைத்ததை போல எதுவும் நடக்காமல் இருக்கவும் ஒற்றை விழியை மட்டும் முதலில் திறந்துப் பார்த்தவள் அவன் தள்ளி நிக்கவும் இரண்டு விழிகளையும் திறந்தவாறே மூச்சை இழுத்து விட்டாள்.

அவளின் செயலை பார்த்து சிரித்து விட்டான்.

 “ஏய் குட்டிபிசாசு உன்ற வீரம் எல்லாம் இம்புட்டுதானா? கிட்ட வந்ததுக்கே நடுங்குற? இன்னும் மெயின் மேட்டரெல்லாம் இருக்கே அதெல்லாம் நடந்தா குளிர்காய்ச்சலே வந்துடும்போல என்று” அவளை சீண்டினான்.

“ரொம்ப ஓட்டாத மாமா… நா சின்ன புள்ளைதானே…”

“எது… சின்னபுள்ளையா? பாத்தா அப்படி ஒண்ணும் தெரியலையே டி? அவளின் மேனியை விழிகளால் துளைத்த வண்ணம் கேட்டான்.

“கணவனின் விழியின் தீண்டலில் முகம் செம்மை பூசிக்கொள்ள கைகளால் முகத்தை மூடிக்கொண்டவள், “ச்சீசீ…போ மாமா. அப்படி பாக்காத…, எனக்கு வெக்கம் வெக்கமா வருது” என்றாள்.

“பார்டா… என்ற பொண்டாட்டிக்கு வெக்கம்லாம் வருது. உலக அதிசயம் தான்…” அவனும் கலாய்க்க ஆரம்பித்தான்.

“ப்ளீஸ் மாமா… ரொம்ப ஓட்டாத…” அவளின் கெஞ்சலில் வாய்விட்டு சிரித்து விட்டான்.

அவன் சிரிக்கவும் ரோசம் வர கட்டிலில் இருந்த தலையணையை எடுத்து அவனை அடிக்க ஆரம்பித்தாள்.

அவள் அடிக்க ஆரம்பித்ததை தான் உணர்ந்தாள் அதற்குமேல் எதுவும் அவள் நினைவிலும் இல்லை அவள் பிடியிலும் இல்லை. ஒரே நொடியில் தலையணையை  பிடிங்கி எறிந்து விட்டு அவளின் கையை பிடித்து இழுத்து தன்மேல் விழச்செய்தவன் அவள் இடுப்பை சுற்றி ஒரு கரத்தை போட்டு தன்னை விட்டு நகர முடியாமல் சிறை செய்து அவளின் முகத்தை தான் விரல்களால் வருட ஆரம்பித்தான்.

அவனின் நெருக்கத்தில் உடலும் மனமும் சிலிர்த்ததென்னவோ உண்மை தான். ஆனால் அதன் பிறகு நடக்கப் போவதை நினைத்து உள்ளுக்குள் உதறலும் எடுத்தது. இரண்டு வித மனநிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.

விரல்களால் முகத்தை அளந்துக் கொண்டிருந்தவனின் விரல்கள் அவளின் இதழ்களை  தொட்டதும் அதன் மென்மையில் தன்னை இழந்தவன் “ஷர்மிமா உனக்கு சம்மதம்தானே…?” என்று கேட்டான்.

அவளும் அவன் என்ன கேட்கிறான் என புரியாமலையே அவன் கைகளில் மயங்கி நின்றவாறே “ம்ம்…” என்றாள். 

அவளின் ‘ம்ம்…’ என்ற வார்த்தையே அவனுக்கு போதுமானதாக இருந்தது. 

அவளின் துடிக்கும் இதழை தன் இதழ்கொண்டு மூடி அவனின் உயிரை அவளுக்குள் செழுத்தினான்.

 அங்கு ஒரு ஒரு அழகான தாம்பத்தியம் அரங்கேறியது.

கூடல் முடிந்ததும் அவளை தன் மார்பில் போட்டுக்கொண்டு அவளின் தலை முடியை மெல்ல கோதிக்கொடுத்தான்.

அவளின் ஆறுவருட காதல் இன்று கை சேர்ந்ததில் அவளின் மனது மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. அவனின் மார்பினில் தலைவைத்து படுத்து அந்த நிமிடங்களை அனுபவித்துக் கொண்டிவள் தலையை மட்டும் தூக்கி அவனின் கன்னத்தில் பெண்ணவள் மனமுவந்து தன் முதல் முத்தத்தை பதித்து “ஐ லவ் யூ மாமா…” என்றாள்.

அவளின் செயலில் சிலிர்த்தாலும் அதை காட்டிக்கொள்ளமால் “பேசாம தூங்குடி குட்டிபிசாசு ரொம்ப நேரமாகிபோச்சு…” என்றான்.

“போ மாமா நா எம்புட்டு ஆசையா முத்தம் குடுத்து லவ் சொன்னேன். நீ இப்படி பொசுக்குனு சொல்லற… தத்தி தத்தி…”  

அவள் திட்டுவதை கேட்டு சிரித்தவன் ‘லவ் யூ டி என் அழகான ராட்சசி…’ மனதிற்குள் மட்டும் சொல்லிக்கொண்டான்., 

அந்த மூன்றெழுத்து மந்திரம் தன்னையும் ஆட்க்கொண்டு விட்டதை நேற்று இரவு தந்தையிடம் பேசி விட்டு வந்த பிறகே உணர்ந்து விட்டான். ஆனாலும் அதனை அவளிடம் சொல்ல ஏதோ ஒன்று அவனை தடுக்கிறது. அதற்கு காரணம் காதலால் தந்தை அனுபவித்த வலியாகக்கூட இருக்கலாம். காரணம் ஏதோ ஒன்று. இப்போது அவளிடம் தன் காதலை சொல்ல அவனுக்கு விருப்பமில்லை.

  “உண்மையை சொல்லு மாமா… உனக்கும் என்ற மேல லவ் இருக்குத்தானே… அதை ஏன் ஏங்கிட்ட சொல்ல தயங்கற?”

 

“ஏற்கனவே நீ என்ற மேல வச்சிருக்க லவ்வ பாத்தா எனக்கு ரொம்ப பயமா இருக்குடி… இந்த லவ்வால நம்ம வீடு ஏகபட்ட வலிய அனுபவிச்சிடுச்சு. திரும்பவும் இன்னொரு வலி, ஏமாற்றம் வந்தா இங்க ஆராலையும் தாங்க முடியாது. முக்கியமா என்னால…” மனதின் பயத்தை வார்த்தைகளாக கொட்டினான்

“நீ என்ன சொன்னாலும் நா உன்ற மேல காட்ற லவ்வ குறைச்சிக்க முடியாது மாமா. ஆறு வருசமா நீ எனக்கு கிடைப்பியா மாட்டியாங்றதுலாம் தெரியாமையே உன்னை மட்டும்தான் நினைச்சிட்டு இருந்துருக்கேன். அப்பவே அப்படினா இப்போ நீ எனக்கு மட்டும் முழுசா சொந்தாயிட்ட… இனி ஆரு சொன்னாலும், ஏ நீயே சொன்னாலும் உன்ன விட்டு குடுத்துட மாட்டேன்…” தன் காதலை அத்தனை அழுத்தமாக அவனின் மனதில் பதிய வைத்தாள்.

எப்பவும் போல அவளின் அதிகப்படியான காதலில் மிரண்டவன் “எனக்கு பயமா இருக்குடி…, இந்த வீட்ல இன்னொரு ராமா நீ மாறிடுவியோனு.”

“ராம் மாம்ஸ் அளவுக்கு உன்ற மேல லவ் வச்சிருக்கேனானு எனக்கு தெரியாது மாமா. ஆனா நீ லலிதா அத்தை கிடையாது.  உன்னால என்னோட சின்ன வலியக்கூட தாங்கிக்க முடியாது மாமா. அப்படி இருக்கப்போ நீ என்ன கஷ்டபடுத்த மாட்ட. அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.”

 “தேங்ஸ்டி குட்டிபிசாசு… உன்ற நம்பிக்கைய நா காப்பாத்துவேன்டி…”

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த இருவரும் பின் உறக்கத்தை தழுவினர்.

Advertisement