Advertisement

“என்ற சுயநலத்துக்காக எல்லாரையும் கஷ்ட படுத்திட்டேன் கண்ணா. அதுல ரொம்ப பாதிக்கபட்டது என்ற மாமனாரும், உன்ற அம்மாவும், நீயும்தான். வாழ்க்கையில என்னால ஆருக்கும் சந்தோசத்தையும் நிம்மதியையும் குடுக்க முடியலை கண்ணா, நானெல்லாம் உயிர் வாழவே தகுதி இல்லாதவன்…”

“என்னப்பா இப்படிலாம் பேசறிங்க… நீங்க இன்னும் வாழவே ஆரம்பிக்கலப்பா… அதுக்குள்ள வாழ்ந்து முடிச்சிட்டோம்னு சொல்றிங்க?”

“இதுக்குமேல வாழ்க்கைல எனக்கு என்ன கண்ணா இருக்கு? அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே…, இன்னும் ஒரே ஒரு ஆசைதான் கண்ணா…, சாகரதுக்குள்ள உனக்கு பொறக்கப்போற என்ற பேரக் குழந்தைய தூக்கி கொஞ்சனும் அவ்வளவுதான்… நிம்மதியா செத்துருவேன்.”

“என்னப்பா திரும்ப திரும்ப சாகரத பத்தியே பேசரிங்க… அம்மா இப்போலாம் ரொம்ப மாறிட்டாங்கப்பா…, நீங்க ஒரு வார்த்தை பேசமாட்டிங்ளானு ஏங்கறாங்க…”

சில நொடிகள் அமைதியாக அமர்ந்திருந்தவர் “உன்ற அம்மாவோட மாற்றம் எனக்கானது இல்லை கண்ணா. மத்தவங்களுக்காக போட்ட வேஷத்த நா நம்ப தயார இல்லை. இனி ஒரு ஏமாற்றத்த தாங்கற அளவு மனசுல தெம்பும் இல்லை கண்ணா. உனக்காக இன்னும் கொஞ்ச நாளைக்கு வாழனும்னு நினைக்குறேன்…”

“அப்பா…” அவன் பேச வந்ததை தடுத்தவர்,

“போதும் கண்ணா. இதுக்குமேல எதுவும் பேசிடாத மனசு ரொம்ப வலிக்குது. நா கொஞ்ச நேரம் அப்படியே நடந்துட்டு வரேன்…” என்றவர் எழுந்து தெருவில் நடக்க ஆரம்பித்தார்.

தந்தையின் பேச்சை கேட்டு அதிர்ந்துப்போய் அமர்ந்திருந்தவன் அவர் எழுந்து போகவும் தானும் எழுந்து அவருடனே நடக்க ஆரம்பித்தான்.

மகன் தன்னுடன் வருவதை உணர்ந்தாலும் எதுவும் பேசாமல் நடந்தார்.

அவர்கள் எழுந்து போனதும் லஷ்மிக்கு லலிதாவின் மேல் பயங்கர கோபம் வந்தாலும் ‘தன்னுடைய தலையில் தானே மண்ண அள்ளி போட்டுகிட்டாளே’ என்ற வருத்தமும் இருந்தது. இப்போது எதாவது பேசினால் கோபத்தில் அவளை காயபடுத்தி விடுவோம் என்பதை உணர்ந்தவர் மகளிடம் “ஏய் ஷர்மி போய் சேலைய கட்டிட்டு தம்பி ரூமுக்கு போ…” என்றார்.

“போ லச்சுமா நா சேலைலாம் கட்டமாட்டேன். என்னால எல்லாம் ராத்திரி சேலை கட்டிட்டு தூங்க முடியாது…”

“விடு லஷ்மி கண்ணு… புள்ளைக்கு எது விருப்பமோ அதையே போட்டுகிட்டு போகுது…” பொன்னுதாயி பேரன் பொண்டாட்டிக்காக பரிந்து வந்தார். 

அந்த காலத்திலையே மருமகளுக்காக யோசித்து முதல்ராத்திரியே வேண்டாம் என்றவர், இப்போது ஷர்மியை தன் வீட்டிற்கு சந்தோசத்தை அள்ளி தர வந்தவளாக நின்னைத்துக் கொண்டிருப்பவராயிற்றே… அவ்வளவு எளிதில் விட்டு குடுத்து விடுவாரா…?

பொன்னுதாயை கட்டிக்கொண்டவள் “என்ற செல்ல அம்மு…” என்றவள் தாயை பார்த்து பழித்து காட்டினாள்.

“பெரியம்மா நீங்க இப்படி அவ இஷ்டத்துக்கு விட்டு விட்டுதான் இங்க ஒருத்தி வாழ்க்கையவே தொலச்சிட்டு உட்கார்ந்துருக்கா… அடுத்து இவளுக்கும் செல்லங்குடுத்து கெடுக்காதிங்க… கொஞ்சமாவது மாமியார நடந்துக்குங்க…,”

 “இதுங்க ரெண்டையும் சொல்லி திருத்தவே முடியாது. எல்லாரும் எப்படியோ போய் தொலைங்க. நா என்ற வூட்டுக்கு போறேன் இங்க இருந்தா சண்டைதான் வரும் பெரியம்மா…” என்றவர் கோபத்துடன் தங்களது வீட்டிற்கு சென்று விட்டார்.

தன்னுடைய அம்மா போனதும் ஷர்மி “நீ எப்பவும்போல ஸ்சுவீட் மாமியாராவே இரு அம்மு… அதுதான் உனக்கு நல்லாருக்கு… லச்சு சொல்றதெல்லாம் கேக்காத சரியா…” என்றாள்.

“சரிடா ராசாத்தி…”

அதுவரையிலும் கூட அந்த இடத்தை விட்டு அசையாமல் அமர்ந்திருந்த லலிதாவை பார்த்தவள் அவரின் அருகில் சென்று தானும் தரையில் முழங்காலிட்டு அமர்ந்தவள் லலிதாவின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டவாறே “இப்போ எதுக்குத்தை அழறிங்க? இப்படி அழுதுட்டே இருந்தா எல்லாம் சரியாகிடுமா த்தை?” அவள் கேட்கவும்,

“நல்லா சொல்லு கண்ணு…, புருசன் விலகிப்போறானு இவளும் விலகிப்போனா எப்படி? நானும் அவன்கிட்ட போய் பேசுடினு எம்புட்டு நாளா சொல்லி சலிச்சி போயிட்டேன். இன்னும் புது பொண்ணு மாதிரி அவன கண்டாவே ஒதுங்கி ஒதுங்கி போறா…”

“மாமா நா பேசப்போனாவே விலகிப்போறாங்கத்தை… அவருக்கு என்றகிட்ட பேசவே புடிக்கலை…” லலிதா அழுதவாறே கூறவும்,

“அப்படியே அறைஞ்சேனா பல்லு அத்தனையும் கொட்டிபோயிடும் பாத்துக்க…, அவன் வந்து உன்றகிட்ட சொன்னானா? அவனுக்கு புடிக்கலைனு…? புருசன கைக்குள்ள போட்டுக்க தெரியலைனு சொல்லுடி” பொன்னுதாயி கோபமாக மருமகளை திட்டவும்,

லலிதா, “அத்தை…” என்றாள்.

“என்ன அத்தை சொத்தைனுகிட்டு இருக்க… இன்னைக்கு ஒழுங்கா போய் உன்ற புருசன் ரூம்லதான் தூங்கர… என்ன பண்ணுவியோ தெரியாது பொழுது விடியரதுக்குள்ள அவன சரி கட்ட வேண்டியது உன்ற பொறுப்பு…” 

“அத்தை நானெப்படி அவர்க்கூட…” 

“ஷர்மி கண்ணு அந்த வெளக்கமாத்த எடு ரெண்டு சாத்து சாத்தறேன்…, 

ஏன்டி இப்படி இருக்க…, பேத்தி இருக்கானு பாக்கறேன் இல்லைனா நல்லா சொல்லிப்போடுவேன்…”

“அவன் உன்ற புருசன்டி உங்க ரெண்டு பேருக்கும் இன்னும் வயசாகல… நா சொல்றது புரியுதா இல்லையாடி… அப்படியே தலைய நட்டுகிட்டு உட்கார்ந்துருக்க…” பொன்னுதாயி திட்டவும்,

ஷர்மி, “விடு அம்மு… அத்தைய ரொம்ப திட்டாத…” என்றாள்.

“திட்டாம என்ன கண்ணு பண்ண சொல்ற? நீயும்தானே கேட்ட என்ற மகன் எம்புட்டு வருத்தபட்டு பேசிட்டு போறான். பெத்தவ நா உசுரோட இருந்தும் என்னால அவனோட மனக்கவலைய தீர்க்க முடியலை. இவ மாறுனதும் சந்சோச பட்டேன் கண்ணு. இனிமேவாவது என்ற மகன் வாழ்க்கை நல்லா இருக்கும்னு. ஆனா அது நடக்கறமாதிரியே தெரியலை…” பொன்னுதாயின் குரலில் சிதைந்து போன மகனின் வாழ்க்கையை நினைத்து பரிதவிக்கும் தாயின் வலி இருந்தது.

மாமியாரின் வார்த்தை லலிதாவின் இதயத்தை குத்தி கிழித்தது. இந்த நொடியே யாருக்கும் பாரமில்லாமல் இறந்துவிட சொல்லி மனம் துடித்தது. ஆனால் தான் இறந்துவிட்டால் கணவனின் நிலை… இப்படி இரண்டும் கெட்டான் நிலையில் தவிக்க ஆரம்பித்தார்.

தனது அத்தையின் வலி நிறைந்த முகத்தை பார்த்த ஷர்மி “அத்தை நீங்க மாமா பேசறத கேட்டிங்கதானே? அவரால உங்களோட இந்த திடீர் மாற்றத்த நம்ப முடியலை. எங்க திரும்ப ஏமாந்துருவோமோனு பயப்படறார்., அந்த பயம்தான் அவர உங்களை விட்டு விலக வைக்குது. மாமாவோட பயத்த முதல்ல இல்லாம பண்ணுங்க. இவ்வளவு நடந்த பிறகும் மாமாவுக்கு உங்கமேல வச்சிருந்த காதல் துளிக்கூட குறையலை.  இப்பவும் உங்களுக்கு ஒண்ணுனா துடிச்சிபோயிடறார். இத்தனை அன்பு வச்சிருக்கர மாமாவ உங்க பக்கம் கொண்டு வரது அவ்வளவு கஷ்டமா? என்ன?” ஷர்மி கேட்கவும்,

மருமகளின் வார்த்தை லலிதாவை யோசிக்க வைத்தது.

“பாருடி சின்னபுள்ள எம்புட்டு அழகா பேசறா. நீயும்தான் இருக்கியே. இனியாவது ஒழுங்கா என்ற மகன்கூட வாழற வழியபாரு…”

 

அந்த நேர கணத்த சூழ்நிலையை மாற்ற நினைத்தவள் பொன்னுதாயிடம் “ஏ அம்மு அப்போ எனக்கு சீக்கரமே கொழுந்தனோ கொழுந்தியோ வரப்போறாங்ளா?” கேட்டாள். 

ஷர்மி சொன்னதை கேட்டு முதலில் புரியாமல் முழித்த மாமியாரும் மருமகளும் புரிந்ததும் பொன்னுதாயி சிரித்தார் என்றால் லலிதாவோ தர்மசங்கமடைந்தார்.

“ஷர்மி ம்மா அத்தை பாவம் டா…”

“ஏத்தை நானென்ன தப்பாவா கேட்டுடேன்…? அம்மு நீயே சொல்லு நா கேட்டது தப்பா…?”

“இல்லைடா ராசாத்தி…”

“அத்தை நீங்களுமா…?”

“ஏன்டி இதுல தப்பென்ன இருக்கு? உனெக்கென்ன வயசா ஆகிப்போச்சு நீ புள்ளைய பெத்துக்குடு நா வளர்த்திடறேன்…” அவரும் பேத்தியுடன் சேர்ந்து மருமகளை கலாய்த்தார்.

“சூப்பர் அம்மு…, ஒரே சமயத்துல மகனோட குழந்தையையும் பேரனோட குழந்தையையும் ஒண்ணா வளர்க்க ஆசைபடர…”

“ஆமாடி ராசாத்தி…”

“எனக்கு பொண்ணுதான் வேணும்.., உனக்கென்ன குழந்தை வேணும் அம்மு?”

“எனக்கு எதுவா இருந்தாலும் சரிதான் கண்ணு…”

மாமியாரும்,அண்ணன் மகளும் பேசிக்கொண்டதை பார்த்து லலிதாதான் தலையில் அடித்துக்கொள்ள வேண்டியதாக இருந்தது.

 “ஷர்மி ம்மா என்ன விட்ருடா…” இருவரும் அடுத்து பிள்ளை வளர்க்கிறது வரைக்கும் பேச ஆரம்பித்து விடவும் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டார்.

“சரி அம்மு… உன்ற மருமக ரொம்ப கெஞ்சது அதனால மிச்சத்த நாளைக்கு வச்சிக்கலாம்…”

‘எது நாளைக்குமா…’ உள்ளுக்குள் அலறிய லலிதா பேச்சை மாற்ற எண்ணி “ஷர்மிமா வா உனக்கு தலை சீவி பூ வச்சி விடறேன்…” என்று கூறியவர் கையோடு மருமகளை அழைத்து சென்று தலை சீவி, தலை நிறைய பூவை வைத்து விட்டு அவளின் அழகில் வியந்தவர் “ரொம்ப அழகா இருக்க ஷர்மிமா” அவளின் கன்னத்தை வழித்து நெற்றி முறித்தார்.

பின் மகனின் அறையில் அவரே கூட்டிப்போய் விட்டு வந்தவர் மாமியார் இன்னும் தூங்காமல் இருப்பதை பார்த்து “அத்தை நீங்க போய் தூங்குங்க…” என்றார்.

அவருக்கும் அசதியாக இருக்கவும் தூங்க சென்று விட்டார்.

மாமியார் சென்ற பிறகு அங்கிருந்த சோபாவில் அமர்ந்த லலிதா மனதில் ஒரு தெளிவான முடிவெடுத்துகொண்டு கணவன், மகன் இருவரின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

சுந்தரமூர்த்தி வீடு….

 மகளையும், கொழுந்தியாவையும் திட்டிவிட்டு அதே கோபத்துடன் தன் வீட்டிற்கு வந்துவிட்டார் லஷ்மி.

தங்கள் வீட்டு வாரிசுகள் இருவருக்கும் இன்று நல்லபடியாக திருமணம் முடிந்த நிம்மதியுடன் சுந்தர மூர்த்தி குடும்பமும், இந்துவின் அண்ணன் சதாசிவம் குடும்பமும் மகிழ்ச்சியில் இருந்தனர். பெண்கள் சமையல் வேலையில் மூழ்கி இருக்க ஆண்கள் வாசலில் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த லஷ்மியை பார்த்ததும் அனைவரும் அதிர்ந்துவிட்டனர்.

முருகேசன் மனைவியை பார்த்ததும் அவளருகில் எழுந்து சென்றவர், “இப்போ எதுக்கு ஷர்மிமா கூட இருக்காம இங்க வந்த லஷ்மி?” கேட்டதும்,

“நானே செம்ம கோபத்துல இருக்கேன் எதாவது பேசி ஏங்கிட்ட வாங்கி கட்டிக்காதிங்க. கணவனுக்கு மட்டும் கேட்டுகுமாறு எரிந்து விழுந்துவிட்டு விட்டிற்குள் செல்லப் போனவரை மாமனாரின் குரல் தடுத்து நிறுத்தியது.

“என்னாச்சு கண்ணு? அங்க எதாவது பிரச்சனையா?”

“உங்க வூட்டு புள்ளைங்க போர எடுத்துல பிரச்சனை இல்லாம இருந்தாத்தான் அதிசியம் மாமா…”

“என்னனு தெளிவா சொல்லாம நீ பாட்ல பேசுனா என்ன அர்த்தம் லஷ்மி” முருகேசன் கேட்கவும்,

“என்னத்த சொல்லனும்ங்றிங்க? நம்ம வூட்டு பொண்ணால அங்க ஒருத்தரோட வாழ்க்கையே அழிஞ்சிபோச்சு. இன்னைக்கு அந்த மனுசன் பேசுனத ஏங்காதால கேட்டேன்.”

லஷ்மியின் குரல் கேட்டதும் வீட்டிற்குள் இருந்த அனைவரும் வெளியே வந்துவிட்டனர்.

“மாப்பிள்ளை என்ன சொன்னாரு கண்ணு?” மூர்த்தி கேட்டதும்,

“நாம ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டோம் மாமா. பழைய பகைய நினச்சிட்டு அவங்கள ஒதுக்கி வைக்காம அப்பவே லலிதாவையும் ராம் தம்பியையும் மன்னிச்சி ஏத்துகிட்டு இருந்துருந்தோம்னா அவங்களோட வாழ்க்கை அழிஞ்சிருக்காது. இன்னைக்கு ராம் தம்பி மனசு ஒடஞ்சி பேசறாருனா அதுக்கு முழுக்க முழுக்க காரணம் நம்ம புள்ள மட்டும்தான் மாமா.”

“எனக்கு ஒண்ணும் புரியலை லஷ்மி குட்டிமாவுக்கு மாப்பிள்ளைக்கும் இடைல திரும்ப எதாவது சண்டை வந்துடுச்சா?” முருகேசன் பதற்றத்துடன் கேட்வும்,

“உங்க தங்கச்சி பேசுனாதானே சண்டை வரதுக்கு. அவதான் ராம் தம்பிகிட்ட பேசறதே இல்லையேங்க.” என்ற லஷ்மி

ராம் மகனிடம் பேசிய அத்தனையும் சொல்ல ஆரம்பித்தார் லஷ்மி.

அதைக் கேட்ட அனைவரின் மனமும் கனத்துவிட்டது.

“நாம வேனா மாப்பிள்ளைகிட்ட பேசி பார்க்கலாமாப்பா?” தந்தையிடம் தமிழரசு கேட்டதும்,

“மாப்பிள்ளைகிட்ட மட்டுமில்லை பேரன்கிட்டையும் பேசனும் தமிழு.” மூர்த்தி சொன்னதும்,

“ஆமாப்பா. சின்ன மாப்பிள்ளைக்கு இன்னும் நம்ம மேல இருக்க கோபம் குறையல. அவர் நம்மகிட்ட என்னதான் பேசுனாலும் ஒரு மூனாவது மனுசன்கிட்ட பேசற மாதிரிதான் பேசறாரு.”

“ம்ம் எனக்கும் அது தெரியுது முருகேசா. பேரனுக்கு நம்ம மூனு பேர் மேலையும் இருக்க கோபம் போகலை. அவன சொல்லியும் தப்பில்லை முருகேசா. அவன் மனசுல சின்ன வயசுல இருந்தே நம்ம மேல வெறுப்பு வளர்ந்துருச்சு. அதோட வெளிப்பாடுதான் அடிக்கடி நம்ம கிட்ட காட்டறான்.”

மூர்த்தி பேசி முடித்ததும் அனைவரின் மனதிலும் இதனை எவ்வாறு சரி பண்ணுவது என்ற குழப்பமே மிதமிஞ்சி கிடந்தது.

மூர்த்தி சொல்வதை போல் ரகுநந்தனால் அம்மாவுடைய பிறந்த வீட்டினரை அவ்வளவு எளிதில் மன்னிக்க முடியவில்லை. லஷ்மி, இந்து, அகிலேஷ் மூவரை தவிர தன் தாத்தா மாமா இருவரிடமும் சற்று விலகியே இருக்கிறான். அவன் மனதில் தன் அப்பா, அம்மாவை அவர்கள் மன்னித்திருந்தால் அவர்களுடைய் வாழ்க்கை சிதைந்திருக்காது என்ற எண்ணம் ஆழ பதிந்துவிட்டது. அது அவ்வளவு எளிதில் அவன் மனதை விட்டு விலகாது.

Advertisement