Advertisement

.

அத்தியாயம். 26

இருள் விலகாத விடியற்காலையிலே திருமண மண்டபம் உறவினர்களின் வருகையால் நிரம்பி வழிந்தது.

 நாதஸ்வர இசை திருமணத்திற்கு வந்திருப்போரின் செவிகைளையும், இதையத்தையும் குளிர்வித்து கொண்டிருந்தது.

பிரம்ம முகூர்த்தத்தில் மாங்கல்யம் பூட்டுதல் சடங்கு நடைப்பெற்று கொண்டிருந்தது.

மணவறையில் மணமக்கள் அருமைக்காரர்(திருமணத்தை நடத்தி வைப்பவர்) சொல்வதைச் செய்து கொண்டிருந்தனர்.

 

தன் பேரன் பேத்தி இருவரின் ஒரே மேடையில் நடப்பதை மனம் குளிர பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரமூர்த்தி. அவருடைய பல வருட கனவு இன்று தன் பேத்தியின் மூலம் நிறைவேறி விட்டதை நினைத்து உள்ளுக்குள் பேரானந்தம் கொண்டிருந்தார்.

ரகுநந்தன் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சியே அவனை அத்தனை அழகாக காட்டியது.

அவனுக்கு அருகில் தானும் அழகில் சலைத்தவள் அல்ல என்பதைப் போல் அரக்கு வண்ண காஞ்சி பட்டு உடுத்தி முழு அலங்காரத்தில் தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள் ஷர்மி. நான்கு வருட காதல் கைகூடிய மகிழ்ச்சி அவளின் முகத்தில் தெரிந்தது. அவ்மகிழ்ச்சியே அழகுக்கு இன்னும் அழகு சேர்த்தது.

ரகு நந்தன், ஷர்மி ஜோடி பக்கத்திலே அகிலேஷ், செல்வியும் மணவரையில் தங்களுடைய பல வருட காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் அகமும் முகமும் மலர அமர்ந்து திருமணத்திற்காகன சடங்கை செய்துக்கொண்டிருந்தனர்.

மணமகன் கோலத்தில் இருந்த மகனை பார்த்த ராமின் மனம் நிறைந்திருந்தது. 

சுபமுகூர்த்த நேரத்தில் அருமைக்காரர் கடவுளை வணங்கிவிட்டு மாங்கல்யத்தை எடுத்து இரு மணமகன்களின்  கரத்தில் கொடுத்தார்.

 கெட்டிமேளம் முழங்க, நாவிதர் மங்கல வாழ்த்து பாட, உற்றார் உறவினர்களின் மனம் நிறைந்து அட்சதை தூவி ஆசிர்வதிக்க, திருமாங்கல்யத்தை ரகுவும், அகிலேஷ்ம் தன் இணைகளின் கழுத்தில் பூட்டி தன்னில் சரிபாதியாக மாற்றிக் கொண்டார்கள்.

தலை குனிந்திருந்த ஷர்மியின் மார்பில் அவன் கட்டிய மாங்கல்யம் பட்டு அவளின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியதை கண்டு மனம் நிறைந்தவளின் விழிகள் முதலில் பார்த்தது, தன்னுடைய தாத்தாவையும், அண்ணனையும் தான்.

அவர்களை பார்த்ததும் விழிகளில் நீர் பூக்க உதடுகளில் புன்னகையும் ஒரு சேர வந்தது.

சுந்தரமூர்த்தி பேத்தியின் மணக்கோலத்தை கண்டு மெய்மறந்து நின்றிருந்தார்.  

 அகிலேஷ் தங்கையின் கண்களில் கண்ணீரை பார்த்ததும் சைகையில் கண்ணீரை துடைக்க கூறினான். அவன் முகமும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது.

அவன் சைகையில் சொன்னதும் கண்ணீரை கர்ச்சிப்பால் ஒற்றி எடுத்துக்கொண்டு அண்ணனை பார்த்து ‘லவ் யூ அண்ணா…’ வாய் அசைத்தாள்.

அவளை போலவே அகிலேஷ்ம் ‘லவ் யூடா ஷர்மி…’ என்றான்.

ரகுவும் தன்னவள் விழிகளால் தன் மச்சினனிடம் சொல்லிக் கொண்டிருந்ததை பார்த்தவன் அவர்களின் பாசத்தை பார்த்து எப்போதும்போல இன்றும் வியந்து போனான்.

அதன் பிறகு ஒவ்வொரு சடங்காக முடிந்து வீட்டிற்கு வந்த மணமக்கள் வீட்டில் விளக்கேற்றி முடித்து பால்பழம் சாப்பிட்டதும். அன்றே மணமக்களின் குலதெய்வ கோவில்களுக்கும் சென்று குலதெய்வத்தை வணங்கிவிட்டு வர அன்று சாயிந்திரம் ஆகிவிட்டது.

கோதையும் அரவிந்தும் கோவிலுக்கு சென்றுவிட்டு சாமி கும்பிட்டதும் மறுநாளே ப்ளைட் டிக்கெட் போட்டிருந்ததால்  அப்படியே கிளம்பி அரவிந்த் ஊருக்கு சென்று விட்டனர்.  

கோதையையும், அரவிந்தையும் அனுப்பி வைத்துவிட்டு வர மாலை ஆறு மணி ஆகி விட்டது.,

  வீட்டிற்கு வந்ததும் ஷர்மி காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் வந்தவள் ஹாலில் இருந்த சோபாவிலே படுத்துவிட்டாள். 

அவளின் பின்னால் வந்த லஷ்மி “எழுந்திரி ஷர்மி… பொழுது இறங்கிடுச்சு இப்போ தூங்காத…” என கண்டித்தார்.

அவர் சொல்வதை காதிலே வாங்காமல் அந்த இடத்தை விட்டு அசையாமல் படுத்திருந்தாள். 

ஷர்மின் களைத்த தோற்றத்தை பார்த்த பொன்னுதாயி “ஏங்கண்ணு புள்ளைய திட்ற விடு தூங்கிட்டு போகட்டும்…” லஷ்மிடம் கூறியவர் “உள்ள எந்திருச்சிப்போய் தூங்குடா ராசாத்தி…” ஷர்மியிடம் கூறினார்.

“நா இங்கையே தூங்கறேன் அம்மு… இந்த க்ரவுட மட்டும் க்ளியர் பண்ணி விட்ரு அம்மு…” லஷ்மியை காட்டி கூறியவள் கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.

அவளின் பேச்சில் ரகு சிரித்து விட்டான்.

மகள் சொன்னதை கேட்டு திட்ட போன லஷ்மியை தடுத்த லலிதா “அண்ணி மருமக தூங்கட்டும் வாங்க நாம போயி மத்த வேலைய பாக்கலாம் அண்ணி” என கூறி லஷ்மியை அழைத்துக் கொண்ட சென்று விட்டார். 

 

ரகு தூங்கும் அவளை சில நொடிகள் பார்த்தவன் பின் , “சரி அப்பாத்தா நா அப்பாகிட்ட போறேன்…” என்று கூறிவிட்டு கிளம்பி சென்றுவிட்டான்.

லஷ்மி மட்டும் அன்று இரவு மணமக்களுக்கு சாந்திமுகூர்த்தம் சடங்கு இருந்ததால் மகளுடனே தங்கிக்கொண்டார்.

இந்து அகிலேஷையும், செல்விக்கும் சடங்குக்கு ஏற்பாடு பண்ணுவதற்காக தன் அண்ணன் மனைவியான செல்வியின் அம்மாவுடன் கோவில் இருந்து நேராக மணமக்களுடன் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

 இரவு சமையலுக்கான வேலைய லஷ்மியும், லலிதாவும் பார்த்தனர்.

சமைத்து முடித்து அனைவரும் சாப்பிட்ட பிறகும்கூட ஷர்மி சோபாவை விட்டு அசையாமல் அங்கையே தூங்கிக் கொண்டிருந்தாள்.

சாப்பிட்டு முடித்த ரகுவும், ராமும் கல்யாணத்துக்கு ஆன செலவு கணக்குகளை வாசலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரவு ஒன்பது மணி ஆகியும் ஷர்மி எழாமல் இருக்கவும் லஷ்மி பல்லைக் கடித்துக்கொண்டு இருந்தார். சம்பந்தி வீடாக இருக்கவும் அவரால் திட்டக்கூட முடியவில்லை. கோபத்தை இழுத்து பிடித்துக்கொண்டு இருந்தவர் ஒரு கட்டத்தில் முடியாமல் லலிதாவிடம் கத்த ஆரம்பித்து விட்டார்.

பாவம் அவரும் தான் என்ன பண்ணுவார். அன்றே நல்ல நாளாக இருக்கவும் இருவருக்கும் சாந்திமுகூர்த்தமும் வைத்திருந்தனர். மகள் இப்படி தூங்கவும் அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளுக்குள் மகளை திட்டிக்கொண்டிருந்தார்.

“உன்ற மருமகள போய் அவள எழுப்பி விடு லலிதா. இப்ப நாம்போய் எழுப்புனா வீம்புக்குனே எழுந்திருக்காம படுத்துருப்பா. எல்லாம் எங்க வூட்டு ஆம்பளைங்க குடுக்குற செல்லம்தான் இவ நா சொல்றதையே கேக்கமாட்றா. கண்ணாலம் ஆன முதல்நாளே இப்படி தூங்குனா என்ன நினைப்பாங்க  மாமியார். பத்து மணிக்கு நல்லநேரம் அதுக்குள்ள இவள ரெடி பண்ண வேண்டாமா?” ஒரு கட்டத்தில் புலம்பவே ஆரம்பித்து விட்டார்.

“கோபபடாதிங்க அண்ணி. நா போய் எழுப்பிவிடறேன்.” என்றவர் எப்படியோ ஒரு வழியாக ஷர்மியை எழுப்பி கீழ் இருந்த அறையிலிருந்த பாத்துருமிற்கு குளிக்க அனுப்பி வைத்து விட்டார்.

இப்போது தான் அவராலும் நிம்மதியாக மூச்சு விடமுடிந்தது.

மருமகளை குளிக்க அனுப்பிவிட்டு இரவுக்கு கட்ட வேண்டிய சேலையை எடுத்து அங்கிருந்த கட்டிலில் வைத்துவிட்டு அவளிடம் கூறிவிட்டு வெளியே வந்து லஷ்மியுடன் பேசிக் கொண்டிருந்தார் லலிதா.

சிறிது நேரம் கழித்து குளித்து முடித்து வெளியே வந்து நின்றவளின் கோலத்தை பார்த்து லஷ்மிக்கு முச்சே நின்று விட்டது.

பேபி பிங் கலர் நைட்டியில் முடியை விரித்து போட்டுக்கொண்டு வந்தவளை பார்த்தவர் “இதென்னடி கோலம்… இந்த கருமத்த எப்போ டி எடுத்துட்டு வந்த? நா சேலைதானே எடுத்துட்டு வந்தேன்?” கேட்டார். 

பொன்னுதாயை பார்த்து கண்ணடித்தவள் “என்ன லச்சுமா குடும்ப பெண்கள் அணியும் நைட்டிய போய் கருமம்னு சொல்லிட்ட? இந்த நைட்டியோட விலை என்ன தெரியுமா? இத நா எம்புட்டு ஆசையா எடுத்துட்டு வந்தேன் இதப்போய் கருமம்னு சொல்லிபோட்ட, உனக்கு ரசனையே இல்லை லச்சுமா…”

“கூட கூட பேசிட்டு இருந்தினா அடிவாங்குவடி. ஒழுங்கா போய் சேலைய கட்டிட்டு வா தலை சீவி பூ வச்சி விடறேன்…”

“ராத்திரி தூங்க போக்ஷதுக்கு ஆராவது சேலை கட்டுவாங்ளா…? போ லச்சு…, நாளைக்கு காத்தால அந்த சேலைய கட்டுக்குறேன்…”

‘மகள் இந்த நாளை பற்றி புரியாமல் பேசுகிறாளே’ என நினைத்த லஷ்மி “இன்னைக்கு உனக்கும் ரகுக்கும் சாந்திமுகூர்த்தம் வச்சிருக்கு ஷர்மி…, இன்னைக்கு சேலைதான் கட்டனும் போய் கட்டிட்டு வா…” பொறுமையாக கூறினார்.

“அதலாம் எனக்கும் தெரியும் லச்சுமா.., இதலாம் தெரியாமையா கல்யாணம் பண்ணிருக்கேன்…” என்றவள் “ஏ லச்சுமா.. எனக்கு ஒரு டவுட்டு முதல் ராத்திரிக்கு சேலைதா கட்டனும் எதாவது ரூல்ஸ் இருக்கா என்ன?” அவரின் கோபத்தை மேலும் தூண்டிவிட்டாள்.

மகள் கூறியதை கேட்டதும் லஷ்மிக்கு பீபீ ஏறிவிட்டது.

 “எது சொன்னாலும் எகனைக்கு மொகனையாவே பேசிட்டு திரியவேண்டியது. ஏய் லலிதா அந்த வெளக்கமாத்த எடுத்துட்டு வா. அதுலையே ரெண்டு சாத்தறேன்…” என்றவர் மகளை அடிக்க தொரத்தினார்.

“இங்க பாரு லச்சுமா… எனக்கு கண்ணாலம் ஆகிடுச்சு இனிமே என்ன அடிக்கர உரிமை உனக்கு கிடையாது தெரியுமா…”

“அடிங்க… ஆருக்குடி உரிமை இல்லை… கைல சிக்குன தோலை உரிச்சிப்போடுவேன்டி…”

“நா உன்றகிட்ட சிக்குனாதானே லச்சும்மா அடிப்ப… நாந்தா சிக்கமாட்டேனே…”

அம்மாவும், மகளும் வீட்டையே வலம் வர ஆரம்பித்தனர்.

அம்மா, மகள் சண்டையை லலிதா, பொன்னுதாய் இருவரும் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தனர்.

வெளியே உட்கார்ந்திருந்த ராம், ரகுவும் உள்ளே நடந்த கலவரத்தை கேட்டு முகத்தில் புன்னகை விரிந்தது.

“முதல்நாளே உங்க மருமக அவளோட வேலை ஆரம்பிச்சிட்டா போலப்பா… பாவம்ப்பா அத்தை இவள எப்படிதான்  வச்சி மேய்க்கறாங்ளோ…” சிரித்துக்கொண்டே கூறினான்.

“இனிமே அக்கா செஞ்ச வேலைய நீ செய்யபோற கண்ணா…” அவரும் மகனை கலாய்த்தார்.

“அதலாம் பாத்துக்கலாம்ப்பா…, அவ வந்ததுக்கப்பறம் தான் நம்ம வீட்லையும் சிரிப்பு சத்தம் கேக்குதுப்பா… எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நம்ம வீடு இம்புட்டு சந்தோசமா இருந்ததே இல்லைப்பா…” அவனின் குரலில் அத்தனை ஏக்கம் தெரிந்தது.

மகன் சொன்னது முற்றிலும் உண்மை என்பதால் அவரால் பதில் ஏதும் பேச முடியவில்லை. தங்களுடைய வாழ்க்கை மகனையும் சேர்த்து பாதித்து விட்டதை நினைத்து அவரின் முகம் வாடிவிட்டது.

தந்தையின் முக வாட்டத்தை பார்த்தவன் “சாரிப்பா…” என்றான்.

“இதுக்கு எதுக்கு கண்ணா சாரி நீ சொன்னது உண்மைதானே…, உனக்கு இந்த வீடு, கல்யாணம் எல்லாம் அறவே புடிக்காம போனதுக்கு நாங்கதானே காரணம். நானும் உன்ற அம்மாவும் வாழ்க்கைய வாழத் தெரியாம வாழ்ந்து முடிச்சிட்டோம்…, ஆனா அது எங்களை மட்டும் பாதிக்காம உன்னையும் சேர்த்து பாதிச்சிடுச்சுங்றத உணரும்போது தான் நாங்க பண்ண தப்பு புரியுது கண்ணா…”

உள்ளே அம்மாவுக்கு சிக்காமல் ஓடிக்கொண்டிருந்தவள் வாசல் படியின் அருகில் வரும்போது மாமனாரின் பேச்சை கேட்டு அப்படியே நின்று விட்டாள்.

அவரின் குரலில் இருந்த குற்ற உணர்ச்சி, தோற்றுப்போன வாழ்க்கையின் வலி அனைத்தும் இருந்ததை கேட்டவள் திரும்பி அத்தையை தான் பார்த்தாள்.

புன்னகையுடன் அவளை பார்த்து கொண்டிருந்த லலிதா மருமகளின் குற்றம் சொல்லும் பார்வையை கண்டதும் திகைத்து நின்று விட்டார்.

அதற்குள்ளாகவே மகளின் அருகில் வந்த லஷ்மி அவளின் காதை பிடித்து திருகிக்கொண்டே திட்டப்போனவரை கையை தடுத்து பிடித்தவள் வாயில் விரல் வைத்து “உஸ்ஸ்ஸ்…” என்றாள்.

மகளின் செயலில் ஒன்றும் புரியாமல் “என்னடி?” என்றார்.

“பேசாம இரும்மா… இதோ வரேன்” என்றவள் லலிதாவின் அருகில் வந்து அவரின் கையை பிடித்து இழுத்து வந்து அவர்கள் பேசுவது கேட்குமாறு நிறுத்தினாள்.

லலிதாவும் பொன்னுதாயி ஒன்றும் புரியாமல் அவர்களின் பின்னால் வந்து நின்றவர்கள் வெளியே ராம் பேசிக் கொண்டிருந்ததை கேட்டதும் அனைவரும் லலிதாவை தான் முறைத்தனர்.

கணவனின் பேச்சை கேட்டு இடிந்துப்போய் அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள் லலிதா.

தான் பேசுவதை தன்னவள் கேட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாமலே தன் மனதில் உள்ள வலியை வார்த்தைகளாக மகனிடம் கொட்டிக் கொண்டிருந்தார்.

Advertisement