Advertisement

“அவன் கலாய்த்ததில் கடுப்பானவள் “ச்சீசீ… போடா…, உனக்காக ஆசை ஆசையா மேக்கப் போட்டு வந்தேன் பாரு என்ன சொல்லனும். இனிமே நீ பழைய அழுக்கு நைட்டியோட  சுத்தர பொண்டாட்டி கூட தான் ரொமேன்ஸ் பண்ணபோற… இது என்ற சாபம்டா…” கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து செல்லப்போனாள்.

அவளின் கோபத்தை ரசித்தவன் நகர போனவளின் கையை பிடித்து இழுத்து தன் அணைப்பில் கொண்டு வந்து அவளின் சேலை மறைக்கப்படாத வெற்றிடையில் ஒரு கையால் அழுத்திப் பிடித்து மற்றொரு கையால் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த கர்ச்சிப்பை எடுத்து அவளின் உதட்டில் பூசியிருந்த லிப்ஸ்டிக்கை மெல்ல துடைத்தவாறே” உண்மையாகவே எனக்கு நீ நைட்டில எந்த மேக்கப்பும் இல்லாம இயல்பாக இருக்கிறதுதான் பிடிச்சிருக்கு குட்டிபிசாசு…” என்றான்.

அவன் கைபிடித்து இழுத்து அவனின் கை வயிற்றில் அழுந்தியதிலே அதிர்ந்து நின்றவள் அவனின் செயலில் விழிகைளை மூடி மயங்கி நின்றாள்.

மனதில் சுமந்துக் கொண்டிருந்த ஆடவனின் காதலான முதல் ஸ்பரிசத்தில் பெண்ணவள் மயங்காமல் இருந்தால்தான் அதிசயம்.

தன் அணைப்பில் மயங்கி நின்றவளின் மதி முகத்தை ரசித்தவாறே “ஏய் குட்டிபிசாசு என்னால ரொம்ப நேரத்துக்கு கன்ட்ரோல் பண்ண முடியாது டி கண்ண திற.. இல்லைனா பின் விளைவுகளுக்கு நா பொறுப்பில்லை பாத்துக்க…” என்றான்.

தன்னவனின் தொடுகையில் மயங்கி நின்றவளின் மூடியிருந்த விழிகள் அவன் சொன்னதை கேட்டதும் படக்கென திறந்துக் கொண்டது.

காதலனே ஆனாலும்  திருமணம் ஆகாத சூழ்நிலையில் ஆடவனின் பிடியில் மயங்கி நிற்பதை மனம் தவறென உணர்த்தியதும் அவனின் மார்ப்பில் கை வைத்து தன் மொத்த பலம் அனைத்தையும் சேர்த்து அவனை தள்ளினாள்.

அவள் தள்ளியதில் துளியும் நகராமல் அவளின் முகத்தில் வந்து போன உணர்வுகளை ரசித்துக்கொண்டு இருந்தான்.

பின் தன் தலையை கோதி தன்னை இயல்பாக்கிக் கொண்டவன் அவள் பதட்டமாக இருப்பதை பார்த்ததும் அவளை இயல்பாக்க நினைத்தவன், “குட்டிபிசாசு உண்மைய சொல்லு நீ என்றகிட்ட வேற எதோதானே எதிர் பார்த்து என்ற அணைப்புல மயங்கி நின்னுட்டு இருந்த?” அவளை வம்பிழுத்தான்.

ஒரு நொடியானாலும் தன் மனதில் தோன்றிய ஆசையை அவன் கண்டு விட்டதை உணர்ந்ததும் கோபம் கொண்டவள் “நீ ஒரு சாமியார்னு எனக்கு தெரியும் மாமா., உன்றகிட்டப் போய் அதலாம் எதிர் பார்ப்பேனா?” நக்கலாக கேட்டாள்.

அவள் சொன்னதை கேட்டு மனதிற்குள் சிரித்தாலும் வெளியில் கோபமாக முகத்தை மாற்றிக் கொண்டவன் அவளின் கையை பிடித்து ஒரே இழுப்பில் தன் அணைப்பில் கொண்டு வந்து அவனின் ஒற்றைக் கையாளையே அவளின் இரண்டு கைகளையும் அழுத்தி பிடித்தவன் அவளின் உதட்டின் அருகில் நெருங்கினான்.

அவன் தன்னை சிறை பிடித்ததிலையே பயந்துப் போனவள் மேலும் அவன் நெருங்கியதும் உடல் நடுங்க “இதலாம் தப்பு மாமா…, கண்ணாலத்துக்கு முன்னாடி இப்படிலாம் செய்யக்கூடாது.” என்றாள்.

அவளின் பயத்தை பார்த்து சிரித்தவன் மெல்ல அவளை விடுவித்தான்.

அவன் விட்டதும் தான் மூச்சையே இழுத்து விட்டாள்.

 

“என்றகிட்ட இம்புட்டு பயம் இருக்கா குட்டிபிசாசு., இது எனக்கு தெரியாம போச்சே…”

அவன் கூறிய பயம் என்ற வார்த்தையை கேட்டதும் பழையபடி மாறியவள் இடுப்பில் கைகளை வைத்து கொண்டு “பயமா அப்படினா என்ன மாமா…?” நக்கலாக கேட்டாள்.

“உனக்கு பயம்னா என்னனு தெரியாது…, சரிடி குட்டிபிசாசு நா நம்பிட்டேன்…”

“நீ நம்பினாலும் நம்பாட்டியும் அதுதான் நெசம் மாமா…” எனக் குறிவிட்டு சில அடிகள் சென்றவள் திரும்பி பார்த்து “நா உன்ன அம்பினு நினச்சேன் மாமா. ஆனா  உனக்குள்ளையும் ஒரு ரேமோ இருப்பான் போல…” என்று கூறிவிட்டு அவன் கைக்கு சிக்காமல் நகர்ந்தாள்.

முதலில் அவள் சொல்வது புரியாமல் பார்த்தவன் பின் புரிந்ததும் புன்னகை வர “அடிங்க… மொளக்குச்சி சைசுல இருந்துட்டு என்ன பேச்சு பேசற…, நாளைக்கு நம்ம வீட்டுக்குதானே வருவ அப்போ இருக்குடி உனக்கு…” அவளை பார்த்தவாறே கூறினான்.

“அத நாளைக்கு பாத்துக்கலாம் மாமா. அப்பறம் நீ இன்னும் என்றகிட்ட ஒரு தடவைக்கூட லவ் சொல்லல சீக்கரமா அத எப்படி சொல்றதுன்னு யோசி மாமா. குட் நைட்…” என்றவள் அவன் கைக்கு சிக்காமல் ஓடி விட்டாள்.

ஓடும் அவளை புன்னகையுடன் பார்த்திருந்தவன் பின் தன் தந்தையை அழைத்து வர மாடி ஏறினான்.

மாடியில் நின்றிருந்த ராம் கைகளை மார்பில் கட்டிக்கொண்டு ஆகாயத்தில் பூத்திருந்த நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் மனம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. மனதின் மகிழ்ச்சி முகத்திலும் தெரிந்தது.

மாடிக்கு வந்தவன் தந்தையை பார்த்ததும் அவரின் அருகில் வந்து தோளில் கை போட்டவாறே “என்னப்பா தூங்கலையா?” என்றான்.

“தூக்கம் வரலக் கண்ணா… மனசு முழுசும் சந்தோஷத்துல நிறஞ்சிக் கெடக்குது.”

“ஏம்ப்பா உங்க மகன் ஒரு ராட்சசிக்கிட்ட மாட்டிக்க போறத நினச்சி உங்களுக்கு துளிக்கூட கவலை இல்லையாப்பா?…”

மகன் கூறியதை கேட்டதும் சிரித்தவாறே “நீ சொன்னத அப்படியே மருமககிட்ட சொல்லட்டுமா கண்ணா…” என்றார்.

அவரின் சிரித்த முகம் அத்தனை அழகாக இருந்தது.

அதனை ரசித்தவன் “நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கிங்கப்பா…”

“என்ன கண்ணா மருமகள ரசிக்க வேண்டிய வயசுல வயசான என்ன போய் ரசிச்சிட்டு இருக்க?”

அவர் சொன்னதும் தன்னவளின் மதிமுகமும் சிறிது நேரத்திற்கு முன் அவள் பேசிய வார்த்தையும் நினைவில் வந்து அவனை புன்னகைக்க வைத்தது.

மருமகளை கூறியதும் மகனின் முகத்தில் வந்துப்போன ரசனையான உணர்வுகளை பார்த்தவர் “என்ன கண்ணா மருமக இன்னைக்கும் உன்ன அலற விட்டுட்டாளா?” சரியாக யூகித்து கேட்டார்.

“உங்க மருமக அலற விடாம இருந்தாத்தான்ப்பா அதிசயம். சத்தியமா அவள மாதிரி ஒரு பொண்ணு இந்த உலகத்துல இருக்கவே மாட்டாப்பா… என்ன பேச்சு பேசறா… எந்த நேரம் என்ன பண்ணி வைக்க போறானு திக் திக்னு பயந்துகிட்டே இருக்க வேண்டியதா இருக்கு. வாலு ஒண்ணுதான் இல்லை…” அவளை பத்தி சொல்லும்போது கோபமோ வருத்தமோ எதுவுமில்லை அவனிடம் சிரிப்பு மட்டுமே… 

பொண்ணு பார்க்க போன நாளில் அவனை அலற விட்டவள் இன்று வரையும் அலர விட்டுக் கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் அதில் அவனுக்கு துளியும் கோபம் வராததுதான் ஆச்சர்யம். அவனின் மனது அவளின் குறும்புத்தனத்தை ரசிக்கவே செய்கிறது.

சிறு வயதிலிருந்தே அவனுக்கென்று அதிக நண்பர்களில்லை. அம்மாவின் மேல் இருந்த கோபம் அவனை மற்றவர்களிடமிருந்தும் தள்ளி வைத்து விட்டது. வீட்டிலிருக்கவே பிடிக்காமல் பதினொரு வயதிலே நாமக்கல்லில் இருந்த ஒரு பெரிய தனியார் ஸ்கூலில் ஹாஸ்டல் வாசம். பின்பு கல்லூரியும் சென்னையில் என்பதால் தனியாக வீடெடுத்து தங்க வேண்டிய சூழ்நிலை. கல்லூரி வந்த பின்பு தான் நண்பர்கள். அவர்களிடமும் ஒரு சிலரை தவிர மற்றவர்களிடம் நெருங்கி பழகயதில்லை. ராம் மட்டுமே அவனுக்கு எல்லாமுமாய் இருந்தார். இல்லையென்றால்  அவனின் கோபத்திற்கும்,பிடிவாதத்திற்கும் ஒரு முரடனாய்தான் வளர்ந்திருப்பான்.

மகன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவர் அவனின் மனம் புரிந்தாலும் அதை அவன் வாய் வழியாகவே சொல்ல வேண்டும் என நினைத்து “ஏங்கண்ணா உனக்கு மருமக பண்றது புடிக்கலையா?” என்றார்.

“ஐயோ இல்லைப்பா… ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு. மனசுல எவ்வளவு வருத்தம் இருந்தாலும் அவள பாத்தாவே மனசு லேசாயிடுதுப்பா. அவ பண்ற சேட்டைய பார்த்தா கோபம் கூட வர மாட்டைங்து. அத ரசிக்கத்தான் தோணுது. அவள எப்பவும் எனக்குள்ளையே பொத்தி வச்சிக்கனும்னு மனசு சொல்லுதுப்பா…” மனதில் இருப்பதெல்லாம் கூறியவன்,

 பின்பு “ஏம்ப்பா இதுக்கு பேர்தான் காதலா?” என்று கேட்டான்.

மகனின் கேள்வியில் புன்னகைத்தவர் “உனக்கு என்ன தோணுது கண்ணா?” என்றார்.

“தெரியலைப்பா…”

“உன்னோடது காதலா? இல்லை பிடித்தமானு நீயே உன்ற மனச கேளு கண்ணா…, அது சரியான பதில சொல்லும்.”

“பிடித்தமும், காதலும் ஒண்ணுதானேப்பா…”

“இல்லை கண்ணா… பிடித்தம் வேற காதல் வேற… காதலிக்கறவங்களுக்காக உன்னோட இயல்பையே மாத்திக்க தோணும். ஆனா பிடிச்சவங்ககிட்ட நீ நீயாத்தான் இருப்ப. பிடித்தம் நிறைய பேர் மேல வரும்.,”

 “காதல் மனசுக்கு புடிச்ச ஒருத்தர் மேலதான் வரும். அவங்களுக்காக உன்னையே மாத்திக்க தோணும். அவங்களுக்காக மட்டும்தா வாழவே தோணும். அவங்க இல்லாத வாழ்க்கைய உன்னால கற்பனைலக்கூட நினச்சி பார்க்க முடியாது.”

தந்தை சொன்னதை கேட்டு யோசிக்க ஆரம்பித்து விட்டான். தன்னுடையது காதலா? அல்லது பிடித்தமா? என்று. பதிலையும் கூடிய விரைவில் கண்டுபிடித்து விடுவான்.

“சரி கண்ணா வா போலாம். கொஞ்ச நேரமாவது தூங்குனாதான் காலைல கொஞ்சமாவது நல்லாருக்கும்” என்றார்.

அவனுக்கும் தூக்கம் வரவும் அவருடனே தூங்க சென்றவனின் மனம் முழுவதும் தன்னவளின் பிம்பமே…

Advertisement