Advertisement

வினோதினி, “என்ன ஷர்மி என்ன தெரியுமானு கேக்கற?” என்றாள்.

“அது வந்து வினோ.., சொன்னா நீ கோவப்பட கூடாது.”

“அதலாம் கோவப்பட மாட்டேன் நீ சொல்லு ஷர்மி.”

“உன்ற புருசன் நா எழாவது படிக்கும்போது என்றகிட்ட லவ் லெட்டர் குடுத்தான் வினோ., அததான் உன்றகிட்ட சொன்னானானு கேக்க வந்தேன் வினோ…” சிறு தீயை கொழுத்திப் போட்டு விட்டாள்.

அதை கேட்டதுமே வினோவின் முகத்தில் கோபத்தில் சிவந்து விட்டது. கணவனை முறைத்தவள் “ஏ மகி என்றகிட்ட ஷர்மி என்னோட தங்கச்சி மாதிரினு சொன்ன?” என்றாள்.

“ஐயோ வினோமா…, ஷர்மி சொல்றத நம்பாத…, உன்றமேல சத்தியமா நா ஷர்மிக்கு லவ் லெட்டர் குடுக்கல…, எனக்கு செல்வியும், ஷர்மியும் ஒண்ணுதான்.”

“தங்கச்சியா நினைக்கற பொண்ணுக்கு லவ் லெட்டர் ஆராவது குடுப்பாங்ளா? இத நா நம்பனுமா மகி…”

“என்ன நம்பு வினோமா… அன்னைக்கு ஷர்மி கிளாஸ்ல படிச்ச நந்தினின்ற பொண்ணுக்கு குடுக்க சொல்லிதான் இவ கிட்ட குடுத்தேன்… இவ என்ன பழிவாங்கறதுக்காக உன்றகிட்ட போட்டு குடுக்கரா… நம்பாதடி.” அவன் பொண்டாட்டியிடம் கெஞ்சுவதை பார்த்து சிரித்த ஷர்மி,

 “வினோ உன்ற புருசன பாத்தியா எம்புட்டு தைரியம் இருந்தா உன்றகிட்டையே இன்னொரு பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்தத சொல்லுவான்.. விடாத ரெண்டு சாத்து சாத்து. அப்போதான் பொண்டாட்டி மேல பயம் வரும்…” இன்னும் ஏற்றி விட்டாள்.

வினோ கோபத்துடன் கணவனை பார்த்து “என்றகிட்ட நா லவ் பண்ண முதல் பொண்ணே நீதானு சொல்லிட்டு ஸ்கூல் படிக்கறப்பவே வேற ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் குடுத்துருக்க மகி… வாய திறந்தா அத்தனையும் பொய். இனி என்றகிட்ட  பேசாத மகி…” கோபமாக பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விட்டாள்.

பொண்டாட்டி கோவபட்டு போகவும் மகேஷ் ஷர்மியை பார்த்து “ஆத்தா… உன்ன நா வச்சி செய்யறேனு சொன்னதுக்கே என்ற குடும்பத்த பிரிச்சி விட்டுட்டியே., நீ நல்லாரு ஆத்தா…” கையெடுத்து கும்பிட்டவாறே கூறியவன்,

 ரகுவை பார்த்து, “அண்ணா இனி உங்களை அந்த ஆண்டவனாலக்கூட காப்பாத்த முடியாது. இந்த ராட்சசி உங்கள  வச்சி செய்யப்போரா., முடிஞ்சா இப்பவே இந்த மண்டபத்த விட்டு ஓடிப்போயிடுங்க. அப்படி இல்லைனா காலம் முழுசும் நீங்க இந்த ராட்சசிகிட்ட மாட்டிக்கிட்டு படாத பாடு படனும் உங்க நல்லதுக்குதான் சொல்றேன் அண்ணா.”

“அத என்ற மாமன் பாத்துப்பாருடா.., நீ போய் உன்ற பொண்டாட்டிய சாமாதான படுத்துற வழியபாருடா. இல்லைனா எங்க கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்பறம் வூட்ல உனக்கு சோறு கிடைக்காம போயிடும்…” மகேஷை கலாய்த்தாள்.

“ராட்சசி… ராட்சசி… உன்ன வந்து அப்பறமா கவனிச்சிக்குறேன்…” என்றவன் மனைவியை சாமாதான படுத்த பின்னால் ஓடினான்.

அதை பார்த்த ஷர்மி வாய்விட்டு சிரித்தாள்.

செல்வி, “ரொம்ப சிரிக்காதடி என்ற அண்ணனதான் உன்னால தொறத்த முடியும் அவனுக்கு பதிலா நா இருக்கேன் அத மறுந்துடாத…”

“ஐயோ எனக்கு பயந்து பயந்து வருதுடி” பயந்த மாதிரி நடித்த ஷர்மி “டேய் அகி நம்ம காலேஜ்ல அபி மேம்….” எதோ சொல்ல வந்தாள்.

 அடுத்த நொடி தங்கையின் கையை பிடித்தவன் “ஷர்மிமா நா பாவம்டா., உன்ற கைய காலா நினச்சி கேக்கறேன்…, என்ன விட்ரு…, என்னால எல்லாம் மகேஷ் மாதிரி அடிவாங்க முடியாது…” கெஞ்ச ஆரம்பித்து விட்டான்.

“நீ எதுக்கு மாமா கெஞ்சற?” செல்வி கேட்கவும்,

“செல்விமா உன்ற மாமன் பாவம்டா உங்க சண்டைல என்னால அடிவாங்க முடியாது. என்ன விட்ரு…” கெஞ்சினான்.

மாமன் கெஞ்சுவதை தாங்க முடியாமல் “உனக்காக உன்ற தங்கச்சிய விடறேன் மாமா…” என்றாள் செல்வி.

ஷர்மி, “சரி ரொம்ப கெஞ்சாத டா அகி… நா அபி மேம் நம்மா கல்யாணத்துக்கு வரேனு சொன்னாங்க அததான் சொல்ல வந்தேன்…”

“ஓஓஓ அம்புட்டுதானா? நா என்னமோனு நினச்சி பயந்துட்டேன்டா ஷர்மி…” இப்போதான் மூச்சை இழுத்து விட்டான்.

அபிநயா அகிலேஷ் உடன் கல்லூரியில் வேலை பார்ப்பவள் ஒருமுறை அவனிடம் காதல் சொல்லவும் அதை அகிலேஷ் நாகரிகமாக மறுத்து விட்டான். ஆனாலும் அதன் பிறகும் அகிலேஷை  பின் தொடர்ந்து தன் காதலை சொல்லி அகிலேஷிடம் திட்டும் வாங்கி விட்டாள்.  இந்த விசயம் தெரிந்தலிருந்து ஷர்மி அதை சொல்லியே  அகிலேஷை மிரட்டி காரியம் சாதிப்பாள். அதை இன்றும் செய்யவும் பயந்து விட்டான். செல்விக்கு தெரிந்தால் காலேஜ்க்கே வந்து அந்த பெண்ணிடம் சண்டை போட ஆரம்பித்து விடுவாள் என்ற பயமே அவனை கெஞ்ச வைத்தது.

ரகுவிற்கு தன்னவளாக ஆகப்போறவளை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அவளின் குறும்புத்தனம் ரகுவை ரசிக்கத்தான் தூண்டியது. மனதில் ‘என்ன பொண்ணுடா சாமி…’ எனதான் நினைத்துக் கொண்டிருந்தான்.

அப்போது ராம், பொன்னுதாயி இருவரும் கோதையையும், அரவிந்தையும் அழைத்துக்கொண்டு ரகு இருந்த இடத்திற்கு  வந்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை முதலில் பார்த்த ஷர்மி “ஹாய் மாமா…, ஹாய் பெரியம்மா.., இங்க வாங்க…” அரவிந்தையும்,கோதையையும் பார்த்து கையாட்டி கூப்பிட்டாள்.

ஷர்மி கூப்பிடவும் ரகுவும் முதலில் யாரோ என நினைத்து சாதாரணமாக திரும்பி பார்த்தவன் தந்தையின் அருகில் வந்துக் கொண்டிருந்த அத்தையை பார்த்ததும் நம்ப முடியாத அதிர்ச்சியில் எழுந்து நின்று விட்டான்.

கோதை அவனருகில் வந்ததும் “ரகு கண்ணா…” என அழைத்து அவனின் தோளை தொட்டதும் தான் சுயநினைவிற்கே வந்தான்.

“வாங்க அத்தை…, நல்லாருக்கிங்ளா…?” இன்னும் அதிர்ச்சி விலகாத குரலில் கேட்டான்.

தம்பி மகனின் கன்னத்தை வருடியவாறே “நா நல்லாருக்கேன்டா தங்கம்…, நீ எப்படி இருக்கடா கண்ணு…, போன தடவை பார்த்தத விட இப்போ ரொம்ப எழச்சி போயி தெரியரடா தங்கம்…” என்றார்.

“எனக்கென்ன நா நல்லாருக்கேனுங்த்தை…” அவனின் கன்னத்தை வருடிக் குடுத்துக் கொண்டிருந்த கோதையின் கையை பிடித்து தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டவாறே “உங்கள ரொம்ப மிஸ் பண்ணேனுங்த்தை…, பேசாம நீங்க எங்கக்கூடவே இருந்துடுங்ளேன்…” சிறு குழந்தையை போல அத்தையின் கண்களை பார்த்து ஏக்கத்துடன் கேட்டான்.

“இன்னும் கொஞ்ச நாள் பொருத்துக்கோடா கண்ணு…, உன்ற அக்கா குழந்தைய வளர்த்துக் குடுத்துட்டு அப்பறம் அத்தை உன்றக்கூடவே வந்துடறேன். நீதான் எனக்கு கடைசி காலத்துல சோறு போடனும்.”

அத்தை, மருமகனின் பாசத்தை பார்த்த அரவிந்த்,

“ஹலோ தம்பி…, நானும் உங்க அத்தை கூடதான் வந்துருக்கேன்…, என்னையும் கொஞ்சம் திரும்பி பார்ப்பா…, உன்ற மாமாவ ஏமாத்தி உன்ற அத்தைய கூட்டி வந்ததே நாந்தான்…” என்றான்.

அரவிந்த் பேசவும்தான் அத்தையிடமிருந்த பார்வையை விலக்கி அரவிந்தை பார்த்தவன் “வாங்க அண்ணா…, நா அத்தைய பார்த்த சந்தோசத்துல உங்கல கவனிக்கல.., அத்தை என்ற கல்யாணத்துக்கு வருவாங்கனே எதிர்பாக்கல.., தேங்ஸ் அண்ணா.”

“தேங்ஸ் எனக்கு சொல்லாத தம்பி.., உன்ன கட்டிக்க போற என்ற கொழுந்தியாவுக்கு சொல்லு…, ப்ளான் போட்டு உன்ற மாமாவ ஏமாத்தி எங்கள வர வச்சதே என்ற கொழுந்தியா தான்.”

அப்போதுதான் ரகுவிற்கு ஷர்மி நேத்து சொன்னது நினைவு வந்தது. அவள் சொன்ன மாதிரி செய்து விட்டாள் என்பதை உணர்ந்தவனின் மனதில் அவளின் மீதான அன்பு அதிகரித்தது.

அதன் பிறகு அங்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை… எல்லாரும் அத்தனை மகிழ்ச்சியாக இருந்தனர்.

ரகு தனது தந்தையின் அருகில் அமர்ந்து அத்தையுடன் அப்பத்தா, அப்பா, அம்மா மூவரும் பேசிக் கொண்டிருப்பதைதான் பார்த்துக் கொண்டிருந்தான். நால்வரின் முகத்திலும் அத்தனை சந்தோசம் கொட்டிக் கிடந்தது.

அதனை பார்த்தவனின் மனதில் இன்றுதான் தன் குடும்பம் முழுமையாக தெரிந்ததை உணர முடிந்தது. அதற்கு காரணமானவளை விழிகள் தேடியது.

அவளோ தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள். அந்த கூட்டத்தில் அரவிந்தும் அமர்ந்திருந்தான்.

அவள் சிரிக்கும் அழகை சிறிது நேரம் ரசித்தவன் தந்தையின் அருகில் அமர்ந்திருந்தவன்  எழுந்து அவளை நோக்கி சென்றவன் அங்கிருந்த மற்றொரு சேரை எடுத்துப்போட்டு அவளின் அருகில் அமர்ந்தான்.

அவன் தன்னருகில் வந்து அமர்ந்ததை பார்த்தவள் “என்ன மாமா உன்ற அத்தைக்கூட பாசப்பயிர் வளர்த்து முடிச்சிட்டியா?” என்றாள்.

“ஏய் குட்டிபிசாசு… உண்மைய சொல்லு உனக்கெப்படி அரவிந்த் அண்ணா தெரியும்?”

“அதலாம் ரகசியம் மாமா…”

“அண்ணா நீங்களாவது சொல்லுங்க… எப்படி உங்க மாமனார் இங்க வர விட்டார்?” அரவிந்திடம் கேட்டான்.

ஷர்மி, “ஆர்வி மாமா சொல்லாதிங்க…”

“சாரி தம்பி என்ற கொழுந்து சொல்லாதிங்கனு சொல்லிடுச்சு… நா சொல்ல மாட்டேன்…”

செல்வி இடையில் புகுந்து “அண்ணா அவங்க சொல்லாட்டி என்ன நா சொல்றேனுங்ண்ணா…” என்றாள்.

ஷர்மி, “ஏய் செல்வி சொல்லாதடி…”

“நா சொல்லுவேன் போடி…, பாவம் அண்ணா எவ்வளவு தூரம் கெஞ்சறாரு…, நீ ரொம்பத்தான் பண்ற…” என்றவள்,

 அகிலேஷை காட்டி “இந்த ரெண்டு கூட்டு களவானியும் சேர்ந்து செஞ்ச வேலைதான் அண்ணா… இவங்களுக்கு சப்போர்ட் மூர்த்தி தாத்தா…” என்றாள்.

“என்ன சொல்றமா எனக்கு புரியலை… என்ற அம்மாவோட அப்பாவா? அவருக்கு எப்படி அரவிந்த் அண்ணாவ தெரியும்?” குழப்பத்துடன் கேட்டான் ரகு.

“உங்களுக்கு தெரியாதுங்ளாண்ணா… அரவிந்த் அண்ணாவோட சொந்த வூர்ல தான் ராஜா பெரியப்பாவோட பெரிய பொண்ண குடுத்துருக்காங்க…, அவங்கள வச்சிதான் அரவிந்த் அண்ணாவோட அம்மாகிட்ட பேசி உங்க அத்தைய வர வச்சாங்க…, அதோட இல்லாம நேத்தே அகி மாமாவும், தாத்தாவும் அரவிந்த் அண்ணா வீட்டுக்கு போய் பத்திரிக்கைக்கூட வச்சி கூப்பிட்டு வந்துட்டாங்க… நாளைக்கு அரவிந்த் அண்ணாவோட அம்மாவும் நம்ம கல்யாணத்துக்கு வராங்க…” மொத்த உண்மையையும் போட்டு உடைத்து விட்டாள் செல்வி.

செல்வி சொல்லி முடித்ததும் அவளின் தலையில் கொட்டு வைத்த ஷர்மி “ஓட்டவாய் உன்ன வச்சிட்டு ப்ளான் போட்டோம் பாரு எங்கள சொல்லனும்டி…” திட்டினாள்.

தலையை தேய்த்துக்கொண்டே “ஏன்டி கொட்டுன..” ஷர்மியிடம் கேட்டவள் அகிலேஷிடம் “பாரு மாமா உன்ற தங்கச்சி என்ற தலைலயே கொட்றா…” என சினுங்கிக்கொண்டே கூறினாள்.

“பின்ன உன்ன கொஞ்சுவாங்ளாக்கும்… போடி எருமை…” கோபத்தில் ஷர்மியும் திட்டினாள்.

“விடுடா ஷர்மி… எப்படியும் மச்சானுக்கும் உண்மை தெரியனும்தானே…” அகிலேஷ் தான் தங்கையை சமாதான படுத்த முயன்றான்.

ரகு ஷர்மியின் கையின் மேல் தன் கையை வைத்து அழுத்தி பிடித்ததும் அவளின் கோபம் குறைந்தது. “தேங்ஸ் டி குட்டிபிசாசு. நீ நேத்து சொன்னப்பக்கூட நா நம்பவே இல்லை…, உன்னால தான் அப்பாவும், அப்பத்தாவும் சந்தோசமா இருக்காங்க…” என்றான்.

ரகு ஷர்மியிடம் பேச ஆரம்பித்த உடனே மற்றவர்கள் அவர்களுக்கு தனிமை குடுத்து விலகி சென்றனர்.

“நீ தேங்ஸ்லாம் சொல்லி என்ன பிரிக்காத மாமா…, உனக்காகவும், நம்ம குடும்ப சந்தோசத்துக்காகவும் எதுனாலும் செய்வேன்…” அவளின் குரலில் அத்தனை உறுதி… காதல் இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்பதை திரும்பவும் நிறுபித்தாள்.

ஒவ்வொரு முறையும் அவளின் அதிகப்படியான காதலில் வாயடைத்து போயிவிடுகிறான். அதன் பிறகு இருவரும் பேசி கொள்ளவில்லை…, ஆனாலும் இருவரின் மனமும் நிறைந்துக் கிடந்தது.

Advertisement