Advertisement

அவர் கூட வந்த அரவிந்த் தன் மாமியாரின் வேகத்தை பார்த்து வியந்தவாறே முகத்தில் உறைந்த புன்னகையுடன் அவரை முன்னால் விட்டு பின்னால் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

மகளை பார்த்ததும் பொன்னுதாயி பத்து வயது குறைந்ததை போல மகளுக்கு முன்னால் மகளின் அருகில் சென்று அவளின் கைகளை பிடித்துக் கொண்டு “வந்துட்டியா கண்ணு?., உன்ற அம்மாவ பாக்க உனக்கு இம்புட்டு நாள் ஆகிபோச்சுல கண்ணு?” கண்கள் கலங்க கேட்டார்.

“எல்லாம் என்ற விதிம்மா…, நானென்ன பாவம் செஞ்சேனு தெரியல.., என்ற பொறந்த வூட்டுக்கு வரதுக்கு கூட வக்கத்தவளா நிக்கறேன்…” குரல் கலங்க கூறினார் கோதை.

“நீ ஒரு பாவம் செய்யல கண்ணு. எல்லாம் நானும் உன்ற அப்பாவும் செஞ்ச பாவம்தான் உன்னையும் உன்ற தம்பியையும் போட்டு பாடா படுத்துது.”

தாய், மகள் இருவரின் கண்ணீர் அங்கிருந்தவர்களையும் கண் கலங்க வைத்து விட்டது.

அக்காவின் அருகில் வந்த ராம் “ஏம்மா இப்படி அக்காவ வந்தவுடனே அழ வைக்கறிங்க? அவளோட கண்ணீர பாக்கறதுக்குதான் வரவச்சிங்ளா?” தாயை கடிந்தவர் அக்காவின் கண்ணீரை துடைத்து விட்டவாறே,

 “என்ன மன்னிச்சிடுக்கா… எல்லாம் என்னால்தான். நல்லாருந்த குடும்பத்த என்ற கல்யாணம் சிதச்சிடுச்சு…”

கணவனின் பின்னால் வந்து நின்ற லலிதா கணவனின் வார்த்தையை கேட்டு நொருங்கி விட்டாள்.

“ஏன்டா இப்படிலாம் பேசற? எனக்கென்ன நா நல்லாத்தான் இருக்கேன்…, உன்ற மாமா இந்த ஒரு விசயத்த தவிர மத்தபடி என்ன நல்லாதான் பார்த்துக்கறார். அங்க பாரு நீ பேசனத கேட்டு உன்ற பொண்டாட்டி முகம் வாடிப்போச்சு.. பேசறப்ப யோசிச்சு பேசுடா.. நாம பேசற சாதாரண ஒரு வார்த்தைக்கூட மத்தவங்கள காயபடுத்தும்…” தம்பியை கண்டித்தார் கோதை.

அக்கா சொன்னதும் தான் மனைவியை திரும்பிப் பார்த்த ராம், அவள் முகம் வாடுவதை பார்த்ததும், மனதிற்கு நொந்து விட்டார்.

லஷ்மி தான் சொந்தக்காரங்க அனைவரும் தங்களை பார்ப்பதை பார்த்து விட்டு “பெரியம்மா அக்காவ உள்ள கூட்டி வந்து பேசுங்க எல்லாரும் நம்மல தான் பாக்கறாங்க…” என்றார்.

அப்போதுதான் கோதை தன்னுடன் வந்த மருமகனை தேடினார். மகள் யாரையோ தேடுவதை பார்த்த பொன்னுதாயி “ஆர கண்ணு தேடற?” என்றார்.

“என்றக்கூட மாப்பிள்ளை வந்தாருங்ம்மா…”

“என்றா கண்ணு சொல்ற? என்ற பேத்தி புருசன் வந்துருக்கானா?”

“ஆமாம்மா…, மாப்பிள்ளை தான் நேத்து வந்து திடீர்னு நாம ஊருக்கு போகனும்., அவங்க அம்மாவுக்கு உடம்பு முடியலைனு சொல்லி கிளம்புங்கத்தைனு சொன்னாரு… மாப்பிள்ளையே சொல்லவும் உங்க மருமகனும் எந்த மறுப்பும் சொல்லாம உடனே கிளம்பி சம்பந்தி அம்மாவ போய் பாத்துட்டு வானு அனுப்பி வச்சிட்டார். முதல்ல எனக்கு இங்க வரதே தெரியாது.  அவங்க அம்மா வூட்டுக்கு போறதா தான் நா நினச்சிட்டு வந்தேன். கடைசில திருச்சி ஏர்போட்ல வந்து இறங்கினதும் தான் மாப்பிள்ளை இங்க வரதையே சொன்னாரும்மா…”

பொன்னுதாயிற்கும், ராமிற்கும் கோதை சொன்னதை கேட்டதுமே புரிந்து விட்டது. இது தங்கள் வீட்டிற்கு வர போகும் மருமகளின் வேலை என்று. இருவரின் மனதிலும் ஷர்மியை நினைத்து பெருமிதமே மிஞ்சியது. முடியாதுனு சொன்னதையும் முடித்து காட்டி விட்டாளே என நினைத்து ஆச்சர்யபட்டனர்.

மாமியாரின் பின்னால் வந்துக் கொண்டிருந்த அரவிந்த் போன் வரவும் எடுத்து பார்த்தவன் அதில் பொண்டாட்டி நம்பரை பார்த்ததும் எடுத்து “ம்ம் சொல்லுமா..” என்றான்.

“அத்தை பாத்துட்டிங்ளா?”அத்தை எப்படி இருக்காங்க? நீங்க எப்போ திரும்ப வருவிங்க அரவிந்த்?”

“ஏய் ஒவ்வொரு கேள்வியா கேளுடி.., நீ பாட்டுக்கு கேட்டுட்டே போனா நா எப்படி பதில் சொல்வேன் யோசிச்சுதானே பதில் சொல்லனும்.” உளறிவிட்டான்.

“என்ன யோசிக்கனுமா?” அவள் கேட்டதும்தான் தான் உளறியதை உணர்ந்தவன் “அது வந்து மா…”

“இழுக்காம ஒழுங்கா பதில சொல்லுங்க., இப்போ நீங்க எங்க இருக்கிங்க?”

“இப்போதான் நானும் அத்தையும் ஹாஸ்பிட்டால் போயிட்டு இருக்கோம் டி”

“திருச்சியில இருந்து ஈரோடு போறதுக்கு இம்புட்டு நேரம் ஆகாதே?”

“நாங்க கோயம்புத்தூர் போயிட்டு இருக்கும்போடி”

“ஏங்கிட்ட ஈரோடுனுதானே சொன்னிங்க?”

‘ஐயோ நோண்டி நோண்டி கேக்கறாளே’ உள்ளுக்குள் அலறியவன் “அது வந்து மா அம்மாவ ஈரோட்ல இருந்து கோயம்புத்துர்ல இருக்க ஹாஸ்பிட்டல்க்கு கூட்டி போயிட்டாங்ளாம். நா ஏர்போட் வந்தப்பதான் எங்க மாமா போன் பண்ணி சொன்னாரு.”

“ஓஓ.. சரி அம்மாகிட்ட போன குடுங்க நா பேசறேன்”

“அம்மாவா அவங்க மாமாவோட பேசிட்டு இருக்காங்….?” திரும்பவும் உளறப்போனவன் கடைசியில் சுதாரித்து “நீ அத்தைய கேக்கறியா? அத்தை தூங்கிட்டாங்க எழுந்ததும் பேச சொல்றேன் இப்போ நீ போன வை” ஒருவழியாக அவளை சமாளித்துவிட்டு மாமியாரின் அருகில் வந்தான்.

லண்டன்…..

அரவிந்த் போனை வைத்ததும் அவள் தன் அருகில் அமர்ந்திருந்த தந்தையிடம் “அப்பா உங்க மருமகன் பொய் சொல்றார்னு எனக்குத் தோணுது. அவரோட பேச்சுல நிறைய தடுமாற்றம் தெரியுது. எனக்கு என்னமோ அவங்க கண்டிப்பா உங்க பொண்டாட்டியோட அண்ணன் மகன் கல்யாணத்துக்கு தான் போயிருக்காங்கனு தோணுதுப்பா.”

விஸ்வநாதன், “எனக்கு அது அவங்க ஊர்க்கு போறதுக்கு முன்னாடியே தெரியும்டா கண்ணு.” சாதாரணமாக கூறினார்.

“என்னப்பா சொல்றிங்க? அப்பறம் எதுக்குப்பா அவங்கள போக விட்டிங்க?”

“எல்லாம் உனக்காகத்தான் கண்ணு.”

“எனக்காக வா? என்னப்பா சொல்றிங்க?”

“மாப்பிள்ளை இன்னும் கொஞ்சநாள்ல இந்தியாவுக்கு போய் அங்கையே பிஸ்னஸ் பண்ணப்போறார்னு நீதானே சொன்ன?”

“ஆமாப்பா., ஆனா அதுக்கும் இதுக்கும் என்னப்பா சம்பந்தம்?”

“இருக்கு கண்ணு.”

“எனக்கு புரியலைப்பா.”

“அங்க உன்ற மாமனும் மாமன் மகன் மகனும் சாதாரண ஆள் கிடையாது. கோடிஸ்வரன்ங்க. அவங்களுக்கு அந்த ஊர்ல அவ்வளவு மதிப்பு இருக்கு. அவனுங்க ஒரு போன் போட்டா போதும் கவர்மென்ட் ஆபிஸ்லக்கூட உடனே வேலை நடக்கும். அதுலையும் உன் மாமன் மகனுக்கு அரசியல்வாதிங்கக்கூட எல்லாம் பழக்கம் இருக்கு. அவனுங்கக்கூட உன்ற புருசன் பழக்கம் வச்சிக்கிட்டா நாளை பின்ன நமக்கு ஒரு உதவி தேவைப்படறப்ப செஞ்சி தருவானுங்க.”

“அவங்களே வேணாம்னு ஆனதுக்கப்பறம் அவங்க செய்யற உதவி நமக்கெதுக்குப்பா?”

“நீ புரியாம பேசறக் கண்ணு. இந்த காலத்துல பணம் வச்சிருக்கவன பகச்சிக்கவே கூடாது. நீ கேள்வி பட்டதில்லையா பணம் பாதாளம் வரையிலும் பாயும்ங்றத… நமக்கு ஒரு காரியம் ஆகனும்னா எதிர் கால்ல கூட விழத்தயார இருக்கனும். அப்போதான் நாம முன்னேர முடியும்.”

“என்னவோ போங்கப்பா., எனக்கு நீங்க சொல்றது ஒண்ணும் புரியலை.”

“இப்போ உனக்கு புரியாது கண்ணு.,”

அன்று சுயநலத்தின் மொத்தம் உருவமாக இருந்த விஸ்வநாதன் இன்று வரை துளிக்கூட மாறவில்லை. இவ்வுலகில் விஸ்வநாதனை போல குணம் உடையவர்கள்தான் ஏராளம். அவர்களை திருத்த எந்த சக்தியாலும் முடியாது.

கோதையின் அருகில் வந்த அரவிந்த்,

“அத்தை உங்க மகதான் போன் பண்றா.., சந்தேகத்துக்கு பொறந்தவ கேள்வியா கேட்டு படுத்தி எடுக்கரா….

, இப்போ எப்படியோ சமாளிச்சிட்டேன்… அப்பறமா உங்ககிட்ட பேசறேனு சொல்லிருக்கா…, அவகிட்ட உண்மைய சொல்லிடாதிங்க உடனே மாமாகிட்ட போட்டுக் குடுத்துடுவா…”

அரவிந்த் சொன்னதைக்கேட்டு அங்கிருந்த அனைவரின் முகத்தில் புன்னகை விரிந்தது.

“ஏங்கண்ணு என்ற பேத்தி உன்ன அம்புட்டு கொடும படுத்தறாளா என்ன?” பொன்னுதாயி கேட்க,

“அத ஏனுங் அம்மாச்சி கேக்கறிங்க…, உங்க பேத்தி படுத்தர பாட்டுக்கு வேற ஒருத்தனா இருந்தா துண்டக்காணாம் துணியக்காணாம்னு ஓடியே போயிருப்பான்… எதோ நானா இருக்கவும் வர அழுகைய அடக்கிட்டு அவக்கூட குப்பை கொட்றேன்… முடியலை அம்மாச்சி…” வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு பேசினான்.

அரவிந்த் பேசியதை கேட்டு அனைவரும் சிரித்து விட்டனர். அவனின் பேச்சு அந்த இடத்தையே கலகலப்பாக மாற்றிவிட்டது.

பொண்டாட்டியை கலாய்த்தாலும் அவனின் விழிகளில் மனைவி மீது வைத்திருந்த காதலே அதிகம் தெரிந்தது. அதனை உணர்ந்த ராம் புன்னகையுடன் அவனின் தோளை தட்டிக் குடுத்துவிட்டு “வாங்க தம்பி., உள்ள போலாம்” என அழைத்துச் சென்றார்.

அவர்கள் சென்றதும் சுந்தர மூர்த்தி குடும்பமும், சாதசிவம் குடும்பம் மட்டும் வருபவர்களை வரவேற்க அங்கையே நின்றுகொண்டனர்.

இரவு நிச்சியதார்த்தம் இருந்ததால் பகலில் மண்டபத்தில் அவர்களின் உறவினர்கள் மட்டும் இருந்தனர். மணமக்கள் நால்வரும் கொஞ்சநேரம் மேடையில் நின்றுவிட்டு கீழே வந்து இலகுவாக அமர்ந்திருந்தனர்.

மணமக்களை சுற்றி இளமை பட்டாளம் உட்கார்ந்துக்கொண்டு இருவரையும் கலாயித்துக்கொண்டிருந்தது. ரகு அவர்கள் கலாய்ப்பதை புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்தான். உறவுகளின் இந்த கிண்டல் கேலி எல்லாம் அவன் அனுபவிக்காதது. 11 வயதில் இருந்து ஹாஸ்டல் வாசம் அனுபவித்ததால் உறவுகளில் உள்ள அவன் வயது பசங்களுடன் தோழமை இருந்ததில்லை. நண்பர்கள் மட்டும்தான் அவர்களுடன் ஓரளவுக்கு மேல் நெருங்கி பழகமாட்டான். அதற்கு அவனின் முன்கோபமும் ஒரு காரணம்.

 அப்படி வளர்ந்தவனுக்கு ஷர்மியின் சொந்தங்கள் அவளை அத்தனை உறுமையான கிண்டல் அடிப்பதும் அதற்கு அவளும் விடாமல் அவர்களுக்கு பதில் குடுப்பதையும் பார்த்து ஆச்சர்யமாக இருந்தது., மனதில் தனக்கு இப்படி ஒருவரும் இல்லை என்கிற ஏக்கமும் அவன் மனதின் ஓரத்தில் எழவே செய்யது.

மகேஷ் செல்வி இருவரும் ஷர்மியை வச்சி ஓட்டிக்கொண்டிருந்தனர். அவனுடைய திருமணத்தில் ஷர்மி செய்ததை இன்று ஷர்மியின் திருமணத்தில் தங்கையுடன் சேர்ந்து திரும்ப செய்துக் கொண்டிருந்தான்.

“ஏ செல்விமா… என்ற கல்யாணத்துல உன்ற அண்ணிலாம் வெக்கத்துல குனிஞ்ச தலை நிமிரவே இல்லை. ஆனா நம்ம ஷர்மி முகத்துல அப்படி ஒண்ணு வந்தத நா பாக்கவே இல்லையே…  ஒருவேளை நீ ஏதும் பாத்தியாடா…?”

“ஆர பாத்து என்ன வார்த்தைனா கேக்கற? நம்ம ஷர்மி வெக்கம்னா என்னனு கேக்கற ரகம்ண்ணா… அது உனக்கு தெரியாதா?”

“தெரியும்தான்டா இருந்தாலும் புதுப் பொண்ணுனா கொஞ்சமாவது வெக்கப்படுவாங்கனு சொல்லுவாங்ளே.. இப்போ நீ கூட எம்புட்டு வெக்கப்பட்ட, அதான் கேட்டேன்…”

கொஞ்சநேரம் பொருத்து பார்த்த ஷர்மி அண்ணன், தங்கை இருவரும் அதிகமாக கலாய்க்கவும், மகேஷின் அருகில் அமர்ந்து கணவன் கலாய்ப்பதை புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருந்த வினோதினியை பார்த்தாள்.

மகேஷின் அருகில் அமர்ந்திருந்த அகிலேஷ், தங்கையின் பார்வை போன திசையை பார்த்ததும் மாமன் மகனின் கையை பிடித்து அழுத்தி “டேய் கொஞ்சநேரம் சும்மா இருங்கடா ஷர்மியோட முகம் மாறுது ஏடாகூடமா மாட்டிவிட ப்ளான் பண்றா” என நண்பனையும், நாளை மனைவியாக வரபோற காதலியையும் எச்சரித்தான்.

“அதலாம் பாத்துக்கலாம்டா மச்சா… இந்த வாயிப்ப விட்டா உன்ற தங்கச்சிய ஓட்ட எங்களுக்கு வாய்ப்பே கிடைக்காது…”

செல்வியும், “ஆமா மாமா நீ செத்தநேரம் பேசாம வேடிக்கை மட்டும் பாரு… உன்ற தங்கச்சிய வச்சி செய்யறோம்…” என்றாள்.

அவர்கள் ஷர்மியை பற்றி குடுத்த பில்டப்பை பார்த்த ரகுவிற்கு ‘அப்படி என்ன பண்ணப்போறா?’ என்ற ஆர்வம் வந்தது.

ஷர்மி ரகுவின் ஆர்வத்தை பார்த்தவாறே வினோதினியிடம் “வினோ உனக்கு ஒண்ணு தெரியுமா…?” என இழுத்தாள்.

அவள் இழுத்ததிலே அகிலேஷ்க்கும், ரகுவிற்கும் புரிந்து விட்டது. மகேஷ்க்கு எதோ பெரிய ஆப்பாக வைக்க முடிவெடுத்து விட்டாள் என்று.

மகேஷ்க்கும் மனதில் சிறு பயம் எழுந்தாலும் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் ‘அப்படி என்னத்த சொல்லபோறா’ என அசால்டாக பார்த்தான்.

Advertisement