Advertisement

அத்தியாயம்.24

திருமணம் என்பது இரு மனங்களை மட்டும் பந்தத்தில் இணைப்பதில்லை. இரு குடும்பங்களையும் இணைக்கும் ஒரு அற்புத பாலம்… இரண்டு தலைமுறையாக திருமணத்தால் பிரிந்து பகைமை பாராட்டி வந்த இரு குடும்பமும் மூன்றாம்  தலைமுறை வாரிசுகளின் திருமணத்தால் பகை மறந்து ஒன்றாக சேர்ந்தால் அங்கு மகிழ்ச்சிக்கு அளவுதான் ஏது?

 இரு குடும்பமும் சேர்ந்த மகிழ்ச்சியில் பொன்னுதாயும், சுந்தரமூர்த்தியும் தனது வாரிசுகளின் திருமணம்  நடக்கும் வைபவத்தை காண காத்திருந்தனர்.

ஊரே வியக்கும் வண்ணம் நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து ஒரு நன்னாளில் திருமணத்தை நாமக்கல்லில் உள்ள ஒரு மிகப்பெரிய திருமண மண்டபத்தில் இரு குடும்பமும் வைத்திருந்தனர்.

ராமகிருஷ்ணன் தன் மகனின் திருமணத்தை எப்படியெல்லாம் நடத்த வேண்டுமென்று ஆசை கொண்டிருந்தாரோ அதைவிட ஒரு படி அதிகமாகவே அசத்தி கொண்டிருந்தார்.

தன் திருமணம் அவசரத்தில் யாருடைய ஆசீர்வாதமும் இல்லாமல் நடந்ததால் தன் வாழ்க்கை திசை தெரியாமல் போனதை போல் மகனின் வாழ்க்கை அமையக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் ராம். அதனாலையே மகனின் திருமணத்தை பழங்கால முறைப்படி அனைத்து சாங்கியமும் செய்து திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

சுந்தரமூர்த்தி குடும்பமும் ராமகிருஷ்ணனின் குடும்பத்திற்கு தாங்களும் சலைத்தவர்கள் இல்லை என்பதை தங்கள் பங்குக்கு காட்டி கொண்டிருந்தனர்.

முதல் நாளில் இருந்து திருமணம் முடியும் அந்த மூன்று நாட்களும் மண்டபத்தில் தான் விசேசம் வைத்திருந்தனர். முதல்நாள் பட்டினி சாத விருந்து. இரண்டாம் நாள் நிச்சயதார்த்தம். மூன்றாம் நாள் மாங்கல்யம் தரித்தல் சடங்கு.

முதல் நாள் காலையில் முகூர்த்தக்கால் ( மும்மூர்த்திகளும் குறையில்லாமல் இத்திருமணத்தை நடத்தித் தரவேண்டும் என்பதன் அறிகுறியாக ஆல், அரசு, பால்பச்சன் இவைகளில் ஏதேனும் ஒன்றில் மூன்று கிளைகளையுடைய குச்சியை வெட்டி வந்து குச்சியிலிருந்த தோல்களை நீக்கி மஞ்சள் கொண்டு பூசி அக்குச்சியில் மஞ்சள் தேய்த்த வெள்ளை துணியில் நவ தாணியங்களை முடிந்து அம்மரக் கிளையில் கட்டி திருமணம் நடக்கும் இரு வீட்டாரும் அவர் அவர்கள் வீட்டில் மணப்பந்தலின் ஈசானி மூலையில் மண மக்களின் தாய் மாமனுடன் சேர்ந்து மூன்று அல்லது ஐந்து உறவினர்கள் நட்டு வைத்து அதற்கு அருமைக்காரரும், நாவிதரும் பூஜை செய்யும் சடங்கு. இச் சடங்கு கொங்கு பகுதிகளில் திருமண வீட்டில் நடக்கும் சடங்குகளில் மிக முக்கியமானதாகும்) நட்டு முடித்த கையோடு மூன்று குடும்பங்களும்  பட்டினி சாத விருந்து மதியம் இருப்பதால்  அன்றைக்கு காலையிலையே மணமக்களின் குடும்பமும் இரு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் மண்டபத்திற்கு வந்து விட்டனர்.

வந்திருந்த உறவினர்கள் அனைவரும் ஆளுக்கொரு வேலையாக இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துக் கொண்டிருந்தனர்.

மண்டபத்தின் உள்ளே மிகப் பெரிய ஹாலில் ஆங்காங்கே வந்திருந்த உறனர்களில் பெண்கள் தனது சொந்தங்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

புது பொண்ணுக்கு உண்டான சர்வலட்சணங்களுடன் ஸ்கைப்ளு கலரில் சில்க்காட்டன் சேலை அணிந்து அவள் போட்டிருந்த தங்க நகைகளுக்கு போட்டியாக முகம் புன்னகையில் ஜொலிக்க தனக்கு அண்ணியாக வரப்போகிற செல்வியுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தாள்.

செல்வியும் அவளுக்கு அழகில் சலைத்தவள் இல்லை என்பதை போல சந்தனக்கலர் பட்டு புடவையில் ஒப்பனையில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்திலும் கல்யாணக் கலை தாண்டவமாடியது.

 அங்கு வந்திருந்த

எல்லாருடைய முகங்களிலும் மகிழ்ச்சி கொட்டிக்கிடக்க பொன்னுதாயின் முகம் மட்டும் வாடிக் கிடந்தது.

பொன்னுதாயி மண்டபத்தில் ஒரு மூலையில் சேரில் அமர்ந்து போனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் சிந்தை முழுவதும் மூத்த மகளே நிறைந்திருந்தார்.

செல்வியுடன் பேசிக் கொண்டிருந்த ஷர்மி எதர்ச்சையாக திரும்பிய போது ஒரு ஓரமாக அமர்ந்து கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்த பொன்னுதாயை பார்த்ததும் ‘அம்முக்கு என்னாச்சு?’ மனதிற்குள் கேட்டுக்கொண்டே எழுந்தாள்.

 “ஏய் ஷர்மி எங்கப் போற?” செல்வி கேட்கவும்,

“இரு டி வரேன்…” செல்வியிடம் கூறியவள் கையில் வைத்திருந்த போனிலிருந்து ரகுவின் நம்பர்க்கு அழைத்தாள்.

தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தவன் போன் வரவும் நம்பரை பார்த்து விட்டு ‘இந்த குட்டிப்பிசாசு இப்போ எதுக்கு கூப்பிடுது…’ என நினைத்துக் கொண்டு தந்தையிடம் “உங்க மருமகதான் கூப்டறா ப்பா…” என்றான்.

“சரி கண்ணா நீ மருமககிட்ட போய் பேசிட்டு வா.. நா மத்த வேலைய பாக்க போறேன்…” என்று கூறியவாறே ராம் நகரப் போகவும்,

“அப்பா வெயிட் பண்ணுங்க உங்க மருமககிட்ட பேசிட்டு நானும் வரேன்…” என்றவன் போனை காதில் வைத்து “சொல்லுடி குட்டிபிசாசு மண்டபத்துக்குள்ள இருந்துட்டு எதுக்குடி கால் பண்ற?” என்றான்.

“நீ உடனே இங்க வா மாமா…”

“எனக்கு வேலை இருக்கு டி., என்னனு போன்லையே சொல்லு.”

“எந்த வேலையா இருந்தாலும் அத அப்பறம் செஞ்சிக்கோ மாமா.., இப்போ உடனே நீ இங்க வா மாமா”

“என்னனு சொல்லாம வா னா என்னடி அர்த்தம்?”அவன் சலிப்பாக கேட்கவும்,

“மாமா அம்முக்கு என்னாச்சுனு தெரியலை அழுதுட்டு உட்கார்ந்துருக்கு., நீ வா மாமா.”

“அப்பத்தாவுக்கு அத்தை வரலைனு கவலையா இருக்கும். நீ போன வை நா வரேன்…” அழைப்பை கட் செய்து விட்டு தந்தையிடம் வந்தவன் “வாங்கப்பா அப்பத்தாவ பாத்துட்டு அப்பறமா போலாம்.”

“ஏங்கண்ணா.. அம்மாவுக்கு என்னாச்சு…?”

“உங்க அம்மா அத்தைய நினச்சிட்டே அழுதுகிட்டு இருக்கும் போல…, உங்க மருமக போன் பண்ணி அப்பத்தா அழறாங்கனு சொல்றா… அதான் போய் பாத்துட்டு அதுக்கு பிறகு போலாம்னு சொல்றேன்ப்பா…”

“சரி கண்ணா…” இருவரும் பொன்னுதாயை பார்க்க சென்றனர்.

ரகுடம் பேசிவிட்டு பொன்னுதாயின் அருகில் சென்று அங்கு கிடந்தச் சேரை இழுத்துப்போட்டு அவரின் அருகில் அமர்ந்த ஷர்மி “அம்மு என்னாச்சு? ஏ அழுகற?”என்றாள்.

ஏதோ சிந்தனையில் கண் கலங்கியவாறு அமர்ந்திருந்த பொன்னுதாயி தன் அருகில் கேட்ட குரலில் சுயம் தெளிந்து தன் பக்கத்தில் இருந்த ஷர்மியை பார்த்தவர் கலங்கிருந்த கண்களை துடைத்துக்கொண்டு “அதலாம் ஒன்னுமில்லைடா கண்ணு…, நா நல்லாதான் இருக்கேன்…” என்றார்.

“இப்போ என்னனு சொல்லப்போறியா இல்லையா அம்மு., நீ மட்டும் இப்போ என்னனு சொல்லலைனா நா மாம்ஸ்ட்ட கேட்பேன்.”

“காத்தால உன்ற பெரியம்மா என்றகிட்ட பேசும் போது அவளோட குரலே சரியில்லை கண்ணு…, என்ற பேரன் கண்ணாலத்துக்கு என்ற மகன் ஊரையே திரட்டியிருக்கான்.., ஆனா நா பெத்த என்ற மகளால வர முடியலை…, பொறந்த வூட்ல விசேசம் நடக்கும்போது எங்கையோ கண்கானாத தேசத்துல என்ற தங்கம் இருந்துக்கிட்டு என்றகிட்ட அழுகும்போது என்னால தாங்க முடியலை கண்ணு…, நா பெத்த ரெண்டு புள்ளைங்களும் ஒண்ணு மேல ஒண்ணு அம்புட்டு பாசம் வச்சிருந்தும் நல்லது கெட்டதுக்கு கூட அக்கா தம்பி ரெண்டு பேரும் பாத்துக்க முடியலைனு நினைக்கும் போதுதான் மனது கிடந்து அடச்சிக்குது கண்ணு…”

ஷர்மியின் வற்புறுத்துதலில் தன் மனதில் இருந்த கவலையை அவளிடம் கொட்டி விட்டார்.

அவர் பொலம்பி முடிக்கும்போது ராமும், ரகுவும் அங்கு வந்தவர்கள் பொன்னுதாயி பேசியதை கேட்டு மனதில் பாரம் ஏற அவரின் அருகில் இருவரும் சேரை இழுத்து போட்டு அமர்ந்தனர்.

“இப்போ எதுக்குமா கண்கலங்குறிங்க…? அக்கா வராதது எனக்கும் வருத்தம் தான்., ஆனா உன்ற மாப்பிள்ளை பிடிவாதமா இருக்கும்போது நம்மலால எதும் செய்ய முடியாதும்மா…”

“எனக்கும் அது புரியுதுடா…, ஆனா என்ற வீட்ல நடக்கற முதல் விசேசத்துக்கு என்ற மூத்த மக இல்லைனு நினைக்காம என்னால எப்படிடா இருக்க முடியும்…?”

அவரின் ஆதங்கம் மூவருக்கும் புரிந்தது.

அந்த கணத்த சூழலை மாற்ற நினைத்த ஷர்மி “இப்போ உனக்கு என்ன வேணும் அம்மு.,  பெரியம்மா எங்க கண்ணாலத்துக்கு வரனும் அம்புட்டுதானே அம்மு…?”

 “ஆமா கண்ணு., ஆனா அவதான் வர முடியாம கிடக்கறாளே.”

“இந்த ஷர்மி இருக்கு பயமேன் அம்மு. ஏங் கழுத்துல உன்ற பேரன் தாலி கட்றதுக்குள்ள உன்ற மகள் இங்க வந்துருப்பாங்க அம்மு.”

“நெசமா என்ற மகள் வருவாளா கண்ணு…” அவர் நம்பாமல் கேட்கவும்,

“நா நடக்காதத என்னைக்காவது சொல்லிருக்கேனா அம்மு?., இந்த ஷர்மி ஒரு வாக்கு குடுத்தா கண்டிப்பா அத நிறைவேத்துவா., என்ன நம்பு அம்மு.” பொன்னுதாயிடம் கூறியவள்,

 ரகுவை பார்த்து “லண்டன்ல இருந்து வர ரெண்டு ப்ளைட் டிக்கெட் புக் பண்ண பணம் மட்டும் என்ற அக்கௌன்ட்ல போட்டுவிடு மாமா…” என்றாள்.

“ஏய் குட்டிபிசாசு.., இது நீ நினைக்கற மாதிரி அம்புட்டு சாதாரண விசயமில்லை. ஏற்கனவே என்ற அத்தை புருசன் எங்ககிட்ட பேச மாட்டார். இப்போ நா உன்ன கல்யாணம் பண்ணிக்கறது அவருக்கு சுத்தமா புடிக்கலை… அதுல அத்தை கூட சண்டை போட்டுட்டு இருக்கார்… அப்படி இருக்கப்ப எப்படி நம்ம கல்யாணத்துக்கு அத்தைய கூட்டிட்டு வருவார். அத்தை இங்க இருந்துருந்தாலாவது மாமாகிட்ட சண்டை போட்டாவது வந்துருப்பாங்க.. ஆனா அவங்க இப்போ இருக்கறது லண்டன். கண்டிப்பா அவங்களால தனியா அம்புட்டு தூரம் வர தெரியாது. இதலாம் யோசிச்சதாலதான் நா அத்தைக்கு டிக்கெட் போடல இல்லைனா முன்னாடியே போட்ருப்பேன்…”

ராமும் மகன் சொல்வதை தான் ஆமோதித்தார்.

பேரன் சொன்னதை கேட்டதும் பொன்னுதாயின் முகம் வாடி விட்டது. அதை பார்த்தவள்,

“எனக்கும் அதலாம் தெரியும் மாமா… அதுக்காக அம்மு ஆசைபட்டத செய்யாம இருக்க முடியாதுல… நீ ப்ளைட் டிக்கெட்க்கு உண்டான பணத்த மட்டும் என்னோட அக்கௌன்ட்ல போட்டு விடு மாமா… உன்ற அத்தைய வர வைக்க வேண்டியது என்ற பொறுப்பு…”

“அது எப்படி முடியும் குட்டிபிசாசு?., ஆரு போய் அத்தைய கூட்டி வருவாங்க?”

“அது என்னோட பிரச்சனை மாமா… கண்டிப்பா நாளைக்கு நம்மலோட நிச்சயதாரத்துக்கு கோதை பெரியம்மா இங்க இருப்பாங்க…” என அசால்ட்டாக கூறி விட்டு “அம்மு நீ என்றக்கூட வா…” பொன்னுதாயை கூட்டிக்கொண்டு சென்று விட்டாள்.

எழுந்து போகும் அவளை பார்த்தவாறே ரகு “இவ என்ன லூசாப்பா., இவளால எப்படி லண்டன்ல இருக்க அத்தைய இங்க வரவைக்க முடியும்?”

“எனக்கும் அது தெரியலை கண்ணா…, ஆனா மருமக இம்புட்டு உறுதியா சொல்லுதுனா கண்டிப்பா எதாவது யோசிச்சு வச்சிருக்கும் கண்ணா. மருமக சொன்ன மாதிரி அக்கா உன்ற கல்யாணத்துக்கு வருவாங்கனு நா நம்பறேன் கண்ணா…, நீ மருமக சொல்ற மாதிரி அக்கா வரதுக்கு ப்ளைட் டிக்கெட்க்கு உண்டான பணத்த மருமககிட்ட குடுத்துடு…”

மறுநாள் ஷர்மி சொன்னதை போல் தான் நடந்தது., மாலை நடக்க இருந்த நிச்சயதாரத்துக்கு மதியமே கோதை வந்து விட்டார்.

அவரை எப்படி ஷர்மி வர வைத்தாள் என்பது அங்கிருந்த மூன்று பேரைத் தவிர வேர யாருக்குமே தெரியாது. ரகுவிற்கு கூட அவள் சொன்னதில் நம்பிக்கை இல்லை. அப்பா சொன்னதுக்காக ஷர்மி சொன்னதைபோல இரண்டு ப்ளைட் டிக்கெட் போட பணம் மட்டும் குடுத்திருந்தான். அதன் பிறகு அது பற்றி அவளிடம் கேட்கவும் இல்லை.

மூன்று நாள் விஷேசம் என்பதால் மறு நாளும் காலையில் இருந்தே விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. மத்தியானம் திருமணத்திற்கு வரும் உறவினர்களை   வரவேற்பதற்காக மூன்று  குடும்பமும்  மண்டபத்தின் வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது.

மகனின் அருகில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்த பொன்னுதாயி மண்டபத்திற்குள் வந்து கொண்டிருந்தவளை பார்த்ததும் நிலை தடுமாற மகனின் கையை அழுந்த பற்றிக் கொண்டு விழிகளில் தேங்கிருந்த நீரை துடைத்தவாறே தங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்த இருவரையும் உற்று பார்த்தார்.

 மண்டபத்தின் நுழை வாயிலில் வந்து நின்ற டேக்சியிலிருந்து முதலில் கோதை இறங்கினார். அவர்க்கூடவே கோதையின் இரண்டாவது மகளின் கணவன் அரவிந்த் இறங்கி வந்தான். டேக்சிக்கு பணத்தை குடுத்து விட்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.

உள்ளே வந்த கோதையின் விழிகள் முதலில் தேடியது தனது தாயை தான். அவரை கண்டதும் கண்கள் கலங்க வேகமாக தனது தாயும், உடன் பிறந்தவனும் நின்றிருந்த இடத்திற்கு அத்தனை வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

Advertisement