Advertisement

அத்தியாயம்.23

அதன் பிறகு வந்த நாட்கள் இரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை வாரி வழங்கியது என்றால் அது மிகையாகாது. மகேஷ்க்கு திருமணம் உறுதி செய்து விட்டு வந்த மறுநாளே முருகேசன் தன் மனைவியுடன் வந்து தங்கையையும் மாப்பிள்ளையும் மொறையாக வீட்டிற்கு அழைத்தார்.

ராமிற்க்கு அது தர்மசங்கடத்தையே குடுத்தது. இந்த வயதில் இதெல்லாம் தேவையா? என மறுக்க நினைத்தவர் தன்னவளின் விழிகளில் தெரிந்த எதிர்பார்ப்பை பார்த்ததும் அதற்குமேல் அவரால் மறுத்துக் கூற முடியவில்லை.

 தன்னவளுக்காக எதையும் செய்பவராயிற்றே… இந்த முறையும் அவளுக்காக தனக்கு விருப்பமில்லை என்றாலும் ஒத்துக்கொண்டார்.

  பெண்களுக்கு தாய் வீடு செல்வதென்றால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது… அதற்கு வயது ஒரு பொருட்டே இல்லை. லலிதாவும் அதற்கு விதி விலக்கு அல்ல…

லலிதாவிற்கு இத்தனை வருடம் செய்யாத சீர் அனைத்தையும் அண்ணன் தம்பி இருவரும் மொத்தமாக செய்தே அனுப்பினர். ராம் கூறிய மறுப்பை அவர்கள் கேட்கவே இல்லை. 

இப்போதெல்லாம் லலிதாவின் முகத்தில் புன்னகை மட்டுமே… இனி தன் கணவன், மகனுக்காக வாழ முடிவெடுத்து விட்டார். அதற்கு லஷ்மியின் அறிவுரையும் ஒரு காரணம் என்றால் மிகையாகாது. இனி அவளின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக செல்லும் என்பதில் மாற்றம் இல்லை.

ஆனால் ராமால் மனைவின் மாற்றத்தை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. தன்னவளை விட்டு விலகியே இருக்கிறார். காலம் அவர் மனதில் உள்ள காயங்களையும் ஆற்றும். 

பொன்னுதாயி சொன்னது போலவே அன்று புதன் கிழமை பேரனுக்கு பொண்ணு கேக்க மறுமகளின் அண்ணன் வீட்டிற்கு மகன், மருமகள், பேரனுடன் சென்றார்.

 ரகு தான் அப்பத்தாவிடம் அவர்கள் வீட்டிற்கு வருவதை சொல்ல வேண்டாம் என்றிருந்தான். பேரன் சொல்லவும் பொன்னுதாயும் முருகேசன் வீட்டிற்கு தகவல் சொல்லாமலே கிளம்பி வந்து விட்டார். ரகுநந்தன் ஷர்மிக்கு அதிர்ச்சி குடுக்க நினைத்து கூறினான் என்றால் அவளோ அவனுக்கல்லவா அதிர்ச்சி குடுக்கக் காத்திருக்கிறாள்.

அன்று காலையில் சுந்தரமூர்த்தி வீட்டில் தமிழரசன் சொசைட்டிற்கு பால் ஊத்த சென்றிருந்தார். முருகேசன் வயலுக்கு கிளம்புவதற்காக வெளியே வந்தவர் வாசலில் வந்து நின்றவர்களைப் பார்த்ததும் சில நொடிகள் ஒன்றும் புரியாமல் நின்று விட்டார்.

“என்ன முருகேசா நின்னுட்டே இருக்க உள்ள கூப்பிடு…” பொன்னுதாயி கூறியதும் தான் தெளிந்தார் முருகேசன்.

அத்தனை காலையில் வாசலில் வந்து நின்றவர்களை பார்த்து முருகேசனுக்கு ஒன்றும் புரியவில்லை. வந்திருந்தவர்களை வரவேற்று விட்டு வீட்டிற்குள் அழைத்து சென்றார்.

நம் நாயகியோ அறையில் இருந்த கட்டிலில் தூங்கி முடித்து மெல்ல ஹாலுக்கு வந்தவள் அங்கிருந்த சேரில் காலை குறுக்கி வைத்து அதில் முகம் புதைத்து விட்ட தூக்கத்தை மீண்டும் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

லஷ்மியோ மகளை எழுப்ப கத்திக்கொண்டே சமயலறைக்கும், ஹாலுக்கும் நடந்து கொண்டிருந்தவர் வீட்டிற்குள் வந்தவர்களை பார்த்ததும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

முருகேசனுக்கு புரியாதது லஷ்மிக்கு வந்திருந்த அனைவரையும் பார்த்ததுமே புரிந்து விட்டது. தன் மகளை பொண்ணு கேட்டு வந்திருக்கிறார்கள் என்று. 

 “வாங்க பெரியம்மா… வாங்க தம்பி… வா லலிதா…” அனைவரையும் வரவேற்றவர் தன் மகள் இன்னும் அசையாமல் தூங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் கோபம் வந்தது. 

வந்திருந்தவர்கள் முன்னால் மகளை திட்டவும் முடியாமல் கோபத்தை அடக்கிக்கொண்டு அவளை எழுப்ப ஆரம்பித்தார்.

சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த இந்து வெளியே குரல் கேக்கவும் அவரும் வந்திருந்திருந்தவர்களை வரவேற்றார்.

ஷர்மியோ இது எதுக்கும் அசராமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.

பொன்னுதாயி, ராம், லலிதா மூவரும் சென்ற பின்னரும் ரகுநந்தன் உள்ளே செல்லாமல் நிலவுகாலில் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு உதட்டில் உறைந்த புன்னகையுடன் தன் மனைவியாக வரப் போகிறவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

உள்ளே வந்த பொன்னுதாயி “விடு லஷ்மி கண்ணு புள்ள தூங்கிட்டு போகட்டும்… ஏ தூங்கற புள்ளைய எழுப்புற…?” 

“விடியக்காத்தால இருந்து எழுப்பறேன் பெரியம்மா…, ஆனா உங்க பேத்தி அசஞ்சுக்கூட குடுக்கமாட்ங்கறா., இவகிட்ட கத்தி கத்தியே நா ஒரு வழியாகிடறேன்., எல்லாம் இந்த வூட்டு ஆம்பளைங்க குடுக்கற செல்லம்தான்…” கணவனை முறைத்துக்கொண்டே கூறினார்.

“நீ போய் டீ போட்டு கொண்டு வா லஷ்மி. ஷர்மிம்மாவ நா எழுப்பறேன்…” மனைவியை உள்ளே அனுப்ப முயன்றார் முருகேசன். இல்லையென்றால் மகளுக்கு விழுந்த வசவை விட தனக்கு அதிகமாக விழுமே என்ற பயம்தான்.

“என்னம்மோ பண்ணுங்க அவளுக்கு காலேஜ்க்கு நேரமாச்சு. இப்போ எழுந்திருச்சாத்தான் உங்க மக கிளம்பி முடிக்க சரியா இருக்கும்” என்று கூறி விட்டு வந்திருந்தவர்களுக்கு டீ போட உள்ளே சென்று விட்டார்.

பொன்னுதாயி, “மூர்த்தி அண்ணே எங்க முருகேசா?” கேட்கவும்,

“வயலுக்குதான் போயிருக்காருங்த்தை. அப்பாவுக்கு காத்தால வயலுக்கு போகலைனா மனசு ஆகாது. அகிலேஷ்யும் அப்பாக்கூடதான் போயிருக்கான் போன் பண்ணா அப்பாவ கூட்டிட்டு வந்துடுவானுங்த்தை…”

“நல்ல விசயம் பேசத்தான் வந்துருக்கோம். அண்ணன போன் போட்டு வர சொல்லு முருகேசா…” பொன்னுதாயி கூறவும்,

மகனுக்கு போன் போட்டு சொல்லி விட்டு வந்தவர் மீண்டும் மகளை எழுப்ப ஆரம்பித்தார்.

மகளின் தலையை தடவி குடுத்தவாறே “ஷர்மிம்மா எழுந்திரிங்க…, நேரமாச்சு…” 

இவ்வளவு நேரம் அசையாமல் இருந்தவள் தந்தையின் ஒரு குரலுக்கே கண் விழித்தவள் எழுந்து உடலை நெளித்து கை மறைவில் கொட்டாவி விட்டவாறே  “குட் மார்னிங்ப்பா…, எங்க உன்ற பொண்டாட்டி? நிம்மதியா தூங்கக்கூட விட மாட்டிங்குது…, எப்பப்பாரு கத்திக்கிட்டே கெடக்குது…” என்றாள்.

‘மகளின் செயலில் வந்திருந்த தன் தங்கையின் குடும்பம் மகளை பற்றி என்ன நினைக்கும்’ உள்ளுக்குள்  பதறியவர் “ஷர்மிம்மா…, உன்ற அத்தையும்,‌ மாமாவும் வந்துருக்காங்க…, வாங்கனு கேளுடாம்மா…” என்றார்.

“ஆரு என்ற மாமனாரும், மாமியாருமாப்பா”., என்று கேட்டவாறே மறைத்து நின்றிருந்த தந்தையை விலக்கி எட்டி பார்த்தாள்.

அவளின் செயலில் ராமும், லலிதாவும் சிரித்தார்கள் என்றால் பொன்னுதாயி “இங்க வாடா ராசாத்தி” பாசமாக அழைத்தார்.

நிலைகதவில் சாய்ந்து நின்றிருந்தவனின் விழிகள் தன்னவளைதான் ரசித்துக் கொண்டிருந்தது. அவளின் ஒவ்வொரு அசைவையும் உள்ளுக்குள் ரசித்து சேகரித்துக் கொண்டிருந்தான்.

நவாப்பழ கலரில் பூக்கள் போட்ட நைட்டி அணிந்திருந்தவளின் தலைமுடி கலைந்து இருந்தாலும் அப்போதுதான் தூங்கி எழுந்தவளைப்போல் இல்லாமல் அன்று மலர்ந்த ரோஜா மலரை போல் இருந்தவளின் வதனத்தை தன் இதயத்திற்குள் ஓவியமாக சேகரித்துக் கொண்டான்.

பொன்னுதாயி கூப்பிட்டதும் “குட் மார்னிங் அம்மு…” என்றவாறே அவரின் அருகில் சென்று அமர்ந்தவளுக்கு அப்போது தான் தன்னை யாரோ உற்று பார்ப்பதை போல் தோன்றியது.

வாயிலின் புறம் திரும்பியவள் அங்கு நின்று புன்னகையுடனே தன்னை விழிகளால் துளைத்து கொண்டிருந்தவனை பார்த்ததும் அவளின் குறும்புத்தனம் தலைதூக்க அவனின் பார்வைக்கு எதிர்பார்வை பார்த்தவள் திடிரென அவனை பார்த்து கண்ணடித்தாள்.

அவளின் செயலில் அவன்தான் ஒரு நொடி தடுமாறி போனான். அவளின் குறும்புத்தனத்தை மனதிற்குள் ரசித்தவாறே வெளியே அதை காட்டிக்கொள்ளாமல் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு வீட்டிற்குள் வந்தான்.

அதற்குள்ளாகவே இந்து அனைவருக்கும் டீ போட்டு எடுத்து வந்து குடுத்தார்.

அவர்கள் டீ குடித்து முடிப்பதற்குள்ளாகவே அகிலேஷ் தன் தாத்தாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான்.

மூர்த்தி வந்திருந்தவர்களை வரவேற்று விட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும் போதே தமிழரசனும் பால் ஊத்தி விட்டு வந்துவிடவும் பொன்னுதாயி அனைவரிடமும் தங்கள் குடும்பம் வந்த காரணத்தை கூறி விட்டார்.

அதை கேட்டதும் முருகேசனுக்கும், தமிழரசனுக்கும் ஆச்சர்யம்தான்… இவ்வளவு சீக்கரம் தங்கள் வீட்டு பெண்ணை பெண் கேட்டு வருவார்கள் என்று நினைக்கவே இல்லை.

ஆனால் மூர்த்திக்கு இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. அவர் எதிர்பார்த்ததும் இதுவே தான். இரண்டு திருமணத்தால் உடைந்து போன இரு குடும்பமும் இந்த திருமணத்திலாவது ஒன்றாக சேர வேண்டும் என்பதே அவரின் நீண்டநாள் ஆசை… அது நிறைவேறும் காலம் வரும்போது வேண்டாம் என்றா சொல்வார்? மூர்த்தியும் சம்மதம் தந்து விட்டார்.

அவர் சம்மதம் சொன்னதில் பொன்னுதாயிக்கு அத்தனை சந்தோசம். அதே மகிழ்ச்சியுடன் “வர மாசத்துலையே ஒரு நல்ல நாளா பார்த்து கண்ணாலத்தை வச்சிக்கலாம்னு நினைக்குறேன் நீங்க என்ன சொல்றிங்ண்ணா?” மூர்த்தியிடம் கேட்டார்.

“நீ சொல்ற மாதிரி நடத்திடலாம் தங்கச்சி…” மூர்த்தியும் சம்மதித்து விட்டார்.

அண்ணன் தம்பி இருவருக்கும் அதில் மறுப்புபேதும் இல்லாததால் அவர்களும் பொன்னுதாயி சொன்னதுக்கு ஒத்துக்கொண்டனர்.

ஆனால் லஷ்மிதான் இடையில் புகுந்து “ஏனுங் மாமா அடுத்த மாசம் மகேஷ்க்கு கல்யாணம் வச்சிருக்கோம்ல ரெண்டுமே ஒரே சமயத்துல எப்படி வைக்கறது? முதல்ல சதா தம்பி வூட்டு விஷேசம் முடியட்டும்ங் மாமா…, உங்க பேத்திக்கும் இந்த வருசம் மட்டும்தான் காலேஜ் இருக்கு படிப்பு  முடிஞ்சதும் கண்ணாலத்த வச்சிக்களாமேங்க மாமா…?”  

லஷ்மி சொன்னது மற்றவர்களுக்கெல்லாம் அது சரியென்று தோன்ற நம்ம நாயகிக்கோ மூஞ்சில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

‘எப்படியோ ஒருவழியா என்ற மாமா மனசு மாறி இப்போதான் கண்ணாலத்துக்கு ஒத்துகிட்டுருக்கான். அது பொறுக்காதே என்ன பெத்தவளுக்கு… எனக்கு முதல் வில்லியே நீதான் லச்சுமா…’ தாயை மனதிற்குள் திட்டிக் கொண்டவள் “கல்யாணம் பண்ணிட்டு படிக்க கூடாதுனு எதாவது சட்டம் இருக்கா லச்சுமா?” என்றாள். 

“அதிக பிரசங்கித்தனமா பேசிட்டு திரிஞ்ச என்றகிட்ட அடிதான் வாங்குவ ஷர்மி…” லஷ்மி திட்டவும்,

ஷர்மி தன் தாத்தாவின் அருகில் போய் அமர்ந்தவள் “பாரு மூர்த்தி உன்ற மருமக என்ன திட்டிட்டே இருக்கு” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள்.

பேத்தியின் முகம் வாடுவதைப் பொறுக்காமல் மூர்த்தி “லஷ்மிம்மா அலமுவ எதுக்கு திட்ற? புள்ள சொல்றதும் சரிதானே? கல்யாணம் பண்ணிக்கிட்டே படிக்கட்டுமே…?”

“மாமா அவதான் புரியாம பேசறானா நீங்களும் அவளுக்கு சப்போர்ட் பண்ணாதிங் மாமா…, இத்தனை நாள் பிரிஞ்சிருந்த குடும்பம் இப்போதா ஒன்னா சேர்ந்துருக்கோம்…, உடனே கல்யாணத்தையும் வச்சா ஊர் கண்ணே நம்ம குடும்பத்து மேலதான் இருக்கும் மாமா…, நம்ம ரெண்டு வூட்லையும் நடக்கப்போற முதல் விஷேசம் அத எதுக்கு இம்புட்டு அவசர அவசரமா செய்யனும் மாமா…?” லஷ்மி கேட்டதும்,

மூர்த்திக்கும் மருமகள் சொல்வது சரியென்றுதான் தோன்றியது. ஆனால் பேத்தியின் ஆசையும் புரிந்தது. யாருக்காக பேசுவது என தெரியாமல் பெரிய மகனை பார்த்தார்.

முருகேசன் “அப்பா லஷ்மி சொல்ற மாதிரியே செஞ்சிடலாம்ப்பா…” 

 பொன்னுதாயி “அண்ணா லஷ்மி கண்ணு சொல்றதும் சரியாதான் இருக்கு…, பேத்தி படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்த வச்சிக்கலாம்ங்ண்ணா…”

எல்லாரும் லஷ்மி சொன்னதை ஒத்துக்கொள்ளவும் ஷர்மியின் முகம் வாடிவிட்டது. ‘எப்படியோ லச்சு நினச்சத சாதிச்சிடுச்சு…’ தாயை மனதிற்குள் வறுத்தெடுக்க ஆரம்பித்தாள்.

பேத்தியின் முகம் வாடுவதை பார்த்த மூர்த்தி பேத்தி ஆசைபட்டால் அதை எப்படியாவது நிறைவேத்தி குடுப்பவர் இந்த சிறு ஆசை நிறைவேற்ற முடியாமல் போகவும் பேத்தியின் விருப்பத்தை கேட்ட பிறகு முடிவெடுத்து விட்டார்.

 மகனிடம் “முருகேசா கண்ணாலம் வேனா மருமக சொல்ற மாதிரி அலமு படிச்சி முடிஞ்சதும் வச்சிக்கலாம்… இப்போ நம்ம சொந்த பந்தங்களை மட்டும் கூப்பிட்டு உறுதி நகை போட்டுடலாம்…” 

 “என்ன மாப்பிள்ளை நாஞ்சொல்றது சரிதானே?” மகள் கணவனிடமும் சம்மதம் கேட்டார்.

ராம், “நீங்க எப்படி சொல்றிங்ளோ அப்படியே செஞ்சிடலாம்ங் மாமா…”

பொன்னுதாயும் ஒத்துக்கொண்டார்.

சுந்தரமூர்த்தி சொன்னபிறகு அதை அந்த வீட்டில் யாருதான் மறுத்து பேசுவார்கள்?

தாத்தா சொன்னதுமே “ஷர்மி சந்தோசத்தில் அவரின் கன்னத்தில் இதழ் பதித்து தேங்ஸ் தாத்தா.”என்று கூறிவாறே தாயை பார்த்து பழிப்பு காட்டினாள்.

ஷர்மியின் குறும்புத்தனம் லஷ்மியை தவிர. அங்கிருந்த மற்றவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

ரகுநந்தனின் பார்வை வந்ததிலிருந்தே ஷர்மியை விட்டு விலகவில்லை. அவளின் ஒவ்வொரு செய்கையும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தவன் உள்ளே வந்து தன் தந்தையின் அருகில் அமர்ந்த பிறகும் கூட எந்த மாற்றமும் இல்லை. திருமண விசயத்தை தன் அப்பத்தா சொன்னபோது முகத்தில் வந்துபோன நாணம், அவளின் அம்மா சொன்னதை கேட்டு கோபம் கொண்ட முகம், பின் தான் நினைத்ததை நடத்த தன் தாத்தாவிடம் பாவமாக முகத்தை மாற்றி பேசியே அவரை கரைத்து தான் நினைத்ததை சாதித்த பிறகு தன் அத்தையை பார்த்து பழிப்பு காட்டியவள் என எத்தனை எத்தனை மாற்றங்கள் அவள் முகத்தில் சிறிது நேரத்திலே… அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனால் வியக்காமல் இருக்கமுடியவில்லை. அவனின் மனது ‘வசியக்காரி’ என பட்டப்பேரை அவளுக்கு சூட்டியது.

 அவனும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறான் அன்று ஹாஸ்பிட்டலில் இருந்து இன்று வரை அத்தனை பேரையும் பேசி மயக்கியே அவள் நினைத்ததை சாதித்துவிடுகிறாள். கோபத்தின் மறு உருவமான அவனையே வசியபடுத்திவிட்டாளே…

லஷ்மியும் முகத்தை கடு கடுவென வைத்துக்கொண்டு மகளை முறைத்தாலும் மனதிற்குள் அவளின் குழந்தை தனத்தை ரசிக்கவே செய்தார்.

“சரிங்ப்பா… நீங்க சொல்ற மாதிரியே நடத்திடலாம்” முருகேசனும் சம்மதித்துவிட மற்றவர்களும் ஒத்துக்கொண்டனர்.

ஷர்மி, “தாத்தா நா இன்னொரு விசயம் சொல்லுவேன் அதுக்கு எல்லாரும் சரினு சொல்லனும்.” அவள் கூறவும்,

“என்னடா அலமு எதுவா இருந்தாலும் சொல்லு. என்ற அலமு சொன்னா அத ஆரும் மறுத்து பேசமாட்டாங்க” பேத்தியின் தலையை பாசமாக தடவிக்குடுத்தவாறே கூறினார். 

“மாமா நீங்கதான் அவளுக்கு ஓவரா செல்லம் குடுத்து கெடுக்கறிங்க. முதல்ல அவ என்ன சொல்றானு கேளுங்க அதுக்கப்பறம் அது சரியா இல்லையானு பார்த்துட்டு முடிவ சொல்லுங்க” லஷ்மி கோபமாக கூறவும்,

“என்ற அலமு எப்பவும் தப்பான ஒரு விசயத்த கேட்கவும் மாட்டா, செய்யவும் மாட்டா கண்ணு., எனக்கு நம்பிக்கை இருக்கு” மருமகளிடம் கூறியவர் “நீ சொல்லுடா அலமு” என்றார்.

“தாத்தா உங்களுக்கே தெரியும்? அகியும், செல்வியும் சின்ன வயசுல இருந்தே லவ் பண்றாங்கனு…?” ஷர்மி சொல்ல வந்ததை புரிந்துக்கொண்டார் மூர்த்தி. ஆனால் அது பேத்தியின் வாயிலிருந்தே வர வேண்டும் என்று அமைதியாக அவளை பார்த்தார்

அகிலேஷ், ‘இப்ப எதுக்கு என்ன கோத்து விடறானு தெரியலையே’ மனதிற்குள் அலறினான். 

“அகி கல்யாணமும், எங்க கல்யாணமும் ஒண்ணா ஒரே நாள்ல நடந்தா செம்ம ஜாலியா இருக்கும் தாத்தா., சரினு சொல்லுங்க தாத்தா.”

மகள் சொன்னதை கேட்டு முதல் முறையாக லஷ்மி மனதிற்குள் சந்தோசபட்டார். அவர் ஏற்கனவே நினைத்ததுதான் அதை மகள் சொல்லவும் இன்னும் சந்தோசபட்டார்.

ஷர்மி சொன்னதை கேட்டு எல்லாரும் அமைதியாக இருக்கவும்,

பொன்னுதாயி, “நல்ல விசயம்தான்டா கண்ணு சொல்லிருக்க., அண்ணா எங்களுக்கு இதுல எந்த பிரச்சனையும் இல்லை. அவங்களுக்கு சம்மதம்னா ஒண்ணாவே நடத்திடலாம்.”

ராம் “அம்மா சொல்றது சரிதான் மாமா. நீங்க சதா வீட்ல பேசிட்டு சொல்லுங்க. நல்ல நாள் பாத்து உறுதி நகை போட்டுடலாம். கல்யாணம் மருமக படிப்பு முடிஞ்சதும் வச்சிக்கலாம்.” 

முருகேசன் தயங்கியவாறே “மாப்பிள்ளை இது எப்படி சரியா வரும். சதா இப்போதான் பையன் கல்யாணத்தை வச்சிருக்கான். அடுத்த கொஞ்சநாள்லையே பொண்ணுக்கு கல்யாணம் வைக்கனும்னா அதுவும் உங்க அளவுக்கு அவனால எப்படி செய்ய முடியும்…” அவர் பணத்தை நினைத்துக் கூறவும்,

“நீங்க சொல்ல வரது எனக்கு புரியுதுங் மச்சான். பணம்தான் பிரச்சனைனா அத நீங்க யோசிக்க வேண்டாம். அவரால என்ன முடியுமோ அத தந்தா போதும். மிச்சத்த நா பாத்துக்கறேன். எனக்கு புள்ளைங்களோட சந்தோசம்தான் முக்கியம்.” என்றவர் மாமனாரிடம் “மாமா நீங்க அவங்க வீட்ல பேசிட்டு சொல்லுங்க மிச்சத்த நா பாத்துக்கறேன்.”

மூர்த்தி, “எனக்கு என்னோட ரெண்டு பேரப்பிள்ளைகளோட கல்யாணமும் ஒண்ணா நடந்தா அத விட வேற என்ன சந்தோசம் இருக்கப்போகுது. நா சதாகிட்ட பேசிட்டு சொல்றேன் மாப்பிள்ளை., ஆனா கல்யாண செலவு எங்களோடதாவே இருக்கட்டும்” என்று கூறிவிட்டார்.

மூர்த்தி சொன்ன மாதிரியே மறுநாளே சதாசிவம் வீட்டிற்கு மகன், மருமகளுடன் சென்று செல்வியை பொண்ணு கேட்டுவிட்டார்.

சதாசிவத்திற்கும் அவர் மனைவிற்கும் அது சந்தோசத்தை தந்தாலும் உடனே கல்யாணத்திற்கு பணத்தை நினைத்து தயங்கவும், 

மூர்த்தி “நீ எத நினைச்சு தயங்கறேனு எனக்கு புரியுது. உன்னால என்ன முடியுமோ அத செய் போதும். கல்யாண செலவ பத்தி நீ கவலை பட வேண்டாம் அத செய்ய வேண்டியது எங்க கடமை சதா. எங்க வீட்டுக்கு வரப்போற மகாலஷ்மிக்கு நாங்க செஞ்சிடறோம்.”

சுந்தரமூர்த்தி இவ்வளவு தூரம் சொன்னபிறகு சதாசிவமும் மறுத்து பேச மனமில்லாமல் ஒத்துக்கொண்டார்.

மகேஷின் திருமணம் முடிந்ததும் சிறிய அளவில் இரு ஜோடிகளுக்கும் இரு வீட்டு சார்பாக உறுதி நகை போட்டு திருமணத்தை உறுதி பண்ணிவிட்டனர்.

Advertisement