Advertisement

“ஏன்டி உனக்கெல்லாம் ரோசமே வராதா? நா இங்க என்ன பேசிட்டு இருக்கேன் நீ கறி போடுங்ற?”அவன் திட்டவும்,

“அது என்னதுக்கு மாமா., அத வச்சிட்டு ஒரு கிலோ கறிக்கூட வாங்க முடியாது., நீ கறிய போடு மாமா…” 

அவளின் பதிலில் அங்கிருந்த மூவருமே சிரித்துவிட்டனர்.

“உன்னெல்லாம் திருத்தவே முடியாதுடி…”

“தேங்கி யூ மாமா…” என்றவள் அப்போது தான் ரகுவின் கையில் தான் கொண்டு வந்த பையை பார்த்தாள்.

பார்த்ததும் “அச்சச்சோ மறந்தே போயிட்டேன்…, அத்தை உங்களை லச்சுமா கிளம்பி சதா மாமா வீட்டுக்கு வர சொல்லுச்சு. ஒன்பது மணிக்கு கிளம்பனுமாம்…” என்றவள் ராமிடம் “மாமா உங்களையும் வர சொன்னாங்க…” ஷர்மி சொல்லிக் கொண்டிருக்கும்போதே

“இல்லடா கண்ணு எனக்கு வேலை இருக்கு உன்ற அத்தைய மட்டும் கூட்டிப்போ…” என்று கூறிவிட்டு அங்கிருந்து விலகி சென்று விட்டார்.

இந்துவின் அண்ணன் மகன் மகேஷ், காதலித்த பெண்ணிற்கு உறுதி நகைப்போட நேற்றே கணவன் மனைவி இருவரிடமும் இந்துவும், தமிழரசனும் சொல்லி விட்டுதான் சென்றனர். 

இன்று காலையில் இந்துவின் அண்ணன் சதாசிவமும் ராமகிருஷ்ணனை பார்த்து தங்கள் வீட்டு விஷேசத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதற்கு செல்வதற்குதான் லஷ்மி லலிதாவை அழைத்திருந்தார்.

ராமின் பதில் அங்கிருந்த மூவரின் மன நிலையையுமே மாற்றி விட்டது. லலிதா போகும் தன் கணவனைத்தான் ஏக்கமாக பார்த்தார். 

ரகுநந்தனுக்கு தன் தந்தையின் மனநிலை புரிந்தது. இத்தனை நாள் இல்லாமல் இப்போது வந்த அம்மாவின் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை.

 ‘அது தனக்கான மாற்றம் இல்லை என நம்புகிறார்’ என்பதை அவனுமே உணர்ந்து விட்டான். தந்தையின் வலியும் புரிந்தது. அதே சமயம் தாயின் மனநிலையும் இப்போது புரிகிறது. ஆனால் இதில் யாருக்கு ஆறுதல் சொல்வதென்றே தெரியாத நிலையில் தவிக்கிறான்.

ஷர்மியால் இந்த அமைதியை பொறுக்க முடியவில்லை. அந்த சூழ்நிலையை மாற்ற எண்ணியவள் “அத்தை வாங்க இன்னைக்கு நாந்தான் உங்களை ரெடி பண்ணப்போறேன். உங்களை எம்புட்டு அழகா மாத்தறேனு பாருங்க..” என்றவள் சாப்ட்ட தட்டை சிங்கில் போட்டுவிட்டு கை கழுவிக்கொண்டு ரகுவின் கையிலிருந்த பையை பிடிங்கி கொண்டு தன் அத்தையை அழைத்துச் சென்றாள்.

அவள் சொன்ன மாதிரியே லலிதாவை மாற்றும் வரை அவரை விடவில்லை ஷர்மி. ஒரு கட்டத்தில் அவருக்கே தர்மசங்கடமாகி விட்டது.

 “ஷர்மிம்மா… போதும்டா…” என கெஞ்சவே ஆரம்பித்து விட்டார். அப்போதுதான் அவரை விட்டாள்.

அத்தையின் அழகை பார்த்து “மாம்ஸ் இன்னைக்கு உங்க அழகுல மயங்கி விழப்போறார் அத்தை…”

மருமகள் சொன்னதை கேட்டு லலிதாவின் முகத்திலும் சிறு வெக்கப் புன்னகை பூத்தது.

“பார்டா… என்ற அத்தைக்கு வெக்கமெல்லாம் வருது. ஆனா இதுக்கூட அழகாத்தான் இருக்குத்தை…, நீங்க இப்படியே இருங்க” என்றவள் தன் அத்தையுடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

அப்போதுதான் வெளியே போயிவிட்டு வீட்டிற்குள் வந்த பொன்னுதாயி மருமகளை பார்த்ததும் வியந்துப்போய் அவளின் அருகில் வந்து தன் கையாலே திருஷ்டி எடுத்தவர் “இன்னைக்கு தான் பாக்க அழகா இருக்க கண்ணு…” என்றார்.

மாமியாரின் பாராட்டுதலில் சிறு நாணம் வந்து ஒட்டிக்கொண்டது. 

ஷர்மி “அம்மு நாந்தான் உன்ற மருமகளை இம்புட்டு அழகா மாத்திருக்கேன். நீ என்ன கண்டுக்கவே மாட்ற. போ அம்மு.., நா உன்ற மேல கோபமா இருக்கேன்?” ஷர்மி முறுக்கிக் கொள்ளவும்,

 

“அடியேய் ராசாத்தி உன்ன கண்டுக்காம இருப்பேனா?., நீ என்ற குலசாமியாச்சே…” பேத்தியின் கன்னங்களை கைகளால் வழித்து நெற்றி முறித்தார்.

“ஜோ சுவீட் அம்மு நீ…” அவளும் பதிலுக்கு பொன்னுதாயை கொஞ்சினாள்.

தந்தையும் மகனும் வெளியே கிளம்புவதற்காக ரெடியாகி வந்து டைனிங்ஹாலில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். ராம் சாப்ட்டு முடிக்கவும் எழுந்து சென்று கை கழுவிக்கொண்டு வந்தவர் ஹாலில் அம்மா மற்றும் மருமகளுடன் நின்று பேசிக்கொண்டிருந்த தன்னவளை பார்த்ததும் ஒரு நிமிடம் அங்கேயே சிலையாக நின்று விட்டார். வயது கடந்து முதுமை பருவத்தை எட்ட இருக்கின்ற வேளையிலும் மனைவின் அழகு ராமை வீழ்த்தியது. 

எந்த வயதானால் என்ன? காதல் கொண்டவனுக்கு தன்னவள் என்றுமே பேரழகிதானே…

 அதிலும் லலிதா அழகை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு பிறந்தவளாயிற்றே…, இவ்வளவு நாள் இத்தனை அழகையும் அவளின் மன வேதனை மறைத்து வைத்திருந்தது., இன்று அது அனைத்தும் விலகியதும் அவளின் அழகு ஒளிர்கிறது.

ராமின் பின்னால் சாப்பிட்டுவிட்டு கை கழுவிக்கொண்டு எழுந்து வந்த ரகுவும் தன் தந்தை அங்கேயே நிற்பதை பார்த்து விட்டு ‘என்னாச்சு அப்பாவுக்கு?’ என்ற கேள்வியுடனே அவரின் அருகில் வந்தான்.

அங்கு வந்ததும்தான் அப்பா அம்மாவை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது புரிந்தது. 

“அப்பா இப்போ உங்க மருமக மட்டும் பாத்தா உங்கள ஓட்டியே எடுத்துடுவா பாத்துக்கோங்க…” என்றான்.

மகனின் குரலில் தெளிந்தவர் “உன்ற அம்மா அழகா இருக்கா கண்ணா…” என்றவரின் முகம் அத்தனை கலையாக இருந்தது.

ரகுநந்தன் தந்தை கூறியதை ஆமோதித்தான்.

ஆம் உண்மையில் லலிதா அழகாகத்தான் இருந்தார். அரக்கு நிற சில்க்காட்டன் சேலை அத்தனை பாந்தமாக உடலை தளுவி இருந்தது. அவரின் மெல்லிய உடல் வாகுவிற்கு ஏற்றவாறு மணப் பெண்ணிற்கு சேலை கட்டுவதை போல கட்டிவிட்டிருந்தாள் ஷர்மி. 

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைத்து, வகிட்டில் குங்குமமிட்டு, தலைமுடியை ஒற்றை பின்னலிட்டு, அதில் இரண்டு சரம் மல்லிகையை தொங்க விட்டிருந்தார். அதுவே அவரை தேவதையாக காட்டியது. 

மனைவியை பார்த்துக் கொண்டிருந்தவர் அவளின் கழுத்தில் தாலிக்கொடி மட்டும் இருக்கவும் தன் அறைக்கு சென்றவர் மனைவிக்காக தான் வாங்கி வைத்திருந்த நகையில் ஒரு நகை பெட்டியை மட்டும் எடுத்து வந்து அதை மனைவியிடம் குடுக்க தயங்கியவர் மனைவியின் அருகில் இருந்த மருமகளிடம் கொடுத்தார்.

“இத ஏன் மாம்ஸ் என்றகிட்ட தரிங்க? உங்க பொண்டாட்டிக்கு நீங்களே தரலாம்ல?” அவள் கூறவும்,

அவர் பதில் ஏதும் கூறாமல் தன்னவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சோபாவில் போய் அமர்ந்து போனை நோண்ட ஆரம்பித்து விட்டார்.

பொன்னுதாயி தான் “நீயே உன்ற அத்தைக்கு போட்டு விடு கண்ணு…” என்றார்.

ராம் குடுத்த நகை பெட்டியைத் திறந்த ஷர்மி அதிலிருந்த நகையின் வடிவமைப்பை ரசித்தவள் “மாம்ஸ் உங்க செலக்ஸ்சன் சூப்பர்” என்றாள்.

அந்த செயினில் இருந்த டாலரின் வடிவமைப்பு அத்தனை அழகாக இருந்தது. டாலரின் நடுவில் மெருன் கலரின் ஒற்றை கல் பதித்திருந்தது அந்த டாலர் செயினுக்கு ஏற்றவாறு தோடும் இருந்தது.

பெட்டியிலிருந்த நகையை எடுத்து அத்தையின் கழுத்தில் அணிவித்தவள் அதே டிசைனில் இருந்த தோட்டையும் போட்டு விட்டு சிறிது விலகி நின்று அத்தையை ஒரு முறை நன்றாக பார்த்து விட்டு “செம்ம அழகா இருக்கிங்கத்தை…” என்றவளுக்கு திடிரென ஒரு ஆசை பிறந்தது.

உடனே லலிதாவை கூட்டி சென்று மாமாவின் அருகில் அமர வைத்தாள்.

 லலிதா “ஷர்மிமா என்ன பண்ற? என்றவாறே எழ பார்த்தார்.

அத்தையை எழ விடாமல் திரும்ப அமர வைத்தவள் “உஷ்ஷ்ஷ்ஷ்… எழக் கூடாது…” வாயில் விரல் வைத்து மிரட்டிவிட்டு அங்கு நின்று அவளின் செயலை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த ரகுநந்தனின் அருகில் சென்றவள் அவன் என்னவென்று உணரும் முன்னே அவனின் சட்டை பையிலிருந்த போனை எடுத்து அதில் அத்தையையும் மாமாவையும் நிழற் படமாக பதிக்க ஆரம்பித்தாள்.

ராம் மனைவி தன் அருகில் அமரவும் என்னவென்று புரியாமல் அவளை பார்த்து கொண்டிருக்கும்போதே ஷர்மி “மாம்ஸ் இங்க பாருங்க…” அவர் பார்த்ததும் அதை அழகாக எடுத்து விட்டாள்.

அவள் போட்டோ எடுத்ததும் தான் அவருக்கே புரிந்தது. அதன் பிறகு மருமகளின் விருப்பத்திற்கு மறுத்து பேசாமல் விட்டு விட்டார். லலிதாவுக்கு தான் கூச்சமாக இருந்தது. அதில் அவள் முகம் நாணத்தில் சிவந்து விட்டது.

இன்னும் நாலைந்து புகைப்படங்கள் எடுத்து முடித்து விட்டுத்தான் இருவரையும் விட்டாள்.

எடுத்த புகைப்படத்தை “அப்பா…” என ரகு சேவ் பண்ணி வைத்திருந்த வாட்ஸ்அப் நம்பர்க்கு அனுப்பியும் விட்டாள்.

ரகுநந்தன் மனதில் அந்த நிமிடம் தன் மாமன் மகளின் மேல் இருந்த பிடித்தம் காதலாக துளிர்விட ஆரம்பித்தது. அவளை ரசனையாக பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவனின் அருகில் நெருங்கி தானும் செல்ப்பி எடுத்துக்கொண்டாள். 

அதை தனது போனிற்கு அனுப்பி கொண்டு போனை அவனிடம் குடுத்தவள் “அத்தை வாங்க போகலாம். லச்சுமா அங்க நம்மல இன்னும் காணாம்னு திட்டிட்டு இருக்கும்” என்றவள் அத்தையை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தாள்.

ரகுநந்தன் போகும் ஷர்மியை தான் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இதயத்தில் நுழைந்ததை அறியாமலே அத்தையுடன் பேசியவாறே சென்றுக் கொண்டிருந்தாள்.

முகத்தில் உறைந்த புன்னகையுடன் போகும் மருமகளைப் பார்த்துக் கொண்டிருந்த மகனை கண்ட ராம் தன் தாயிடம் “அம்மா சீக்கரமே நம்ம கண்ணாவுக்கும் ஷர்மிக்கும் கண்ணாலம் பண்ணிவச்சிடலாம்னு நினைக்குறேன் நீங்க என்ன நினைக்குறிங்க…?” என்றார்.

பொன்னுதாயும் அதை பற்றிதான் நினைத்துக் கொண்டிருந்ததால் “நானும் அததான் யோசிச்சுட்டு இருந்தேன்டா. ஒரு நல்ல நாளா பார்த்து போய் பொண்ணு கேட்டுட்டு வந்தடலாம்…” என்றார்.

அப்பாவும், அப்பத்தாவும் பேசி கொண்டதில் சுயம் தெளிந்தவன் தலையை கோதி தன்னை நிலைப் படுத்திக்கொண்டு தந்தையின் அருகில் வந்து அமர்ந்தவன் அவர்கள் பேசுவது புரியாமல் முதலில் பார்த்தவன் புரிந்ததும் சிறு நாணம் அவன் முகத்தில் தோன்றி மறைந்தது. 

“கண்ணா உனக்கு இதுல விருப்பம்தானே?” ராம் கேட்கவும்,

“ம்ம்… ஆமாப்பா…, உங்க மருமக நம்ம வூட்டுக்கு வந்தா பழையபடி நம்ம வீடு சந்தோசமா மாறும்னு மனசு சொல்லுதுப்பா…”

மகனின் தோளில் கைப்போட்டு அணைத்து கொண்டு புன்னகைத்தவாறே மகனின் சொல்லை ஆமோதித்தார் ராம்.

Advertisement