Advertisement

அத்தியாயம்.3

அன்று மாலை கல்லூரி முடிந்ததும் அகிலேஷிற்கு வேலை இருந்ததால் ஷர்மி மட்டும் பஸ்டாப்பில் அவள் ஊருக்கு செல்லும் டவுன் பஸ்ஸிற்காக காத்துக் கொண்டிருந்தாள்.

கல்லூரிலிருந்து அவளுடைய ஊருக்கு வருவதுற்கு ஒரு மணிநேரம் ஆகும். அவளுடைய ஊர் கிராமம் என்பதால் ரூட் பஸ்ஸில் பேருந்துநிலையம் வந்து அங்கிருந்து டவுன் பஸ்ஸில் ஏறவேண்டும்.

பெரும்பாலும் அண்ணனுடனே கல்லூரி போய் வந்து விடுவதால் பஸ்ஸிற்காக காத்திருக்கும் தேவை இருந்ததில்லை. அரிதாக எதாவது ஒரு நாள் அகிலேஷிற்கு வேலை இருந்தால் மட்டும் பஸ்ஸில் வருவாள்.

இன்று அதேபோல் பஸ்ஸிற்காக காத்திருந்தாள். தினமும் கல்லூரி விட்டு வந்தவுடனே சாப்பிட்டு பழகியதால் அதே நினைவில்  பசிக்கவும், அந்த கடுப்பில் தன் அண்ணன் முதல்கொண்டு பஸ் டிரைவர் வரை அத்தனை பேரையும் மனதில் திட்டிக்கொண்டே நின்றிருந்தாள்.

அவளுடைய கெட்டநேரமோ என்னவோ இன்று அவள் ஊர்க்கு போகக் கூடிய டவுன் பஸ் கால் மணி நேரம் தாமதமாகத்தான் வந்தது. 

கன்னத்துக்கு கை குடுத்து ரோட்டை பார்த்தவாறே அமர்ந்திருந்தவள் பஸ்ஸை பார்த்ததும் மூச்சை இழுத்துவிட்டு ‘அப்பாடா…’ மனதில் நினைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

பஸ்டாப்பில் பஸ் வந்து நின்றதும் ஏறியவள், உட்கார்வதற்காக சீட் இருக்கிறதா? என பார்த்தவளின் விழிகளில் அவன் தென்பட்டான்.., அவனை பார்த்ததுமே ஷர்மியின்   முகமும், கண்களும் ஒருசேர ஒளிர்ந்தது.

பஸ்ஸில் அவ்வளவாக கூட்டம் இல்லாததால்  நிறைய சீட் காலியாகத்தான் இருந்தது.

அடுத்த நொடி அங்கு சென்றவள் அவன் அருகில் அமர்ந்திருந்த இளைஞனை பார்த்து “எழுந்து வேற சீட்டுக்கு போய் உட்காருங்க” என்றாள்.

தலையை குனிந்துக்கொண்டு போன் நோண்டிகொண்டிருந்த அந்த இளைஞன் தன் அருகில் பெண்ணின் குரல் கேட்கவும் நிமிர்ந்தவன் அவளை பார்த்ததும் “நா எதுக்கு எழுந்திருச்சு வேற சீட்டுக்கு போகனும்?” என்று கேட்டான்.

“யோவ் எந்திருச்சு போயானு சொன்னா போகாம கேள்வி கேட்டுகிட்டு இருக்க? இது என்ற புருசன் நா அவர் பக்கத்துல உட்காரனும். நீ வேற சீட் மாறி உட்காந்துக்கோ…” என்று திமிரான குரலில் பதிலளித்தாள்.

அவளின் திமிரான அதட்டலில் கோபம் கொண்டு ‘முடியாது…’ என்று சொல்லப்போனவன்.., அவள் புருசன்னு சொன்ன வார்த்தை நினைவு வரவும், ‘புருசன் பொண்டாட்டி சண்டை போல… அதா இந்த கத்து கத்துது’ தன் அருகில் அமர்ந்திருந்தவனை ஒரு முறை பாவமாக பார்த்தவாறே மனதில் நினைத்துக்கொண்டு எழுந்து பின்னாடி காலியாக இருந்த சீட்டில் சென்று அமர்ந்து போனை நோண்ட ஆரம்பித்தான்.

அவன் எழுந்ததும் ஷர்மி அந்த சீட்டில் அமர்ந்திருந்த தன் அத்தை மகன் ரகுநந்தனை உரசிக்கொண்டே அமர்ந்தாள்.

ரகுநந்தன்  காலையில் தன் அப்பத்தாவிடம் சண்டைபோட்டுக்கொண்டு சாப்பிடாமலே  அவனின்  பைக் ஷோரூம்க்கு வந்து அமர்ந்திருக்கும்போது  அவனின் அப்பா போன் செய்து சரக்கு எடுக்கப்போன அவர்களின் லாரி டிரைவர்  ஆக்சிடென்ட் பண்ணிட்டானு சொல்லவும், என்னமோ ஏதோவென்று பதறி அடித்துக்கொண்டு ஆக்சிடென்ட் ஆன இடத்திற்கு சென்றான். 

அவர்களின்  லாரியில் கர்நாடகாவுக்கு லோடு ஏத்திக்கொண்டு சென்றுக்கொண்டிருக்கும் போது வழியில் உள்ள ஊரில் ஆடு ஒன்று அவர்களின் லாரியில் அடிப்பட்டு இறந்து போகவும் பணம் வாங்கறதுக்காக அந்த ஊர்க்காரங்க லாரியை மடக்கிவச்சிட்டு பிரச்சனை பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.

 ஒருவழியாக அவர்களிடம் பேசி  அந்த ஆட்டின் விலையை விட இருமடங்கு அதிகமாக குடுத்து  பிரச்சனையை சரிபண்ணி லாரியை லோடு இறக்க அனுப்பி வைத்துவிட்டு,  திரும்ப காரில் வரும்போது பாதிவழியிலையே கார் ஆப் ஆகி நின்றுபோகவும் ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் காரை அங்கேயே நிறுத்திவிட்டு கம்பெனிக்கு போன் செய்து எடுத்துபோக சொல்லிட்டு ஊருக்கு பஸ்ஸில் வந்துக்கொண்டிருந்தான்.  

காலையில் இருந்து இப்பவரையிலும் சாப்பிடாமல் இருந்ததில், பஸ்ஸில் ஏறியதுமே  களைப்பில் கண்களை மூடி சாயிந்தவாறே அன்று நடந்ததை யோசித்தவாறே அமர்ந்திருந்தான்.

குழப்பத்தில் இருந்தவனின் செவிகளில் அவளின் ‘என்ற புருசன்னு’ சொன்ன வார்த்தை கேட்கவும் ‘இது அவளோட குரல் மாதிரி இருக்கே?’ என நினைத்து கண்ணை திறந்து பார்த்தான்.

அதற்குள்ளாகவே அந்த இளைஞன் எழுந்ததும் ஷர்மி அவனை உரசிக்கொண்டு அமர்ந்துக்கொண்டாள்., அவளை தன் அருகில் பாத்ததும் கோபத்தில் “ஏய்… ஆருடி உன்ற புருசன்? என்னோட கோபத்த கிளப்பாம மரியாதையா எழுந்திருச்சு போயிடு டி…” என்று   எரிந்து விழுந்தான்.

அவனின் கோபத்தை கண்டுக்கொள்ளாமல் “நீதான் மாமா”  என கண்ணடித்து கூலாக கூறினாள்.

அவளின் வார்த்தையில் கோபம் கரையை கடக்க “அடிச்சேனா பல்லு அத்தனையும் கொட்டிப் போயிடும்.. உங்க குடும்பத்து ஆளுங்களோட மூஞ்சிலையே முழிக்கக்கூடாதுனு விலகிப்போனா இங்கேயும் வந்து உசுர எடுக்கற. இதுல நா உன்ற புருசன்னு வேற கனவு கண்டுகிட்டு திரியரையா?” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான்.

அவன் வார்த்தையில் மனதில் அடிவாங்கினாலும் அதனை மறைத்துக்கொண்டு “உனக்கு என்ன அடிக்க எல்லா உரிமையும் இருக்கு மாமா… அதோட கனவு கண்டுட்டு திரியரதுக்கு நா ஒன்னும் சின்னபுள்ளை இல்ல மாமா… 21 வயசு ஆகிடுச்சு அத மறந்துடாத…,

என்னைக்கா இருந்தாலும் நீதான் என்ற புருசன்., நா வயசுக்கு வந்தப்ப ஊரையே கூட்டிவந்து பிடிவாதமா எனக்கு மாமன் சீர் செஞ்சிட்டுபோனியோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்… நீ மட்டும்தா  எனக்கு புருசனா வரனும், வருவ… அத நடத்தியும் காட்டுவேன் மாமா…” அவளின் குரலில் அத்தனை பிடிவாதம் தெரிந்தது. காதலை இப்படியும் சொல்லலாம் என நிருபித்தாள்.

அவளின் பேச்சில் ஒரு நிமிடம் ஆடித்தான் போய்விட்டான். ‘தன்னைவிட பத்து வயது சிறியவள் ஆனால், அவளின் பேச்சில் அத்தனை தெளிவு, தன்னால் முடியும்ங்ற நம்பிக்கை… இது ரெண்டும் போதுமே அவள் நினைத்ததை அடைய…’ அவனையறியாமலே மனதிற்குள் எண்ணம் வரவும் தன்மேலையே கோபம் கொண்டான்.

“அதுதான் டி நா பண்ண மிகப்பெரிய தப்பு…உன்ற மேல உள்ள ஆசையிலையோ, உங்க குடும்பத்தோட ஒட்டிக்கனும்னோ நா அன்னைக்கு சீர் செய்யல, நீங்க நிம்மதியா இருக்கறது புடிக்கலை அத கெடுக்கனும்னு நினச்சித்தான் ஊரக்கூட்டி பஞ்சாயத்து வச்சி முறை செஞ்சேன் புரியுதா?.., அத மனசுல வச்சிட்டு இனிமே இந்த மாதிரி புருசன்னு சொல்லிட்டு என்ற பின்னாடி திரிஞ்சியேனா மொகரைய பேத்துப்போடுவேன். ஒழுங்கு மரியாதையா பொட்டபுள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்கப்பாரு…” 

“என்னபத்தி தெரியாம பேசறியே மாமா…நா செய்யாதனு சொல்றததான் வீம்புக்குனே செய்வேன்… இப்பவும் சொல்றேன் நீதா என்ற புருசன் இத ஆரு சொன்னாலும் நா மாத்திக்கறதா இல்லை… சீக்கரமா ஏங்கழுத்துல தாலிகட்ட ரெடியா இரு மாமா…”

“நீ எவ்வளவு நம்பிக்கையா இருந்தாலும் நா சம்மதிக்காம இது நடக்காது டி’ மனதிற்குள் பதில் கூறிக்கொண்டான்.

அவனின் மனதை அறிந்தவள் போல் “என்ன மாமா நீ சம்மதிக்காம இது நடக்காதுனு நினைக்கறையா?” என கேட்டாள்.

அவள் தன்னுடைய மனதில் ஓடியதை சரியாக யூகித்து கேட்கவும் அதில் வியந்தான்.

அவனின் அருகில் நெருங்கி வந்தவள் அவனுக்கு மட்டும் கேட்குமாறு “உன்னோட சம்மதமே இல்லாம போனாலும் நம்ம கல்யாணம் நடக்கும் மாமா…” என்றாள்.

‘விழிகளில் எப்படி?’ என்ற வினாவுடன் அவளை பார்த்தான்.

அவனின் கண்களில் தெரிந்த கேள்வி புரிந்ததும் “சிம்பிள் மாமா… நீ எங்க வூட்ட பழிவாங்கறதுக்காக என்ன லவ் பண்றேனு சொல்லி ஏமாத்திட்ட… இப்போ என்ற வயித்துல உன்னோட குழந்தை வளருதுனு ஊரகூட்டி சொல்லுவேன்…அப்பறம் என்ன நடக்கும்னு நீயே யோசிச்சிக்கோ மாமா…” தோளை குளுக்கிக்கொண்டு  சர்வ சாதாரணமாக கூறினாள்.

அவளின் வார்த்தையில் கோபம் கொண்டு அவளை அடிக்க கையை ஓங்கிவிட்டான்., பின்தான் தான் இருக்கிமிடம் உணர்ந்து கையை கீழே போட்டவன் “ச்சே… என்ன பொண்ணுடி நீ… எல்லாம் உன்ன வளர்த்தவங்கள சொல்லனும்” கோபத்தில் அவளை மட்டுமில்லாமல் அவளுடைய குடும்பத்தையும் சேர்த்து திட்டினான்.

“உங்க அம்மாவ வளர்த்தவங்க தான் என்னையும் வளர்த்தாங்க மாமா சந்தேகமா இருந்தா அத்தைகிட்டையே போய் கேட்டுக்கோ மாமா…”

அதானே மத்தவங்களோட வாழ்க்கைய கெடுக்கறதுனா உங்க குடும்பத்து ஆட்களுக்கு அல்வா சாப்டற மாதிரியாச்சே…உன்ற அப்பத்தா எங்க தாத்தாவோட மானத்த வாங்கிட்டு ஓடிப்போனாங்க, உன்ற அத்தை என்ற அப்பாவோட வாழ்க்கைய நாசமாக்கிட்டாங்க, இப்போ நீ என்ற வாழ்க்கைய நாசமாக்க வரேன்ங்ற…” 

“இவ்வளவு நேரம் அமைதியாக பேசிக்கொண்டிருந்தவள் அவன் தன்னுடைய குடும்பத்தை சொன்னதும் கோபம் வர மரியாதையை கைவிட்டுவிட்டு ஏகவசனத்தில் அவனை திட்ட ஆரம்பித்தாள்.

 “அத்தை பையன்னு கூட பாக்கமாட்டேன்… என்ற குடும்பத்த பத்தி தப்பா பேசுனினா உன்ன கொன்றுவேன்டா… உன்னோட அப்பாவால எங்கவூட்ல ஒரு உயிர் போயிடுச்சு இன்னொரு உயிர் போன உயிர நினைச்சே தெனம் தெனம் செத்துகிட்டு இருக்குடா… ஆனா, நீ நாங்க உங்க குடும்பத்த நாசமாக்குனோம்னு சொல்லிட்டு இருக்க… உன்ற குடும்பத்தாலதான் அதுலையும் குறிப்பா உன்ற அப்பாவால தான் என்ற குடும்பம் இன்னமும் அழுதுகிட்டு இருக்கு…”

இவ்வளவு நேரம் கோபமே படாமல் அவனுக்காக உருகிகொண்டிருந்தவளா? இது என நினைக்க வைத்தாள்., அவளின் முகம் கோபத்தில் சிவந்துக்கிடந்தது.

அவளின் கோபத்தை பார்த்து சந்தோசபட்டவன் “அப்பறம் எதுக்குடி என்ன கல்யாணம் பண்ணிக்கோனும்னு அடம்புடிக்கற? உங்கவூட்ல பாக்கற மாப்பிள்ளைய கட்டிக்கிட்டு போய் தொலைய வேண்டியத்தானே?” 

“என்ற அப்பாத்தாவோட சாவுக்கும், இன்னைக்கு என்ற தாத்தா நடைப்பிணமா வாழ்றதுக்கும், என்ற அத்தைய கொடுமை பண்ற உன்ற அப்பாவையும், அந்த கிழவியையும் பழிவாங்க வேண்டாமா…? அதுக்கு நா உன்ற வூட்டுக்கு மருமகளா வந்தே தீருவேன் மாமா…”

“ஆரு என்ற அப்பாவும், அப்பத்தாவும் உன்ற அத்தைய கொடுமை படுத்தறாங்க அத நீ பாத்த?”

“அத வேற நா பாக்கோனுமாக்கும் அதா ஊரே பேசுதே…”

“என்ற அத்தைக்கு கேக்க ஆள் இல்லைனுதானே இத்தனை ஆட்டம் ஆடுது அந்தக்கிழவி., நா உன்ற வூட்டுக்கு மருமகளா வந்ததும் உன்ற அப்பாவுக்கும், அந்த கிழவிக்கும் மருமக கொடுமைன்னா என்னனு காட்றேன்டா…”

“அதையும் பாத்துடலாம் டி…”

“பாக்கத்தானே போற மாமா.. இந்த அலமேலு மங்கை ஒரு முடிவெடுத்துட்டா அதுல ஜெயிக்க எந்த எல்லைக்கும் போவா மாமா…”

அவளின் தீவிரத்தில் உள்ளுக்குள் வியந்தாலும் வெளியே உதடுகள் வளைய நக்கலாக சிரித்தான்.

உனக்கு நானும் சளைத்தவள் அல்லடா என்பதைபோல் அவளும் அவனை பாத்து கேலி இழையோட புன்னகைத்தாள்.

இருவரும் மெதுவாக ஒருவருக்கு ஒருவர் சண்டைபோட்டுக் கொண்டதால் பஸ்ஸில் இருந்த யாருக்கும் கேட்கவில்லை. இருவரும் எதோ தீவிரமாக பேசிக்கொண்டிருப்பதைப் போலத்தான் இருந்தது., அதனாலேயே மற்றவர்களுக்கு அவர்களின் சண்டை தெரியவில்லை.

இருவரும் பிடிவாத குணத்தில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல… ஒரே குணம் கொண்ட இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தால்??? அவர்களின் வாழ்க்கை என்னவாகும்???

Advertisement