Advertisement

அத்தியாயம்.22

சிறு வயதிலிருந்தே வெள்ளனவே எழுந்து வயலுக்குச் சென்று வயல் வேலையை பார்த்து பழகிய ராமகிருஷ்ணன் அந்த பழக்கத்தை இன்று வரை கைவிடவே இல்லை.

தன் தாத்தா சிறுவயதில் சொல்லிக் குடுத்த பாடம் எவ்வளவுதான் உயரத்திற்கு சென்றாலும் தனது நிலையை மறக்காமல் இருக்க வேண்டும். அன்று தாத்தா சொல்லிக் குடுத்ததை இன்று வரை கடைபிடிப்பதாலையே ராமகிருஷ்ணன் உயர்ந்து நிற்கிறார்.

என்னிலையிலும் தன்னிலை மறவாமல் வாழும் மனிதனே உயர்ந்து நிற்கிறான். அதற்கு ராமும் ஓர் உதாரணம்.

வயல் வேலையை முடித்து விட்டு உடலில் வேர்வை துளிகள் முத்துக்களாக ஜொலிக்க வீட்டிற்குள் நுழைந்த ராம் சமையல் அறையிலிருந்து வந்த குரல்களை கேட்டதும் நம்ப முடியாமல் அதிர்ச்சியுடனே உள்ளே வந்தவர் குளிக்க கூட செல்லாமல் நேராக சமயலறை வாயிலிற்கு சென்று அங்கு நடப்பதை பார்த்தார்.

அந்த காட்சி அவரின் விழிகளில் நுழைந்து இதயத்தை குளிர்வித்தது என்றால் அது மிகையாகாது.

தன்னவளுடன் சிரித்து பேசிக்கொண்டே மகன் சமைத்துக் கொண்டிருந்தான். மகன் சமைக்கும் அழகை அருகில் நின்று பேசியவாறே பார்த்துக் கொண்டிருந்தார் லலிதா. 

ராமிற்கோ அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம். தன் மனைவியை பார்த்தாலே எரிந்து விழும் மகன் இன்று அவளுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். 

லலிதா வாயிலில் ஆள் வந்து நிற்கும் அரவம் கேட்டதும் மகனுடன் பேசி கொண்டிருந்தவள் திரும்பி வாயிலை பார்த்தாள்.

அங்கு நின்றவரைப் பார்த்ததும் முகத்தில் இவ்வளவு நேரம் இருந்த சிரிப்பு இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்துக் கொண்டது.

மனைவியின் முகத்தில் இருந்த சிரிப்பு தன்னைப் பார்த்ததும் மறைந்ததை ஒருவித வலியுடன் பார்த்தார் ராம்.

அடுப்பில் இருந்த கடாயில் கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தவன் திரும்பி பார்க்காமலே “வாங்கப்பா.., வந்து நா ஆக்குன கறிய சாப்ட்டு பாத்துட்டு டேஸ்ட் எப்படி இருக்குனு சொல்லுங்க?” என பேசிக்கொண்டே தனது வேலையை செய்துக் கொண்டிருந்தான்.

திரும்ப போனவர் மகன் அழைக்கவும் அங்கேயே நின்று விட்டார்.

சில நிமிடங்கள் ஆகியும் தந்தை அருகில் வராமல் இருக்கவும் திரும்பியவன் அப்பா இன்னும் வாயிலிலே நின்றிருப்பதை பார்த்ததும் “ஏனுங்ப்பா அங்கேயே நின்னுட்டிங்க?” என்றவாறே செய்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவரின் அருகில் சென்று கையை பிடித்து உள்ளே இழுத்து வந்தவன் தானே ஒரு கறி துண்டை எடுத்து ஊட்டி விட்டான்.

மகன் ஊட்டி விட்டதும் “டேய் கண்ணா நா இன்னும் குளிக்கலடா., விடுடா குளிச்சிட்டு வந்து சாப்டறேன்” என்றார்.

“ஏனுங்ப்பா ஆடு மாடெல்லாம் தெனமும் குளிச்சிட்டா சாப்பிடுது. ஒரு நாள்தானே பேசாம சாப்புடுங்கப்பா.”

“ஆடு மாடு எல்லாம் தெனமும் பல் வெளக்குதானு தானே கண்ணா சொல்லுவாங்க…” சிரித்துக்கொண்டே கேட்டார்.

“மத்தவங்க சொன்னதா நாமலும் அப்படியே சொன்னா நல்லாவாப்பா இருக்கும்? அதான் நா எனக்கு தகுந்த மாதிரி மாத்திக்கிட்டேன்ப்பா…” அவனும் சிரித்துக்கொண்டே கூறினான்.

 ஷர்மி காலைலயே சித்தி தைத்து குடுத்துவிட்ட அத்தையுடைய ப்ளவுஸையும் சேலையையும் எடுத்துக்கொண்டு அத்தை வீட்டுக்கு வந்தாள். 

இந்துவுக்கு டைலரிங் தெரியும் என்பதால் நேற்று இரவு வீட்டிற்கு கிளம்பும்போதே லலிதாவுடைய புதிய சேலை இரண்டை எடுத்துக்கொண்டு சென்றிருந்தார். விடிவதற்குள்ளாகவே இரண்டு சேலைகளுக்கும் ப்ளவுஸ் தைத்து சேலையையும் ஓரம் அடித்து முடித்து மகளிடம் குடுத்து அனுப்பி வைத்து விட்டார். 

அதை குடுப்பதற்காகவே அத்தை வீட்டுக்கு வந்தவள் வாசலுக்கு வரும்போதே கறி வாசம் வரவும், வாசம் பிடித்துக்கொண்டே சமையலறைக்கு வந்தவள் அங்கு இருந்த யாரையும் கவனிக்காமல் ராமிற்கும், ரகுவிற்கும் இடையில் இருந்த சிறு இடைவெளியில் புகுந்து கறியிலிருந்து வந்த வாசத்தை இழுத்து சுவாசித்தவாறே “ஐ நாட்டுக்கோழி வறுவல்…” என்றாள்.

அப்பாவும் மகனும் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் அவள் நுழையவும் முதலில் இருவருமே அதிர்ந்து விட்டனர். பின் தான் வந்தது ஷர்மி என்பது பிரிந்தது.

 ராம் புன்னகைத்தார் என்றால் அவரின் மகனோ அவளை முறைத்தான்.

ஷர்மி அதை பற்றி சிறிதும் கவலை படாமல் தான் கொண்டு வந்திருந்த துணிப்பையை ரகுவின் கையில் திணித்து விட்டு ஒரு தட்டை எடுத்து கறியை போட்டுக்கொண்டு சமயலறை திட்டில் ஏறி அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தவாறே “லச்சுமா கறி ஆக்குனா வர டேஸ்ட் இதுல வரலை மாமியாரே. கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு.” சாப்பிட்டுக் கொண்டே தன் அத்தையிடம் கமெண்ட் குடுத்தாள்.

லலிதாவுக்கும் அண்ணன் மகளின் செயலில் சிரிப்புதான் வந்தது. அதோடு அவள் சொன்னதை கேட்டு மகன் கோபத்துடன் நிற்பதைப் பார்த்ததும் அண்ணன் மகளின் மேல் பரிதாபமும் வந்தது. அவர்தான் மகனின் கோபம் அறிந்தவராயிற்றே…

“ஏனுங்த்தை கோழி வறுவல் மட்டும்தானா இந்த ஆடு, மீனு, இதெல்லாம் ஆக்கலையா?” சாப்பிட்டுக்கொண்டே கேட்டாள்.

“இல்லை கண்ணு…”

“உனக்கு இன்னும் நல்லா கறி ஆக்கத் தெரியலைத்த. நீ நாளைல இருந்து லச்சுமா, இந்துமா ரெண்டு பேர்த்துக்கிட்டையும் டியூசனுக்கு போ., என்ன சரியா? நா வேனா ப்ரியா உனக்கு சொல்லித்தர லச்சுமாகிட்ட ரெக்கமென்ட் பண்றேன்.”

“அம்மா உங்க அண்ணன் மகளை வாய மூட சொல்லுங்க. இல்லைனா ஏங்கிட்ட அடிதான் வாங்குவா…” கோபத்தில் கத்தினான்.

“இம்புட்டு வளர்ந்துருக்கியே உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா மாமா? வாய மூடிகிட்டா எப்படி சாப்ட முடியும்?” கேட்டு அவனின் கோபத்தை இன்னும் அதிக படுத்தினாள்.

“அப்பா…” ரகு கோபத்தில் கத்தவும்,

“விடு கண்ணா.. ஷர்மி சின்ன புள்ளைதானே…” மகனை சமாதான படுத்தியவர் மருமகளிடம் “கண்ணு உன்ற மாமன்தான் இன்னைக்கு கறி ஆக்குனான்” என்றார்.

“பார்டா… மாமா உனக்கு சமைக்க எல்லாம் தெரியுமா? ஆனா எனக்குத் தெரியாது., நாங்கூட பயந்துட்டே இருந்தேன் எங்க கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் நாந்தா சமைக்கனுமோனு இப்போ கவலை இல்லை., அதான் எனக்கு சமைச்சிப்போட நீ இருக்கியே., ஆனாலும் இன்னும் கொஞ்சம் டேஸ்ட்டா சமைக்க கத்துக்கோ மாமா., எனக்கு சாப்பாடு ருசியா இருந்தாத்தான் புடிக்கும்…” அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே போகவும்,

“ஏ ருசியா இல்லைனா சாப்டாம இருந்துக்குவியா குட்டிபிசாசு?”  கோபம் கலந்த எரிச்சலில் கேட்டான்.

“நீ என்ன லூசா மாமா?”

“ஏய்…” கோபத்தில் ரகு கத்தி விட்டான்.

“இப்போ எதுக்கு கத்தற மாமா? ஆராவது சாப்டாம பட்னியா கிடப்பாங்ளா?. அதுவும் இந்த ஷர்மி வாழரதே சாப்டதான். அதனால ருசியா ஆக்க கத்துக்கோ மாமா. அப்போதான் போற இடத்துல நல்லபேர் வாங்க முடியும்.”

“ஏய் குட்டிபிசாசு இந்த டைலாக்க நா சொல்லனும்டி… அதுவுமில்லாம நா இன்னும் உன்ன கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லவே இல்லையே குட்டிப்பிசாசு?. அப்படியே கல்யாணம் பண்ணாலும் அமைதியா? அடக்கமான இருக்கற பொண்ணாதான் பாத்து கட்டிக்குவேன்.”அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

 உச்சுக்கொட்டியவள் “ஐயோ பாவம் மாமா நீ.” பரிதாப பட்டவாறே கூறினாள்.

“நீயெல்லாம் பரிதாப படற நிலை எனக்கு ஒரு காலத்துலையும் வராதுடி குட்டிபிசாசு.”

“அப்படியா மாமா?…” நக்கலாக கேட்டவள் “ஆனா ஒண்ணு மாமா. உனக்கு இந்த ஜென்மத்துல அப்படி குடுப்பனை கிடைக்காது மாமா. நீ இந்த குட்டிப்பிசாச தான் கல்யாணம் பண்ணிக்கனும்ங்கறது தான் விதி.” 

“விதியக்கூட மதியால் வெல்லலாம் குட்டிப்பிசாசு.”

“அதுக்கு நா விட்டாத்தானே மாமா., உன்ன கடத்திட்டு போயாவது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். இந்த ஷர்மிய ஆருனு நினைச்ச மாமா? எனக்கு ஒண்ணு வேணும்னு நினைச்சேனா அத அடைய எந்த எல்லைக்கும் போவேன். அத நீயே நினைச்சாலும் மாத்த முடியாது. மாத்தவும் நா விடமாட்டேன்.” என்றவளின் குரலில் அத்தனை அழுத்தம் இருந்தது.

அவளின் பேச்சை கேட்டு லலிதாவும், ராமும் சிரித்து விட்டனர்.

 ரகுநந்தன் எப்பவும் போல அவளின் பதிலை கேட்டு வியந்துதான் போனான்., ஆனாலும் அதனை வெளியேக் காட்டாமல் மறைத்துக்கொண்டு “இந்த வூர்ல என்ன கடத்த ஆரால முடியும்டி குட்டிபிசாசு?” கேட்டான்.

“என்ன மாமா இப்படி கேட்டுபோட்ட?., என்ற வூட்லையே நா சொன்னா கேள்வியே கேக்காம செய்யறதுக்கு எத்தனை பேர் இருக்காங்கனு தெரியுமா? அவங்களும் பத்தலைனா என்ற அத்தை புருசன் மிஸ்டர் ராமகிருஷ்ணன் இருக்கார் அவர் பாத்துப்பார். என்ன மாம்ஸ் நா சொல்றது சரிதானே…?” ராமையும் உள்ளே இழுத்து விட்டாள்.

“சரிதான்டா கண்ணு., நா எப்பவும் என்ற மருமகளுக்குதான் சப்போர்ட்.” ராமும் ஷர்மிக்கு ஆதரவாக பேச,

“என்னவிட இவதான் உங்களுக்கு முக்கியமாப்பா?” 

“அதிலென்ன சந்தேகம் கண்ணா.. என்னதா இருந்தாலும் மருமகளை பகைச்சிக்க முடியுமா? நாளைக்கு கடைசி காலத்துல சோறு போடப் போறது என்ற மருமகத்தானே கண்ணா?” ராம் கேட்கவும்,

“நேத்து அப்பத்தாவ பேசியே மயக்குனா…, இன்னைக்கு உங்களையும் அவ பக்கம் இழுக்க பாக்கறா நம்பாதிங்கப்பா…”அவன் கூறிக் கொண்டிருக்கும்போதே 

 ஷர்மி, “சரி சரி தட்டுல கறி தீர்ந்து போச்சு., இன்னும் கொஞ்சம் கறி போடு மாமா.” அங்கு எதுவும் நடக்காததைப் போல் தட்டை அவனிடம் நீட்டினாள்.

Advertisement