Advertisement

அவளின் குரலில் தெளிந்தவர் “உன்ற அம்மா முன்னாடியே என்ற வூட்டுக்கு வராம போயிட்டாளேனு நினைச்சிட்டு இருக்கேன்டா ராசாத்தி., வந்துருந்தா என்ற மகனோட வாழ்க்கையும் சந்தோசமா இருந்துருக்கும்ல…?”

“என்ற அம்மா செஞ்சதே நீ அன்னைக்கே செஞ்சிருந்துருக்கனும் அம்மு., நீ சரியில்லை., நீயெல்லாம் மாமியார்னு சொல்லிக்காத., நீ மட்டும் மாமியார் கொடுமைனா என்னனு காட்டிருந்தா எல்லாம் சரியா இருந்துருக்கும் அம்மு.” என்றவள் “சீக்கரமா உன்ற பேரனுக்கு என்ன கட்டி வை அம்மு., நா உன்ற மருமகளை ஒரு வழியாக்கிடறேன்…”

“நெசமாவா கண்ணு…?”

“ஆமா அம்மு., என்ற மாமனாரோட அத்தைய சேர்த்து வைக்க வேண்டியது என்ற பொறுப்பு., நா சொல்றதுக்கு மட்டும் நீ தலையாட்டு போதும் மத்ததை நா பாத்துக்கறேன்.”

அவளின் கன்னத்தை வழித்து நெற்றி முறித்தவர் “இந்த வார்த்தைக்காகத்தான் இம்புட்டு நாளா காத்துட்டு இருந்தேன் கண்ணு., நீ சொன்னத கேட்டதும் பாதி நம்பிக்கை வந்துடுச்சு., நீ உருவத்துல மட்டும் என்ற தோழி அலமேலு இல்ல…, குணம், செய்கை எல்லாத்துலையும் அவளைதான் உரிச்சி வச்சிட்டு பிறந்துருக்க கண்ணு.”

“போதும் அம்மு, என்ன ரொம்ப புகழாத எனக்கு வெக்கம் வெக்கமா வருதுல” வெட்கப் படுவதை போல நடித்தாள்.

அவளின் செயலில் சிரித்துவிட்டார்.

வீட்டிற்கு வந்து அம்மாவை இறக்கிவிட்டு தன் தந்தையை தேடி சென்ற ரகு நேராக சென்ற இடம் அவர்கள் தோட்டத்து வீடுதான்., தந்தையை பற்றி அனைத்தையும் அறிந்தவனல்லவா… அவரின் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம் தெரிந்தவனாயிற்றே. 

காரை தோட்டத்தை நோக்கி செலுத்தியவன் அங்குச் சென்றதும் வீட்டின் வாசலில் நின்றிருந்த பைக்கை பார்த்ததும்தான் சிறிது நிம்மதி வந்தது.

 காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றவன் வீடு இருட்டாக இருக்கவும் லைட்டை போட்டு விட்டு தந்தையின் அறைக்குச் சென்று அறையின் லைட்டை போட்டான்.

கட்டிலில் விழிகளின் மேல் கையை வைத்து மறைத்துக்கொண்டு சோர்ந்துப்போய் படுத்திருந்தவரின் அருகில் சென்றவன் தானும் கட்டிலில் அவரின் அருகிலே படுத்துக்கொண்டான்.

அது இரண்டால் படுக்கக்கூடிய பெரிய கயிற்று கட்டில் என்பதால் இருவருக்கும் போதுமானதாக இருந்தது.

மகன் வந்து தன் அருகில் படுத்ததை உணர்ந்தாலும் அவனிடம் பேச தோன்றாமல் படுத்திருந்தார் ராம். மகனின் வரவு ராமின் மனதில் இத்தனை நேரம் இருந்த வெறுமை விலகியது என்பது முற்றிலும் உண்மை.

ஒருவன் துன்பத்தில் இருக்கும்போது தோள் சாய ஒரு உறவு இருந்துவிட்டால் அவன் பாக்கியசாலியே…, அந்த வகையில் ராமகிருஷ்ணனும் பாக்கியசாலிதான். மகன் எனும் உருவத்தில் ராமின் பலமாக இருக்கிறான்.

சிறிது நேரம் அமைதியாக படுத்திருந்தவன் பின் பேச ஆரம்பித்தான்.

“ஏம்ப்பா உங்களுக்கு அம்மா மேல கோபமே வரல?”

“எதுக்கு கோபம் வரனும் கண்ணா? உயிரா நேசிக்கறவங்க மேல கோபம் வராது கண்ணா., அப்படி கோபம் வந்தா அது உண்மையான நேசமா இருக்காது.”

“ஆனா உங்க காதலுக்கு அவங்ககிட்ட எந்த பிரதிபலிப்பும் இல்லையேப்பா…”

“காதல் இல்லாமலா பாசத்த கொட்டி வளர்த்த பெத்தவங்களை விட்டுட்டு ஏங்கைய புடிச்சிட்டு வந்தா? ஈரைந்து மாதம் உன்ன சுமந்து வலிதாங்கி பெற்று என்னிடம் தந்திருக்கிறாளே., நித்தம் நித்தம் குற்ற உணர்ச்சியில் செத்துக்கொண்டிருந்தாலும் எனக்காக உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாளே., இதுவும் ஒரு வகை காதல் தான் கண்ணா.”

“இத்தனை காதலை வச்சிட்டு அப்பறம் ஏன்ப்பா ரெண்டு பேரும் பிரிஞ்சி வாழறிங்க?” 

“நீ செஞ்ச ஒரு தவறால என்ற உயிர் போயிடுதுனு வச்சிக்கோயேன் அப்போ நீ என்ன பண்ணுவ கண்ணா?”

ராம் கூறியதைக் கேட்டு படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்துவிட்டான். “ஒரு பேச்சுக்கு கூட இப்படி சொல்லாதிங்ப்பா., இந்த மாதிரிலாம் பேசுனிங்ன்னா நா எழுந்து போயிடுவேன்., அப்பறம் உங்ககிட்ட பேசவே மாட்டேன்.”

மகனின் சிறுபிள்ளைத் தனமான கோபம் அவருக்கு புன்னகையைத்தான் வரவழைத்தது. அவரும் எழுந்து அமர்ந்து மகனின் தோளில் கைபோட்டவாறே,

 “நெருப்புனு சொன்னா வாய் சுட்டுடாது கண்ணா., அதுவுமில்லாம என்ற மகனோட வாரிச தூக்கி கொஞ்சனும்ங்கற ஆசை மலையளவு நெஞ்சுக்குள்ள கிடக்குது., அதனால அவ்வளவு சீக்கரம் சாகனும்ங்ற ஆசையெல்லாம் இப்போதைக்கு எனக்கு இல்லை., அதலாம் இருக்கட்டும் இப்போ நா கேட்டதுக்கு பதில் சொல்லு கண்ணா?.”

“பதில்தானே வேணும் கேட்டுக்கோங்கப்பா., என்னால நீங்க சாகற நிலைமை வந்தா அதுதான் இந்த உலகத்துலையே எனக்கு மிகப்பெரிய தண்டணை., அதுக்கு நா என்னையே அழிச்சிக்குவேன்.”

“இதையே உன்ற அம்மாவும் நினைக்கலாம்தானே கண்ணா? அவளுக்குள்ளும் தன் அம்மாவை கொன்ற வலி இருக்கும்ல., அத மனசுல சுமந்துட்டு இருக்கறவளுக்கு வாழ்நாள் கூட நரகம்தானே கண்ணா?.,

இந்த உலகத்துலையே மிக கொடுமையான விசயம் எது தெரியுமா கண்ணா? நாம நேசிச்சவங்களை காலனுக்கு பலி குடுத்துட்டு அவங்க நினைவுகளை சுமந்துட்டு வாழ்வது., இது உனக்கு மட்டுமில்லை இந்த உலகத்து இருக்கற எல்லா  மனுசனுக்கும் பொருந்தும் கண்ணா.”

“சாரிப்பா…, நா அம்மாவ புரிஞ்சிக்க கூட முயற்சி பண்ணவே இல்லை., விவரம் தெரியாத வயதில் எல்லாரோட அம்மா, அப்பா மாதிரி நீங்க ரெண்டு பேரும் இல்லைங்றது புரிஞ்சாலும் அதுக்கான காரணம் பின்னாடி வந்த நாட்கள்ல தெரிஞ்சதும் அவங்க மேல வெறுப்புதான் அதிகமாச்சு., என்னையும், உங்களையும் விட அவங்க குடும்பம் மட்டும்தா அவங்களுக்கு முக்கியமா தெரியறாங்கற கோபம் கண்ண மறச்சிடுச்சுப்பா., நீங்க ஒவ்வொரு முறை அவங்களுக்காக பேசும்போதும் அவங்க மேல ஆத்திரம்தான் வரும்., இப்போ நினைக்கும்போது நா எவ்வளவு பெரிய முட்டாளா இருந்துருக்கேன்லப்பா…” என்றவனின் கண்கள் கலங்கிவிட்டது.

மகனின் தோளை தட்டிக்குடுத்தவர் அமைதியாக அமர்ந்திருந்தார். மனதில் மகன் தன்னவளை புரிந்துக்கொண்டான் என்ற நிம்மதி எழுந்தது.

அப்போது ரகுவின் போன் அடிக்கவும் கண்களை துடைத்துக்கொண்டு அதை எடுத்து பார்த்தவன் அதில் அப்பத்தாவின் நம்பரை பார்த்ததும் “அப்பா அப்பத்தா போன் பண்றாங்க” என்றான்.

“ம்ம்… போலாம் கண்ணா…” என்றவரின் குரலில் சோகம் இழையோடியது.

அவர் எதனால் வருத்தபடுகிறார். என்பதை புரிந்தவன் ‘அம்மா வீட்டிலிருப்பதை நேரில் சென்று பார்த்தால் சந்தோசப்படுவார்’ என நினைத்து அவரிடம் லலிதா வீட்டிலிருப்பதை சொல்லாமல் விட்டுவிட்டான்.

பின் இருவரும் தங்களது வண்டியில் வீட்டிற்கு கிளம்பினர்.

வீட்டிற்கு வந்த ராம் வாசலில் நின்றிருந்த காரை பார்த்ததும் குழப்பத்துடன் வாசலிலே நின்றுவிட்டார்.

அவரின் பின்னால் வந்து நின்றவன் “ஏம்ப்பா நின்னுட்டிங்க? உள்ள வாங்க…” என்றவாறே அவருக்கு முன்னால் செல்ல ஆரம்பித்தான்.

மகனுக்கு தெரிந்திருக்கிறது என்பதை உணர்ந்தவர் பின் எதுவும் கேட்காமல் மகனின் பின்னால் வீட்டிற்குள் நுழைந்தார்.

ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தவர்களை பார்த்ததுமே புரிந்துவிட்டது. தன்னவள் தன்னை விட்டு செல்லவில்லை என்பது.

அவர்களை பார்த்ததுமே விழிகள் மனைவியைதான் தேடியது. தன்னவள் பார்வையில் பட்டதும் என்ன மாதிரி உணர்கிறார் என்றே தெரியவில்லை. முகத்தில் எந்த மாற்றமும் இல்லை.

அவருக்கு முன்னால் சென்றவன் தன் தாயின் தோற்றத்தை பார்த்து வியந்துப்போய் திரும்பி தந்தையைதான் பார்த்தான். ஆனால் அவன் காட்டிய உணர்வுக்கூட அவரின் முகத்தில் இல்லாமல் இருக்கவும், தந்தையின் மனநிலை என்னவென்று தெரியாமல் குழம்பி நின்றான்.

ராம் மனைவியின் முன்பிருந்த தோற்றத்தை பார்த்திருந்தால்கூட சந்தோசம் தோன்றிருக்குமோ என்னவோ? ஆனால், இந்த புதிய தோற்றம் அவள் மற்றவர்களுக்காக நடிக்கிறாள் என்றுதான் ராமிற்கு தோன்றியது. தன் வீட்டிற்கு முதல் முறையாக வந்திருந்த மனைவியின் உறவுகளை வரவேற்றுவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார்.

அறைக்குள் நுழைந்தவர்க்கோ மனது வலித்தது. மனைவி இன்று அணிந்திருந்த புடவை அவளுக்காக அவர் ஆசைபட்டு வாங்கிய புடவைதான். ஆனால் அதை தனக்காக உடுத்தாமல் மற்றவர்களுக்காக மனைவி உடுத்திருப்பது ஏனோ மனதை பிசைந்தது. 

லஷ்மிதான் “ஏன்டி உன்ற புருசன சாப்பிட கூப்டாம மரம் மாதிரி நின்னுட்டு இருக்க? போ போய் சாப்ட கூட்டிவா…” என லலிதாவை அனுப்பி வைத்தார்.

கணவனின் அறை வாயிலுக்கு வந்தவள் உள்ளே நுழைய ஏதோ ஒன்று தடுத்தது. புது வீடு கட்டி இங்கு வந்த பிறகு கணவனின் அறைக்குள் செல்லப் பிடிக்காமல் ஸ்டோர் ரூமிற்காக இருந்த சிறிய அறையை தனக்கென்று பயன்படுத்திக் கொண்ட பிறகு கணவனின் அறையை சுத்தம் செய்ய மட்டுமே உள்ளே நுழைவாள். அதுவும் கணவன் அவ்வறையில் இல்லை என்றால் மட்டுமே…, அப்படி இருக்க இப்போது எப்படி உள்ளே சென்று கணவனை அழைப்பது? என்ற தயக்கத்தில் வெளியிலே நின்று விட்டாள்.

அவள் வெளியவே நிற்பதை கண்டதும் லஷ்மிக்கு கோபம்தான் வந்தது. “லலிதா இன்னும் எம்புட்டு நேரம்தா அங்கேயே நிப்ப?” லஷ்மி கடிந்து கொள்ளவும், 

வேறு வழியில்லாமல் ‘கணவன் தன்னை திட்டபோகிறார்’ என நினைத்து சிறிது பயத்துடனேதான் உள்ளே சென்றாள்.

அறையில் ராமை காணாமல் குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்கவும் அங்கேயே அவர் வரும் வரை நின்றிருந்தாள்.

குளித்துவிட்டு வெளியே வந்தவர் தன் அறையில் தன்னவளை பார்த்தாலும் அவளைக் கண்டுக்கொள்ளாமல் கடந்து சென்று லுங்கி கட்ட ஆரம்பித்தார்.

‘ஏதாவது திட்டப் போகிறார்’ என நினைத்து பயத்துடன் நின்றவள் கணவன் திட்டாமல் இருக்கவும் சிறிது நம்பிக்கை வர அவரிடம் பேச முயன்றாள்.

அவள் பேச ஆரம்பிப்பதற்குள்ளாகவே ராம் லுங்கி அணிந்துக்கொண்டு வெளியே செல்ல ஆரம்பிக்கவும்,

கணவன் தன்னை ஒதுக்குகிறான் என்பது புரிந்ததும் மனதில் வலி தோன்றி கண்கள் கலங்கியது. 

அவள் கணவனை ஒதுக்கும்போது தோன்றாத வலி அவன் அவளை ஒதுக்குகிறான் என்றதும் வலி தோன்றுவதுதான் விசித்திரமே… 

கண்ணீரை உள் இழுத்துக்கொண்டவள் வெளியே செல்லப்போன கணவனை பார்த்து “மாமா என்றகிட்ட பேசக்கூட உங்களுக்கு புடிக்கலையா…?” கேட்டு விட்டாள்.

அவளின் வலி மிகுந்த குரல் ராமை ஏதோ செய்ய வெளியே செல்ல போனவர் திரும்ப அவளின் முன் வந்து நின்று “இப்போதா என்றகிட்ட பேசனும்னு உனக்கு தோனுச்சா லதாம்மா??”

“மாமா…” அவரின் வார்த்தையில் அதிர்ந்துவிட்டாள்.

“இப்போ எதுக்கு இந்த நடிப்பு லதாம்மா?., நீ நடிக்கறது மத்தவங்களுக்கு வேணும்னா சந்தோசத்தை தரலாம் லதாம்மா., எனக்கு அது வலியத்தான் தரும்.”

கணவனின் நடிப்பென்ற சொல் அவளை காயப்படுத்தியது. கணவனை ஒரு பார்வை பார்த்தவள் பின் அங்கிருந்து விலகிச்சென்றாள்.

தன்னவளின் விழிகளில் தெரிந்த வலி அவரையும் காயப்படுத்தியது.

சில நொடிகள் நின்றவர் மற்றவர்கள் தனக்காக காத்திருப்பார்கள் என்ற ஞாபகம் வந்ததும் வெளியே வந்து அவர்களுடன் சாப்பிட அமர்ந்தார்.

சாப்பிட்டு முடிக்கும் வரையிலும் ராம் மனைவியை நிமிர்ந்துக்கூட பார்க்கவில்லை. அவள் பரிமாற வந்ததைக்கூட தடுத்துவிட்டு தனக்கு வேண்டியதை தானே எடுத்து போட்டு சாப்பிட ஆரம்பித்தார்.

ராம் அவ்வாறு செய்யவும் லலிதாவின் விழிகள் கலங்கி விட்டது. இருவரையும் பார்த்த அங்கிருந்த அனைவருக்குமே ஒருமாதிரி ஆகிவிட்டது. இங்கு ஆரை குறை சொல்வது இருவரும் எதோ ஒரு விதத்தில் தண்டனை அனுபவித்துக் கொண்டுதானே இருக்கின்றனர்.

Advertisement