Advertisement

அத்தியாயம்.21

மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துக் கொண்டிந்த ரகுநந்தனின் நினைவெல்லாம் தன் தந்தையிடம் தான் இருந்தது. கார் ஓட்டியவாறே அப்பாவின் போனுக்கு அழைத்துக்கொண்டே வந்தான். மற்றவர்களெல்லாம் இரு குடும்பமும் இணைந்த மகிழ்ச்சியில் வந்து கொண்டிருந்தனர். 

வீட்டு வாசலில் காரை கொண்டு வந்து நிறுத்தியவன் பொன்னுதாயிடம் “அப்பத்தா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நா போயிட்டு வந்துடறேன்., நீங்க அவங்களை பார்த்துக்கோங்க..,” என்றவன் அம்மாவிடமும் சொல்லிக்கொண்டு தன் அப்பாவை தேடி சென்று விட்டான்.

மற்றொரு காரில் இருந்து இறங்கி வந்த தமிழரசன் “ஏனுங்த்த மாப்பிள்ளை அதுக்குள்ள கிளம்பிட்டார்…?” கேட்டதும்,

“அவனுக்கு ஏதோ வேலை இருக்காம் கண்ணு…, வந்துடுவான் நீங்க எல்லாரும் உள்ள வாங்க…” என்று அழைத்தார் பொன்னுதாயி.

“இல்லைங்த்த.., பொழுதுவேற இருட்டிடுச்சு.., இன்னொரு நாள் வர்றோம்ங் அத்தை…” என்றார் முருகேசன்.

“அதென்ன இன்னொரு நாளைக்கு வர்றோம்ங்ற முருகேசா? இன்னும் என்ற குடும்பத்து மேல இருந்த கோபம் போலையா…?”

“ஐயோ.. அதெல்லாம் இல்லைங்த்த…”

“அப்பறம் என்ன? எல்லாரும் உள்ள வாங்க., இன்னைக்கு நம்மூட்லதான் சாப்புட்டு போகனும்.,”

அவர்கள் தயங்கி நிற்பதை பார்த்தவர் மருமகளிடம் “ஏங்கண்ணு மசமசனு நின்னுட்டு இருக்க..?, உன்ற அப்பாவையும் அண்ணனையும் உள்ள கூப்பிடு.”

“வாங்கப்பா.., உள்ள வாங்க அண்ணா…”

மகள் அழைத்ததுமே மூர்த்தி உள்ளே சென்று விட்டார்., அவருக்குதான் யார் மீதும் கோபம் இல்லையே..

மூர்த்தி வீட்டிற்குள் போகவும் மகன்கள் அவரை மீறி எதுவும் செய்து பழக்கம் இல்லை என்பதால் அவர்களும் சகோதரியின் வீட்டிற்குள் இத்தனை வருடங்கள் கழித்து முதல் முறையாக சென்றனர்.

தன் பொறந்த வீட்டு ஆட்களுக்கு தானே டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தாள் லலிதா.

டீயை குடித்தவாறே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

லஷ்மி, லலிதா மருத்துவமனையிலிருந்து வந்த உடையிலையே இருப்பதை பார்த்ததும் “இதென்ன பழக்கம் டி…? நல்ல நாள்ல பொழுதோட குளிச்சிட்டு சாமிக்கு விளக்கேத்த மாட்டியா? வந்ததுல இருந்து எங்க வாயவே பாத்துட்டு இருக்க..,  போ போய் குளிச்சிட்டு வந்து சாமிக்கு விளக்கேத்து…” என அதட்டினார்.

லஷ்மி சொன்னதும் லலிதா மறுபேச்சு பேசாமல் குளிக்க சென்றாள்.

மருமகள் சென்றதும் பொன்னுதாயி சமைக்க ஆரம்பிக்கவும் லஷ்மியும், இந்துவும் அவருடன் சேர்ந்து பேசிக்கொண்டே சமைக்க ஆரம்பித்தனர்.

 அவர்கள் சமைத்துக் கொண்டிருக்கும்போதே குளித்து முடித்து சாமிக்கு விளக்கு ஏற்றி விட்டு அங்கு வந்தாள் லலிதா.

அங்கு வந்து நின்றவளைப் பார்த்த லஷ்மிக்கு அத்தனை கோபம் வந்தது. “இதென்னடி வேஷம்? ஒன்னுமில்லாதவ மாதிரி ஒரு சாயம் போன பழைய சேலைய கட்டிட்டு வந்து நிக்கற?., கழுத்துலையும், கையிலையும் ஒண்ணத்தையும் காணாம்? ஒழுங்கா போய் வேற ஒரு நல்ல சேலைய கட்டிட்டு வா…”

அவள் போகாமல் தயங்கி நிற்கவும் “இன்னும் என்ன இங்கயே நின்னுகிட்டு இருக்க…?”

“என்றகிட்ட வேற சேலை இல்லைங் அண்ணி…”

அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியான லஷ்மி, ‘என்னடி சொல்ற? ஏ உன்ற புருசன் ஒரு சேலைக்கூட எடுத்துக் குடுக்க மாட்டாரா..?” என்றவர் பொன்னுதாயிடம் “பெரியம்மா உங்க மருமகள் என்ன சொல்றா?., இதுதான் நீங்க எங்க வூட்டு புள்ளைய பார்த்துக்கற லட்சணமா?., ஒரு சேலைக்கு கூட வக்கத்து போனவளா வச்சிருக்கிங்க…, எங்க உங்க மகன் வர சொல்லுங்க நா கேக்குறேன்., கேட்க்க ஆரும் வரமாட்டாங்கனு நினச்சிட்டிங்ளா என்ன? இவளை பெத்தவரு, கூடப் பிறந்தவங்க எல்லாரும் இன்னும் உசுரோடத்தான் இருக்காங்க…” படபடவென கோபத்தில் பேசினார்.

“ஐயோ அண்ணி மாமா மேல எந்த தப்பும் இல்லை அவங்களை திட்டாதிங்க…” லலிதா கணவனை திட்டுவதை தாங்க முடியாமல் உண்மைய சொன்னதும்,

“ஏய் நீ எதாவது பேசுன உன்ன கொன்றுவேன்., வாய மூடிட்டு இரு., கண்ணாலம் பண்ணி புள்ளைய குடுத்துட்டா மட்டும் போதாது பொண்டாட்டிக்கு தேவையான எல்லாத்தையும் செய்யறவன் தான் புருசன்., இந்த பொழப்பு பொழைக்கறதுக்குதான் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வந்தியாடி?.” லஷ்மி கோபத்தில் லலிதாவை திட்டவும்,

“என்ன நடந்ததுனே தெரியாம நீ கோபபடாத கண்ணு…” பொன்னுதாயி லஷ்மிக்கு புரிய வைக்க முயன்றார்.

“இவ சொல்ற கேட்டப் பிறகும் கோபப்படாம எப்படி பெரியம்மா பேச சொல்றிங்க?”

லஷ்மியின் சத்தம் கேட்டு ஹாலில் இருந்த அனைவரும் சமயலறைக்கு வந்தனர்.

முருகேசன் “லஷ்மி எதுக்கு சத்தம் போடற? என்னாச்சு…?” என்றார்.

“இன்னும் என்னாகனும்ங்க…? உங்க தங்கச்சி இந்த வூட்ல பொழைக்கற பொழப்ப பார்த்து எனக்கு உச்சி குளிர்ந்து போச்சு…”

பொன்னுதாயி லஷ்மிக்கு பேசி புரிய வைக்க முடியாது என்பதை உணர்ந்தும் லஷ்மியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு மகனின் அறைக்கு சென்று அவளின் கையை விட்டுவிட்டு சுவரில் பதிக்கபட்டிருந்த கபோர்டை திறந்து விட்டார்.

 

லஷ்மியை பொன்னுதாயி இழுத்து செல்லவும் மற்றவர்களும் அவர்களின் பின்னாலையே ராமின் அறைக்கு வந்தனர்.

பொன்னுதாயி கபோர்டை திறந்து விட்டதும் அதில் அடுக்கி வைக்கபட்டிருந்த சேலைகளை பார்த்த லஷ்மி ஒன்றும் புரியாமல் லலிதாவிடம் “இதென்னடி இம்புட்டு சேலை வச்சிட்டு நா கேட்டதுக்கு இல்லைனு சொன்ன?” குழப்பத்துடன் கேட்டார்.

அவள் பதிலேதும் சொல்லாமல் தலை குனியவும் கோபம் கொண்டு “என்ன பார்த்து பேசுடி…” திட்டினார்.

“அவ பேச மாட்டா கண்ணு., நீ எம்புட்டுதா கத்துனாலும் இப்படியே அசையாம நிப்பா., ஆனா வாய மட்டும் திறந்து ஒத்த வார்த்தை பேசமாட்டா., இப்போ நீ பாத்ததெல்லாம் என்ற மகன் அவன் பொண்டாட்டிக்கு ஆசையா எல்லா விசேத்துக்கும் வாங்கி வச்சது…” என்றார்.

“எனக்கு இங்க என்ன நடக்குதுனே சுத்தமா புரியலை பெரியம்மா… வாங்கி வச்சதுனா? அப்போ இவ கிட்ட குடுக்க மாட்டாரா.,?”

“அவன் குடுப்பான்.., ஆனா உன்ற கொழுந்தியா அத முதல்ல வாங்கனுமே கண்ணு., இவதான் ஆரம்பத்துல இருந்தே அவன புருசனாக்கூட மதிக்கலையே. அப்பறம் எங்க இருந்து அவன் வாங்கிக் குடுக்கறத வாங்கிக் கட்டிக்குவா?.,

 “இவளோட பிடிவாதத்த பார்த்து நாந்தான் வருசம் வருசம் நம்ம பண்ணையத்துல வேலை செய்யற ஆட்களுக்கு எடுக்கும்போது இவளுக்கும் சேர்த்து எடுத்துட்டு வந்து தர ஆரம்பிச்சேன்., அத மட்டும்தா வாங்கிப்பா., ஆரம்பத்துல இருந்தே இவங்க ரெண்டு பேருக்கு இடைல மாட்டிட்டு நாந்தான் தவிக்கறேன்., ஆனா இதுங்க ரெண்டும் எனக்கென்னனு ஆளுக்கு ஒரு தெசையில நின்னுகிட்டு ஏ உசுர வாங்கறதே வேலையா வச்சிருக்குதுங்க., என்ன பண்றது எல்லாம் ஏந்தலையெழுத்து., பெத்ததும் சரியில்லை வூட்டுக்கு வாழ வந்ததும் சரியில்லை., 

எங்க நல்ல நேரமோ என்னவோ என்ற குடும்பத்துக்கு மகனோட வாரிசுனு சொல்லிக்க என்ற பேரன் பிறந்துட்டான்., அவன் மட்டும் பொறக்கலைனா இந்த வூட்டுக்கு வாரிசுனு ஒண்ணு இல்லாமையே போயிருக்கும்., என்ற மகனுக்கும் வாழ்க்கையில பிடிப்புனு ஒண்ணு இல்லாமையே போயிருக்கும்…,” என்றவரின் குரலும் கூட கலங்கியது.

பொன்னுதாயி சொன்னதைக்கேட்டு அங்கிருந்த அனைவருமே வாயடைத்து போய் நின்றனர்., என்ன பதில் சொல்வார்கள் தவறு தங்கள் வீட்டு பெண்ணுடையதாக இருக்கும்போது.

கோபத்துடன் லலிதாவின் முன் போய் நின்ற லஷ்மி, தன் மொத்த பலத்தையும் சேர்த்து அவளின் கன்னத்தில் ஓர் அறை விட்டார்.

 

கன்னம் எரியவும் கையை வைத்து மூடியவாறே கண்கள் கலங்க தன் அண்ணனின் மனைவியை பார்த்து “அண்ணி…” என்றாள்.

“ஏதாவது பேசுன இருக்க கோபத்துக்கு என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது., ஒழுங்கா இதுல ஒரு சேலைய எடுத்து கட்டிட்டு இன்னும் செத்த நேரத்துல வெளிய வர., இல்லைனா நா மனுசியாவே இருக்கமாட்டேன்.” என்றவர் பொன்னுதாயிடம் “பெரியம்மா உங்க மருமகளுக்கு தாலிக்கொடி இருக்குதானே?”

 

 “என்ன கண்ணு இப்படி கேட்டுபோட்ட., அவளுக்கு நகையா இல்லை., எல்லாம் இருக்கு., ஆனா உன்ற கொழுந்தியா போட்டுக்குவாளானு கேளு எடுத்துட்டு வரேன்?.”

 

“அதென்ன அவகிட்ட கேக்கச் சொல்றிங்க பெரியம்மா., இங்க நீங்க மாமியாரா? இல்லை இவ மாமியாரா?., இப்படி எல்லாத்தையும் இவ போக்குல நீங்களும் உங்க மகனும் விட்டதால தான் இப்ப இந்த நிலைமைல நிக்கறா…?” லலிதாவை பார்த்து முறைத்துக்கொண்டே சொன்ன லஷ்மி.., அறையை விட்டு வெளியே செல்ல திரும்பியவர் அங்கு நின்றிருந்த மாமனார், கொழுந்தன், கணவன் மூன்று பேரையும் பார்வையாலையே எரித்து விட்டு சென்றார்.

லஷ்மியின் கோபத்திற்கான காரணம் அங்கிருந்த மூன்று ஆண்களுக்குமே புரிந்தது. ‘நீங்க புள்ளை வளர்த்து வச்சிருக்க லட்சணத்த பாருங்கனு’ சொல்லாம சொல்லிட்டு போனதை மூவருமே புரிந்துக்கொண்டனர்.

லஷ்மி போனதும் இந்து, ஷர்மியை தவிர மற்ற அனைவரும் வெளியே சென்றனர். அவர்கள் எல்லாரும் வெளியே போனதும் கண்கள் கலங்க நின்றிருந்த லலிதாவிடம் சென்ற இந்து “அண்ணி எனக்கும் உங்க மேல கோபம்தான் வருது., ஆனா அத அக்கா மாதிரி எனக்கு காட்ட விருப்பமில்லை., முடிஞ்சத நினைச்சிட்டு வாழ்க்கைய நரகமாக்கிக்காதிங்க., இருக்கற கொஞ்சம் காலமாவது அண்ணாவோட சந்தோசமா வாழ பாருங்க., என்னால அவ்வளவுதான் சொல்ல முடியும்.” என்றவர்,

லலிதா அணிந்திருந்த ப்ளவுஸ்க்கு பொருந்தும் கலரில் கபோர்டிில் இருந்த ஒரு சேலையை எடுத்து குடுத்து “இதக் கட்டிட்டு வாங்க அண்ணி…” என்றுவிட்டு அறையை விட்டு சென்று விட்டார்.

எல்லாரும் சென்ற பின்பு ஷர்மி மட்டும் செல்லாமல் நின்றிருந்தவளின் பார்வை அந்த அறையின் சுவற்றில் மாட்டபட்டிருந்த போட்டோவில்தான் இருந்தது., அந்த ஒரு போட்டோவே தன் மாமா அத்தையின் மீது வைத்திருந்த காதலை காட்டிக் கொண்டிருந்தது. 

அந்த போட்டோவில் லலிதா வளைகாப்பு அன்று ஏழுமாத கருவை சுமந்துக்கொண்டு கண்ணங்களில் சந்தனம் பூசியவாறு.., இரு கைகளிலும் வளையல் அடுக்கி, முகத்தில் துளிக்கூட புன்னகை இல்லாமல் அமர்ந்திருந்தாள்., அவளின் அருகிலே நின்றிருந்த ராம் விழிகளில் காதலை தேக்கி மனைவியின் முகத்தைதான் பார்த்துக்கொண்டிருந்தார்., முதலும் கடைசியுமாக கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்டது அந்த புகைப்படம்தான்., அதைதான் பெரியதாக மாற்றிச் சுவரில் மாட்டியிருந்தார் ராமகிருஷ்ணன்.

 

போட்டைவை சிறிது நேரம் பார்த்தவள் பின் தன் அத்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள். 

லஷ்மியின் ஆளுமை அந்த வீட்டை ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே முற்றிலுமாக மாற்றிவிட்டது., லலிதாவை வச்சி செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். 

ரொம்ப நேரமாக லஷ்மியை தான் பார்த்துக் கொண்டிருந்தார் பொன்னுதாயி. லஷ்மியை பார்த்துக் கொண்டிருந்தவரின் மனதில் ‘இவள் முன்பே தன் வீட்டிற்கு வந்திருந்தால் என்ற மகனின் வாழ்க்கை சிதைந்திருக்காதோ?’ என்று நினைக்காமல் அவரால் இருக்க முடியவில்லை. லஷ்மியை பார்த்த அவரின் பார்வையில் அத்தனை அன்பு தெரிந்தது.

பொன்னுதாயின் அருகில் வந்து அமர்ந்த ஷர்மி “என்ன அம்மு லச்சுமாவ ரொம்ப நேரமா சைட் அடிச்சிட்டே இருக்க? லஷ்மி அம்புட்டு அழகாவா இருக்கு…?” கலாய்த்தாள்.

Advertisement