Advertisement

அத்தியாயம்.20

காலம் ஆருக்காகவும் காத்திருக்காமல் அதன் வேலையை செவ்வனே ஆற்றிக்கொண்டிருந்தது. 

ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் ராம் லலிதாவின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வரவில்லை. கணவன் மனைவி இருவரும் ஆளுக்கொரு திசையில் பிரிந்து தன் கூட இருப்பவர்களையும் கஷ்ட படுத்திக்கொண்டு எதற்கு வாழ்கிறோம் என்று தெரியாமலே  வாழ்கின்றனர். 

பொன்னுதாயி இப்போதெல்லாம் மகன் மருமகளை சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசையையே விட்டு விட்டார். மருமகளின் மேல் கோபத்தை வளர்த்துக்கொண்டார். அதற்கு அவளும் ஒரு காரணம் என்றால் விஸ்வநாதனும் ஒரு காரணம் ஆவான்.

காலங்கள் கடந்த பின்னும் அவனின் பழிவெறி மட்டும் அடங்கவே இல்லை. அதற்கு  மாமனாரின் மனதில் சிறுக சிறுக விஷத்தை வளர்க்க ஆரம்பித்துவிட்டான்., அவனின் தூண்டுதலில் ராசப்பன் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்யும் ஆசையும் துளிர்விட ஆரம்பித்தது.

அவர்களை சொல்லியும் குற்றமில்லை எந்த பெற்றோரால் தான்  மகன் வாழாமல் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியும். அதனை தனக்கு சாதகமாக்கி கொண்டான்.

அந்த காலத்தில் எல்லாம் இரண்டு திருமணங்கள் என்பது சாதாரண விசயமே… முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவது மணம் புரிந்தவர்கள் பலர் உண்டு. அதனாலேயே ராசப்பனுக்கு அது தவறாக தெரியவில்லை.  

இதை மகனிடம் சொன்னால் அவன் ருத்ரதாண்டவம் ஆடிவிடுவான் என தெரிந்ததாலோ என்னவோ மருமகனின் போதனைப்படி மருமகளை வைத்து பேச நினைத்தார்.

எந்த மனைவியும் செய்ய துனியாத காரியமான கணவனை இன்னொருத்திக்கு பங்குபோட்டு குடுக்க லலிதாவும் சம்மதித்து விட்டாள். அவளின் அந்த முடிவே தேவைக்காக மட்டுமே மனைவியிடம் ஒன்றிரண்டு வார்த்தை பேசிக்கொண்டிருந்தவன் அதன் பிறகு அவளை முற்றிலுமாக ஒதுக்கி வைக்க வழிவகுத்தது.

அன்று காலையிலையே விஸ்வநாதன் மச்சினனுக்கு ஒரு வரனோடு மாமனார் வீட்டுக்கு  வந்திருந்தான். 

“வாங்க மாப்பிள்ளை…” ராசப்பன்  மருமகனை வரவேற்றார்.

பொன்னுதாயி சொந்தத்தில் ஒரு விசேசத்துக்கு போயிருந்தது விஸ்வநாதனுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

லலிதா எப்போதும் போல மருமகளாக அவர்களை வரவேற்றுவிட்டு தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள்.

ராம் அக்கா குடும்பத்தை வரவேற்றுவிட்டு வயலுக்கு சென்றுவிட்டான். அவனுக்கு இப்போதெல்லாம் அக்கா கணவனை சுத்தமாக பிடிக்கவில்லை. விஸ்வநாதனின் கெட்ட எண்ணத்தை புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு அவன் ஒன்னும் முட்டாள் அல்ல…

 அதிலும் இப்போது தொழிலை கையில் எடுத்து அதை திறம்பட நடத்திக்கொண்டிருப்பவன். எத்தனை மனிதர்களை பார்க்கிறான்

தன் அக்காவிற்காக மட்டுமே பொருத்து போகிறான். 

அன்று தன் அக்கா கணவனின் கீழ்தரமான பேச்சை பின்னொரு நாளில் அக்காவின்  மூலம் கேள்வி பட்டதும் மாமனின் மேல் சினம் மலையளவு ஏறிவிட்டது. விஸ்வநாதனின் மீது கொலைவெறியே வந்தது, ஆனாலும் தன் தந்தை கொடுத்த பதில் கேள்விபட்டதும், தன் தாய்க்கு நிகரான தமக்கையின் தாலிக்காகவும் அமைதி காத்துக்கொண்டிருக்கிறான். அமைதி காத்தனே தவிர அமைதி அடையவில்லை.

மாமியார் இல்லாத நேரமாக பார்த்து மாமனாரிடம் “மாமா மாப்பிள்ளைக்கு ஒரு சம்பந்தம் வந்துருக்கு ஜாதகத்துல ஒன்பது பொருத்தம் ரெண்டு பேருக்கும் பொருந்தி வருது. நா விசாரிச்சிட்டேன் நல்ல குடும்பம்தான். வசதியும் நமக்கு சரிசமமாத்தா இருக்கு மாமா. ரெண்டும் பொண்ணுங்க தான் நாளைக்கு சொத்தும் மாப்பிள்ளைக்கு பாதி வந்துடும்…”

“பணமோ சொத்தோ எங்களுக்கு முக்கியமில்லை மாப்பிள்ளை. இந்த முறையாவது என்ற பையனுக்கு நல்ல வாழ்க்கை அமையனும் அவ்வளவுதான் மாப்பிள்ளை…”

“நடக்கும் மாமா. போன தடவை ஜாதகம், நல்ல நாள் எதுவும் பாக்காம மாப்பிள்ளை கண்ணாலம் பண்ணதால தான் இப்படி அவனோட வாழ்க்கை நாசமா போச்சு. இந்த தடவை அப்படி எதும் நடக்காது மாமா…”

“சரி… ஒரு நல்ல நாள் பார்த்து போய் பொண்ண பாத்துட்டு வந்துடுவோம்” என்றார் ராசப்பன்.

அவர்கள் பேசுவதை எல்லாம் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த லலிதாவும் கேட்டுக்கொண்டு இருந்தவளின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. 

“மாமா அதுக்கு முன்னாடி மாப்பிள்ளைகிட்ட பேசி சம்மதம் வாங்கிடுங்க. அப்பறம் எல்லாம் முடிவானதுக்கப்பறம் ராம் முடியாதுனு சொல்லிட்டா நாந்தா அசிங்கபட்டு நிக்கனும்…”

“அவன்கிட்ட பேசறத நினைச்சாத்தான் பயமா இருக்கு மாப்பிள்ளை. நா பேசுனா ஆடிடுவான். நீங்க வேணா பேசி பாருங்களேன். ஒருவேளை நீங்க சொன்னா அவன் கேட்டாலும் கேப்பான். உங்களை எதிர்த்து பேசமாட்டான்.”

‘ஐயோ! நானா…’ அவன் மனம் அலறிவிட்டது.

மச்சினன் தன் மேல் கொலை வெறியில் இருக்கிறான் என்பதை தெரியாதவனா அவன். இதை மட்டும் தான் போய் சொன்னால் அக்கா புருசனுக்கூட பாக்கமாட்டான் கொன்னேபோட்ருவானே…’ என்று நினைத்தவன் அதிலிருந்து தப்பிக்க லலிதாவை மாட்டிவிட எண்ணினான்.

“மாமா இத நாம சொல்றத விட மாப்பிள்ளைகிட்ட உங்க மருமகள சொல்ல சொல்லி சம்மதம் வாங்கச் சொல்லுங்க. நாம சொன்னா கேக்கமாட்டான். அவன் பொண்டாட்டி சொன்னா அவனால மறுத்து பேசமுடியாது.”

மருமகன் சொல்வது சரி என்றுதான் ராசப்பனுக்கு தோன்றியது.

“உங்க மருமகளை வர சொல்லுங்க மாமா. அத்தை வரதுக்குள்ள சொல்லிடுவோம் அத்தைக்கு தெரிஞ்சா இதுக்கு ஒத்துக்கமாட்டாங்க. அவங்களுக்கு எப்பவும் உங்க மருமக மேலதான் பாசம் அதிகம்.”

“அவளுக்கு தெரியாம எப்படி மாப்பிள்ளை…”

“முதல்ல மாப்பிள்ளை சம்மதிக்கட்டும் மாமா அப்பறமா அத்தைகிட்ட சொல்லலாம்…”

ராசப்பனுக்கு மனைவிடம் சொல்லாமல் மறைப்பது பிடிக்கவில்லை என்றாலும் மகனின் வாழ்க்கைக்காக மருமகன் சொன்னதுக்கு தலை ஆட்டி வைத்தார்.

ராசப்பன் மருமகளை கூப்பிடவும் அவளும் அங்கு வந்து நின்றாள். அவள் பின்னாலையே வந்த அவளின் ஐந்து வயது குழந்தை ரகுநந்தன் தன் அத்தை புருசனை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டு விளையாட வெளியே ஓடிவிட்டான்., ரகுவிற்கு தன் அத்தை புருசனை அந்த வயதிலே சுத்தமாக பிடிக்காது.

வந்து நின்ற லலிதாவையும், ரகுநந்தனையும் பார்த்த விஸ்வநாதனுக்கு எரிச்சலாக இருந்தது. அவளின் அருகில் நின்ற ரகுவை முறைத்தவன் குட்டிச்சாத்தான் அப்படியே அப்பன் மாதிரி இந்த வயசுலையே மதிக்கமாட்டிங்றான்.’ குழந்தையை மனதில் திட்டியவன் லலிதாவின் முகத்தில் சிறு வருத்தமாவது தெரிகிறதா என பார்த்தான். 

தாங்கள் பேசிய அனைத்தையும் கேட்டபிறகும் துளிக்கூட கலங்காமல் வந்து நின்றவளை பார்த்தவனுக்கு எரிச்சலாக இருந்தது. அவள் அழவில்லை என்றாலும் சிறிதாவது கலங்குவாள் என எதிர்பார்த்தவனின் எண்ணம் சுக்குநூறாக உடைந்துபோகவும் வெறுப்புடன் அவளை பார்த்தவாறே, “நாங்க பேசுனது உனக்கும் கேட்டுச்சுதானே லலிதா…” என்றான்.

“ம்ம்” என முனகியவாறே அவள் தலையாட்டவும் ‘வாய் திறந்துக்கூட பேசமாட்டியாக்கும்? இருடி உன்னையும் நீ பெத்து வச்சிருக்க குட்டிசாத்தானையும் இந்த வூட்ட வுட்டு உன்ற புருசன வச்சே தொரத்தற மாதிரி பண்றேன்.’ மனதில் நினைத்துக்கொண்டு வெளியே சாதாரணமாக முகத்தை வைத்தவாறே “மாப்பிள்ளை வந்ததும்  பேசி சம்மதம் வாங்க வேண்டியது உன்ற பொறுப்பு லலிதா…” என்றான்.

சரி என்றுவிட்டு லலிதா சென்றதும் மாமனாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு.., அவர் மாடுகளுக்கு தீனிபோட எழுந்து செல்லவும்.., வெளியே வந்து திண்ணையில் அமர்ந்திருந்தவன் வெளியே மண்ணில் விளையாடி கொண்டிருந்த ரகுவை பார்த்ததும் வன்மம் தலைதூக்க குழந்தையின் அருகில் சென்று அமர்ந்து அவனிடம் பேச்சுக்குடுத்தான்.

“குட்டி மாப்பிள்ளை விளையாடுறியா?”

குழந்தையோ அவனுக்கு பதில் குடுக்காமல் தன் விளையாட்டிலே குறியாக இருந்தான்.

அவனின் செயலில் கோபம் கொண்டவன் “என்னடா உன்ற அப்பன் சொல்லிக்குடுத்தானா? என்றகிட்ட பேசக்கூடாதுனு?”

“என்ற அப்பா ஒன்னும் சொல்லிக்குடுக்கல… எனக்கு தான் உங்கள பாத்தாவே புடிக்கல என்ற வூட்டுக்கு வராதிங்க…”

“எதுடா உன்ற வூடு? உன்ற அப்பனே இன்னொரு கண்ணாலம் பண்ணிக்கபோறான். இனிமே நீயும் உன்ற ஆத்தாகாரியும் இந்த வூட்லையே இருக்கமுடியாது… நீ என்ன வரவேண்டாம்ங்கற…” 

“நீங்க பொய் சொல்றிங்க என்ற அப்பாவுக்கு என்னையும், என்ற அம்மாவையும் தான் புடிக்கும்?”

“நெசமாதான்டா சொல்றேன் உன்ற அம்மா தான் உன்ற அப்பனுக்கு கண்ணாலமே பண்ணிவைக்கபோறா? உனக்கு சித்தி வந்துட்டா உன்ற அப்பனுக்கு புது சித்தியதான் புடிக்கும் உன்னையும் உன்ற அம்மாவையும் தொரத்திவிட்ருவான்.”

“நீ பொய் சொல்ற நா நம்பமாட்டேன் என்று கத்திக்கொண்டு எழுந்து நின்றவன் அங்கு கிடந்த சிறிய கல்லை எடுத்து மாமனின் மண்டையை குறி பார்த்து எறிந்துவிட்டு வயலில் இருந்த ராமை நோக்கி ஓடிவிட்டான்.

குழந்தை அடித்தது சிறிய கல்லாக இருக்கவும் இரத்தம் வராமல் சுருக்கென்று வலிக்க மட்டுமே செய்தது. வலித்த இடத்தை கையை கொண்டு தடவியவாறே “சரியான குட்டிசாத்தான் கல்லால அடிச்சிட்டு போவுது… இருடா இதுக்கெல்லாம் சேர்த்து உங்களுக்கு வைக்கறேன் ஆப்பு…”

மாமனை கல்லால் அடித்துவிட்டு வரப்பில் ஓடிவந்து கொண்டிருந்த மகனை பார்த்த ராம் “கண்ணா பார்த்து… மெல்ல வா…” என கத்தினான்.

குழந்தை அதை காதிலே வாங்காமல் ஓடி வந்து வரப்பில் வழுக்கி விட்டு வயலுக்குள் விழுந்து விடவும் ராம் ஓடிவந்து தூக்கிக்கொண்டு காலில் காயம் பட்டிருக்கிறதா என பார்த்தவாறே “எதுக்கு கண்ணா இப்படி ஓடி வர?” கேட்டான்.

“அப்பா உனக்கு என்ன புடிக்கலையா?  அதான் புது சித்தியை கண்ணாலம் பண்ணிக்கபோறியா? புது சித்தி வந்ததும் என்னையும் அம்மாவையும் தொரத்தி விட்ருவியா?”  குழந்தை அழுதவாறே கேட்டான்.

Advertisement