Advertisement

அத்தியாயம்.19

தன் தாயின் இறப்பு செய்தி கேட்டதுமே அவரின் இறப்புக்கு தான் மட்டுமே காரணம் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழ பதிந்து விட்டது. தான் ஒரு சிசுவை சுமந்துக்கொண்டிக்கிறோம் என்ற நினைவே இல்லாமல் பெற்றவளின் முகத்தை பார்க்க  வயல் வரப்பில் கூட அத்தனை வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

அவள் பின்னால் வந்தவனுக்கோ லலிதாவின் வேகத்தை பார்த்து நெஞ்சில் பயம் ஏற ஆரம்பித்து விட்டது. வரப்பிலிருந்து கால் தடுமாறி விழுந்தால் என்னாவது என்ற பயமே அவனை கத்த வைத்தது.

“லலிதாம்மா… மெதுவா போங்க…” கத்திகொண்டே அவள் வேகத்திற்கு நடக்கமுடிமல் ஓட ஆரம்பித்தான்.

அவன் கத்துவது காதில் விழுந்தால்தானே நிற்பாள். அவள் தான் தன்னை மறந்த நிலையில் சென்றுக்கொண்டிக்கிறாளே…

அவளின் நல்ல நேரமோ… அல்லது அவள் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆயுசு கெட்டியோ ஏதோ ஒன்னு அவளின் அத்தனை வேகத்திற்கு கீழே விழாமல் இருக்கச் செய்தது.

ஒன்பது மாதங்களுக்கு பிறகு அந்த வீட்டின் வாசலை மிதிக்கிறாள்.

வீட்டிற்கு முன்பு போடப்பட்டிருந்த சாமினா பந்தலின் கீழேயே மரபெஞ்சில் படுக்க வைக்கபட்டிருந்தார் அலமேலு. அவரை சுற்றி பெண்கள் ஒப்பாறி வைத்துக்கொண்டிருந்தனர்.

அலமேலு ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருப்பதை போல்தான் படுத்திருந்தார். மஞ்சள் பூசிய முகம் நெற்றியில் பெரிய வட்ட பொட்டு தலைநிறைய மல்லிகைப்பூ. அரக்கு வண்ண பட்டுபுடவை அணிவித்து அவரின் மேல் மாலைகள் போடபட்டிருந்தது., 

அவரை பார்த்தால் எட்டு மாதம் படுக்கையில் விழுந்து கிடந்தவர் என்று எவரும் சொல்லமாட்டார்கள். அத்தனை அழகாக முகம் ஜொலித்து கொண்டிந்தது. அவரே மரணத்தை விரும்பி ஏற்றதாலோ என்னவோ உயிர் பிரியும் போதும் கூட புன்னகை முகமாகவே இருந்தார்.

தாயின் அருகில் வந்தவள் அவரை அந்த கோலத்தில் பார்த்ததும் தாயின் காலை பிடித்தவாறே கதற ஆரம்பித்தாள்.

அங்கு வந்திருந்தவர்கள் எல்லாம் லலிதாவை தான் பார்த்திருந்தனர்.

அண்ணியின் தலையாட்டில் அமர்ந்து அழுது கொண்டிந்த அகிலாண்டம் அங்கு வந்து நின்றவளை பார்த்ததுமே அத்தனை ஆத்திரம். அதே வேகத்தில் எழுந்தவர் அவளின் கையை பிடித்து எழுப்பி பிள்ளைதாச்சி என்றும் பாராமல் வெளியே இழுத்து சென்று வாசலில் விட்டவர் “அதான் என்ற அண்ணிய கொன்னுட்டியேடி இன்னும் இங்க ஆர கொல்ல வந்து நிக்கற?? ஓடுகாலி கழுத…” ஆத்திரத்தில் கத்தினார். 

அவரின் காலை பிடித்து “அத்தை ஒரே ஒரு தடவை அம்மாவ பாத்துட்டு போயிடறேன்த்தை…” கதறியவாறே கெஞ்ச ஆரம்பித்தாள்.

காலை பிடித்து கெஞ்சுக்கொண்டிருந்தவளை உதறியவர் “ச்சீசீ உன்ற வாயல என்ன அத்தைனு கூப்பிடாதடி அத கேக்கவே எரிச்சலா இருக்கு…” 

திரும்பவும் அவரின் கால பிடித்து கெஞ்சினாள்.

அவளின் கதறலை பார்த்து அங்கிருந்தவர்கள் கூட அகிலாண்டத்திடம் பேசி பார்த்தனர். ஆனால் அகிலாண்டம் பிடிவாதமாக அவளை விடமாட்டேன் என நின்றார்.

பின்பக்கம்  இறுதி சடங்குக்கு ஆகவேண்டிய வேலையை மாமன் மகன்களுடன் செய்துகொண்டிருந்த ராஜா  வாசலில் தன் தாய் யாரையோ திட்டும் சத்தம் கேட்கவும் ஓடி வந்தவன் அங்கு தன் தாயிடம் கெஞ்சி கொண்டிருந்தவளை பார்த்ததும் அவளை நெருங்கி தூக்கி நிறுத்தியவன் “நீ உள்ள போ குட்டிமா… உனக்கு இல்லாத உரிமை இங்க ஆருக்கும் இல்லை. உன்ன ஆரு தடுக்கராங்கனு நானும் பாக்கறேன்…” தாயை கோபத்துடன் பார்த்தவாறே கூறினான்.

அம்புட்டு நேரம் அத்தனை சத்தம் போட்டு கொண்டிருந்தவர் மகன் வந்து பேசியதுமே அடங்கிவிட்டார்.

அவனின் பின்னாலே வந்த முருகேசனும், தமிழரசனும் தங்களது சகோதரியை பார்த்ததும் கோபம் வந்தாலும் அதை காட்ட விருப்பமில்லாததால் அங்கிருந்து விலகிச்சென்றனர்.

தன் அத்தை மகன் போக சொன்னதுமே தன் தாயை நோக்கி ஓடியவள் அவரை கட்டிக்கொண்டு அழுதாள்.

அலமேலுவிற்கான இறுதி சடங்கிற்கு நேரம் ஆகவும் அவரை தூக்கி சென்றவர்களை தடுக்ககூட முடியாமல் பார்த்து கொண்டிருந்தவள்  பின் அங்கிருந்து மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.

வரும்போது இருந்த கண்ணீர்க் கூட இப்போது இல்லை. அழுது அழுது கண்ணீர் வற்றிப்போன நிலையில்  சுயம் மறந்து இரவு நேரத்தில் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தாள். 

அன்றுதான் அவள் கடைசியாக கண்ணீர் வடித்தது அன்றே தன் எல்லா உணர்வுகளையும் கொன்றுவிட்டு நடைபிணமாக தனது வீட்டிற்கு வந்தவள் தொட்டியில் கிடந்த தண்ணியை மோண்டு தலையில் ஊற்றி தலைமுழுகிவிட்டு ஈரம் சொட்ட சொட்ட வீட்டிற்குள் சென்றவள் தன் அறைக்கு வந்ததும் கதவை சாற்றிக்கொண்டு லைட்டைக்கூட போட தோன்றாமல் அந்த இருட்டிலே ஈர உடையை மாற்றாமலே அடைந்து கொண்டாள்.

இப்போது இருட்டுக்கூட அவளை பயமுறுத்தவில்லை. 

மருமகளுக்காக வாசலிலே அமர்ந்திருந்த ராசப்பனுக்கு அவள் வந்ததை பார்த்ததும் தான் நிம்மதியானது. ஆனால் அந்த நிம்மதி சற்று நேரம் கூட நீடிக்கவில்லை.

அவள் தண்ணியை ஊற்றிக்கொண்டு வீட்டிற்குள் சென்றதும் உடையை மாற்றிக்கொண்டு வெளியே வருவாள் என பார்த்துக்கொண்டிருந்தவர் ரொம்ப நேரமாகியும் வராததால் கதவை தட்டி கூப்பிடவும் மனம் கேக்காமல்  மருமகளின் அறையின் வாயிலை பார்த்தவாறே தவம் கிடக்க ஆரம்பித்தார்.

குளிர் ஜன்னி கண்டு மருமகள் நினைவில்லாமல் கிடைப்பதை அறியாமலே  அன்று இரவு தூக்கத்தை தொலைத்து  விட்டு அமர்ந்திருந்திருந்தார். 

வண்டிக்கு போய் பத்துநாள் கழித்து திரும்ப  விடியற்காலையில் ஊருக்குள் வந்து இறங்கியவன் முதலில் கேட்டது தன் அத்தையின்  இறப்பு சேதிதான். அதை கேட்டு அதிர்ந்தவனுக்கு தன் மனையாளின் நினைவு வந்து உயிரை கொன்றது. அவள் எப்படி இதை தாங்கினாள் என்ற பயத்துடனே வீட்டிற்கு ஓடிவந்தான்.

இரவு முழுவதும் தூங்காமல்  விழித்திருந்த ராசப்பன் மகன் வந்து விட்டதை பார்த்ததும் தான் சிறு நிம்மதி வந்தது. 

“வந்துட்டியா கண்ணு… உன்ற பொண்டாட்டி ராத்திரில இருந்து ஒன்னுமே சாப்பிடாம ரூம்குள்ளையே கெடக்கறா… அவளை போய் சாமாதான படுத்தி கூட்டிவாப்பா…”

தந்தை சொன்னதை கேட்டவன் மறுநொடி தாமாதிக்காமல் கதவை திறந்தான்.

இரவு அவள் தாழ்போடாமல் கதவை சாற்றி வைத்திருந்ததால் ராம் கதவை தள்ளியதுமே திறந்துக்கொண்டது. அறை இருளில் மூழ்கி இருக்கவும் லைட்டை போட்டவன் தன்னவள் இருந்த கோலம் கண்டு அதிர்ந்து கத்தி விட்டான்.

மகன் கத்தவும் அவரும் பயந்துப்போய் அறை வாயிலில் வந்து நின்று உள்ளே பாத்தவர்க்கு அதிர்ச்சிதான். இரவு கட்டியிருந்த ஈர உடையைக்கூட மாற்றாமல் சுவர் ஓரத்தில் குளிர் ஜன்னி வந்து நினைவை இழந்து கிடந்தாள்.

மனைவியின் அருகில் ஓடிப்போய் அவளை தூக்கியவனுக்கு உடம்பெல்லாம் நடுங்க கண்ணீருடனே அவளை எழுப்ப முயன்றான். 

அவள்தான் நினைவை மொத்தமாக இழந்து கிடக்கிறாளே அவனின் குரல் கேட்டதும் எப்படி எழுவாள்.

அவளின் நிலை கண்டதும் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து விட்டவன் மனைவி இருந்த அறையின் முன் சித்தம் கலங்கிய நிலையில் தவித்துகொண்டிருந்தான்.

லலிதாவை கொண்டு வந்து சேர்த்ததுமே மருத்துவர் அவளை பரிசோதித்து விட்டு இப்போதே குழந்தையை ஆப்ரேசன் பண்ணி எடுத்தாக வேண்டும். அப்போதுதான் இரு உயிரில் ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும் என்றுவிட்டார்.

அதைக்கேட்ட ராம் துடித்துவிட்டான். டாக்டரிடம் மனைவியை காப்பாற்றி கொடுத்துவிடுங்கள் என கெஞ்சவே ஆரம்பித்துவிட்டான்.

குழந்தையை ஆப்ரேசன் பண்ணி எடுத்து அதனை காப்பாற்றி விட்டு தாயின் உயிரை காப்பாற்ற  மருத்துவர்கள் முயன்றாலும் அதற்கு அவளும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா?ஆனால் அவள்தான் உயிர் வாழும் ஆசையையே துறந்துவிட்டாளே…

இனி அவள் பிழைப்பது கடினம் என்று சொல்லாமல் சொல்லி விட்டு சென்றுவிட்டனர்., ஆனால் அதை கேட்டவனின் நிலைதான் வார்த்தையில் வடிக்க இயலாது. 

அவன் அன்று மனைவியிடம் என் வாழ்வை வரமாக்க வந்த குழந்தை அது எனக்கு பெத்து குடுத்துவிடு என்று கேட்டான். 

அவளும் கணவன் கேட்டதை குடுத்துவிட்டாள். ஆனால் அதன் மகிழ்ச்சியை இன்று அனுபவிக்க முடியாமல்  கதறிக்கொண்டிருக்கிறான்.

ராசப்பனால் மகனின் கதறலை பார்க்கவே முடியவில்லை. இதற்காகவா தனக்கு பிடிக்காதவள் என்றாலும் மகனின் சந்தோசத்திற்காக அத்தனை வருட பிடிவாதத்தை விட்டு அவளை தன் வீட்டிற்குள் சேர்த்து கொண்டார்??

மகனை தேற்றும் நிலை அறியாது தவித்துக்கொண்டிருக்கிறார். இனி அவரின் வாழ்நாள் இறுதி வரையிலும் மகனை நினைத்தே தவிக்கவேண்டும் என்பது விதியாயிற்றே…

தன் பிறந்த வீட்டில் இருந்த பொன்னுதாயிக்கு விசயம் தெரிந்ததும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்தவர்க்கு மகனின் கதறலே அவரை வரவேற்றது. 

தாயை பார்த்ததும் அவரை கட்டிக்கொண்டு “அம்மா… அவளுக்கு நா வேண்டாமாம்… என்ன விட்டு போறதுலையே குறியா இருக்கா… அவ இல்லைனா நானும் செத்துருவேன்ம்மா…” என்றவாறே கதற ஆரம்பித்தான்.

மகனின் பேச்சில் பொன்னுதாயி சிலையாக நின்றுவிட்டார். பெற்றவள் கேக்கும் வார்த்தையா அது. தன்னை கட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தவனை ஆறுதல் படுத்தக்கூட முடியாமல் நின்றிருந்தார்.

பின் குழந்தை அழும் சத்தத்தில் தான் தெளிந்தவர் மகனை விலக்கி நிறுத்தி விட்டு நர்ஸ்சின் கையில் இருந்த குழந்தையை வாங்கி பார்த்தவருக்கு நெஞ்சு பற்றி எரிய ஆரம்பித்தது.

அவர்கள் வம்சத்தை தலைக்க வைக்க பிறந்தவன். தாய் தன்னை விட்டு போகபோகிறாள் என்பதை அறிந்ததாலோ என்னவோ கத்திக்கொண்டிருந்தான்.

குழந்தையை பார்த்தவர் பேரனை கையில் வாங்கிக்கொண்டு மருமகளை வைத்திருந்த அறைக்கு நுழைய போனவரை அங்கிருந்த நர்ஸ் தடுத்தும் பிடிவாதமாக உள்ளே சென்றுவிட்டார்.

லலிதாவுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த டாக்டர் குழந்தையுடன் வந்தவரை பார்த்து கோபம் கொண்டு அவரை திட்ட ஆரம்பித்தார்.

“கொஞ்சநேரம் என்ற மருமககிட்ட பேசனும்மா… என்ன தடுக்காதிங்க… பேசிட்டு போயிடறேன்…”

நினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருப்பவளை பார்த்த டாக்டர் அவரை பேச அனுமதித்து விட்டு விலகி நின்றார்.

மருத்தவர்க்கு அவள் பிழைக்க வாயிப்பில்லை என தெரிந்துவிட்டதால் ஒருவேளை அவர் பேசுவதால் எதாவது நன்மை நடக்கலாம் என சிறு நம்பிக்கை தோன்றியதால் அமைதி காத்தார்.

அவரும் பெண்ணல்லவா குழந்தையின் அழுகுரல் அவரையும் துடிக்க வைக்குறதே… எத்தனையோ இழப்புகளை அவர்கள் தொழிலில் பாத்தாலும் மனம் ஒவ்வொரு உயிர் பிரியும்போதும் மனம் வலிக்குறதே…

மருமகளின் அருகில் சென்றவர் எந்த நினைவும் இல்லாமல் படுத்திருப்பதை பார்த்ததும் கோபம் கொண்டு பேரனை அவளின் அருகிலே படுக்க வைத்தவர் குழந்தையை கத்த விட்டார்.

குழந்தையின் அழுகுரல் அவள் செவிகளில் நுழைந்து இதயத்தை தாக்கியது. குறைந்த இதயதுடிப்பு சிறிது அதிகமாவதை மானிட்டரில்  பார்த்த டாக்டர் பரபரப்பாகி “எதாவது பேசுங்க…” என்றார்.

“நா எதுக்கு பேசனும்? பேசமாட்டேன்ம்மா… சாகறவ சாகட்டும். இவளால என்ற மகனோட வாழ்க்கையே போச்சு.  இனி இவ செத்தாலும் உசுரோட இருந்தாலும் எல்லாம் ஒன்னுதான். இனி இவளுக்கும் இவ புள்ளைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…” பொன்னுதாயின் வார்த்தையில் கோபத்தைவிட ஆதங்கமே இருந்ததை மருத்துவரும் உணர்ந்தார்.

நினைவை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தவளுக்கு மாமியாரின் பேச்சு அவளின் ஆழ்மனதை சென்றடைந்து தாக்கியது. குழந்தையின் அழுகுரல் வேற அவளை நினைவை இழக்க விடாமல் தடுக்கவும் மெல்ல மெல்ல அவளின் இதயதுடிப்பு அதிகரித்தது. அதை பார்த்ததுமே டாக்டர்க்கே சிறிது நம்பிக்கை வந்து அவள் உயிரை காப்பாற்ற போராட வைத்தது.

குழந்தையின் அழுகையும் பொன்னுதாயின் பேச்சுமே லலிதாவின் உயிரை மீட்டதென்றால் அது மிகையாகாது.

அவளை போராடி காப்பிற்றி விட்டு வெளியே வந்த டாக்டர் ராமிடம் “உங்க மனைவி பொழச்சிட்டாங்க…” என்றார்.

டாக்டரின் வார்த்தையை கேட்டவன் சந்தோசத்தில் ரொம்ப நன்றி டாக்டர் என்ற உசுரையே திரும்ப காப்பாத்தி என்றகிட்ட தந்துட்டிங்க…”

“இதுக்கு நா மட்டும் காரணம் இல்லை. உங்க அம்மாவும்,உங்க குழந்தையும் தான்.. அவர்கள்தான் போக இருந்த உயிரை மீட்டனர் அவர்கள் இல்லையென்றால் என்னால் உங்கள் மனைவியை காப்பாற்றியிருக்க இயலாது.”

“டாக்டர் நா என்ற பொண்டாட்டிய போய் பாக்கலாமா?”

“ரூம்க்கு மாத்தினதும் டிஸ்டர்ப் பண்ணாம பாத்துட்டு வந்திடுங்க…  இன்னும் காய்ச்சல் குறையல அதுக்கான ட்ரீட்மென்ட் குடுத்துருக்கேன். மெல்லதான் சரியாகும். என்றவர் பொன்னுதாயிடம் “குழந்தைக்கு இன்னும் கொஞ்சநாளைக்கு தாய்பால் குடுக்க வேண்டாம். தாய்க்கு இருக்க காய்ச்சல் குழந்தையையும் பாதிச்சிடும்…” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அதன்பிறகு லலிதா நன்றாக தேறி வர கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது. அதுவரையிலும் பொன்னுதாயி தான் பேரனை பார்த்துக்கொண்டார். பேரன் பிறந்த மறுநாளே பொன்னுதாயின்  அம்மா பவளாத்தா இறந்துவிட்டார். அதற்குகூட பொன்னுதாயி மருத்துவமனையை விட்டு அகலவில்லை. ராசப்பன்தான் தன் அத்தைக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துவிட்டு வந்தார்.

இந்த பதினைந்து நாளில் மகன் பட்ட துன்பத்தை பார்த்ததும் ஒரு முடிவெடுத்து விட்டார். அதற்கு அவரின் பேரனும் அவனையறியாமலே பாட்டிக்கு வழி செய்து குடுத்தான். இந்த பதினைந்து நாளும் பசும்பால் குடித்து அதன் ருசி பழகியதாலவோ என்னவோ தாயின் பாலை குடிக்கமால் வளர ஆரம்பித்துவிட்டான். 

பொன்னுதாயும் இதுதான் சமயமென்று குழந்தையை தாயிடம் விடாமல் தன்னுடனே வைத்துக்கொண்டார்.

வீட்டிற்கு வந்தபிறகும் இதுவே தொடர ராசப்பன்தான் மருமகளின் வாடிய முகத்தை பார்த்துவிட்டு தன் மனைவியிடம் கேட்டே விட்டார்.

“ஏன்டி குழந்தைய மருமக புள்ளைகிட்ட விடவே மாட்டிங்கற?”

“எதுக்கு குடுக்க சொல்றிங்க?”

“என்ன டி கேள்வி இது… இவன் அவளோட குழந்தை… அவகிட்ட எதுக்கு குடுக்கனும்னு கேக்கற?”

“வயித்துல புள்ளைய வச்சிட்டு அதபத்தி கொஞ்சம்கூட நினைப்பே இல்லாம சாகற நிலமைக்கு போனவளுக்கு குழந்தை மேல எப்படி உரிமை வந்ததுங்க…? இவ பண்ண கூத்தால என்ற மகன் மட்டும் அந்நேரம் வரலைனா இப்போ என்ற பேரன் உசுரோட இருந்துருக்க மாட்டான். வயித்துலையே புள்ளையை கொல்ல துனிஞ்சவ தானே… இப்போ என்ன புள்ள பாசம் பொத்துகிட்டு ஊத்துது…”

மாமியாரும் மாமனாரும் பேசியதை கேட்டுக்கொண்டிருந்தவள் மாமியாரின் பேச்சில் ஓடிவந்து அவரின் கையை பிடித்துக்கொண்டு “என்ன மன்னிச்சிடுங்கத்தை…” என்றாள்.

“உன்ன மன்னிக்கறத்துக்கு நா ஆரும்மா…”

“ஏனுங்த்தை இப்படிலாம் பேசறிங்க?”

“வேற எப்படி பேசனும்ங்ற? நீ உயிர் பொழைக்கமாட்டேனு டாக்டர் சொன்னதும் என்ற மகனும் செத்துபோறேன்னு என்ற கிட்டையே சொல்றான் புருசன் புள்ளைய பத்தி நினைப்பில்லாம சாக துனிஞ்சவளுக்கும். பொண்டாட்டி செத்துட்டா அவளுக்காக தானும் சாக போறேனு சொன்னவனுக்கும் என்ற பேரனை உரிமை  கொண்டாட இனி எந்த தகுதியும் இல்லை…” அங்கு அமர்ந்திருந்த மகனை முறைத்து பார்த்தவாறே கூறியவர்   “இவன நானே வளர்த்துக்குறேன். நீங்க ரெண்டுபேருக்கும் புள்ளை வேணும்னா இன்னொன்னு பெத்து வளர்த்திக்கோங்க… ” என்றவர் குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.

அவர் மனதில் இதை வைத்தாவது மகனும் மருமகளும் ஒன்றாக சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை கொண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தது மட்டும் நடக்கவே இல்லை. 

அம்மா பேசி சென்றதை கேட்டுக்கொண்டிருந்தவன் தன்னவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டான். அவனாலும் மனைவியை மன்னிக்க முடியவில்லை. அன்று மட்டும் தான் வராமல் இருந்திருந்தால் தான் நேசிக்கும் இரண்டு உயிரும் அல்லவா போயிருக்கும். அந்த கோபம் மனைவியை மன்னிக்க விடவில்லை.

காலம் மனக்காயத்தை ஆற்றும் மருந்தென்பார்கள். அந்த காலம் ராமின் மனக்காயத்தை ஆற்றுமா?

Advertisement