Advertisement

அத்தியாயம்.18

மருமகனை மிரட்டிவிட்டு வயலுக்கு வந்த ராசப்பனால் கோபத்தை அடக்கவே முடியவில்லை. 

‘என்ன வார்த்தை கேட்டுவிட்டான்… என்ற வீட்டு வாரிச போய் கண்டவனோடதானு கேக்கறான்., ஆனா என்னால அவன ஒன்னும் பண்ணமுடியலையே? மகள் பாசம் அவனுக்கு முன்னாடி வந்து நிக்குதே…” கோபத்தில் வாய்விட்டே புலம்பியவர்..,

 ‘இனி எவனும் என்ற வூட்டு புள்ளைய நாக்குமேல பல்ல போட்டு ஒத்தை வார்த்தை பேசக்கூடாது… அதுக்கு எதாவது பண்ணனும்’ யோசிக்க ஆரம்பித்தவர் விடை கிடைத்ததும் வீட்டை நோக்கி சென்றார்.

வீட்டிற்கு வந்தவர் மனைவியை தான் கூப்பிட்டார்.

மருமகளை சமாதான படுத்திக்கொண்டிருந்த பொன்னுதாயி வெளியில் கணவனின் குரல் கேக்கவும் அறையை விட்டு வெளியே வந்தார்.

“உன்ற மருமகள பாத்துக்க நா இப்பவே போறேன் பையனோட தான் வூட்டுக்கு வருவேன்” என்றவாறே வேட்டியும்  சட்டையும் மாற்றிக்கொண்டு கிளம்பி சென்றுவிட்டார்.

உள்ளே கட்டிலில் கலங்கிபோய் அமர்ந்திருந்தவளின் செவிகளில் மாமனாரின் பேச்சு விழுந்ததும் என்னமாதிரி உணர்ந்தாள் என்றே தெரியவில்லை. 

தண்ணீர் செம்புடன் வந்தவள் விஸ்வநாதன் பேசியதை கேட்டதுமே துடிதுடித்து போயிவிட்டாள். செம்பை தவற விட்டதைக்கூட உணராமல் ‘இந்த நொடியே பூமி பிளந்து அதற்குள் போய் விட துடித்தாள்’ அவள் என்ன கற்புக்கரசி கண்ணகியா? அவள் நினைத்ததும் நடக்க…

என்னமாதிரி வார்த்தை அது… காலம் காலமாக பெண்ணை கேவலபடுத்த இந்த சமுகம் பயன்படுத்தும் சொல் ஒழுக்கங்கெட்டவள்… இது என்ன ராமாயண காலமா சிதையில் இறங்கி தன் புனிதத்தை நிருபிக்க? கற்பு எனும் ஒரு வார்த்தையை வைத்துகொண்டு இன்னும் எத்தனை காலத்திற்குதான் பெண்ணவளை நிலைகொலைய செய்துகொண்டிருக்குமோ இச்சமுகம்??? 

உலகமே இருண்ட நிலையில் முற்றிலும் தன்னை மறந்து உயிர் துடிக்க நின்றிருந்தவளை மாமியார் அழைத்து சென்று கட்டிலில் அமரவைத்து தன்னை சமாதான படுத்த பேசியதைக் கூட கேட்கவும் இல்லை, உணரவும் இல்லை… அவன் சொன்ன வார்த்தைகளை கேட்ட பிறகும் இன்னும் உயிர் வாழ துடிக்கும் தன் மேல் வெறுப்பு… தன்னை இந்த பழிசொல்க்கு ஆளாக்கிய கணவனின் மேல் வெறுப்பு, மொத்தத்தில் வெறுப்பு மட்டுமே…

 தனக்குள்ளையே உலன்று கொண்டிருந்தவளின் செவிகளில் மாமனாரின் பேச்சு விழுந்ததும்தான் தெளிந்தாள்., மனதில் சிறு நிம்மதி தன்னவன் வந்துவிடுவான்., தன்னையும் தன் சிசுவையும் காத்துவிடுவான் என்ற நம்பிக்கை அவள் மனதில் எழ ஆரம்பித்தது.

அந்த சம்பவம் நடந்து மூன்றாம் நாள் காலையில் வந்துவிட்டான். மனதில் சந்தோசமும், பயமும் சரிசமமாக சுழன்றவாறே தன் உயிரை சுமக்கும் தன்னவளை கான வந்துவிட்டான்.

 தந்தையுடன் வீட்டிற்கு வந்தவனின் விழிகள் முதலில் தேடியது மனையாளைதான்., ஆனால், அவன் தேடியவளோ பொடக்காலியில் கிணற்றடியில் அமர்ந்த மாட்டு கொட்டகையில் நேற்றுதான் கன்று போட்டிருந்த பசுமாட்டையும் அதன் கன்றையும் வெறித்து கொண்டிருந்தாள்.

மூன்று நாட்களாக இதே நிலைதான்.., எங்கு அமர்ந்திருந்தாலும் எதாவது ஒன்றை வெறிக்க ஆரம்பித்துவிடுகிறாள். எதிலும் பற்றில்லை… அவளை சோறு சாப்ட வைப்பதற்றே பொன்னுதாய் போராட வேண்டியிருந்தது. கோதையும் அவளை பேசவைக்க எவ்வளவோ முயற்சித்து பாத்துவிட்டாள்… ஆனால், பலன்தான் இல்லை. 

அம்மா, அக்கா, அம்மாச்சி மூவரிடமும் ஓரிரு வார்த்தை பேசிக்கொண்டிருந்த ராமால் தன்னவளை பார்க்காமல் இருப்பு கொள்ளவில்லை. அவனுக்கு இன்னும் விஸ்வநாதன் பேசியது தெரியாது. ராசப்பனும் சொல்லவில்லை…

 என்னதான் இருந்தாலும் விஸ்வநாதன் மகளின் கணவன் அல்லவா? அந்த பாசம் அவரை தடுத்துவிட்டது. ஆனால், இதை மகனிடம் இப்போதே சொல்லிருந்தால் மகனின் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கலாம். விதி ஆரை விட்டது? மகனின் வாழ்க்கை அழிவதை கண்கூடாக பார்த்து துடிக்க வேண்டுமென்பது ராசப்பனின் விதியாயிற்றே… 

மகனின் தவிப்பை பார்த்த பொன்னுதாயி மருமகள் இருக்கும் இடத்தை கூறி அனுப்பி வைத்தார்.

லலிதா இருந்த இடம் நோக்கி வந்தவன் மனைவியின் உருக்குலைந்த தோற்றத்தை பார்த்ததும் மொத்த சந்தோசமும் வடிந்துவிட்டது. அவளின் அந்த தோற்றமே ராமிற்கு தன்னுடைய குழந்தையின் வரவு தன்னவளுக்கு பிடிக்கவில்லை என தவறாக எண்ண வைத்தது.

 ‘நா தந்தையாகிருக்கிறேன் என தெரிந்த அந்த நிமிடம் தனக்கு ஏற்பட்ட சந்தோசம் குழைந்தை பற்றிய கனவுகள், ஆசைகள் இப்படி எதுவுமே இவளுக்கு தோன்றவில்லையா? என்ற குழந்தைய சுமப்பதைக்கூட பாரமாக நினைக்கிறாளா?’ மனதில் அடிவாங்கினான்.

வீட்டிற்கு வந்தபோது இருந்த சந்தோசம் அத்தனையும் வடிய மனைவியின் அருகில் வந்து நின்றான்.

உள்ளுனர்வு தன்னவனின் வரவை உணர்த்த திரும்பியவள் தன்னருகில் நின்றிருந்தவனை  பார்த்ததும் தன்னை தனியாக தவிக்கவிட்டு போன கோபத்தில் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அவள் முகம் திருப்பியதுக்கூட அவனை வருந்தச்செய்தது. 

 “என்ற குழந்தைய உன்ற வயித்துல சுமக்கக்கூட உனக்கு புடிக்கலையா லதாமா…?” அவனின் குரலில் அத்தனை வலி.

அவன் மேல் கோபத்தில் இருந்தவள் கணவனின் வார்த்தை கேட்டு உள்ளுக்குள் துடித்துபோயி விட்டாள். 

மனைவி பதில் சொல்லாமல் திரும்பியே இருக்கவும், “எனக்கு என்ற குழந்தை வேணும் லதாமா… வாழ்க்கையே முடிஞ்சிபோச்சுனு இருந்த எனக்கு வரமா வந்த உசுரு… இத மட்டும் எனக்கு பெத்து குடுத்துடு லதாமா… வேற எதுவும் உன்றகிட்ட கேக்கமாட்டேன்” அவளின் மனநிலை புரியாமல் வார்த்தைகளை கொட்டினான்.

அவன் பேசி முடிக்கும் வரையிலும் அப்படியே அமர்ந்திருந்தவள் எழுந்து அவனின் முன் வந்து நின்று அவனை உருத்து விழித்தவாறே “இப்போ என்ன சொன்னிங்க மாமா? உங்க குழந்தையா? அப்போ உங்க குழந்தைக்கு நா ஆரு மாமா? எந்த ஒரு பொண்ணும் கணவனோட உயிர சுமக்கறத பாரமா நினைக்கவே மாட்டா… அப்படி நினைக்கரானா அவ அவனை கணவனாவே மனதில் ஏற்றிருக்கமாட்டாள்…    உங்களுக்காகவே என்ற மொத்தக் குடும்பத்தையும் ஊர் முன்னாடி அசிங்கபடுத்திட்டு வந்தேன்… ஏனா உங்கமேல அம்புட்டு காதல்… பெத்தவங்க, கூடப்பொறந்தவங்க எல்லாம் மறக்க வைக்கர அளவுக்கு காதல்… அம்மா சாக கிடக்கரானு தெரிஞ்சும் உங்களோட சந்தோசத்துக்காக மனச கொன்னுட்டு உங்கக்கூட வாழ்ந்து அதுக்கு சாட்சியா இப்போ உங்க உயிர என்ற வயித்துல சுமந்துகிட்டு இருக்கேன்… ஆனா, நீங்க…” அவளின் குலில் இருந்தது என்ன கோபமா? வலியா? வருத்தமா? 

“லதாமா… நா…”

அவனை தடுத்துவள் “இனி எதும் சொல்ல வேண்டாம் மாமா… நீங்க கேட்டிருந்தா என்ற உசுரையே சந்தோசமா குடுத்துருப்பேன். ஆனா, நீங்க நா உங்களுக்கு தேவையில்லைங்றத  சொல்லாம சொல்லிட்டிங்க… இதுல எனக்கு வருத்தமெல்லாம் இல்லை மாமா… சந்தோசம்தான் இனி நா குற்ற உணர்ச்சியில சாக தேவையில்லை பாருங்க… நிம்மதியா போயிடுவேன்…”

“ஏ லதாமா இப்படி எல்லாம் பேசற? நீயும் எனக்கு வேணும்டா…” 

“என்ற மேல இருந்த உரிமைய நீங்க இன்னைக்கே இழந்துட்டிங்க மாமா… இனி நா உங்களுக்கு இல்லை…நீங்க கேட்டமாதிரியே உங்க குழந்தைய பெத்து உங்ககிட்டையே குடுத்துட்டு அதன் பிறகு நா என்னவேணாலும் முடிவெடுப்பேன். அப்போ என்ன தடுக்கவோ என்ற மனச மாத்தவோ நினைக்ககூடாது.…” என்றவள் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

அவள் பேசி சென்றதின் தாக்கத்திலிருந்து வெளிவரவே முடியாமல் தடுமாறி நின்றிருந்தவன் சிறிதுநேரம் கழித்தே வீட்டிற்குள் சென்றான்

அதன்பிறகு கணவனிடம் ஒற்றை வார்த்தைக்கூட அவள் பேச வில்லை… 

 அவள் கணவனுக்கு தன்னை ஒதுக்குகிறாள் என்பது புரியாமலா இருக்கும்? ராமிற்கும் புரிந்தது. ஆனால், அதற்கு விடைதான் அவனுக்கு தெரியவில்லை… 

பொன்னுதாயும் மனதை விட்டு விட்டார். எத்தனை நாளைக்குதான் இருவரையும் சேர்த்துவைக்க போராடுவார்? 

இப்போது லலிதா முன்பைவிட தன் வயிற்றில் வளரும் கணவனின் குழந்தைக்காக நன்றாக சாப்பிட ஆரம்பித்தாள். அதுவே பொன்னுதாயிக்கு போதுமானதாக இருந்தது. குழந்தை பிறந்தால் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் வாழ ஆரம்பித்துவிட்டார்.

லலிதாவிற்கு ஏழாவது மாதத்தில் சிறிய அளவிலே வளைகாப்பை செய்துவிட்டனர். அலமேலு ரொம்ப சீரியசாக இருக்கும்போது விழா எடுக்க பொன்னுதாயிக்கு விருப்பமில்லை. அதனால் வீட்டிலே சிறிய அளவில் வைத்து மருமகளுக்கு வளையல் அணிவித்து விட்டார்.

இப்போது ராமும் மாத கணக்கில் வண்டியிலே இருக்காமல் வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்துவிட்டே செல்ல ஆரம்பித்தான். இதுக்கூட பொன்னுதாயால் நடந்தது . அவருக்கு மருமகன் சொன்னதை ஊரில் உள்ளவர்களும் சொல்லிவிட்டால் என்ற பயத்திலே மகனை இனி வண்டிக்கே போகவேண்டாம் என சண்டை போட ஆரம்பிக்கவும், அவனே இனி பத்துநாளைக்கு ஒருதடவை ஊருக்கு வந்துடறேன்ம்மானு சொல்லவும்தான் விட்டார்.

இதற்கிடையில் பொன்னுதாயின் அம்மாவும்  ரொம்ப முடியாமல் கிடக்கவும் பொறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் நடக்க ஆரம்பித்தார். மகன் வந்துவிட்டால் மருமகளை பார்த்துகொள்ள சொல்லிவிட்டு அம்மாவீட்டுக்கு சென்றுவிடுவார்.

லலிதாவுக்கு எட்டாவது மாதம் முடியும் தருவாயில் இருந்தது.

 அன்று அம்மாவை பாக்க கிளம்ப ஆரம்பித்தவர்க்கு மனமே இல்லை. பவளாத்தாவுக்கு நினைவே இல்லை… தண்ணீர் மட்டுமே இறங்கிகொண்டிருந்தது. தாயின் இறுதி நாட்களில் அவரை பாக்காமல் இருக்கவும் முடியாமல்,  மருமகளை தனியாக விட்டு செல்லவும் முடியாமல், தவிக்க ஆரம்பித்துவிட்டார்… மகனும் வரமுடியாத சூழ்நிலை. ராசப்பன்தான் மனைவியை சமாதான படுத்தி அனுப்பி வைத்தார். 

பொன்னுதாயும் இரு மனதாகத்தான் ஊருக்கு கிளம்பிச்சென்றார். 

மறுநாள் பொழுது வரையிலும் எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது…  அதன்பிறகு எல்லாரோட வாழ்க்கையும் தலைகீழாக மாற்றிவிட்டு சென்றுவிட்டது விதி. அதில் பாதிக்க பட்டது இரு குடும்பமும்.

அன்று காலை விடியலிலே சுந்தரமூர்த்தி மனதில் எதோ தவறாக நடக்கபோறதை உணர ஆரம்பித்துவிட்டார். ராத்திரி எல்லாம் ஒரு பொட்டுக்கூட கண் மூடாமல் கணவனிடம் ஒவ்வொரு வார்த்தையும் பேசுவதற்குள்ளாகவே தடுமாறி பின் மெல்ல பேசிய அலமேலு விடியக்காலையில்தான் கண் மூடினார். அமைதியாக தூங்கி கொண்டிருக்கும் மனைவியைதான் பார்த்து கொண்டிருந்தார் மூர்த்தி. 

அலமேலு தடுமாறி பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் மகளே நிறைந்திருந்தாள். லலிதா கருவுற்ற சேதி மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால், அலமேலுவுக்கு மகிழ்ச்சியைதான் தந்தது. மகன்களே மகளை கோபமாக திட்டும்போது அதை தடுக்கக்கூட முடியாமல் படுத்திருக்கும் நிலையை அறவே வெறுக்க ஆரம்பித்தார். 

என்னதான் மகள் அவர்களை தூக்கி எறிந்துவிட்டு போனாலும் அவளை ஈரைந்து மாதம் சுமந்து வலி தாங்கி பெற்று வளர்த்தவளாயிற்றே… அவளை  அத்தனை சுலபத்தில் தூக்கி எறிந்துவிட எந்த பெண்ணால்தான் முடியும். அலமேலுவும் அதற்கு விதிவிலக்கல்லவே…

மனைவி மகள் மேல் வைத்திருக்கும் பாசத்தை அவர் கட்டிலில் படுத்த இந்த ஒன்பது மாதங்களாக பாத்துக்கொண்டுதானே இருக்கிறார் மூர்த்தி. அவருக்கும் மகள் மேல் கோபமெல்லாம் இல்லை வருத்தம் மட்டுமே… ஆனால், அலமேலுக்கு அந்த வருத்தம் கூட இல்லை… மகள் நன்றாக வாழ்கிறாள் என்ற சந்தோசமே அவருக்கு போதுமானதாக இருந்தது. 

அந்த நிம்மதியுடனே இறப்பை எதிர்பார்க்க ஆரம்பித்தார். இதுவும்  ஒரு காரணமென்றாலும், தன் கணவன் தனக்காக படும் கஷ்டமே அலமேலுவை இறப்பை கடவுளிடம் வேண்டவைத்தது.  ‘தான் இறந்துவிட்டாளாவது கணவன் நிம்மதியாக இருப்பான்’ என நினைத்தார். தன் கணவனுக்கு தான் உயிருடன் இருந்தால் மட்டுமே நிம்மதி என்பதை அறியாமலே போயிவிட்டார்.

மூர்த்தி அன்று முழுவதுமே தன்னவளை விட்டு பிரியவில்லை… மனைவியின் அருகில் அமர்ந்து அவரைதான் விழிகளில் நிரப்பிக்கொண்டிருந்தார். அவர் உள்மனம் இன்றுதான் உன்னவளை பார்க்கபோகிறாய்…’ என சொல்லிக்கொண்டே இருந்தது. அதே போல்தான் அலமேலுவின்   உயிர் அவரின் உடலை விட்டு அன்று மதியமே பிரிந்துவிட்டது.

தன்னவள் தன்னைவிட்டு போய்விட்டாள் என அறிந்த நொடியிலிருந்து உயிர் இல்லாத உடலைதான் வெறித்து கொண்டிருந்தார்.

அவரின் மகன்களோ தாய் தங்களை விட்டு போய் விட்ட அதிர்ச்சியிலிருந்து வெளிவரமுடியாமல் கண்ணீருடன் அமர்ந்துவிட்டனர்.

 அவர்க்கான இறுதி காரியங்களை ஊரில் உள்ள அவர்களின் சொந்தங்களே எடுத்து செய்ய ஆரம்பித்தனர். 

அலமேலுவின் இறப்பு சேதியை வீடு வீடுகளுக்கு சொல்ல சென்றவன் பகையாளி வீட்டு எழவு என்றாலும் இறந்தவர்க்கு லலிதா மகள் என்பதாலும்  பொறந்தவீட்டு கோடி அவர்கள்தான் போடவேண்டும் என்பதாலும் ராசப்பன் வீட்டிற்கும் சேதி சொல்ல சென்றான்.

தங்கை இறந்த சேதி கேட்டு ராசப்பனுமே கலங்கி விட்டார். என்னதான் சண்டை இருந்தாலும் கூடப்பிறந்தவளல்லவா? அந்த ரத்த பாசம் இருக்கத்தானே செய்யும்… தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே…

அவராலையே தங்கையின் இறப்பை தாங்கமுடியாத போது  அவரின் மருமகளின் நிலை…

தன்னை பெற்று வளர்த்து பாசத்தை மட்டுமே கொட்டி வளர்த்தவள் இன்று இல்லை என்ற சேதி கேட்ட நிமிடமே மயங்கி சரிய ஆரம்பித்தாள்.

அன்றுவரை மருமகளிடம் ஒற்றை வார்த்தைக்கூட பேசியிராதவர் அவள் மயங்கி சரிவதை பார்த்ததுமே அடுத்த நொடி கீழே விழாமல் தங்கையின் மகளை தாங்கி பிடித்து அப்படியே அவளை மடியில் தாங்கி அமர்ந்துவிட்டார். 

சேதி சொல்ல வந்தவனுக்கோ லலிதா மயங்கி சரிவதை பார்த்ததும் நெஞ்சே அடைத்துவிட்டது. ஈருசுருக்கார புள்ளையல்லவா கீழே விழுந்தால் இரண்டு உயிருக்கும் அல்லவா ஆபத்து… 

மருமகள் விழுவதற்கு முன்பாக தாங்கி பிடித்துவிட்டாலும் அவள் கண்விழிக்காமல் கிடப்பதை பார்த்ததும் ராசப்பனுக்கு பதற்றம் தொற்ற ஆரம்பித்துவிட்டது.

அவளின் கன்னத்தை தட்டி எழுப்பியவாறே “கண்ணு எழுந்திரிடாம்மா…” என்றார்.

சேதி சொல்ல வந்தவன் ஓடிப்போய் வெளியில் இருந்த தொட்டியிலிருந்து தண்ணீ மோண்டு வந்து மயங்கி கிடந்தவளின் முகத்தில் தெளித்ததும்தான் விழிகளை திறந்தாள்.

 கண்களை திறந்தவள் சேதி சொல்ல வந்தவனை பார்த்ததுமே தன் தாயின் நினைவு வர எழுந்தவள் கண்களில் கண்ணீர் வழிய கால்கள் அவளின் பிறந்த வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

ராசப்பனுக்கும் மருமகளை தடுக்கும் எண்ணம் இல்லை… அதே சமயம் தங்கை வீட்டுக்கு செல்லவும் ஈகோ இடம் குடுக்காததால் சேதி சொல்லவந்தவனையே மருமகளுக்கு பாதுகாப்பாக பணத்தை குடுத்து அனுப்பி வைத்தார்.

Advertisement